Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயம்சார்ந்த முன் நகர்வுகள்! - சாதியமும் தமிழ் தேசியமும்--பகுதி-5

ஒடுக்கப்பட்ட மக்களின் சுயம்சார்ந்த முன் நகர்வுகள்! - சாதியமும் தமிழ் தேசியமும்--பகுதி-5

  • PDF

உலகில் அடக்கி - ஒடுக்கலின் இடுகல்களுக்குள்ளான எச்சமூகமும், தொடராய் அவ்வினையாற்றலின் இசைவுகளுக்கு இசைந்து சென்றதாக வரலாறு இல்லை. இந்நிலையில் தமிழர் சமுதாயத்தில் சாதி - அமைப்பின் தீண்டாமைக்கொடுமைகளுக்கு உட்பட்ட மக்கள் மத்தியிலும்,  இந்நிலையைக் காண முடியும்.

1920-ல் ஆரம்பிக்கப்பட்ட வாலிபர் காங்கிரஸின் பத்தாண்டு தீவிரச் செயற்பாடுகளில், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள, சாதி-தீண்டாமைக்கு எதிரான வினையாற்றல்கள் மிகப்பெரியதாகும். இது வாலிபர் காங்கிரஸிற்குள் மாத்திரமல்ல, தமிழர் சமுதாயத்திற்குள்ளும் சமத்துவத்தைப் பேணப் போராடியது.


தமிழ் மக்களுக்குள் இருவிதத் தமிழர்கள் இல்லையெனும் எண்ணப்பாட்டைக் கடந்து, மனிதனை மனிதன்--மனிதனாக மதிக்க வேண்டும் எனும் மானிடக்கோட்பாட்டின் அடிநாத உந்துதல் செயற்பாட்டு தளத்தை உருவாக்கிற்று.இவ்வுருவாக்கத்திற்கான அன்றைய அவ்வமைப்பின் போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட
மக்கள் மத்தியிலும், தாங்களும் தங்களின் முன்நகர்விற்கான அமைப்புக்களை தோற்றுவிக்க வேண்டுமென்ற உத்வேக-உந்துவிசையை ஏற்படுத்திற்று. அதுவே ஒடுக்கப்பட்ட மக்களின் முதலாவது அமைப்பான "ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்" ஆகும்.

1927-ல் தோற்றம் பெற்ற இச்சங்கத்திற்கு, நெவின்ஸ் செல்லத்துரை அவர்கள் தலைவராகவும், யோவேல் போல். டி.ஜேம்ஸ் ஆகிய இருவரும் இணைச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பாட்டனர். காலப்போக்கில் ஒடுக்கப்பட்டமக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் வகையில் "ஐனதர்ம போதினி" எனும் பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது. இப்பத்திரிகை வாராந்தப் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டு, அதன் ஆசிரியராக யோவேல் போல் இருந்து வெளியிட்டுவந்தார்.

இச்சங்கம் ஆரம்பிக்ப்பட்ட சில மாதங்களில், காந்தி இலங்கைக்கு விஐயம் செய்தார். தெல்லிப்பளை யூனியன் கலலூரிக்கு முன்பாக காந்திக்கு வரவேற்பு கொடுப்பதற்காக, அமைக்கப்பட்ட பந்தல் சாதி அகம்பாவம் கொண்டவர்களால் எரிக்கப்பட்டது. ஆனால் இச்சாதி அகம்பாவப் போக்கை எதிர்த்து, அதேயிடத்தில் பந்தல் அமைக்கபட்டு, காந்திக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இத்துணிச்சலான நடவடிக்கைக்கு இவ் அமைப்பும், யோவல் காந்தியின் போராட்டச்செயற்பாடுமே முக்கிய காரணியுமாகும்.

இதையடுத்து மிசனரிப் பாடசாலைகளில் சமத்துவத்திற்கான போராட்டங்களை ஆரம்பித்தது. ஓடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மிசனரிப் பாடசாலைகளிலேயே அனுமதிகள் வழங்கப்பட்டடன. இருந்தபோதிலும் அங்கும் சம ஆசனம், சம போசனம் போன்றவைகளில் சாதிய அகம்பாவம் தலைவிரித்தாடியது. உயர்சாதி மாணவர்களுடன்சமமாகவிருந்து எதையுமே செய்ய முடியாத நிலைக்கு ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தள்ளப்பட்டனர்.

இதன் நிமித்தம் 1928-ல் உடுவில் பெண்கள் பாடசாலையில், சமபோசன இயக்கத்தை ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் முன்நின்று நடாத்திற்று. இதில் கன்டி பேரின்பநாயகம், வண. பிக்னெல் பாதிரியார்,  வண. மத்யூஸ் சுவாமிகள்,ஸி.பொன்ன்பலம், எஸ்.டபிள்யூ. மகாதேவா, போன்றோர்கள் ஒன்றுகூடி முன்னெடுத்தனர். இதிலும் சாதி அகம்பாவம் கொண்டோர், யோவேல் போல், எஸ்.
ஆர்.ஜேக்கப் ஆகியோரை சுட்டுக்கொல்ல முயன்றனர். இம்முயற்சி முன்கூட்டியே
அறியப்பட்டதனால், சாதுரியமாக முறியடிக்கப்பட்டது.

சேர் பொன்னம்பலம் இராமநாதன் 1928-ல் சமத்துவத்திற்கான போராட்ட இயக்கம் வலுவடைந்து செல்லும் வேளையில்,வடபிரதேசத்தின் சாதிவெறி கொண்ட 70-ற்கு மேற்பட்ட கிராமச் சங்கப் பிரதிநிதிகளுடன், டொனாமூரின்--அன்றையதேசாதிபதியைச் சந்தித்து, சமத்துவத்திற்கு எதிரான வாதங்களை முன்வைத்தார்.

இன்றுள்ள தேசவழமையின்படி, தமிழர் பாரம்பரியத்தின் படி, சாதிய அமைப்பு முறையிலான பாடசாலை நடைமுறையின்படி சமத்துவமின்மை சரியானதே! அது மாற்றப்படக்கூடாதென என வாதிட்டு, உயர்சாதித் தமிழையும் சைவத்தையும் பாதுகாத்தவர்தான் எம் தமிழ்த்தேசியத்தின் பெருமகனார் "சேர்" அவர்கள்!

 


இத்தேசவழமையும், தமிழர் பாரமபரியமும்தான்… முள்ளிவாய்க்காலின் முன்பும்,
பின்புமான எம்சமுதாய சாதிய நடைமுறையாக உள்ளது….

தவிர, இதன்பின்பாக யோவேல் போல் அவர்கள், இத்தேசாதிபதியைச் சந்தித்து, மிசனரிப்பாடசாலைகளில் கல்வி கற்கும் ஓடுக்கப்பட்ட மாணவர்களின் இரண்டாந்தர நிலையை விளக்கி, சமஆசனம், சமபோசனம், ஆகியவற்றை வலியுறுத்தி அவற்றை சட்டமாக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் டொனாமூர் ஆணைக்குழுவும், 1930-ம் ஆண்டிலேயே இதை சட்டமாக அறிவித்தது.

இச்சட்டமூல அறிவித்தல் வந்தவுடனேயே வடபகுதியில், 15-பாடசாலைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதை எரித்தவர்கள் சாதிமான்கள். ஆனால் எரித்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என வழக்குகள் போடப்பட்டன. காரணம் இவைகள் சம ஆசன—போசனமுறையை அமுல்படுத்தாத எங்களுக்குதவாப் பாடசாலைகள்எனும் வாதங்கள் கொண்ட வழக்குகளாக சோடிக்கப்பட்டன. இவைகள் இன்றைய எம் மகிந்த அரசின் "கிறிஸ்பூதக் கதைகள்" போல் அல்லவா உள்ளது.

1929-ல் சேர் பொன்னம்பலம் இராமநாதன், இந்து மகாசபையின் "சைவப் பெரியார்கள்" என்ற நூற்றுச் சொச்சப்பேர்களுடன் ஒன்றுகூடி கோப்பாய் அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையை, உயர் சாதியினருக்கான ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையாக மாற்றுமாறு தேசாதிபதிக்கு மனுக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து டொனாமூர் ஆணைக்குழு வாக்குரிமையை வழங்க முன்வந்த போது, அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கக் கூடாதெனவும், உயர் சமூகத்திலும் படித்தவர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டுமெனவும் வாதாடினார்.

இதன்பின் யோவேல் போல், பொன்னம்பலம் இராமநாதனின் நிலைப்பாட்டை மறுத்து ஆணைக்குழு முன் சாட்சியளித்தார்.


ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, உயர் சாதியினருக்கு உரியதானால், எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து, ஆசிரியர்கள் உருவாவதை தடுக்கும் முயற்சியேயென வாதிட்டார். அத்தோடு படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை எனும் கருத்தினை நிராகரித்தும், சர்வஐன வாக்குரிமை ஒடுக்கப்பட்ட மக்களின் விமோசனத்திற்கு பல வழிகளில் பயன்தரத்தக்கது எனும் சாத்தியப்பாடுகளையும் எடுத்து விளக்கினார்.

இதையடுத்து இராமநாதனின், சாதித்திமிர் கொண்ட வாக்குரிமைக்கு எதிரான சாட்சியத்தையும் மீறி இலங்கையின் சகல மக்களுக்குமான சர்வஐன வாக்குரிமை 1931-ல் வழங்கப்பட்டது.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் இராமநாதனின் வேண்டுகோளின்படி வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தால், உயர்சமூகத்தின் படிக்காதவர்களும் வாக்களிக்கத் திராணியற்றவர்களாகவே இருந்திருப்பார்கள். இங்கேதான் மேட்டுக்குடி உயர்-இந்து வேளாளத்தின் வர்க்கக் குணாம்சம் கொண்ட தமிழ்த்தேசிய அரசியலின் வினையாற்றல்களைக் காண முடிகின்றது. அதன் பரிணாமம் இன்றும் எம்சமுதாயத்தின் சகலதிலும் புரையோடிக் கொண்டுதானிருக்கின்றது.

இராமநாதனின் வாக்குரிமைக்கு எதிரான சாட்சியத்தை நிராகரித்த, யோவல் காந்தியின் வலுவான சாட்சியம் தான்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமல்ல, உயர் சாதியத்தின் படிக்காதவர்களுக்கும் வாக்குரிமையை பெற்றுக் கொடுத்ததிற்கான பெரும் காரணியென்ற  உண்மையையும், சாதியம் கடந்து சிந்திக்க வேண்டும்!

-தொடரும்

4.சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் -- யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் - சாதியமும் தமிழ்த் தேசியமும்….பகுதி-4

3.பிரபாகரனும் ஒடுக்கப்பட்ட மக்களும் - சாதியமும் தமிழ்த்தேசியமும்….பகுதி-3

1.சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)

2.சாதியமும் தமிழ்த்தேசியமும் (பகுதி-2)

Last Updated on Friday, 13 July 2012 05:54