Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

கருத்துக்கள் அனைத்தும் நடைமுறைக்கே ஒழிய கருத்துக்காகவல்ல

  • PDF

நடைமுறையுடன் இணையாத கருத்துகளில் தொங்கிக்கொண்டு இருக்க முடியாது. அத்துடன் கருத்துக்களை மற்றவர்களுடன் இணைந்து அமைப்பாக்காக முனையாத வெற்றுக் கருத்துகளை நாம் போற்ற முடியாது. இந்தக் கருத்துக்கள் எதுவும் சமூகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பயணிப்பதில்லை. கருத்துகள் மனித வாழ்வியல் சார்ந்து பிறக்கும் போது, அதை நடைமுறையுடன் மீளப் பொருத்தாத வரை, கருத்துக்கள் சமூக இயக்கத்தில் இருந்து விலகிவிடுகின்றது. இந்த வகையில் வர்க்கப் போராட்டம் என்பது வெறும் கருத்துகளல்ல, அது நடைமுறைத் தத்துவமாகும். அதுபோல் வெறும் வரட்டுவாதமல்ல, மாறாக நடைமுறைக்குரிய தத்துவம். இது உலகை மாற்றியமைக்கும் கோட்பாடாகும். கருத்துக்களை வெறும் விவாதத்துக்குரிய எல்லைக்குள் முடக்குவது, அதை வாழும் சூழலுக்கும் தனக்கு ஏற்ப தகமைத்துக் கொண்டு, கருத்தை வெறும் கருத்தாக நடைமுறையில் இருந்து பிரிப்பது புரட்சியாளனின் அரசியலல்ல.

புரட்சியாளளின் நேர்மையை வெறும் கருத்துகளின்; ஊடாகவல்ல, நடைமுறையில் தன் கருத்தை சமூக இயக்கத்தில் இணைத்துக்கொண்டு பயணிப்பதன் ஊடாக வெளிப்படுத்தவேண்டும்.

நடைமுறையில் தம்மை இணைத்துக் கொள்ளாத பிரமுகர்களை மட்டுமல்ல, கருத்தை நடைமுறையுடன் இணைக்காத வெறும் கருத்துகள் கூட நாம் எதிர்த்துப் போராடவேண்டும். நாம் இன்று வாழும் அன்னிய சூழலும், நாம் பிரதிபலிக்கும் மக்களுக்கு இடையிலான புறத்தடைக்கும் அப்பால், எமக்குள் உள்ள அகத்தடையானது, புறத்தடையைக் காரணமாகக் காட்டி இயங்குகின்றது. அதாவது கருத்தை கருத்தாக தக்கவைக்க, புறத்தடையை காரணமாக முன்வைக்கின்றனர்.

வெறும் கருத்துக்களை கொண்டு புரட்சி செய்ய முடியும் என்பது பாசாங்குத்தனம். வெறும் கருத்துகளை வைப்பதன் மூலம், விவாதங்களை செய்வதன் மூலம் மட்டும் உலகை மாற்றமுடியாது. கருத்தை நடைமுறையுடன் இணைத்தல் அவசியமானது.

இலங்கையில் பாசிசச் சூழல் நிலவிய காலத்தில், படுகொலைகளில் இருந்து தப்பிக்கவே, நாட்டை விட்டு வெளியேறினோம். மாறாக பாசிசத்துக்கு எதிரான அரசியல் நடைமுறையில் இருந்து வெளியேறவென, நாம் வெளியேறவில்லை. இப்படி இருக்க இந்த உண்மையை மறுக்கவும், நடைமுறையற்ற கருத்துக்குள் சென்று, கருத்து சார்ந்த அரசியல் சீரழிவே பாசிசத்துக்கு ஏற்ற ஒன்றாக மாறியது. நடைமுறையைக் கோராத, அதை அடிப்படையாகக் கொள்ளாத கருத்துக்கள், வாழும் சூழல் சார்ந்து அதற்கு அமைவாக நடைமுறையை மறுக்கும் கருத்துக்கள் என பலவற்றை முன்வைத்தனர்.

அன்று பாசிசப் படுகொலையில் இருந்து தப்பி வெளியேறியது தொடர்ந்து அதற்கு எதிராக போராடுவதற்குதான். போராடாமல் இருப்பதற்கு அல்ல. நாட்டுக்கு வெளியில் இருந்து பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது கூட, பாசிசத்தை எதிர்கொண்ட ஒரு நடைமுறைப் போராட்டமாகவே இருந்தது. பாசிசப் படுகொலை என்பது, நாடு கடந்தும் அச்சுறுத்தியது.

பாசிசத்துக்கு எதிரான இந்த நடைமுறையைக் கண்டு அஞ்சி விலகிய அரசியல் பின்புலத்தில், நடைமுறையில் இருந்து விலகிவிடும் கோட்பாடுகள் உருவானது. பாசிசத்துக்கு எதிரான நடைமுறைப் போராட்டத்தில் இருந்து விலகிய, கருத்துப் பிழைப்புவாதம் உருவானது. பாசிசத்துக்கு எதிராக நடைமுறையில் போராடிய மார்க்சியத்தை மறுக்கும் கோட்பாடாக அது மேலெழுந்தது. மார்க்சியத்தை திருத்தியதன் மூலம், போதாமை பற்றி புலம்பியதன் மூலம், மார்க்சியத்தை எதிர்த்ததன் மூலம், வேறு கோட்பாடுகளை கொண்டு வந்ததன் மூலம், பாசிசத்துக்கு எதிரான நடைமுறையில் போராட்டத்தில் இருந்து விலகினர். இப்படி தங்கள் இந்த கருத்துக்கான ஜனநாயகப் போராட்டமாகத் திரித்து, அதையே தாம் கோருவதாக பாசாங்கு செய்தனர். நடைமுறையை மறுக்கும் தங்கள் கருத்துக்கான ஜனநாயக போராட்டமாக நடைமுறையைத் திரித்தனர். இப்படி பாசிசத்துக்கு எதிரான நடைமுறைப்; போராட்டத்தை முன்வைத்த மார்க்சியத்தினைத் திரித்து மறுத்ததன் மூலம், நடைமுறையைக் கோராத தங்கள் கருத்துக்கான ஜனநாயகத்தை முன்வைத்தனர்.

இந்த வளர்ச்சிப் போக்கின் ஒரு கூறுதான், அரசுக்கு ஊடாக ஜனநாயகத்தை கோருவதில் போய் முடிந்தது. மறுதளத்தில், ஜனநாயகத்தை கோரியதானது மக்களுக்காக போராடுவதற்கே என்ற உண்மையை மறுப்பவர்களாக மாறினர். நடைமுறையை மறுப்பவர்களாக மாறினர்.

மார்க்சியத்தைக் கைவிட்ட, மார்க்சியத்தை நிராகரித்த அனைவரும், மக்களுக்காக போராடுவதற்கே ஜனநாயகம் என்ற உண்மையை மறுப்பவர்களாகினர். கருத்து நடைமுறைக்கே என்பதை மறுக்கும் வண்ணம், கருத்தை கொண்டு இருக்கும் தங்கள் உரிமையையே ஜனநாயகமாகக் காட்டி அதை கோட்பாடாக்கினர். இது மக்களின் நடைமுறைப் போராட்டத்தை மறுத்து, கருத்து கருத்துக்கானதென ஆக்கினர்.

இந்த நிலையில் நாம் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டுமல்ல, பாசிசத்துக்கு எதிரான நடைமுறையைக் கோரிய மார்க்சியத்தை மறுத்து எழுந்த கோட்பாடுகளையும், அதன் நடைமுறைகளையும் கூட எதிர்த்து, போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. ஜனநாயகம் மக்களுக்காக போராடுவதற்கு தானே ஓழிய, போராட்டத்தில் இருந்து விலகி இருப்பதற்கல்ல. கருத்துக்கள் நடைமுறைக்கே ஓழிய, கருத்தாகவோ பிரமுகர்தன இருப்புக்காகவோவல்ல.

பாசிசம் கோலோச்சிய சூழலில் இந்த இரண்டு வேறுபட்ட போக்குகளுக்கும் இடையிலான வேறுபாடு என்பது, வெளிப்படையாக புரிந்துகொள்ள முடியாத வண்ணம் பிரதிபலித்தது. வெறும் கருத்துக்காக, கருத்துப் போராட்டமாக வெளிப்பட்டது. இது தான் நடைமுறை என்று கூறுமளவுக்கு, மயக்கத்தை உருவாக்கியது.

போராடுவது என்பது கருத்து சொல்வதுடன் நிறுத்திக்கொள்வதல்ல. அதை நடைமுறைப்படுத்துவது தான். அதாவது நடைமுறையுடன் எம்மையும், எம் கருத்தையும் இணைத்துக் கொள்வது தான். இலங்கையை மையப்படுத்திய எமது அரசியலை இலங்;கையின் புரட்சிகர நடைமுறையுடன் இணைக்கும் வண்ணம், நாம் கடந்து செல்லவேண்டும். கருத்து கருத்துக்காகவே என்ற "ஜனநாயக"த்தையும், அது சார்ந்த கோட்பாடுகளையும் நிராகரிக்கவேண்டும்.

இதை நோக்கி நாம் சிந்திப்பதும் செயல்படுவதும் முதன்மையானது. எப்படி நாம் நடைமுறையுடன் எம்மையும், எம் கருத்ததையும் இணைப்பது என்பதே, எமது முதன்மையான இன்றைய அரசியல் செயற்பாடாக இருக்கவேண்டும்.

 

பி.இரயாகரன்

30.08.2012

Last Updated on Thursday, 30 August 2012 19:39