Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி!

  • PDF

தனியார்மயத்தைக் கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச்சட்டம்!

2009ஆம் அமைந்த காங்கிரசு தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசாங்கம், தனது தேர்தல் வாக்குறுதிளில் ஒன்றான கல்வி பெறும் உரிமைக்கான சட்டத்தை ஏப்ரல் 1, 2010 அன்று அமலுக்குக் கொண்டு வந்தது. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமையை உத்தரவாதம் செய்வதாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி வெளியிட்டது.

’தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்’ என்பது இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம். இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே சம்பந்தப்பட்ட பள்ளிக்குக் கொடுத்து விடுமாம். இப்படி மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாக இது சித்தரிக்கப்படுகிறது. ’அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள்தான் உயர்தரக் கல்வி தர முடியும்’ என்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வழி செய்து தருகிறது என்ற வகையிலும் இது கவர்ச்சிகரமான நடவடிக்கையாக காட்டப்படுகிறது.

தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ண்யித்துக் கொடுத்த பிறகு, அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போன முதலாளிகள், அப்பரிந்துரைகளை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தம் விருப்பப்படி கட்டணக் கொள்ளை அடிக்கின்றனர். அதைத் தடுக்க முடியாத ஆட்சியாளர்கள் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க தனியார் பள்ளிகளை கட்டாயப்படுத்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பதாக சொல்லும்போது அதை கவனமாக அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

1947க்குப் பிறகு இலவச தாய்மொழி வழிக்கல்வி தருவதற்காக அரசு பள்ளிகள் கிராமம் தோறும் தொடங்கப்பட்டன. பல குற்றம் குறைகளுடன் இயங்கினாலும், எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, அனைவருக்கு ஒரே மாதிரியான கல்வி என்ற நோக்கத்தை அவை நிறைவேற்றின. 1980களுக்குப் பிறகு மெட்ரிகுலேசன் பள்ளிகள் என்ற பெயர்ப்பலகையுடன் தனியார் பள்ளிகள் காளான்கள் போல முளைத்தன. லாபம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளிகளில் பலவற்றுக்கு சரியான கட்டிட வசதிகள் கிடையாது, தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடையாது.

ஆனால், அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் அடுத்தடுத்த அரசுகளின் புறக்கணிப்பின் மூலம் சீரழிக்கப்பட்டு அரசுப் பள்ளிகள் என்றால் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள் மூலம் ஆங்கில வழிக் கல்வி பயில்வதுதான் சிறந்தது என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவது என்பது மக்கள் மீது பெருத்த சுமையாக மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் கூட பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்புவதை நகர்ப்புறங்களில் பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட நிலையில் அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தி, தேவைப்படும் இடங்களில் புதிய பள்ளிகளைத் திறந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, எல்லாக் குழந்தைகளுக்கும் தாய்மொழி வழியில் தரமான கல்வி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதுதான் நியாயமான திட்டமாக இருக்க முடியும்.  ஆனால் இப்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி பெறும் உரிமைச் சட்டம், இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து எல்லாக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி வழங்கும் திசையில் போகவில்லை என்பதோடு, ஏற்றத் தாழ்வுகளை இன்னமும் கெட்டித்துப் போக வழி செய்கிறது. கல்வியை வணிகமயமாக்கி லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கையாக மாற்றும் தனியார்மயப் போக்கை இந்தச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கப் போவதில்லை. மாறாக கல்வி தனியார்மயம் என்ற எதார்த்தத்தை அங்கீகரித்து, அதற்கேற்ப மாறிக்கொள்ளுமாறு மக்களுக்கு இது அறிவுருத்துகிறது.

படம் - thehindu.com

தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் 5,255 தனியார் ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்களும், 1,716 தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 8 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள். 8ம் வகுப்பு வரையிலான மொத்த மாணவர்களில் சுமார் 29% இந்த தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் கட்டணங்களைக் கட்டுப்படுத்தி அவற்றின் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்த வகை செய்யவும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் முன்வராத இந்த சட்டம், அரசு பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆரம்பப் பள்ளிக் கல்வியை மேலும் மேலும் தனியார் கைகளில் விடுவதற்கான நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரீய வித்யாலயா/நவோதயா போன்ற சிறப்புப் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் என்று பல அடுக்குகளாக இருக்கும் பள்ளிக் கல்வி முறையை அங்கீகரித்து பள்ளிக் கல்வியில் இருக்கும் வசதி படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் ஏழைகளின் குழந்தைகளுக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை தொடர்ந்து பராமரிக்க வழி செய்கிறது.

இரண்டாவதாக, எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கிடைக்கும் என்று சட்டத்தில் குறிப்பிடப்படவேயில்லை.

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தனியார் கல்வி முதலாளிகளுக்கு கட்டாயம் ஏற்படுத்துவது போல தோன்றினாலும் ஏற்கனவே பல்கி பெருகி விட்ட தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் அங்கீகாரம் அளித்து கணிசமான அரசு நிதியையும் திருப்பி விடுவது இதன் முக்கியமான பணியாக இருக்கப் போகிறது.  அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை என்று கருதப்படும் சூழ்நிலையில் ஏழை மக்கள் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் தமது குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதை பெரிய சலுகையாக நினைப்பார்கள். அதன் மூலம் அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவது இன்னும் தீவிரமாகி அவை முற்றிலும் ஒழிக்கப்படும் சூழ்நிலை உருவாக்கப்படும்.

மூன்றாவதாக குழந்தைகளுக்கு ஆறு வயது வரையிலான இளநிலைக் கல்வி, 14 வயதுக்குப் பிறகான உயர்கல்வி தொடர்பான தனது பொறுப்பை முற்றிலும் கைகழுவி விடும் நோக்கத்தையும் இந்தச் சட்டத்தின் மூலம் அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.  உயர்கல்விக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியாத ஏழை மாணவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக வேலைச் சந்தையில் விடப்படுவார்கள்.

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவது குறித்து ‘அடுத்த 5 ஆண்டுகளில் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து எவ்வளவு நிதி திரட்ட முடியும் என்று அவர்கள் சொன்னால், அதற்கேற்ப அவர்களுக்கு கூடுதல் சுயநிர்வாக உரிமை தருவோம்’ என்று மனித வளத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.  அதாவது உயர் கல்வி நிறுவனங்கள், தமக்கு நிதி வழங்கும் தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி செயல்படவிருப்பதைத்தான் தன்னாட்சி என்று சித்தரிக்கிறது அரசு.

“உழைக்கும் வர்க்கத்தினருக்கு அவர்களது வாழ்க்கை நிலைக்கு மேற்பட்ட கல்வி அளிக்கப்படக் கூடாது” என்று 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசு கடைப்பிடித்த கொள்கை கூறுகிறது. உழைக்கும் மக்களைப் பொருத்தவரை தற்போதைய சட்டமும் நடைமுறையில் பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கிய பயணமாகவே இருக்கும்.

நான்காவதாக, தனியார் பள்ளிகள் தமது விருப்பப்படி தன்னிச்சையாக நிர்வாகம் செய்து கொள்ளவும், கட்டணங்கள் நிர்ணயித்துக் கொள்ளவும் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. இப்போது இருப்பதைப் போலவே பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு அஞ்சி நடுங்கி கேட்ட தொகையைக் கட்டி கல்வியை வாங்குவது நடைமுறையாக தொடரும்.  ’தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர் செல்லாமல் போய் விடும்’ என்று கபில் சிபல் தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

மெட்ரிக் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க சட்டம் நிறைவேற்றப் பட்டாலும், அவற்றை விட பல மடங்கு அதிகமான கட்டணங்களை அந்த பள்ளிகள் வசூலித்துக் கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அப்பல்லோ மருத்துவமனைக்கு போக முடிவதை மகிழ்ச்சியாக கருதும் மக்கள் அந்த மருத்துவமனை காப்பீடு மூலம் பெறும் பணத்துக்கும் மேல் கூடுதலாக கேட்பதை ’மனமுவந்து’ கட்டி விடுவதைப் போல,  குழந்தையின் கல்விக்கான கூடுதல் நன்கொடையை சுமக்கவும் மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டியிருக்கும்.

25% இடங்களை ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் சுமையைத் தாங்கிக் கொள்வதால் கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டியிருக்கிறது என்ற ’தார்மீகக்’ கடமையை தனியார் பள்ளிகள் ‘சுமப்பதால்’, அவர்கள் விதிக்கும் கட்டணங்களை சட்ட ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ தட்டிக் கேட்கும் உரிமை யாருக்கும் இல்லாமல் போய் விடும்.

ஐந்தாவதாக, இந்தச் சட்டம் 60 குழந்தைகளுக்குக் குறைவாகப் படிக்கும் சுமார் 40% ஆரம்பப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர், இரண்டு வகுப்பறை முறை தொடர்ந்து நிலவுவதை மாற்றப் போவதில்லை என்று தெரிகிறது. அரசு ஒப்பந்த முறையில் தற்காலிக, பயிற்சியளிக்கப்படாத, துணை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளவும் இந்தச் சட்டம் வழி செய்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் வேலை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நிவாரணப் பணிகள் போனவற்றுக்கு அனுப்புவதற்கு இடம் அளிக்கிறது. தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு தினமும் பாடம் நடக்கும் போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போது இருப்பது போலவே அவ்வப்போது மட்டும் பாடம் நடப்பது தொடரும். பிஎட் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் திறமை பற்றி சட்டம் எந்த வரையறையும் செய்யவில்லை.

ஆறாவதாக, குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவை என்று கல்வியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாய்மொழி வழிக் கல்வி வழங்குவதிலிருந்து தன்னை முழுவதும் விடுவித்துக் கொள்ளும் முகமாக ’சாத்தியமான சூழ்நிலைகளில் மட்டும் தாய்மொழி வழிக் கல்வி வழங்கப்பட்டால் போதும்’ என்று சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கில வழிக் கல்வி என்ற மாயையின் மூலம் கல்வி வியாபாரிகள் பணம் சம்பாதிப்பதை தொடர்ந்து ஊக்குவித்து, குழந்தைகள் தாய்மொழி வழி கற்பதற்கு இருக்கின்ற வாய்ப்புகளும் ஒழிந்து விடும்.

தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்

வர்த்தகம் தொடர்பான சேவைகள் குறித்த பொது ஒப்பந்தத்தின் (General Agreement on Trade Related Services) கீழ் கல்வி, சில்லறை வணிகம், வழக்கறிஞர்கள் பணி, குடிநீர் வழங்குதல், குப்பை அள்ளுவது, தொலைபேசித் துறை, தபால் துறை, மருத்துவத் துறை என்று பல சேவைகள் வணிகம் சார்ந்த சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அந்தத் துறைகளில் தலையிட்டு சுதந்திரச் சந்தையின் செயல்பாட்டை பாதிக்க அரசுக்கு உரிமை இல்லை. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய அரசுக்கு கல்வி உள்ளிட்ட சேவைத் துறைகளை தனியார் சந்தைப் போட்டிக்கு திறந்து விடப்பட வேண்டும் என்ற பன்னாட்டு கடமை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள், மக்கள் போராட்டங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்துக் கொள்ளலாமே தவிர அரசு புதிய மருத்துவமனை கட்டுவதோ, பள்ளி கட்டுவதோ, மருந்து செய்வதோ முற்றிலும் நிறுத்தப்பட்டு தனியார் மயமாக்கப்பட்டே தீர வேண்டும்.

உயர் கல்வியையும் தொழிற்கல்வியையும் விற்பனை பண்டமாக மாற்றுவதற்கான ஒரு பரிந்துரையை நமது அரசாங்கம் உலக வர்த்தக நிறுவனத்திடம் சமர்ப்பித்திருக்கிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கிறது. சந்தைக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் ’மெரிடோகிரசி’ மூலம் ஈவு இரக்கமில்லாத கழித்துக் கட்டலை மக்களிடையே செயல்படுத்த முனைகின்றன. மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உதவிக் கொள்வது என்பது சந்தை போட்டி சூழ்நிலையில் நடக்க முடியாத ஒன்று.

கல்வி பெறும் வாய்ப்புகளை ஜனநாயக முறைப்படி செயல்படுத்தினால் கல்வி விலைபொருளாக இருக்க முடியாது. ஆனால், மூலதனம் தன்னைத்தானே இயற்கையானதாகவும், சுதந்திரமானதாகவும், ஜனநாயகபூர்வமானதாகவும் காட்டிக் கொள்கிறது. சுதந்திரச் சந்தை அடிப்படையிலான முதலாளித்துவத்தின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் ஜனநாயக விரோதமானது என்று முத்திரை குத்தவும் செய்கிறது. சந்தைப் போட்டி, தனியார் மயமாக்கம், தரம் குறைந்த பொதுத் துறை சேவைகள், பணம் படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் எல்லாமே நியாயமானவை, இயல்பானவை என்று மக்களை நம்ப வைக்க வேண்டியிருக்கிறது.

கல்வி நிலையங்கள் வழியாக அரசாங்கம் முதலாளித்துவத்தை இயற்கையானதாக காட்ட முயற்சிக்கிறது. சந்தையின் தேவைகளுக்கு அப்படியே பொருந்தும் மனிதர்களை உருவாக்குவதே மூலதனத்தின் தேவையாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான சிந்திக்கும் திறனுக்குப் பதிலாக வணிக நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் தேவைப்படும் திறன்களை வழங்குவதே கல்வியின் வேலையாக திட்டமிடப்படுகிறது. நியோ லிபரல் பொருளாதாரவாதிகள் இளைஞர்களை சந்தையில் வேலை செய்யத் தேவைப்படும் விலைபொருளாக ஒரு பக்கமும், சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் நுகர்வோர்களாக இன்னொரு பக்கமும் பார்க்கிறார்கள். இந்த இரண்டிலும் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அவர்கள்  ஒரு சமூகப் பிரச்சனையாக மாறி விடுகிறார்கள்.

10% மக்களை மட்டும் ஆரோக்கியமாகவும், அறிவுள்ளவர்களாகவும், பணக்காரர்களாகவும் வைத்திருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மன்மோகன், சோனியா கும்பல் அமெரிக்க/பன்னாட்டு ஏகாதிபத்தியங்களின் வழிகாட்டலில் செய்து வருகின்றார்கள். அத்தகைய முதலாளித்துவ சொர்க்கத்தில் பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கென ஏற்படுத்தப்பட்ட கருணை இல்லங்களில் வசித்து, தர்ம பிரபுக்கள் மனமுவந்து போடும் கஞ்சியைக் குடித்துக் கொண்டு, வாய்ப்புக் கிடைக்கும் போது கிடைத்த வேலையைச் செய்து முடித்து விட்டு மீண்டும் இல்லங்களுக்குத் திரும்பி விடுவது மட்டுமே விதியாக இருக்கும்.

__________________________________________

- புதிய கலாச்சாரம், மார்ச் – 2012.