Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இனங்களுக்கிடையேயான ஐக்கியமும் அதன் தேவையும் (40வது இலக்கிய சந்திப்பு -இலண்டன்)

இனங்களுக்கிடையேயான ஐக்கியமும் அதன் தேவையும் (40வது இலக்கிய சந்திப்பு -இலண்டன்)

  • PDF

ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியம் என்பது இன்று ஒரு புதிய சிந்தனை முறை மட்டுமல்ல, வாழ்க்கை முறையுமாகும். இதனால் இன்று புரட்சிகரமான அரசியல் கூறாக இருக்கின்றது. புரட்சிகரமான சிந்தனையையும், நடைமுறையையும் கொள்ளாது, மக்களுக்கு எவரும் வழிகாட்ட முடியாது. இவ்வகையில் அனைத்துவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடுபவராக இல்லாத வரை, மக்களை வழிகாட்டிச் செல்ல முடியாது. இவ்வாறில்லாமல் நாங்கள் நேர்மையானவராகவும், உண்மையுள்ளவராகவும், வெளிப்படையானவராகவும் இருக்க முடியாது.

கடந்தகால தேசியம் பற்றிய மீள்பார்வை, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்துக்கு முன்நிபந்தனையானது. இன ஐக்கியம் என்பது தொடரும் அரசியலின் நீட்சியல்ல. ஜக்கியத்தின் தேவை என்பது இன்று தவிர்க்க முடியாத அரசியல் தெரிவல்ல. மாறாக மறுக்கப்பட்ட மனிதப்பண்புகளை மீட்டெடுக்கும் போது அதுவே ஐக்கியமாகவும், அந்தத் தெரிவே மனித இருப்பின் தேவையுமாகும். இந்த அடிப்படையில் சமவுரிமைக்கான அமைப்பு தன்னை முன்னிறுத்தி இன்று போராடுகின்றது. சமவுரிமைக்கான புரட்சிகர அரசியல் போராட்டம் என்பது இன்று அனைவருக்குமான மறு அரசியல் சந்தர்ப்பமாகவும் இருப்பதோடு, விமர்சனபூர்வமாக கடந்தகாலத்தை மீள்பரிசீலனை செய்வதற்குரிய அரசியல் வாய்ப்பையும் வழங்குகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியத்துக்காகப் போராடுவது என்பது, சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரதும் அரசியல் தெரிவாக மாறவேண்டும்.

இனவாதமும் மதவாதமும் மனிதவிரோதமானது

இனவாதம், மதவாதம் குறுகியதும், வக்கிரமானதுமாகும். சிறுபான்மை, பெரும்பான்மை என்று, எந்த வேறுபாடும் இன்றி ஒத்த தன்மை கொண்டது. ஒடுக்கும், ஒடுக்கப்படும் என்ற எந்த இன மத வேறுபாடும் இன்றி, ஒரே தன்மை கொண்டது. இனவாதம், மதவாதம் .. சமூகத்தில் நிலவும் பிற சமூக ஒடுக்குமுறைகளைச் சார்ந்து, தன்னை முன்னிறுத்திக் கொண்டு இயங்குகின்றது. இன்று இலங்கை சமூகத்தைப் பிளந்து இயங்கும் அரசியல் அடிப்படை தொடர்ந்து இவ்வாறே இயங்குகின்றது.

இனவாதம், மதவாதம் என்பது மனிதத்தன்மை கொண்டதல்ல. மனிதப் பண்பு கொண்டதல்ல. மாறாக மனிதவிரோதக் கூறாகும். மனிதனை மனிதன் இனரீதியாக மதரீதியாக பிளக்கும் கூறாகும். இதன் மூலம் இனத்தின், மதத்தின் உள்ளான பிற சமூகப் பிளவை மூடிமறைக்கும் மேற்பூச்சாகும். சமூகம் மீது வன்முறையை ஏவும் வன்முறைக் கூறாகும். எந்தவிதமான இனவாதமாகவும் இருக்கலாம், இனத்தின் ஊடாக சமூகத்தை பார்க்க முனைந்தால், அதன் பின் அது மனிதவிரோதமாகவே வெளிப்படும். சிந்தனை, செயல் அனைத்தும், சமூகத் தன்மையற்றதாகவே செயலாற்றும். அது தன்னைச் சுற்றி ஒரு குறுகிய தற்காப்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு விடுகின்றது. மற்ற இன மத மக்களில் இருந்து வேறுபடுத்தி, தன்னை தான் குறுக்கி தன்னைச் சுற்றி வேலியைக் கட்டிக் கொண்டுவிடுகின்றது. மற்றைய இனத்துக்கும் மதத்துக்கும் எதிரான குற்றங்கள் செய்வதற்கான நியாயத்தை முன்வைப்பதுடன், இனவாதம் மதவாதம் சார்ந்து மனிதவிரோதக் குற்றங்களை தயக்கமின்றி செய்யத் தூண்டுகின்றது.

இனக் குற்றங்களாகவும், மதக் குற்றங்களாகவும் இது இருக்கின்றது. இக்குற்றங்கள் சமூகவிரோதச் செயலாக இருப்பதை, இனவாதமும் மதவாதமும் தன்னளவில் மறுக்கின்றது. இனவாதத்தை, மதவாதத்தை சார்ந்து வாழாமல் வாழ்வதையே, சமூகவிரோதமாக கருதுகின்றது. குற்றங்களை இனப்பெருமையின் மதப்பெருமையின் வெளிப்பாடாகக் கருதுகின்றது. இந்த வகையில் தன் இனத்தை, மதத்தை பெருமைப்படுத்திக் கொள்ளவும், மற்றைய இனத்தையும் மதத்தையும் சிறுமைப்படுத்தியும் காட்டிவிடுகின்றது. இப்படி பரஸ்பரம் மனிதவிரோதத்துடன் தான், எதிரெதிராக இனவாதங்களும்;, மதவாதங்களும் மக்களை பிரித்து எதிர்வினையாற்றுகின்றது. பெரும்;பான்மை, சிறுபான்மை சார்ந்த இனவாதம் மதவாதம் என்ற ஒன்றின்றி, மற்றொன்று இல்லை. ஆக ஒன்றைக் காட்டி மற்றொன்றின் இருப்பை நியாயப்படுத்த, எந்த அரசியல் அடிப்படையும் கிடையாது. இப்படி கூறி இனவாதத்தை மதவாதத்தை முன்வைப்பது, அரசியல் மோசடியாகும்.

இந்த இனவாதமும் மதவாதமும் எங்கிருந்தாலும், அது எப்படி இருந்தாலும், அவை சமூக விரோதத் தன்மை கொண்டவை. ஒரு இனவாதத்தைக் காட்டி, இன்னொரு சமூக விரோதமான இனவாதத்தை உருவாக்க முடியாது. எந்த இனவாதத்தையும், மதவாதத்தையும் நியாயப்படுத்த முடியாது. இனவாதம், மதவாதம் எங்கும் எப்போதும், மற்ற இன மத மக்களை இழிவுபடுத்தித்தான், தன் சமூக விரோதத்தை இனவாதமாக மதவாதமாக கட்டமைக்கின்றது. மற்ற இனத்தை மதத்தை ஒடுக்க, தன் இனம் மதம் சார்ந்து பிற்போக்கு கூறுகள் சார்ந்து இனவாதம் மதவாதம் தன்னை அரசியல் ரீதியாக தயார் செய்கின்றது.

இந்த இனவாதம் மதவாதம் சார்ந்தவை தவறான போராட்டமாகவும், சமூகவிரோத குற்றங்களுக்கான அரசியல் அடிப்படையுமாக இருக்கின்றது. இந்த வகையில் மனிதவிரோதக் கூறாகவே, எப்போதும் எங்கும் இனவாதம் மதவாதமும் செயற்படுகின்றது. இதை மறுதளித்து போராடாத வரை, சமூகத்தில் நேர்மையாக இருக்கவும் நேர்மையாக வாழவும் முடியாது. இதை இனம் காண்பதற்காகவும், இதை மறுதளிப்பதற்கான சுயபோராட்டத்தையும் சமூகம் நடத்தியாக வேண்டும்;. இது இன்று அடிப்படையான தேவையாக உள்ளது. இதுதான் இன்று ஐக்கியத்துக்கான புரட்சிகர அரசியல் அடிப்படையாகும்.

மக்கள் திரள் போராட்டத்தை நடத்தத் தயாராகிவிட்டோமா?

எந்த வகையில்? இன்றைய புதிய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப, கடந்தகாலத்தை விமர்சனபூர்வமாக அணுகி இருக்கின்றோமா? அரசியல் நடத்தையை மாற்றினோமா? எழுத்தை, எழுத்துமுறையை மாற்றினோமா? சிந்தனையை, சிந்தனைமுறையை கேள்விக்கு உள்ளாக்கினோமா? எந்த வகையில், எப்படி மாற்றி இருக்கின்றோம். இதற்கு சுயவிசாரணை தேவை. மக்கள் திரள் போராட்ட அனுபவம் தான் உண்டா? இயங்கியல் போக்குடன் அணுக முற்படுகின்றோமா?

மாற்றம் எங்கும் நிகழ்கின்றது. புதிய சூழல், புதிய அணிச் சேர்க்கைகள். மாற்றங்களை கண்டு கொள்ளாமல், மாறாமல் இருக்க முடியுமா?

ஆக எம்மில் இருந்து நாங்கள் மாற்றத்தை தொடங்காமல், மக்களை அணிதிரட்ட முடியாது. இதைப்பற்றி பேசுவது, எழுதுவது முதல், தங்களை இதற்குள் அடையாளம் காட்டுவது வரையான குறுகிய அரசியல் வரையறைக்குள், இதை முடக்கிப் பார்க்கின்ற, காட்டுகின்ற எல்லைக்குள் இது பேசப்படும் பொருளாகவே மட்டும் மக்கள் போராட்டத்தை குறுக்கி விட முடியாது.

எம்மை நாம் மாற்றாமல், எமது கடந்தகால நிலையில் நின்று இதை மாற்றவும், சாதிக்கவும் முடியாது. மக்களை விழிப்பூட்டுவது, அவர்கள் தமக்காக தங்களைத் தாங்கள் அணிதிரட்ட வழிகாட்டுவது என்பது, அர்த்தமுள்ள அரசியல் உணர்வாக எம்மில் மாறவேண்டும். எமக்குத் தெரிந்ததை வைத்து, எமது தெரிந்த செயலை வைத்து, எதையும் முன்நகர்த்த முடியாது. மாற்றம் எங்கும் நிகழ்வது தான் இயங்கியல். சமூகம் மாறிக்கொண்டு இருக்கும் போது, எம்மில் மாற்றம் இன்றி எதையும் முன்னின்று எடுத்துச் செல்ல முடியாது. மாற்றம் என்பது, எமது அரசியலில், எமது அறிவியலில், எமது எழுத்தில், எமது நடத்தையில், எமது சிந்தனையில், எமது செய்கையில் … என எங்கும் தொடர்ந்து இடைவிடாது நடந்தாகவேண்டும். இதை செய்கின்றோமா செய்திருக்கின்றோமா என்பதில் இருந்து தான், இன ஐக்கியமும் அதற்கான போராட்டமும் சாத்தியம்.

யுத்தமும், யுத்தத்திற்கு பிந்தைய சூழலும், கடந்தகால அரசியல் பாதையைக் கேள்விக்கு உள்ளாக்குமாறு அனைவரிடமும் நிபந்தனை இன்றி கோருகின்;றது. யுத்தம் இருந்த வரை புலிகளும், யுத்தத்தின் பின் அரசும், ஐனநாயக மறுப்பு மூலம் உயிர்த்துடிப்புள்ள சமூக இருப்பை இல்லாதாக்கியுள்;ளதை வரலாற்றுப் போக்காகக் கற்றுக் கொள்ளுமாறு எதார்த்தம் அனைவரிடமும் கோருகின்றது.

இன்று மேற்குநாடுகளின் நலன்கள், போர்க்குற்றங்கள் பற்றி பேச வைக்கின்றது என்பதை அரசியல்ரீதியாக புரிந்து கொள்ளுமாறு கோருகின்றது. இன்று இவற்றைப் பேசும் போது, 1971, 1989-1990 களில் இலங்கையில் நடந்த பாரிய போர்க்குற்றங்கள் பற்றிய அக்கறையற்று இருப்பதையும், அதன் ஒரு தொடர்ச்சியாகத் தான் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்தது என்பதைக் கண்டுகொள்ளுமாறு வரலாறு கோருகின்றது. அதே போல் 1980 களில் இயக்கங்கள் இழைத்த மனிதவிரோத செயல்கள் தான், படிப்படியாக போர்க்குற்றமாக பரிணமித்து இறுதியில் இனத்தையே பலியிட்டதை அடையாளம் கண்டுகொள்ளுமாறு நடந்த யுத்த அவலங்கள் கோருகின்றது. மனிதம் தொடர்பான பரந்த சிந்தனைக்கு, செயலுக்கு இது அடிப்படையானது.

இலங்கையில் இனவாதம், இனயுத்தம், இனவழிப்பு வரையான நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியில், இந்தியா, சீனா முதல் மேற்கு வரை தங்கள் குறுகிய நலன் சார்ந்து இந்த மக்கள்விரோத செயல்களுக்கு பக்கபலமாக நின்று செயற்பட்டதே ஒழிய, இவற்றை எதிர்த்துச் செயற்படவில்லை. மக்களுக்கு எதிரானதாகவும், மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு துணை போனதாகவும், போகின்றதாகவும் இருந்தது, இருந்திருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுமாறு கோருகின்றது. மக்கள் நலன் சார்ந்து இவர்கள் எவரும் செயற்படவில்லை என்பதை, வரலாற்று பூர்வமாக உணர்ந்தேயாகவேண்டும் என்பதை கடந்தகால மனித அவலம் காட்டுகின்றது.

ஆட்சிமாற்றங்களிலும்;, இனவாதக் கட்சிகளுக்கு வாக்குப் போடுவதிலும், அன்னிய ஆதிக்க சக்திகளின் மேல் நம்பிக்கை வைப்பதும் தான், காலத்துக்கு காலம் நடந்து வந்ததை வரலாறு எடுத்துக் காட்;டுகின்றது. இப்படி செயல்பட்டவர்கள், செயல்படுபவர்கள் எவரும், மக்கள் மேல் நம்பிக்கை வைத்து செயற்பட்டதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகி இருக்கின்றது. சொந்த மக்கள் மேல் நம்பிக்கை வைக்காதவர்கள், என்றும் இன ஐக்கியத்தை எதிர்த்துத் தான் செயற்பட்டனர், செயற்படுகின்றனர் என்பதை நாம் இனம் கண்டேயாக வேண்டும் என்பதை கடந்த கால எதார்த்தம் எடுத்துக் காட்டுகின்றது.

அரசுடனும், மற்றைய கட்சிகளுடன் பேசியவர்களும், தொடர்ந்து பேசுவதற்கு தயாராக உள்ளவர்களும், மக்களுடன் இதைப் பற்றி பேசத் தயார் அற்றவராகவே உள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது. இது தான் இன்றைய எதார்த்தம். நாங்கள் எதைச் செய்ய வேண்டும் என்பதை, எதைச் செய்யாமல் இருக்கின்றோம் என்பதை, இவை எடுத்துக் காட்டுகின்றது. அனைத்தையும் விமர்சனபூர்வமாக அணுகுவதற்கு, மக்களைச் சார்ந்து இன ஐக்கியத்தை உருவாக்குவதற்கும் இவை பற்றிய தெளிவு அடிப்படையானவை.

சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையுடன் சோந்து வாழ முடியாதா!?

ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்று எவரெல்லாம் கூறுகின்றனரோ, அவர்கள் நிச்சயமாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுடன் கூட சேர்ந்து வாழவும் போராடவும் தயாரற்றவர்கள். உண்மையில் இவர்கள் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களை எதிரியாகக் காட்டி, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களை தமக்குக் கீழ் அடக்கியாளவே விரும்புகின்றவர்கள்;. இதனால்தான் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களை, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் எதிரியாக தொடர்ந்து சித்தரிக்கின்றனர்.

பேரினவாதமும், பௌத்த அடிப்படைவாதமும் சிறுபான்மை மக்களை சிங்கள மக்களின் எதிரியாகக் காட்டி, ஒடுக்கப்பட்ட சிங்களமக்களை அடக்கியாள்வது போன்று தான், சிறுபான்மை சார்ந்து ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களை எதிரியாக காட்டுவதும். சாராம்சத்திலும், உள்ளடக்கத்திலும் இரண்டுக்கும் எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது.

முதலில் நாங்கள் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழத் தயாராக இருக்கின்றோமா!? நாங்கள் அதற்கு தயாராக இல்லாதவரை, அவர்கள் சேர்ந்து வாழமாட்டார்கள் என்று கூறுவது எப்படி? இது அரசியல் அபத்தமல்லவா! இங்கு சேர்ந்து வாழ்வது என்பது, ஒடுக்குபவனுடன் அல்ல. ஒடுக்குபவனுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் சேர்ந்து நின்று போராட, சிறுபான்மை முயன்று இருக்கின்றதா என்பதை சிந்திப்பது முக்கியமானது.

பெரும்பான்மை மக்களுடன் ஐக்கியம் என்பது, பெரும்பான்மையைச் சேர்ந்த ஓடுக்கப்பட்ட மக்களுடனான ஒருங்கிணைந்த போராட்டம் தான். ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின் எதிரியும், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையின் எதிரியும் ஓன்று என்பதை இனம் காணும் அளவுக்கு, அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு, சமூகத்தை மாற்றியாக வேண்டும். இலங்கையில் புரட்சிகரமான மாற்றம் என்பது, வெளியில் இருந்தல்ல உள்ளிருந்து தொடங்க வேண்டும். அதுதான் இலங்கை மக்களின் புரட்சிகரமான மாற்றத்துக்கான முதல்படி.

இதற்காக என்ன முயற்சியை எடுத்திருக்கின்றோம்? இனவாத சிந்தனைமுறையை மாற்றுவதற்காக உணர்வுபூர்வமாக போராடாதவர்களாக உள்ளவரை, இன ஐக்கியம் என்பது வெற்று வார்த்தை தான்.

எம்முடன் புரையோடிக் கிடக்கும் (சாதிய) அடிமைத்தனத்தையும் அடக்குமுறையையும் கட்டிப் பாதுகாக்கும் நாம், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழ்வதைப் பற்றி எப்படி சிந்தித்து செயலாற்றி இருக்க முடியும்? சிறுபான்மை இனத்தைச் (தமிழ்) சேர்ந்தவர்கள், தேசிய சிறுபான்மை இனங்களை (முஸ்லீம்) ஒடுக்கியவர்கள், எப்படி மக்களை உணர்வுபூர்வமாக எங்கள் சொந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்க போராடியிருப்போம்? சொல்லுங்கள். எங்களுக்கு எதிராக, எங்கள் மக்களுக்கு எதிராக இருந்தோம், இருக்கின்றோம். தாம் கொண்டுள்ள இனவாத சிந்தனைமுறையைக் கைவிடாமல் இருக்கும்வரை, மற்றைய ஒடுக்கப்பட்ட இனமக்களை எதிரியாகப் பார்ப்பது, எதிரியாகக் காட்டுவதும் தான் தொடரும் என்பது மட்டுமல்ல தொடருகின்றது. இதை மாற்றாத வரை இனவாதிகளாகவே தொடர்ந்து இருக்கின்றோம் என்பதே உண்மை.

இந்தநிலையில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் தப்பபிப்பிராயங்களை நீக்காமல், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் தப்பபிப்பிராயங்களை எம்மால் நீக்க முடியாது. இவையிரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. சிங்களப் பேரினவாதமும் பௌத்த அடிப்படைவாதமும் சிங்கள மக்களை இனவெறியூட்டி, மதவெறியூட்டி சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கவைக்கின்றது. இதுதான் பேரினவாத அரசியல் நிகழ்ச்சிநிரலும், அதன் அரசியல் உள்ளடக்கமுமாகும்.

நாங்கள் இதை ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு முன் அம்பலப்படுத்தி அவர்களை விழிப்புற வைக்காத வரை, அவர்களை பேரினவாத சேற்றில் தள்ளிவிடும் தொடர் அரசியல் வேலையைத்தான், சிறுபான்மையின் இனவாதமும் மதவாதமும் செய்யும். நாங்கள் இனவாதிகள் அல்ல என்றால், மதவாதிகள் அல்ல என்றால், என்ன செய்திருக்க வேண்டும்;? என்ன செய்ய வேண்டும்?

ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை முன் எமது ஜனநாயகக் கோரிக்கையை முன்வைத்து, அதை விளக்கி அவர்களை ஏற்க வைக்கவேண்டும். இதை நாம் செய்யாது, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையுடன் சேர்ந்து வாழமுடியாது என்று கூறும் எமது இனவாத மதவாதக் கண்ணோட்டத்தை, முதலில் நாம் களைந்தாக வேண்டும். சிறுபான்மை இனவாதத்தை, மதவாதத்தை அம்பலப்படுத்த வேண்டும். ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கை வேறு, சிறுபான்மையின் இனவாதம் மதவாதம் வேறு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதை வேறுபடுத்தி பார்க்கவும், அதைத் தொடர்ந்து அம்பலப்படுத்திப் போராடவும் வேண்டும். இதை ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் எடுத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம் இரண்டு வேறுபட்ட நேரெதிரான அரசியல் கூறுகளையும், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு விளக்கி, அதை தெளிவுற வைக்க வேண்டும். இதன் மூலம் எமது ஜனநாயகக் கோரிக்கைகளை ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம், நாம் முன்முயற்சியுடன் செயற்பட வேண்டும்.

மறுபக்கத்தில் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் ஜனநாயகக் கோரிக்கைக்காக, எமது கருத்தை அவர்களுக்காக உயர்த்துவதுடன், அவர்களுக்காக நாம் அவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும். நிச்சயமாக ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் போராடுவது, அதே பேரினவாத பௌத்த அடிப்படைவாத அரசுக்கு எதிராகத்தான் என்பது வெளிப்படையான ஒரு பொது உண்மை. இப்படி இருக்க நாம் சேர்ந்து போராட முடியாது என்று சொல்லத்தான் முடியுமா? சொல்லுங்கள்!

மக்களின் ஜனநாயகக் கோரிக்கை இனவாதத்தில் இருந்து வேறுபட்டது என்பதை ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்;. இந்த வகையில் மக்களின் பொது எதிரி அரசு என்பதை விளக்கவேண்டும். நாம் எமது பலத்தின் அடிப்படையில், இதை சிறியளவில் தொடங்க வேண்டும். பலரும் விவாதிக்கும் வண்ணம் இதைச் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுடன் உரையாடுவதன் மூலம் எம்மை நாம் ஜனநாயகப்படுத்தி செயல்பட வைக்க வேண்டும். மக்களை அவர்களின் முரணற்ற அரசியல் கோரிக்கைகள் ஊடாக, ஜக்கியப்படுத்த முனைய வேண்டும்.

இலங்கையில் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான வழி என்ன?

60 வருடமாக பின்பற்றிய இனவாத வழியைத் தொடர்வதா? இது தான் இன்றுள்ள கேள்வி. நாங்கள் எதை வரலாற்றுரீதியாக, அனுபவரீதியாக விமர்சனரீதியாக கற்றிருக்கின்றோம்? நாங்கள் கடந்த காலத்தில் எதைச் செய்யவில்லை. எதைச் செய்திருக்கவேண்டும். சமூகம் மீது அக்கறை உள்ள அனைவரும், இதற்கான பதிலை தேடியாக வேண்டும்;. சமூகத்தின் முன் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்குமாறு, வரலாறு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை யுத்தத்தின் பிந்தைய சூழலில் புதிதாக தந்திருக்கின்றது. ஆகவே நாம் எதைப் புதிதாக கற்றுக்கொள்ள போகின்றோம், எதைச் செய்யப் போகின்றோம்.

ஒடுக்கப்பட்ட மக்களை நம்புவதைத் தவிர மாற்றுவழி எதுவும் கிடையாது. எந்த விடுதலையும், எந்த சமூக அக்கறையும், மக்களுக்கு வெளியில் உண்மையாக நேர்மையாக இருப்பதில்லை. சொந்த ஒடுக்கப்பட்ட மக்களை நம்பி செயற்படுவதும், மக்களை ஐக்கியப்படுத்துவதுமே அனைத்துக்குமான அடிப்படையாகும்.

இலங்கையில் இன மத ஒடுக்குமுறையும், அது தோற்றுவிக்கும் இனவாதமும் மதவாதமும் மக்களை தொடர்ந்து பிளக்கின்றது. இதற்கு எதிரான போராட்டமும், உணர்வுகளும் அடிப்படையானது அவசியமானது. இது குறுகியதாக இல்லாது பரந்ததாக இருக்கவேண்டும். இனங்களுக்கு இடையேயான ஐக்கியத்தை முதன்மைப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்துவது அவசியமானது.

இன்று இன ஐக்கியம் மத ஐக்கியம் என்பது வெறுப்புக்குரிய ஒன்றாகவும், இனத்தை மதத்தை அழிக்கும் ஒரு செயலாகவும் காட்டப்படுகின்றது. இன மத வெறுப்பு, இன மத உணர்வாக போதிக்கப்படுகின்றது.

இன்று இன மத வெறுப்புகள் தூண்டப்படுகின்ற அதேநேரம், சாதிய வெறுப்புகளையும் தூண்டிவிடுகின்ற போக்கு இலங்கையில் அதிகரிக்கின்றது. மக்களை சமூக முரண்பாடுகளுக்குள் முரண்பட வைக்கின்ற செயற்பாடுகள் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தையும் சேர்ந்து வாழும் மனிதப் பண்பையும் அழித்துவிடுகின்ற செயற்பாடுகள், அரசு சார்ந்து தீவிரமாக முன்தள்ளப்படுகின்றது.

இதை எதிர்க்கின்ற அரசியல் போக்கில் எழும் இனவாதம், மதவாதம், சாதிய வாதம் ... தன் குறுகிய அடையாளம் சார்ந்து, அவையும் கூட தன் பங்கிற்கு மக்களைப் பிளந்து பிரிக்கின்றது. அரசு எதை விரும்புகின்றதோ, அதைத்தான் இதனால் பாதிக்கப்படும் சிறுபான்மை சக்திகளும் செய்கின்றன.

மற்றவன் என்ன செய்கின்றானோ, அதை நாம் செய்ய முடியாது. மற்றவன் என்னைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பது இரண்டாம் பட்சமானது. மற்றவன் பற்றி என்ன நினைக்கின்றோம் என்பது, முதன்மையானது. நாம் சரியாக இருக்கும் போதுதான், மற்றவன் சரியாக இருப்பதை நாம் உணர முடியும்.

பெரும்பான்மை உன்னைப்பற்றி என்ன நினைக்கின்றது என்பதற்கு முதல், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை பற்றி என்ன நினைக்கின்றாய் என்பதுதான் முதன்மையானது. நீ சேர்ந்து வாழத் தயாரா!? அதற்காக முயன்றாயா!? எப்படி, எந்த வழியில்!? இது அடிப்படையானது.

பேரினவாத அரசு தான் சிறுபான்மை மக்களின் எதிரியே ஒழிய, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் அல்ல. இந்த வேறுபாட்டை எப்போதாவது வாழ்வில் நீ எண்ணிப்பார்த்ததுண்டா!? அனைவரையும் எதிரியாக்கிய போது, சிந்தனை, நடைமுறை எல்லாம் அதுவாகவே இருந்தது சரியானதா?

ஒடுக்கப்பட்டவருடன் ஐக்கியப்பட்டு வாழமுடியாது என்று கூறும் சிந்தனை மனிதத்தன்மையற்றது. உள்ளடக்கத்தில் மற்றவனுக்கு எதிராக இருக்கின்றது என்பதுதான் உண்மை. முதலில் இப்படி சேர்ந்து வாழ மறுக்கின்றாய் என்பதே, வெளிப்படையான உண்மை. இதை மறுக்க, எதிர்மறை கற்பனைகளை, நாம் எமக்குள் உருவாக்கிக் கொண்டு வக்கிரமாக வாழமுனைகின்றோம்.

எதிரி யார் என்ற குழப்பம், அனைவரையும் எதிரியாக்குகின்றது. பெரும்பான்மை சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை, ஏன் இந்தப் பேரினவாத அரசு ஒடுக்குகின்றது!? எப்போதாவது எண்ணிப்பார்த்தது உண்டா!? அவர்கள் பற்றிய சொந்த அறிவுசார் நிலைப்பாடுதான் என்ன!? அவர்களுக்காக என்ன செய்தோம்!? எதிரியின் எதிரியை வென்றெடுக்க, ஏன் முனையவில்லை!? ஏன் அப்படிச் சிந்திக்கவும், செயல்படவுமில்லை!? எது எப்படி தடுத்தது!?

இப்படி நண்பனை எதிரியாகவே பார்த்த தவறு எம்முடையது. அப்படியே இன்றும் பார்க்கின்ற குறைபாடு எம்முன்னுள்;ளது. இது எம் அறிவுசார், பகுத்தறிவுசார் குறைபாடாகும்.

தப்புகளையும், தப்பபிப்பிராயங்களையும் சுயவிசாரணை மூலம் களைவதன் மூலம், தவறுகளில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீளக் கட்டியமைக்க முடியும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முதலில் நீ செய்யவேண்டியது, தவறுகளை இனம் காண்பதும், அதைக் களைவதும் தான். மக்கள் விரோதமான செயல்கள், சிந்தனைகள், மக்களுக்கு எதிராக பரஸ்பரம் எதிர்வினையாகின்றது.

இந்தவகையில் தான் இன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை, மத முரண்பாட்டை எப்படிக் கையாள்வது என்ற கேள்விக்கு விடைகாணவேண்டும். நாங்களும் இனவாதியாக தொடர்வதா, மதவாதிகளாக இருப்பதா என்ற அடிப்படையான கேள்விக்கு, பகுத்தறிவுள்ள அனைவரும் சிந்திக்கவும், பதிலளிக்கவும் வேண்டும். தவறான கண்ணோட்டத்தையும், நடத்தைகளையும் மறுத்து, அதற்கு எதிராக வாழ்தலும் போராடுதலும், சுயவிசாரணை விமர்சனபூர்வமாக செய்வதும் தான், அடிப்படையான அரசியல் நேர்மையாகும். இந்தவகையில் சமூக விரோதம் கொண்ட இனவாதத்தை, சமூகம் சார்ந்து எப்படி எதிர்த்து நிற்கின்றோம் என்பதை நடைமுறையில் நிறுவியாகவேண்டும். இன்றுள்ள அரசியல் பணி இதுதான். இதைத்தான் இன்று சமவுரிமை இயக்கம் உங்கள் முன் நடைமுறையாகவும், நடைமுறையாக்கவும் கோருகின்றது.

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

06.04.2013

Last Updated on Saturday, 06 April 2013 16:13