Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

இணங்கிப் போகும் பாசிசமாக்காலும், இணங்க வைக்கும் வன்முறையும்

  • PDF

யுத்தத்தின் பின்னான சூழல், யுத்தம் மூலம் கைப்பற்றிய மூலதனத்தை முதலீடுவதற்காக உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றுவதற்கான போராட்டமாகும்.  உள்நாட்டுச் சந்தையை மீள மறுபங்கீடு செய்யக் கோருகின்றது. இதுவே ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடாக, இன மத சிறுபான்மையியினது மூலதனத்துக்கு எதிரானதாக மாறிவருகின்றது. அரசு முன்தள்ளும் அபிவிருத்தி அரசியலின் உள்ளடக்கம் இதுதான். இந்த வகையில் யுத்த மூலதனமும், சர்வதேச நிதி மூலதனமும் இணைந்து பயணிக்கின்றது. அது ஏற்கனவே இருந்த சொத்துடமை ஒழுங்கையும், சுரண்டல் வடிவத்தையும், நிலவும் ஜனநாயக வடிவம் மூலம் பூர்த்தி செய்யமுடியாது. இதனால் பாசிசம் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இந்தப் பாசிசம் வெறுமனே ஜனநாயக மேற்கட்டமைப்பை மட்டுமல்ல, பொருளாதாரக் கட்டமைப்பை தனக்கு ஏற்ப மறுபங்கீடு செய்து வருகின்றது.

இந்த அடிப்படையில் அரச பாசிசத்தை சமூகமயமாக்க முனைகின்றனர். அரசும், அதற்கு யுத்த மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தலைமைதாங்கும் குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து பாதுகாக்கவும், மூலதனத்தை விரிவாக்கவும் பாசிசத்தை தவிர வேறு வடிவம் அதனிடம் கிடையாது. புதிய யுத்த மூலதனத்தால் ஆளும் வர்க்கத்துக்குள்ளான முரண்பாடுகளும், வர்க்கரீதியாக சுரண்டும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடும், இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. இதில் இருந்து தப்பிப்பிழைக்க பாசிசத்தை தேர்தெடுக்கும் அதேநேரம், இதை நிலவும் ஜனநாயக வடிவங்கள் ஊடாக ஜனநாயகப் போர்வையில் திணித்துவிட முனைகின்றது. இராணுவ ஆட்சியைக் கூட இயல்பான ஜனநாயகக் கட்டமைப்பாக்க முனைகின்றது.

இவை மிக நுட்பமானதும், ஆபத்தானதுமாகும். இது பாசிசத்தையும், அதன் வன்முறையையும் தானாக சமூகம் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப ஜனநாயகத்தைப் பிரயோகிக்குமாறு நிர்பந்திக்கின்றது. இன்று அரசு முன்வைக்கும் ஜனநாயகத்தின் அளவுகோல் இதற்கு உட்பட்டது.

இந்த வகையில் இலங்கையில் தானாகவே முன் வந்து, அரச பாசிசமாக்கலுக்கு ஏற்ப ஜனநாயகத்தையும், சொத்துடைமையையும், சுரண்டலையும் கையாளுமாறு கோரும், ஒரு யுத்தத்தையே அரசு நடத்துகின்றது. எல்லாச் சுதந்திரமான தனித்துவமான செயற்பாட்டை நீயாகவே சுயகட்டுப்பாட்டடை ஏற்படுத்திக் கொண்டு, அதை சுதந்திரமாக அனுபவி என்பதே இலங்கை பாசிசக் கட்டமைப்பு நடைமுறை மூலம் கூறும் செய்தி.

இந்த வகையில் இலங்கையில் ஜனநாயகமும், வன்முறையும் காணப்படுகின்றது. அதாவது பாசிசத்துக்கு இணங்கிய ஜனநாயகமும், பாசிசத்துக்கு இணங்கக் கோரும் வன்முறையும் ஓரே அரசியல் தளத்தில் இன்று காணப்படுகின்றது.

எதிர்ப்பற்ற தேர்தல் வெற்றி, கருத்தற்ற ஊடகச் சுதந்திரம், செயலற்ற அரசியல் செயற்பாடுகளுக்கு ... உட்பட்டு இயங்கும் பாசிச ஜனநாயகத்தை உருவாக்க முனைகின்றனர். தங்கள் செல்வ ஆதாரங்களை உள்நாட்டில் முதலிடும் வண்ணம், எதிர்ப்பற்று இணங்கிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கின்றது.

இதற்குள் உடன்படுவது ஜனநாயகமாகவும், உடன்பட மறுப்பதன் மீது வன்முறையாகவும் பரிணமிக்கின்றது. அரசு கையாளும் எதிரெதிரான இரட்டை அரசியல் நி;லைப்பாட்டைக் கொண்ட, ஒற்றைப்பரிணாமம் கொண்ட பாசிசமாக்கல் அரங்கேறி வருகின்றது.

இன்று முஸ்லீம் மக்கள் மேலான விரோதம் ஏன்?

ஒரு இனம், மதம் என்ற அடிப்படையில் அல்ல, இதன் பின்னான நோக்கம். இப்படி புரிந்து கொள்வது தவறானது. உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற விரும்பும் யுத்தமூலதனத்தைக் கொண்ட பாசிச சக்திகளுடன் இணங்கிப்போக மறுத்த முஸ்லீம் வர்த்தகருக்கு எதிரான வன்முறை தான், இன மத மோதலாக பரிணமிக்கின்றது.

யுத்தம் மூலமும், புலிகள் மூலமும் பெற்ற பல பத்தாயிரம் கோடிகளை அடிப்படையாக கொண்ட பெருமூலதனத்தை முதலிட விரும்பும் சக்திகள் நடத்தும் போராட்டம் தான், முஸ்லீம் மக்களுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் வன்முறையாகும். யுத்தம் மூலம் கிடைத்த பெரு மூலதனத்தின் சொந்தக்காரராக உள்ள மகிந்த குடும்பத்தின் நலன் சார்ந்தது, இந்த இனமத வன்முறையாகும்.

இலங்கை உள்நாட்டு மூலதனங்கள் சுரண்டுவதற்கு அமைவான இன்றைய பொது ஒழுங்கு, மீளப் பகிரப்பட வேண்டும் என்பது தான் யுத்தத்தை நடத்தி மூலதனத்தை திரட்டியவர்களின் கோரிக்கை. அதன் வன்முறை வடிவம் தான், முஸ்லிம் மக்கள் மேலான தாக்குதல்.

யுத்தத்தை நடத்தியவர்கள் சர்வதேச முரண்பாட்டுக்குள் சிக்கி சர்ச்சைக்குரிய யுத்தம் குற்றங்களாக மாறிவிட்டது. இந்த நிலையில் யுத்த மூலதனத்தை சர்வதேச சந்தையில் போட முடியாததும், சர்வதேச சந்தை தனது சொந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதால், யுத்த மூலதனத்தை முதலிட உள்நாட்டு சந்தையை யுத்தக் குற்றவாளிகள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இலங்கை உள்நாட்டு வர்த்தகத் துறையில் உள்ள முஸ்லீம்களை ஓரங்கட்டுவதன் மூலம், அந்த இடத்தில் தங்கள் யுத்தமூலதனத்தை நிரப்பி விட விரும்புகின்றனர். முஸ்லிம் மக்கள் பற்றிய மதரீதியானதும், இனரீதியானதுமான பிரச்சாரமும், புறக்கணிப்பும், வன்முறையும் நடந்தேறுவதன் பின்னால் உள்ள அரசியல் இதுதான்.

யுத்தக் குற்றவாளிகள் தாங்கள் கொள்ளையிட்டு திரட்டிய யுத்த மூலதனத்தை அடிப்படையாக கொண்ட குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தவும், தங்கள் மூலதனத்தை முதலிட்டு சுரண்டவும் பாசிசம் அவசியமாகிவிட்டது. இந்த வகையில் உள்நாட்டுச் சந்தையை மீள பகிரக்கோருகின்றது. இது முஸ்லீம் மக்கள் மேலான மத இன வன்முறையாக வெளிப்படுகின்றது. அரசியல் ரீதியாக இதை இனம்கண்டு கொள்வது அவசியமானது.

இணங்க வைக்கும் பாசிசம்

இன்று வடக்கில் சிவில் கட்டமைப்பின் பெயரில் இருப்பது இராணுவ ஆட்சி. யுத்தக்குற்றம் பற்றியும், இனவழிப்புப் பற்றியும் எவரும் சுதந்திரமாக மூச்சு விடக் கூடாது என்பதே, போர்க்குற்றவாளிகளின் கொள்கை. வடக்கில் தேர்தல் நடத்துவதாயின், அங்கு எவரும் தமக்கு எதிராக வாய் திறக்கக் கூடாது. பத்திரிகைகள் மீதான தொடர் தாக்குதல்கள், வடக்கில் தேர்தல் மூலம் நிலைநிறுத்த உள்ள ஜனநாயகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இதன் மூலம் தேர்தலை வென்று ஜனநாயகத்தை நிலைநாட்ட முனைகின்றனர். வன்முறை மூலம், அடக்குமுறை மூலம் ஜனநாயகத்தை தோற்றுவிக்க முனைகின்றனர்.

வடக்கில் அரசும், அரசு சார்பாக அல்லாத அனைத்தின் மீதும் வன்முறையும், அரசுக்கு, அரசுக்குச் சார்பாக உள்ளவற்றுக்கு ஜனநாயகமும் என்பதே அங்குள்ள நிலை. இதற்குள் தாமாக அரசுக்கு பாதகமில்லாமல் இயங்கிக்கொள்ளல், அரசுக்கு எதிராக இயங்கிக் கொள்பவர்களுக்கு எதிராக இயங்குவதையும் பாசிசம் கோருகின்றது. இதை ஜனநாயகமாக காட்டி நிலைநாட்டிக் கொள்வதையே, ஜனநாயகம் என்கின்றனர். இப்படி பாசிசமாக்கல் வடக்கில் அரங்கேறுகின்றது. இதைத்தான் இலங்கை முழுக்க படிப்படியாக விரிவாக்கி வருகின்றனர்.

புலியையும் புலிப் பயங்கரவாதத்தையும் ஒழிக்கவே யுத்தம் செய்ததாக கூறிய அரச பயங்கரவாதம், இனவழிப்பு செய்தது. இன்று தமிழ் மக்களின் குரல்களை இல்லாது ஒழிக்கும் அரசு, இதன் மேல் பாசிசப் பயங்கரவாதத்தை ஏவிவிட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று கூறுவதன் மூலம், அதைப் பெரும்பான்மை மீதும் திணித்து வருகின்றது.

இந்தியாவே "புலிப் பயங்கரவாதத்துக்கு" காரணம் என்று கூறுகின்ற அதே நேரம், பயங்கரவாதத்தை தூண்டும் வண்ணம் அடக்குமுறைகளையும், தொடர் தாக்குதலையும் நடத்துகின்றது. பேரினவாதத்தையும், மத அடிப்படை வாதத்தினையும் அடிப்படையாகக் கொண்ட, பாசிசக் கொள்கையே அரசின் அரசியல் செயற்பாடாகியிருக்கின்றது.

இந்த வகையில் இலங்கையில் தொடர்ந்தும், இனமத முரண்பாட்டைத் தூண்டி வருகின்றது. இலங்கைக்குள் தலையிட விரும்பும் எந்தச் சக்தியும், இதை தமது நோக்குக்கும் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்;. இந்த சூழலைத்தான் 1983 இல் இந்தியாவும் பயன்படுத்தியது. இன்றும் அதே நிலை.

இன்று கடலில் இந்திய மீனவர்கள் மேல் இனந் தெரியாத தாக்குதல்கள். வடக்கில் இனம் தெரியாதவர்கள் நடத்தும் தாக்குதல்கள் கடத்தல்கள், கழிவு ஓயில் வீச்சுகள். கூலிக்கு அமர்த்தப்பட்ட காடையர்களைக் கொண்டு வன்முறைகள், காடையர்களைக் கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், இனந்தெரியாத கிறிஸ் மனிதன் ... என அனைத்தும் அரசு கையாளும் பாசிசமாக்கலின் பொதுக் கொள்கையுடன் தொடர்புடையது. இதை நாளை இந்தியா, அமெரிக்கா என எவரும் பயன்படுத்தவும் முடியும். இப்படி பாசிட்டுகள் ஒன்றுமாறி ஒன்றாக அரங்கேற்றும் கேலிக்கூத்தான செயற்பாடுகள் தொடருகின்றது. கிறிஸ் மனிதன் முதல் இராணுவக் கட்டமைப்பை சமூகத்தில் திணிக்கின்ற வக்கிரங்கள் வகைதொகையின்றி தொடருகின்றது.

சமூகம் தானாக இணங்கி பாசிசமயமாக்கத்தை ஜனநாயகமாக்க கோருகின்றது. தனது மூலதனத்துக்கான இடத்தை சுயமாக நீயாக விட்டுத் தரக் கோருகின்றது. பல முனைகொண்ட முகம் கொண்ட பாசிசமாக இலங்கையில் வெளிப்படுகின்றது.

 

பி.இரயாகரன்

14.04.2013

Last Updated on Monday, 15 April 2013 05:28