சுயநிர்ணயத்தை ஏற்காதவர்களுடன் ஒரேயொரு அடிப்படையான நிபந்தனையுடன் இணைந்து போராட முடியும். இனவொடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் போராடுபவர்களாக இருந்தால், அவர்கள் அப் போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுப்பவர்களாக இருந்தால், முதலில் நாம் ஆதரிக்க வேண்டும். வர்க்கக் கண்ணோட்டத்தில் இதை அவர்கள் முன்வைத்து செயல்படுத்துபவர்களாயின், இணைந்து போராடமுடியும். இதை நிராகரிப்பதற்கு என முன்வைக்கப்படும் எந்த அரசியல் தர்க்கமும் அடிப்படையற்றவை.
வர்க்கப் போராட்டத்தை நாம் முன்னெடுக்கும் போது, தனித்து குறித்த வர்க்கத்தை மட்டும் அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை நடத்துவது கிடையாது. பல்வேறு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஜனநாயகக் கோரிக்கைகளுடன் ஒன்றிணைந்து தான் போராடுகின்றோம். வர்க்க சர்வாதிகாரத்தை சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக கையாளும் போது, இடைப்பட்ட வர்க்கங்களுக்கு எதிராக அதை நேர்கோட்டில் கையாள்வது கிடையாது. பல இடைநிலைகள் கொண்ட, அதேநேரம் இணங்கி தங்கள் வர்க்கக் கூறுகளை அழித்துக்கொள்ளும் பல்வேறு வடிவங்கள் மூலம் தான், வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்க மார்க்சியம் கோருகின்றது.
சமூகத்தில் நிலவும் வர்க்கக் கூறுகளுக்கு, ஏற்ப இங்கு பல இடைநிலை வடிவங்கள் உண்டு. போராட்ட வடிவங்கள், போராட்ட சக்திகள்,.. என்று பல வேறுபட்ட கூறுகள். ஒற்றைப் பரிணாமத்தில் இருப்பதில்லை, இயங்குவதுமில்லை. எங்கள் கோட்பாட்டுத் தளத்தில் மட்டும் சமூக இயக்கம் நேர் கோட்டில் இருப்பதில்லை. இதைப் புரிந்துகொள்ளாமல், இதை எம்மில் நாம் மாற்றிக்கொள்ளாமல் சமூக இயக்கத்தில் தலையிட முடியாது.
இன்று தேசிய இனவொடுக்குமுறைக்கு எதிராக, சுயநிர்ணயக் கோட்பாட்டு அடிப்படையில் மார்க்சிய தத்துவம் முரணற்ற வகையில் வழிகாட்டுகின்றது. இவற்றை நடைமுறையில் முரணற்ற வகையில் முன்னெடுத்து செயற்படுவதன் மூலம் செயலாற்றக் கோருகின்றது. இவ்வடிப்படையில் ஒரு வர்க்கக்கட்சி தன் கட்சித்திட்டத்தில் சுயநிர்ணயத்தைக் கொண்டிருப்பது அவசியமானது.
இதனால் இதை கொண்டிராதவர்களை, ஒடுக்குமுறைக்கு நிகராக நாம் எதிரியாகச் சித்தரிப்பது கோட்பாட்டு வரட்டுவாதமாகும். மார்க்சிய தத்துவத்தை சொல்லி இதை மறுப்பது, இயங்கியல் மறுப்புவாதமாகும்.
இனவொடுக்குமுறையை எதிர்த்து போராடுபவர்களை நாம் எதிரியாக்க முடியாது. அதுவும் முரணற்ற வகையில் முன்வைத்து போராடுபவர்களுடன், நாம் இணைந்து போராட முடியும். சுயநிர்ணயத்தை கோட்பாடாக ஏற்றுக்கொண்டு அரசியலை மேல் இருந்து முன்வைப்பது போல், சுயநிர்ணயத்தின் உட்கூறுகளை கீழிருந்து மேலாக முன்வைக்க முடியும். இதை நிராகரிப்பது அரசியல்ரீதியாக கோட்பாட்டு வரட்டுவாதம். மேல் இருந்து அல்லது கீழ் இருந்து, இரண்டும் சரியான நடைமுறையாக, இவ்விரண்டும் நடைமுறைச் செயற்பாட்டுக்கு வர வேண்டும். இரண்டும் இணைந்து பயணிக்க முடியும். இது முரணான கூறல்ல.
இன்றைய சூழலில் சுயநிர்ணயத்தைக் கோட்பாட்டளவில் மேல் இருந்து ஏற்றுக்கொண்டவர்கள், நடைமுறையில் மக்களை அணிதிரட்டும் பணிக்கான வர்க்க நடைமுறையிலான தங்கள் செயற்பாட்டில் இல்லை அல்லது பின்தங்கியே உள்ளனர் அல்லது புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். மறுதளத்தில் கீழிருந்து இனவொடுக்குமுறைக்கு எதிரான நடைமுறைப் போராட்டத்தில், முன்னின்று முன்னெடுக்கும் செயற்பாடுகள் முன்நோக்கி நகருகின்றது.
சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டவர்கள், இதை நிராகரிப்பது மார்க்சியமல்ல. இனவொடுக்குமுறைக்கு எதிராக இணைந்து செல்வதன் மூலம், இனவொடுக்குமுறைக்கு எதிரான இச் செயற்பாடுகள் தான், சுயநிர்ணயக் கோட்பாடு என்பதை புரிய வைத்து ஏற்க வைக்கவேண்டியது அவசியம். இதற்கு இனவொடுக்குமுறைக்கு எதிராக, ஒற்றிணைந்த இந்த நடைமுறை வேலைகளில் இறங்கியாக வேண்டும். இதைவிடுத்து வேறு நடைமுறை எதுவும் தனித்துவமாக கிடையாது. இதைவிடுத்து சுயநிர்ணயத்துக்கு என்று, வேறு தனித்துவமான நடைமுறை ஒன்றைக் காட்ட முடியாது.
"நாங்கள் சுயநிர்ணயத்தை ஏற்றவர்கள்" என்று கூறி நடைமுறையை நிராகரிப்பது, சுயநிர்ணயத்தை தவறாக விளக்கம் கொண்டு நிற்பவர்கள் தான். அதுபோல் வர்க்க நடைமுறைக்கும் வர விரும்பாதவர்கள் தான், இவ் நடைமுறையை நிராகரிக்கின்றனர். சுயநிர்ணயத்தை ஏற்று ஆனால், சுயநிர்ணயத்தை ஏற்காதவர்களின் நடைமுறையை நிராகரிப்பவர்களின் பின், இப்படிப்பட்ட இரண்டு அரசியல் கூறுகள் உள்ளது.
தமிழீழத்தை ஏற்காதவர்கள் எல்லாம் துரோகிகள் என்று கூறி ஒடுக்கிய தமிழ்தேசியம் போல், தங்களுடன் இல்லாதவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறி செயற்பட்ட புலிகள் போல், சுயநிர்ணயத்தை ஏற்காதவர்களை தமிழ்மக்களின் எதிரியாகக் காட்டுவதன் மூலம் அரசியலை குறுக்கி செயற்பட முனைகின்றனர்.
சுயநிர்ணயத்தை ஏற்காதவர்கள் அல்லது முன்வைக்காதவர்களை தமிழ்மக்களை ஒடுக்குகின்றவர்களாகக் காட்டுவது அபத்தமானது. மாறாக தமிழ்மக்களை ஒடுக்கின்றவர்களுக்கு எதிராக போராடுகின்றவர்களை, சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டதாக கூறிக்கொள்பவர்கள் மறுப்பார்களாயின், உண்மையில் இவர்களின் அரசியல் மற்றும் கோட்பாடுகள் தத்துவங்கள் மக்களுக்கு உதவப்போவதில்லை.
இதைத்தான் மாவோ மிக அழகாக "தத்துவம், கோட்பாடு இரண்டுமே ஒரு அரசியல் பாதையின் வழிகாட்டி. இவற்றை சரியாகக் கையாண்டு அரசியல் நடைமுறையை நிர்ணயிப்பதும், குறிக்கோளை நோக்கி முன்னேறுவதும் புரட்சியாளர்களின் கடமை. அதை விடுத்து, நடைமுறையில் மக்களுடன் நின்று போராடுவோரை தூற்றுவதும், அவர்களை தமது தத்துவ - கோட்பாட்டுப் பிதற்றலுக்கு ஏற்றால் போல நடக்கக் கோருவதும், சரியான மக்கள் சார்ந்த அரசியற் செயற்பாடாக இருக்க முடியாது. தத்துவக் - கோட்பாட்டு பிரயோகத்தை மந்திரமாக உபயோகிப்போரை, நடைமுறையில் போராட அழைப்பதன் மூலமே அம்பலப்படுத்த முடியும்." என்றார்.
தங்கள் சுய அரசியல் மற்றும் நடைமுறை அம்பலப்பட்டு போகும் என்பதால், இனவொடுக்குமுறைக்கு எதிரான நடைமுறையை மறுப்பவராக சுயநிர்ணயத்தை ஏற்பதாக கூறிக்கொண்டு செயல்படுகின்றனர். அதை தமிழ்மக்களுக்கு எதிரானதாக காட்ட முனைகின்றனர். இப்படி தங்கள் குறுகிய கோட்பாட்டு அடித்தளத்தை கொண்ட அரசியல் மூலம், செயலுக்கும் மாற்றத்துக்கும் எதிராக அதை முன்னிறுத்துகின்றனர். இது தான் இன்றைய அரசியல், வெவ்வேறான போக்குகள்.
பி.இரயாகரன்
30.10.2012