Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி யாழ்-பல்கலைக்கழகம் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரளுமாறு கோருகின்றோம்!

யாழ்-பல்கலைக்கழகம் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரளுமாறு கோருகின்றோம்!

  • PDF

கடந்த இரு நாட்களாக வட-கிழக்கில், அரச படைகளின் அத்துமீறிய அராஜகம் மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கின்றது. தாம் நம்பியதோர் இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த தியாகிகளை நினைவு கூருவதை, சிங்களப் பேரினவாதம் ஒடுக்கும் வண்ணம் அரச பயங்கரவாதத்தை ஒரு இனத்தின் மீது ஏவியிருக்கின்றது.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பாக பேரினவாத வெறி கொண்டு வன்னியில் ஓர் மாபெரும் மனித வேள்வியை நடாத்திய அரசின் பிணந்தின்னிகள்தான், இலட்சோப இலட்சமாய் வடகிழக்கில் வாழும் எம்மக்களின் காவல் நாய்களாக உள்ளன. கழுதைகளுக்கு கற்பூர வாசனை தெரியாது. அதனால்தான் எம்மக்கள் தாம் பறிகொடுத்த தம் சொந்த-பந்த இரத்த உறவுகளை இந்நாளில் நினைவுகூர முற்படும் போது, அம்மக்களை காடைத்தனம் கொண்டு அடக்குகின்றது அரச பயங்கரவாதம். தங்கள் உறவுகளை நினைவு கூரவும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் கூட சுதந்திரம் கிடையாது. வட-கிழக்கின் சிவில் நிர்வாகம் இப்படித்தான் அம்மணமாகி இருக்கின்றது.

இலங்கையின் தொடரான பேரினவாத அரசியல் வரலாற்றின் இன்றைய காலகட்டம், இன-அழிப்பு நோக்கிலான இனச் சுத்திகரிப்புச் செயல்களை மேற்கொள்வதாகும். மகிந்தப் பேரினவாத அரசு இனங்களுக்கிடையிலான அந்நியோன்னிய உறவுகளை எந்தெந்த வழிகளில் சிதைத்து சீரழிக்க முடியுமோ, அதை தேசிய-சர்வதேச பிற்போக்குகளின் துணையுடன் மிகக்கற்சிதமாகச் தொடர்ந்து செய்து வருகின்றது. மறுபுறத்தில் இனவெறி கொண்டு, சிறுபான்மை இன மக்கள் மேலான திட்டமிட்ட இன, மத அடக்குமுறையை தொடர்ந்து மேற்கொள்கின்றது.


இதன் ஒரு அங்கம் தான், வட-கிழக்கில் கட்டவிழ்த்து விடப்பட்ட படைகளின் பயங்கரவாத காடைத்தனம் ஆகும். கிழக்கு மாகாணத்தின் பல மாவட்டங்களில் அப்பகுதி மக்களால் அனுஷ்டிக்கப்பட்ட மத அனுஷ்டானங்களை முன்னெடுக்க வேண்டாமென கோரும் அறிவிப்புக்களை கடற்படையினர் ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பு செய்தனர். வாகனங்கள் மூலமும் அதே போன்று ஆலயங்களது ஒலிபெருக்கிகள் மூலமும் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அறிவிப்புக்களை ஒலிபரப்ப மறுத்த ஆலயமொன்றினது மதகுருவொருவர் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இப்படி அங்குமிங்குமாக பல பயங்கரவாதங்கள் அரங்கேறியது.

இத்துடன் நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியினுள் அத்துமீறி இராணுவத்தினர் நுழைந்தனர். குறிப்பாக பெண்கள் விடுதியினுள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறிப் புகுந்ததிற்கும், பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளை மிரட்டியமைக்கும், எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளனர். இந்த அராஜகத்தால் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும் படையினரின் தாக்குதலுக்கு இலக்கானார்கள்.

அடக்கி-ஒடுக்கலுக்கு எதிராகப் போராடி மடிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது நாகரீகத்துடன் கூடிய மனிதப்பண்பு. அதுவும் ஓர் பல்கலைக்கழகத்திற்குள் அஞ்சலி நிகழ்வு நடைபெறும் வேளை, அங்கு இராணுவத்திற்கு என்ன வேலை? இதை அனுமதித்தது யார்? அப்படி அத்துமீறி செல்லும் வேளையில் பல்கலைக்கழக நிர்வாகம் கைகட்டி, வாய் பொத்தி, மௌனமாக பச்சைக்கொடி காட்டி உள்ளே விட்டுள்ளது. பாசிஸ-சர்வாதிகார பேரினவாத அரசின் இந்த நடவடிக்கை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுசரணையுடன் தான், இந்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறியது.

இந்த நிலையில் அரசிற்கெதிரான பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள், வர்க்கப் போராட்டமாக மாற வேண்டும். இப் பாசிச அரசு தமிழ் மக்களை மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களையும் தான் அடக்கி ஒடுக்குகின்றது. அதிலும் அம்மக்கள் மத்தியிலுள்ள மாணவ சமுதாயமும் பலவித அடக்கி—ஒடுக்கல்களுக்கு தொடர்ந்து உள்ளாகி வருகின்றது. இதை அண்மைக்கால பல்வேறு போராட்டங்களின் ஊடாக நாம் காணமுடியும். யாழ்-பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் அம்மாணவர்களின் போராட்டங்களுடன் ஒன்றிணைய வேண்டும். அதே போல் வட-கிழக்கு மக்களின் போராட்டங்களை ஆதரித்து, இலங்கை தளுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இனரீதியான அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக, இனரீதியாக தனித்துப் போராடுவதல்ல. ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் தான், அரச பாசிச பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும்.

அரச பேரினவாத பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம்!

ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சார்ந்து நின்று போராடுவோம்!!

ஒடுக்கப்பட்ட அனைத்து இன மக்களுடன் ஓன்றிணைந்து போராடுவோம்!!!

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
29.11.2012

Last Updated on Thursday, 29 November 2012 12:10