Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி புதிய பத்திரிகையாக "போராட்டம்"

புதிய பத்திரிகையாக "போராட்டம்"

  • PDF

தமிழ், சிங்கள மொழி பேசும் மக்கள் இணைந்ததான புதிய வரவு தான் "போராட்டம்"பத்திரிகை. ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, இனவாதிகளுக்கு எதிராக, எல்லாவகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக “போராட்டம்” போராடும்.

இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் இது வெளியாகின்றது. மக்களை வழிகாட்டக் கூடிய முற்போக்கான தமிழ் பத்திரிகை இல்லாமையை இது நிவர்த்தி செய்யும். இந்த வகையில் "போராட்டம்" பத்திரிகை இலங்கையில் இருந்து பல்வேறு தடைகளைக் கடந்து வெளிவருகின்றது.

எம்மைச் சுற்றி வெளிவராத உண்மைகள் போல் எத்தனையோ மனித அவலங்கள், அவற்றுக்குத் தீர்வில்லை, வழிகாட்ட யாருமில்லை, அநாதைகளாக மாற்றப்பட்டு வெறுமையில், எமக்குள் நாம் வெம்பிப்போகின்றோம். எமது நம்பிக்கைகளுக்கு என்ன நடந்தது என்பதை உணரக்கூட முடியாதவர்களாக நாம் சிதைக்கப்பட்டு விட்டோம்.

இதில் இருந்து ஒரு தெளிவையும், அறிவையும் பெற்று வாழ்வது எப்படி? மந்தைகளாக அல்ல, மீண்டும் மனிதர்களாக மாறுவது எப்படி? அந்த வகையில் நாம் எடுத்து வைக்கும் ஒரு காலடிதான், உங்கள் கையில் உள்ள "போராட்டம்" பத்திரிகை.

இதன் அடிப்படை நோக்கம் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களை அணிதிரட்டும் வகையில், வழிகாட்டுவதாகும்.

இன்று நாட்டில் வடக்கில் நடத்தப்பட்ட கைதுகளுக்கு எதிராக, தெற்கில் போராட்டங்கள் வெடித்த போதும், அதை நாட்டிலும் சரி புலம்பெயர் நாட்டிலும் சரி எந்தப் பத்திரிகைகளும் முழுமையாக வெளிக்கொண்டு வரவில்லை. தமது வியாபார மற்றும் குறுகிய நோக்கம் கருதி தமக்கு ஏற்ப செய்திகளை திரித்தும் புரட்டியும் வெளியிட்டனர். இவற்றை உடைத்தெறியவும், உள்ளதை உள்ளபடி வெளிக்கொண்டு வரவும்"போராட்டம்" பத்திரிகை வெளிவருகின்றது.

"போராட்டம்" பத்திரிகை வெறும் கடதாசி அல்ல. உழைத்து வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளக் குமுறல்களாகவே இது தொடர்ந்து மாதம் ஒரு முறை வெளிவரவுள்ளது.

இலங்கை அண்மைய வரலாற்றில் பல பத்திரிகைகள் வெளிவந்த போதும், அது மக்களைச் சார்ந்து அவர்களின் விடுதலைக்கு நடைமுறையுடன் வழிகாட்டவில்லை. வெளிவந்தவை முழு மக்களையும் சென்றடையாது, சில பிரதேசத்தில் மாத்திரம் பரவல்படுத்தப்பட்டு நின்றுள்ளது. ஆனால் “போராட்டம்” மொழி கடந்து நாடு கடந்து இலங்கை, இந்தியா, கனடா, பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், சுவிஸ், பிரித்தானியா, அவுஸ்ரேலியா, என பலநாடுகளிலும் வெளிவருகின்றது.

மக்களே!

இது உங்கள் பத்திரிகை. உங்களின் ஆதரவுடன், உங்கள் உதவியுடன் தொடர்ந்தும் வெளிவரும். உங்கள் ஆலோசனைகளையும், ஓத்துழைப்பையும், பங்குபற்றலையும் கோரி நிற்கின்றோம்.

எம்மைச் சுற்றி இன்று எவ்வளவோ நிகழ்வுகள். அரபுலக மக்களின் கிளர்ச்சி, மேற்கு ஆதரவுடன் இருந்த சர்வாதிகாரிகளுக்கு பதில் மறுபடியும் மேற்கு கைக்கூலிகளின் ஆட்சி, லிபியா பின் சிரியா சர்வாதிகாரிக்கு எதிராக மேற்கு நடத்தும் ஆக்கிரமிப்பு என்று எத்தனையோ மக்கள் விரோத நிகழ்வுகள். யப்பான் அணுவுலை வெடிப்பு உணர்த்துகின்றது உலகம் அணுக் கதிர்வீச்சின் எல்லைக்குள் சுருங்கி விட்டதை என்பதை.

ஆம், ஒரு மனிதன் மனிதனாக வாழ இன்று எத்தனை தடைகள். இவற்றை எல்லாம் நாங்கள் பேசியாக வேண்டும். இதை “போராட்டம்” ஊடாக உங்களுடன் பேச முனைகின்றோம். உங்கள் கரங்கள் எங்கள் கரங்களுடன் ஒன்றிணைந்து ஒரே திசையில் ஒன்றாகச் செல்வதற்கு "போராட்டம்" என்றும் வழிகாட்டும்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

04.01.2012

Last Updated on Saturday, 05 January 2013 17:23