Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!

  • PDF

இந்தியன் பிரீமியர் லீக் எனும் குத்தாட்ட கிரிக்கெட் போட்டியின் இரசிகனான பொறியியல் கல்லூரி மாணவன் ரவிச்சந்திரா,  ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஐந்து இலட்சம் ரூபாõயைத் தோற்றுவிட்டு, அதனை அடைப்பதற்காக ஒரு சிறுவனை கடத்தி, பிணையத் தொகை கேட்டுக் கொலையும் செய்துவிட்டான். இது ஆந்திரத்தின் கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறுநகரில் நடந்திருக்கும் சம்பவம்.

ஒரு சிறுநகரிலேயே இப்படி.  அனைத்திந்திய அளவில் தற்போதைய ஐ.பி.எல் சீசனின் சூதாட்ட மதிப்பு தோராயமாக 6000 கோடி ரூபாõயை எட்டும் என்கிறார்கள். ஆங்காங்கே போலீசு இவர்களை கைது செய்தாலும் சூதாட்டம் மற்றும் மோசடி ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ்தான் வழக்கு போடமுடியும். அபராதத்தை மட்டும் கட்டிவிட்டு ஆட்டத்தை தொடருகிறார்கள் சூதாடிகள். சூதாட்டத்தையே சட்டப்பூர்வமாக்கிவிடலாம் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

இது பணக்கார வீட்டுப் பையன்களது கேளிக்கை உலகம் மட்டுமல்ல. ஐ.பி.எல் போட்டியின் அதிகாரப்பூர்வ கார்டு கேம்-ஐ (சீட்டாட்டத்தை) டாப்ஸ் ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றிருக்கிறது. இதுவரை சிறுவர்களிடம் ஐம்பது இலட்சம் சீட்டுக்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டல்ல, வர்த்தகம்தான் எனுமளவுக்கு உலக அளவிலான கிரிக்கெட் வருமானத்தின் 70 சதவீதத்தை பிசிசிஐ-தான் வைத்திருக்கிறது. தற்போதைய ஐ.பி.எல் ஆட்டத்தில் விளையாடும் ஒன்பது அணிகளும் ஆரம்பத்தில் 5000 கோடி ரூபாõய்க்கு மேல் ஏலமெடுக்கப்பட்டன. தற்போது அவற்றின் மொத்த மதிப்பு 9000 கோடிக்கும் மேல். ஊடக உரிமை, இணைய உரிமை, ஸ்பான்சர் கட்டணம், டிக்கெட் வருமானம், அனைத்தும் இந்த அணிகளின் முதலாளிகளால் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இந்த 5வது ஐ.பி.எல் சீசனின் மதிப்பு 15,000 கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

கிரிக்கெட்டிற்கு இருக்கும் வரவேற்பு, வர்த்தகம் இரண்டையும் கணக்கில் கொண்டுதான் விஜய மல்லையா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, ஷாருக்கான், பாம்பே டையிங், ஜி.எம்.ஆர், டெக்கான் குரோனிக்கிள், இந்தியா சிமெண்ட்ஸ், ராஜ் குந்த்ரா முதலான பெரும் தரகு முதலாளிகள் ஐ.பி.எல் -இல் இறங்கியிருக்கிறார்கள். வீரர்களை ஏலமெடுப்பதில் துவங்கி, மைதானத்தில் ஆட்டத்தை பார்க்க ரூ.500 முதல் ரூ.50,000 வரையிலான நுழைவுக் கட்டணம் வரை ஐ.பி.எல்லின் வர்த்தகம் மர்மம் நிறைந்தது. கற்பனைக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் பிசிசிஐ (இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) என்பது பில்லியனர்கள் கட்டுப்படுத்தும் கிரிக்கெட் என்று அழைக்கிறார் பத்திரிகையாளர் சாய்நாத்.

ஒரு ஐ.பி.எல் சீசனில் விளையாடுவதற்கு மட்டும் ஒரு நடுத்தரமான வீரர் 9 கோடி ரூபாயை வருமானமாகப் பெறுகிறார். வீரர்களுக்கு ஒப்பந்த பணம் போக, பரிசுப் பணம், அணி வெற்றி பெறுவதற்கேற்ற பணம், சிறந்த வீரர் பணம் என்று ஏராளமுண்டு.  .

முன்பு பி.பி.சி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, சில நூறு கிரிக்கெட் வீரர்களிடம் நடத்திய சர்வேயில், ஐ.பி.எல்லுக்காக விரைவிலேயே ஓய்வு பெறும் திட்டத்தில் பல வீரர்கள் இருப்பது தெரியவந்தது. இந்த சீசனில் 15 கோடி ரூபாõய் சம்பாதிக்கின்ற சேவாக், காயம் பட்டாலும் சகித்துக் கொண்டு விளையாடுகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் மண்ணைத் தின்ற இந்திய அணியின் வீரர்கள் அதற்காகவெல்லாம் அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கே இழந்தது வெறும் மானம், இங்கே பெறப்போவதோ பல கோடிகள்.

இப்போது கிரிக்கெட்டின் பெயர் கிரிக்கெடெயின்மெண்ட். அது இனிமேலும் ஒரு விளையாட்டு அல்ல. முதலாளிகள் தம் வளர்ப்பு குதிரைகளை வைத்து நடத்தும் குதிரைப்பந்தயம். ரசிகர்களுக்குத் தேவையான சிக்சர்களை அடிக்கிறார்கள் வீரர்கள்.  ரசிகர்களின் பணத்தை உறிஞ்சிக் கொண்டு மேலே எழுந்த பந்து விண்ணிலிருந்து பணத்தைச் சொரிகிறது. ‘மங்..கா..த்தா‘ என்று கூவிச் சிரித்தபடி மல்லையாவும், ஷாருக்கானும் பணத்தை அள்ளுகிறார்கள். ராஜ்யசபா உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான ஏலத்தொகையை எந்த முதலாளியிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விசாரிக்கிறார் டெண்டுல்கர். குற்றவாளி ரவிச்சந்திரா ஆயுள்தண்டனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான்.

(கார்டூன் – ஆச்சார்யா)

___________________________________________

- புதிய கலாச்சாரம், மே – 2012