Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் நிலவில் இந்தியன் : வல்லரசுக் கனவுக்கு வெட்டிச் செலவு!

நிலவில் இந்தியன் : வல்லரசுக் கனவுக்கு வெட்டிச் செலவு!

  • PDF

05_2007.jpg

ஆண்டுக்கொருமுறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் முத்தாய்ப்பான இறுதி நிகழ்ச்சி வாணவேடிக்கை. சாதிப்பற்றைப் போல ஊர் அபிமானத்தையும் வரித்திருக்கும் நாட்டுப்புறமக்கள் எந்த ஊர் அதிகம் செலவு செய்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துவார்கள். கஞ்சிக்கு வழியில்லாத இடங்களில் கூட இந்த வேடிக்கைக்கான வசூல் மும்முரமாக நடக்கும். ஏழைகள் என்பதால் வறட்டு ஜம்பம் குறைந்து விடுகிறதா என்ன? அறியாப் பாமர மக்களை விடுங்கள்.

அறிவாளிகளின் கூடாரமான இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவும் ஆண்டுக்கொரு முறை வாணவேடிக்கையை நடத்துகிறது. இஸ்ரோவின் ஓராண்டுச் செலவு ரூபாய் 4000 கோடி.

 

இவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ஏவுகணை மூலம் 2 வெளிநாட்டு சோதனை விண்கோள்களையும், இரண்டு உள்நாட்டு விண்கோள்களையும் ஏவியது. அதில் எஸ்.ஆர்.வி.1 என்ற விண்கோள் விண்வெளியில் 12 நாட்கள் சுற்றிய பிறகு வங்காள விரிகுடாவில் இறக்கப்பட்டது. ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி அதையே மீட்டுக் கொண்டு வருவது என்பது ஒரு இமாலய வெற்றியாம். பல தொழில்நுட்பத் தடைகளைத் தாண்டி இச்சாதனையை நிறைவேற்றியதாக இஸ்ரோவின் அறிவியலாளர்கள் பெருமைப்படுகிறார்கள்.

 

அமெரிக்கா இந்தச் சோதனையில் 12 முறை தோல்வியடைந்து 13ஆவது முயற்சியில் வெற்றியடைந்ததாம். இந்தியாவோ முதல் சோதனையிலே வென்றுவிட்டதாம். ஆனால் அமெரிக்காவின் சோதனைகள் தோல்வியடைந்தது 1960ஆம் ஆண்டு. இந்தியா அடைந்த வெற்றியின் பின்னே 47 ஆண்டுகள் இடைவெளி இருப் பது போகட்டும். இஸ்ரோவின் அறிவியலாளர்கள் ஒரு அறிவியாளன் என்ற முறையில் அறிவியல் பரிசோதனைகளை நிகழ்த்தி — மிகுந்த செலவு பிடிக்கும் சோதனை என்றாலும் — சொந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதை நாமும் பாராட்டுவோம். ஆயினும் இந்த வெற்றியினால் என்ன பயன்?


விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்புவதற்கு இந்த வெற்றி ஒரு மைல் கல்லாம். அடுத்த ஆண்டு இஸ்ரோ 400 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் எனும் விண்கோளை நிலவுக்கு அனுப்பப் போகிறதாம். இன்னும் பத்தாண்டுகளில் நிலவுக்கு ஒரு இந்தியனை அனுப்ப முடியுமாம். இதற்கான உத்தேச செலவு மதிப்பீடு 10000 கோடி ரூபாய். இதற்கான மறைமுக நிறுவனச் செலவு இன்னும் சில ஆயிரம் கோடிகளைக் குடிக்கும்.

 

மூன்று டன் எடை கொண்ட விண்கோள், அதில் விண்வெளி வீரர்களுக்கான அறை, சேவை அறை, அவசரநிலை அறை போன்றவற்றை இந்தியா முழுவதும் உள்ள இஸ்ரோவின் ஆராய்ச்சி நிலையங்களில் கட்டவேண்டும். மேலும் உயர் அழுத்த அதிர்வைச் சமாளிப்பதற்கான பயிற்சி, வீரர்களின் உடைகள், பாதுகாப்பு முறைகள், உடல் நலக் கண்காணிப்பு, உயிர்காக்கும் கருவிகள் முதலியனவற்றில் வீரர்கள் நிபுணத்துவம் பெறவேண்டும். ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி பத்திரமாக உயிரோடு மீட்டுக் கொண்டு வர இத்தனை "பகீரதப் பிரயத்தனங்கள்' செய்தாக வேண்டும்.

 

பூமியில் இருக்கும் பல கோடி இந்தியர்களை மரணக் குழியில் தள்ளிவரும் அரசு, ஒரே ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி வாணவேடிக்கை நடத்துவதற்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. இதுதான் வல்லரசு ஜம்பம். முதலாளிகளுக்கு இலாபம் தரும் திட்டங்களைத் தவிர வேறு எந்த மக்கள் நலத்திட்டமாக இருந்தாலும் அதனை வீண்செலவு என்று சாடும் இந்தியா டுடே போன்ற பிரச்சார பீரங்கிகள், இந்த வல்லரசு ஜம்பத்தை மட்டும் ஊதிவிடத் தவறுவதில்லை.


போதாக்குறைக்கு நமது அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வேறு ஊர் ஊராய்ச் சென்று ஏதுமறியாத பள்ளிக் குழந்தைகளிடம், ""குழந்தைகளே கனவு காணுங்கள், 2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது, நிலவுக்கு இந்தியனை அனுப்பப் போகிறோம்'' என்று சாமியாடி வருகிறார்.

 

இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் உண்மை என்ன? விண்வெளிக்கு இந்தியனை அனுப்புவதால் நயாபைசாவுக்குக் கூட பயனில்லை. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகக்கூட இதற்கு எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை. நான் காசிக்குப் போயிருக்கிறேன், மெக்காவுக்குப் போயிருக்கிறேன் என்பது போல இந்தியனை நிலவுக்கு அனுப்பி விட்டோம் என்று வெட்டியாகப் பீற்றித் திரியலாம், அவ்வளவுதான்.

 

இப்படித்தான் 1960களில் அமெரிக்காவும், ரசியாவும் கெடுபிடிப் போருக்காக விண்வெளி ஆராய்ச்சி என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை விரயமாக்கின. யார் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது என்ற போட்டியில் பல மனித உயிர்களும் விரயமாக்கப்பட்டன. இது அறிவியலின் பால் உள்ள காதலால் நடக்கவில்லை என்பதுதான் முக்கியம். ஏகாதிபத்திய உலகில் தூய அறிவியல் காதல் என்ற ஒன்று இருக்க முடியாதல்லவா!

 

சோவியத் யூனியனின் யூரி காகரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். ஆயினும் இதற்கு முன்னும் பின்னும் அரசுகளின் நிர்ப்பந்தம் காரணமாக திரும்பி வருவோம் என்ற உத்தரவாதமில்லாமல் இருநாட்டு வீரர்களும் உற்சாகமின்றி மரணபயத்துடன் சென்றதை பி.பி.சி. ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கிறது. சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழிந்த சோவியத் யூனியன் இந்தப் போட்டியில் சிக்கித் தனது பொருளாதார வல்லமையை இழந்து திவால் ஆனது.

 

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வருடத்திற்கு 70,000 கோடி ரூபாய்களை செலவழிக்கிறது. உலகைக் கொள்ளையடித்து உலையில் போட்ட இந்த ஆராய்ச்சியினால் என்ன பயன்? உலக மக்களை அச்சுறுத்தும் வண்ணம் நாசகார ஆயுதங்களை விண்ணில் சுற்றவிட்டதுதான் மிச்சம்.

 

70களில் அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்கு வீரர்களை அனுப்பிய அமெரிக்கா, சோவியத் யூனியனை ஆயுதப் போட்டியில் வெல்வதற்காக தனது கவனத்தை நட்சத்திரப்போர் திட்டத்தின் மீது குவித்தது. இதன் செலவு மதிப்பீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகம். பின்பு ரசியா வீழ்ந்த பிறகு அந்தத் திட்டத்திற்கு அவசியமில்லாததால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அதன் விண்வெளி ஆராய்ச்சி ஈராக்கிலும், ஆப்கானிலும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதற்குத்தான் சிறப்பாகப் பயன்பட்டு வருகிறது.

 

அதிலும் அமெரிக்க விண்கோள்களின் உதவியுடன் ஈராக்கின் இராணுவ இலக்குகளை மட்டும் தாக்குவதாகக் கூறி மக்கள் குடியிருப்பில் குண்டு போட்டதுதான் அதன் தொழில்நுட்ப வெற்றி! இது போக இந்த விண்வெளி ஆராய்ச்சி வித்தைகள் ஹாலிவுட் படங்களுக்கு திரைக்கதை உற்பத்தி செய்ய மட்டும்தான் பயன்பட்டு வருகின்றன. இந்த அறிவியல் மேதைகள்தான் புளோரிடா மாநிலத்தை காத்ரினா சூறாவளி பிய்த்தெறிந்தபோது, மக்களைக் காப்பாற்ற முடியாமல் திகைத்து நின்றார்கள்.

 

ரசியாவும் தற்போது பேருக்கு விண்வெளி ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறது. அதற்குப் பணம் சேர்ப்பதற்காக தலைக்கு 90 கோடி ரூபாய் என்று கட்டணம் வைத்து கோடீசுவர முதலாளிகளை விண்வெளிச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. ரசிய விண்வெளிச் சாதனையின் இலட்சணம் இதுதான். சுரண்டலுக்கும், நாசகார ஆயுதங்களுக்காகவும் மட்டுமின்றி முதலாளிகளின் கேளிக்கைக்கும் விண்வெளி அறிவியல் பயன்படும் என்பது இதில் உள்ள செய்தி.


ஏகாதிபத்தியங்களின் இலாபவேட்டைக்காக மலிவான உழைப்பை விற்று கொத்தடிமைகளின் நாடாக மாறிவரும் சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியில் 65 சதவீதத்தை தனியார் முதலாளிகளிடம் விட்டுக் கொடுத்திருக்கும் அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடான சீனாவில் ஓராண்டில் நடக்கும் நிலக்கரிச் சுரங்க விபத்துக்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.

 

இதைத் தடுப்பதற்கு வக்கற்ற சீன அரசு 2003இல் விண்வெளிக்கு ஒரு சீனவீரரை அனுப்பி இந்தச் சாதனையில் மூன்றாம் நாடாக மாறியிருக்கிறது. சீனாவும் நிலவுக்கு ஒரு வீரரை அனுப்பப் போகிறதாம். சீன கடற்கரைப் பெருநகரங்களில் நடக்கும் பேஷன் ஷோக்களில் அழகிகள் வாத்து நடை நடக்க, சீன வீரர் நிலவில் அன்ன நடை நடக்கப் போகிறார். கிராமப்புறங்களில் இருந்து துரத்தப்படும் சீன விவசாயிகள் நகரங்களை நோக்கி நாடோடிகளாய் ஆடுகளைப் போல ஓடுகிறார்கள். நல்ல வளர்ச்சிதான்!

 

உலக நாடுகளின் வாணவேடிக்கைக் கதை இதுவாக இருக்க இந்தியா எதைச் சாதித்து விடப்போகிறது? நமது செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா? அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா? குடிநீரோ, கழிப்பிட வசதியோ, கல்வியறிவோ இன்றி கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் நிலவுக்கு இந்தியனை அனுப்புவது என்பது ஆபாசமன்றி வேறென்ன?


· அஜித்