Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

இராணுவ மூல உபாயத்தில் ஐக்கியமும், அரசியலில் முரண்பாடும்.

  • PDF

தமிழீழ புதிய சனநாயக கட்சியில் தேசபக்தன் இதழ் 17 இல் பல மார்க்சிய விலகலைக் கொண்டிருந்த போதும், முக்கியமானதும் அடிப்படையானவைகளை ஒட்டிய கோட்பாட்டு விவாதத்தை இக் கட்டுரை சுருக்கமாக ஆராய்கின்றது.

"புலிகளிடம் மீண்டும் புலிக்குணம்?" என்ற செய்தி மறுபிரசுரமாக இருந்த போதும், என்ற கேள்விக் ஊடாக முன்வைக்கும் அரசியல் உள்ளடக்கம் என்ன? "மீண்டும்" என்பதன் மூலம் புலிகளுக்கு இடையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்ததா? சிவத்தம்பி ஏதோ மாறுதல் நிகழ்ந்தது என்கின்றார். சிவராம், ஜெயபாலன் போன்ற புலிகளின் பினாமிகள் பலரும், ஏதோ மாற்றம் நிகழ்ந்து விட்டதாக கூறுகின்றனர். "மீண்டும் புலிக்குணம்" என்று கேள்வியாக்குவதால், மேலும் மாற்றத்தில் தடுமாற்றம் நிகழ்கின்றது. இதன் அரசியல் உள்ளடக்கம் என்ன?

புலிக்கு எப்போதும் ஒரே குணம் தான் உள்ளது. இல்லை என்கிறீர்களா?  புலிகள் தங்கள் மாற்றத்தை பிரகடனம் செய்துள்ளார்களா? அரசியல் பிழைப்புக்கு வழி தெரியாதவனும், அண்டிப் பிழைப்பவனும் மாற்றம் நிகழ்ந்ததாக சாதிப்பது புதிய அரசியல் சீரழிவாகும். புலிகளின் அரசியலில் மாற்றம் நிகழாமல், புலிகளின் குணத்தில் மாற்றம் நிகழமுடியாது. இதை தேசியவாதத்தின் பின் கைவிடப்படும் போது, குறுகிய நலன்கள் சார்ந்த அரசியலே புதிய அரசியலாகிவிடும். உண்மையில் புலிகளின் அரசியலில் மாற்றம் நிகழவில்லை. அதே போல் குணத்திலும் மாற்றம் நிகழவில்லை. ஆனால் தேசியவாதத்தில் சர்வதேசியத்துக்கும், தேசியத்துக்கும் இடையில் இடைவெளி அற்றுப் போகின்ற போது, புலிகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று கூறுபவர்கள் தான், "மீண்டும்" என்ற கேள்விக்குள் சந்தேகத்தை எழுப்பி  உண்மையில் மாறிவிடுகின்றனர்.

அடுத்து "தமிழீழ புதிய சனநாயகக் கட்சியின் அரசியல் தீர்வுப் பொதி" என்ற கட்டுரையின் உள்ளடக்கம், திட்டவட்டமாக சர்வதேசியத்துக்கு எதிரானதாகும். சரியாக திம்புக் கோரிக்கையை முன்வைத்தவர்கள், ஏன் பின்னால் திம்புக் கோரிக்கைக்கு எதிரான கோரிக்கைகளை முன்மொழிகின்றனர். திம்புக் கோரிக்கையில் அரசியல் உள்ளடக்கம் சுயநிர்ணய கோரிக்கையால் அரசியல் உள்ளடக்கமாகின்ற போது, ஏன் அதற்கு  வெளியில் கோரிக்கைகள் முன்மொழியப்படுகின்றது. சர்வதேசியம் சுயநிர்ணயத்தையே தேசிய இனங்கள் மீதான தீர்வாக வைத்துப் போராடும் போது, அதற்கு புறம்பான கோரிக்கைகள் சர்வதேசியத்துக்கு எதிரானது. இது முதலாளித்துவ தேசியத்தின் உள் தீர்வை முன்வைப்பதாகும். இதையே தொடர்ந்து வந்த தேசபக்தன் இதழ் 18 லும் மீளவும் புதிய வகையில் முன்மொழிகின்றனர். திம்புக் கோரிக்கையும், அதன் உள்ளடக்கமாக இருக்கும் சயநிர்ணயமும் இன்று அனைத்து தமிழ் கட்சிகளினதும், சமூகத் தொடர்பாளர்களினதும் பொதுக் கோரிக்கையாகிவிட்ட நிiலையில், அதையே மீளமீள ஒப்புவிப்பது அவர்களை வால்பிடித்துச் செல்வதை குறித்துநிற்கின்றது. இக்கோரிக்கை அரசியல் ரீதியாக முன்னெடுக்காத வரை இதை கோசமாக முன்வைப்பது சரியானது. திம்புக் கோரிக்கையும் அதன் உள்ளடக்கமான சுயநிர்ணயமும் விரிவான வகையில் அரசியல் அடிப்படையாக்கத் தவறுவது, பிற்போக்கு தேசியத்துக்கு வால்பிடித்து சமாரை வீசுவதாகிவிடுகின்றது. இந்தவகையில் இடைக்கால தீர்வுகளை முன்வைப்பது, அரசியல் ரீதியாக சரணடைவை முன்மொழிவதாகும்;. ஒரு அரசியல் சக்தியாக, தீர்மானகரமான சக்தியாக இல்லாத எல்லா நிலையில் இவை கேலி கூத்துமாகும். இங்கு மக்களின் உரிமைகளை அதன் உயர்ந்த அரசியல் உள்ளடக்க கோரிக்கையின் மூலம் விழிபடைய வைப்பதும், அதை நோக்கி அணிதிரளக் கோருவதுமே புரட்சிகர அரசியல் மார்க்கமாகும்.

சுயநிர்ணய உரிமையை விளக்கி அதிலுள்ள அம்சங்களை அரசியல் கோரிக்கையாக்குவது சரியானது. இது உண்மையில் சுயநிர்ணயத்தை மக்களின் கோரிக்கையாக்குவதன் மூலம், மக்களை அணிதிரட்டும் ஒரு அரசியல் மார்க்கமாகும். சுயநிர்ணயம் என்பது கோரிக்கையில் இருந்து அதன் உள்ளடக்கம் வரை, பாட்டாளி வர்க்க அரசு அல்லாத எந்த சமூகத்திலும் சாத்தியமில்லை. இந்தக் கோரிக்கையை பாட்டாளிவர்க்கம் முன்வைக்கும் போது, அரசியல் ரீதியாக சுயநிர்ணயத்தை வென்றெடுக்க, சொந்த பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. சுயநிர்ணயத்தின் உள்ளடக்கமான அரசியல் கோரிக்கையை முன்வைப்பதும் போராடுவதுமே, சர்வதேசிய மார்க்கமாகும். இல்லாது சர்வதேசியத்துக்கு எதிரான கோரிக்கையை முன்வைப்பது (இங்கு ஜனநாயகக் கோரிக்கையை குறித்தல்ல), சுயநிர்ணயத்தை சர்வதேசியமல்லாத வழியில் புரிந்து வைத்திருப்பதும், விளக்குவதுமாகும். த.ஈ.பு.ச.கட்சி வைத்துள்ள "தீர்வுப் பொதி"யின் அரசியல் உள்ளடக்க அம்சங்களில் மிக தெளிவாகவே இவை வெளிப்படுகின்றது.

அடுத்த கட்டுரை "தமிழீழ தேசிய விடுதலை யுத்தத்தின் எதிர்காலம்? |ஓயாத அலை| வெற்றி" என்ற நீண்ட கட்டுரையை சுருக்கமாக ஆராய்வது அவசியமாகிவிடுகின்றது. புலிகளின் யுத்தத்தை சிலர் "மக்கள் யுத்தமாக" கருதுவதாகவும், சிலர் "புலிகளின் முதலாளித்துவ தேசிய இயக்கத்தின் இராணுவ - அரசியல் பாதைக்கு பலியாகி" விடுகின்றனர் என்று குறிப்பிட்டு விமர்சிக்க முனைந்தவர்கள், புலிகளின் இராணுவ மூல உபாயத்தை விளக்கிய போது, அதில் முரண்பாடற்றுப் போன அவலம் நிகழ்ந்தது. தேசியத்தை புரிந்து கொள்வதில் வேறுபாடு அற்றுப் போகும் போது, முரண்பாடுகள் அருகிவிடுகின்றன. அரசியலில் தொழிலாளர், விவசாயிகள் என்பது கோசமாக உள்ள வரை, புலிகள் பெயருக்கு தன்னும் அதை அங்கீகரிக்காத வரை, அரசியலில் முரண்பாடு இருப்பது போல் தோன்றும்.

புலிகளின் தாக்குதல்களை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்ட இக் கட்டுரையில், புலிகளின் இராணுவ மூல உபாயம் மீது விமர்சனம எதுவும் அற்றுப் போனதுடன், சரியானதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிதபாம் நிகழ்ந்துள்ளது. அதாவது புலிகளின் அரசியல் வழி இராணுவத்துக்கும், பாட்டாளி வர்க்க அரசியல் வழி இராணுவத்துக்கும் இடையில் யுத்த தந்திரத்தில் வேறுபாடு அற்றுப் போகின்றதா? அரசியில் தான் முரண்பாடு, இராணுவத்தில் அவை இல்லையா? இருக்கின்றது எனின் தமிழீழ புதிய சனநாயகக் கட்சியின் கட்டுரையில் எங்கே அவை காணப்படுகின்றது. புலிகளுக்குள் கூட இராணுவ யுத்த தந்திர வழியில் முரண்பாடு வெளிப்படுவது சர்வ சாதாரணமாக உள்ளது. அப்படியிருக்க தமிழீழ புதிய சனநாயகக் கட்சி எப்படி புலிகளின் யுத்த தந்திர மார்க்கத்தில் ஐக்கியப்பட்டு நிற்கின்றனர்.  புலிகளின் யுத்த தந்திரத்தில் தவறுகள் இருக்கவில்லையா? மாற்று யுத்த தந்திரத்தை எந்த இடத்தில் எப்படி கையாண்டு இருக்க வேண்டும் என்று, தமிழீழ புதிய சனநாயகக் கட்சி எந்த இடத்திலும் கொண்டிருக்கவில்லையா? எங்கே அவை? முன்வைக்கப்படுகின்றது. மாறாக புலிகளின் யுத்த தந்திரம் சரியானது என்று போற்றப்படுகின்றது. இதை போற்ற சம்பவங்களையும், போக்குகளையும் திரித்து முன்வைக்கின்றனர்.

"தங்களின் பலயீனங்களை புரிந்து கொண்ட புலிகளின் தலைமை வன்னி யுத்தத்தில் மக்களையும் பங்குவகிக்க வைக்கும் முறைகளில், மக்கள் மத்தியிலான தண்டனை முறைகளில் மாற்றம் செய்தது. கிராமியப்படை, துணைப்படை, எல்லைக் காவல் படை என்பவற்றில் மக்கள் நேரடியாக இணைந்தது உண்மை." என்கின்றனர். அப்படி பார்த்தால் ஆழமாக சர்வதேசிய வழியில் அல்லாத ஒரு கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வோர் முன் இவ் யுத்தம் "மக்கள் யுத்தம்" தானே.  இங்கு விவாதம் சர்வதேசிய வழியில் அல்லவா தெளிவாக முன்வைக்க வேண்டும். இனி நாம் மக்களை அணிதிரட்டிய புலிகளின் படைப்பிரிவுகள் பற்றி பார்ப்போம்;. மக்கள் கடந்த காலத்தில் புலிகளின் பின் அணிதிரளாமைக்கு, உங்கள் விளக்கப்படி தண்டனை முறையா? காரணமாக இருந்தது. அல்லது அரசியலா? எது? அரசியல் எனின் புலிகளின் அரசியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளதா? நிகழ்ந்துள்ளது எனின் என்ன? விளக்குவீர்களா? மக்கள் புலிகளின் படைகளில் எப்படி இணைத்துக் கொள்ளப்பட்டனர்? தாமாக தேசிய விடுதலையில் சொந்த பொருளாதார வர்க்க நலன் மீது ஆர்வம் கொண்டு இணைந்தனரா? அல்லது வேறு காரணம் இருந்ததா? எப்படி? விளக்குவீர்களா? இது முன்பு தண்டனையால் தடுக்கப்பட்டு இருந்ததா? அடுத்து துணைப்படை, கிராமியப்படை, எல்லைக் காவல் படை எப்படி என்ன அரசியல் கோசத்தில் அணிதிரட்டப்பட்டனர். இங்கு திடீரென எப்படி உருவாக்கப்பட்டது? இதற்கு எதை அந்த மக்கள் அடமானம் வைத்தனர். இது பற்றி ஏன் மூடிமறைத்து, புலிகளை மக்கள் மயப்படுத்திக் காட்ட, தேசிய வாதத்தின் பின் தமிழீழ புதிய சனநாயகக் கட்சி முனைகின்றது.

அடுத்து இங்கு இந்த தண்டனை பற்றி விளக்கம் அடுத்த அரசியல் விலகலைத் தருகின்றது. புலிகள் பொது மக்கள் மீது தண்டனையை கையாண்டார்களா? எதன் அடிப்படையில்? என்ன தண்டனையை, எதற்காக  வழங்கினர். இதில் அவர்களின் லாபம், மற்றும் அரசியல் நோக்கம் என்ன? அதன் வர்க்க அடிப்படை என்ன? இன்று அதை எப்படி அதாவது தண்டனைக்கு பின்னால் இருந்த எந்த வர்க்க நோக்கத்தை கைவிட்டுள்ளனர்? விளக்குவீர்களா?

புலிகளின் தண்டனை அரசியல் சக்திகள் மீதே எப்போதும் இருந்துள்ளது. இதற்கு வெளியில் பணம் திரட்டுதல் முறையிலும், அவர்களின் வர்க்கக் கண்ணோட்டத்திலும் கருதும் சமூக விரோதத்திலுமே தண்டனை இருந்துள்ளது. இதில் எந்த மாற்றமும் நிகழவில்லை. உண்மையில் புலிகளின் நடைமுறை முன் மாற்று அரசியல் சக்திகள் இல்லாமையால், ஏதோ மாற்றம் நிகழ்ந்ததாக புரியப்படுகின்றது. அவர்களின் அரசியலை கேள்விக்குட்படுத்த அரசியல் சக்திகள் இல்லாத வரை, அவர்கள் மாறியதாக புரியப்படுவது, அரசியலை கைவிடும் போது இதை ஒப்புவிப்பது பொதுப் பண்பாகின்றது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியில் உள்ளவர்கள் மீது, புலிகளின் அரசியலுக்கு சவாலாக வராத வரை, அதை புலிகள் கண்டு கொள்வதில்லை. பொதுவான கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வெளியிலுள்ள மக்கள் மீதான தாக்குதல்களை, சர்வதேச நிர்ப்பந்தத்தால் மட்டுமே தவிர்க்கின்றனர். இங்கு மக்கள் நலன் எதையும் அரசியல் ரீதியாக புரிந்து கொண்டு புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்து மாற்றிக் கொண்டு இதைக் கைவிடவில்லை.

தொடர்ந்து "வன்னி யுத்தத்தில் பெருமளவு விவசாயிகள், கூலி மக்கள் புலிகளுடன் தோழோடு தோழாக நிற்கின்றனர்." என்று கூறுவதன் அரசியல் உள்ளடக்கம் என்ன? ஏன் யாழ்குடா நாட்டை கைப்பற்ற பிரகடனம் செய்த போது, அன்னிய நாடுகள் தலையீடு நடத்துமளவுக்கு நிலைமை மாறிய போது, புலிகள் வன்னியில் அன்னிய தலையீட்டுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அங்கு நீங்கள் தோழோடு தோழ் நிற்க்கும் அந்த விவசாய மற்றும் கூலிகள் எத்தனை பேர் பங்கு கொண்டனர். மிகச் சிறு எண்ணிக்கை அதாவது சில நூறு பேர் கலந்து கொண்டதாக புலிகளின் வன்னி வானோலியே அறிவிக்கின்றது. ஆனால் ஐரோப்பாவில் இதைவிட அதிகம் பேர் கலந்து கொண்டனர். இந்த யுத்தக் கட்டுரையை எழுதியவர்கள், புலிகள் அன்னிய தலையீட்டை உணர்ந்த அளவுக்கு, உணராமையை கட்டுரை சொந்த அரசியல் வரட்சியில் வெளிப்படுத்துகின்றது. விவசாயிகள், மற்றும் கூலிகளின் நலனை புலிகள் பிரதிபலிக்க தொடங்கிவிட்டனர் என்ற அர்த்தமல்லவா வருகின்றது. விவசாயிகள் மற்றும் கூலி விவசாயிகளின் நலனை புலிகளின் எந்தக் கோரிக்கையூடாக இனங்கண்டு தோழோடு தோழாக நிற்க்கின்றனர். இப்படி பார்த்தால் சிங்கள இனவெறி அரசுடன் சிங்கள மக்கள் தோழோடு தோழாக நிற்கின்றனர் என்று புரிந்து விளக்க முடியும். இப்படித் தான் புலிகள் கருதுகின்றனர். விளக்குகின்றனர். நீங்கள் புலிகளுடன் உழைக்கும் மக்கள் அப்படி இருப்பதாக விளக்குவது என்ன அரசியல்? எதுவும் அரசியல் வழிப்பட்டது அல்லவா? மறுக்கின்றீர்களா? பின்பு இப்படி ஏன் விளக்க முடிகின்றது.

இப்படி விளக்கிய பின்பு "புலிகளின் தமிழீழ முதலாளித்துவ அரசியல், தொழிலாளி வர்க்க அரசியல் மார்க்கமாக மாறிவிட்டது என்பதல்ல. புலிகளின் முன்னணிப் படை யுத்த முறை, மக்கள் யுத்த முறையாக மாறிவிட்டது என்பதல்ல. இவ்விரண்டு  யுத்த முறைகளும் கொரிலா யுத்தத்தை, கிரமமான யுத்தத்தை ஏற்றக் கொள்கின்றன. அதன் வர்க்க அரசியல் - இராணுவப் பாதையே யுத்த முறையை வேறுபடுத்துகின்றது." என்று கூறும் இவர்கள், அது என்ன என்பதை ஏன் சொல்ல முடிவதில்லை. முஸ்லிம் மக்கள், தொழிலாளர் விவசாயிகளின் நலன்கள் பற்றி பொதுவாக பேச முடிகின்றதே ஒழிய, இராணுவ யுத்த தந்திரத்தில் ஏன் புலிகளை விமர்சிக்க முடிவதில்லை. இங்கு இவர்கள் கொரிலா யுத்தத்தை, கிரமமான யுத்தத்தை இரண்டு அரசியல் மார்க்கமும் ஏற்றுக் கொள்கின்றன என்பதன் ஊடாக, இதில் ஒன்றுபட்டு தம்மை வெளிப்படுத்துகின்றனர். இதில் இருந்தே "வர்க்க அரசியல் - இராணுவப் பாதையே யுத்த முறையை வேறுபடுத்துகின்றது" என்று கூறிய படி விளக்க முடிவதில்லை. கொரிலா யுத்தத்தை, கிரமமான யுத்தத்தை ஏற்றுக் கொள்ளும் போது, புலிகளின் யுத்தம் அதுவாக இருப்பதால் முரண்பாடு அற்றுப் போகின்றது. இந்த கட்டுரை எந்த முரண்பாட்டையும் இராணுவத் துறையிலும், அது சார்ந்த அரசியல் துறையிலும் வெளிப்படுத்த முடிவதில்லை. இது தேசியத்தை புரிந்து கொள்வதில், அதை வென்றெடுக்கும் அரசியல் மார்க்கத்தில் ஏற்படும் அரசியல் விலகலால் இது ஏற்படுகின்றது. அத்துடன் முதல் கூறிய "வன்னி யுத்தத்தில் பெருமளவு விவசாயிகள், கூலி மக்கள் புலிகளுடன் தோழோடு தோழாக நிற்கின்றனர்." என்பற்கு முரண்பாடாக "மக்கள் யுத்த முறையாக மாறிவிட்டது என்பதல்ல." என்று கூறுவது ஏன் என்பதை விளக்க தவறுகின்றனர். தேசியத்துக்கும், சர்வதேசியத்துக்கும் முடிச்சுப் போட்டு குழப்பும் போது, ஏற்படும் சர்வதேசிய விலகலாகவே இது வெளிப்படுகின்றது.

அடுத்து "புலிகள் கொரிலாப் படை வடிவத்தை தாண்டி, கிரமமான படை வடிவ வளர்ச்சிக்கு வந்திருக்கின்றார்கள்" என்று கூறுகின்றீர்கள். இதற்கு புலிகளின் பல தொடர்ச்சியான தாக்குதலை ஆதாரம் காட்டுகின்றனர். புலிகள் நீண்ட காலத்துக்கு முன்பு மாங்குளம் தனி முகாமை தாக்கி அழித்தது முதலே, கிரமமான படையாகி விட்டதாக எழுதி வருகின்றனர். இவர்களைப் போலவே இதை நிறுவ தொடர்ச்சியான தாக்குதலை உதாரணம் காட்ட தயங்கவில்லை.

புலிகளின் விளக்கத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களா இல்லையா? ஏன்? நீங்கள் கருதும் கிரமமான யுத்தம் எப்போது, புலிகளின் யுத்த தந்திரத்தில் ஏற்பட்டது. இங்கு கொரிலா யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதா? அல்லது தொடர்கின்றதா? இது சிறு கொரிலாத் தாக்குதலை குறித்து கோரவில்லை. அதாவது கிரமமான யுத்த வடிவம் புலிகளின் பிரதான யுத்த வடிவமாக மாறிவிட்டதாக கருதும் நீங்கள், இதை எப்போது கடந்து வந்தனர்? நீங்கள் எப்போது இதை வெளிப்படுத்தினீர்கள். அதாவது ஆனையிறவு சமரின் அலை வீச்சில் தலைகீழாகிப் போனதோ, யுத்த விளக்கங்ககளும் முடிவுகளும்.

அது சரி ஏன் வன்னியைச் சுற்றி நீங்கள் குறிப்பிடும் கிரமமான யுத்தம் காணப்படுகின்றது. கிழக்கில், மன்னாரில் இவை ஒரே வீச்சாக இல்லை? ஏன் புலிகள் வன்னிக்கு பதில் கிழக்கு சென்று இருந்தால், கிழக்கில் நிலைமை எப்படியிருக்கும்? ஒரு கிரமமான யுத்தம் எப்படி எந்த அடிப்படையில் மாறிச் செல்ல முடியும்? புலிகளின் பிரதான மையமாக உள்ள வன்னியில் அண்ணளவாக 10000 பேர் கொண்ட படைப் பிரிவு குவிந்துள்ள இடத்தில், முன்னேறிய தாக்குதல்கள் மூலம் கிடைக்கும் வெற்றி கிரமமான யுத்த வழியை அடைந்து விட்டதாக கருத விளக்க முடியுமா? இந்த கிரமமான யுத்தத்துக்கும் மக்களுக்கும் உள்ள உறவு, இராணுவ வழியில் அவசியமற்றதா? எப்படி?

 

அடுத்து புலிகள் திட்டமிட்ட பின்வாங்கலையும், தந்திர உபாய கையாளுகையையும் கொண்டு யுத்தத்தில் வெற்றி பெறுவதாக கூறுவதுடன், அதை மெச்சுவதும் பொது அரசியலாகின்றது. யாழ்குடா நாட்டை விட்டு புலிகள் எப்படி வெளியேறினார்கள். தமது முடிவை மக்களுக்கு அறிவித்து, மக்களை வெளியேற்றிய போது, ஒன்றுக்கு மேற்பட்ட தரம் முடிவை மாற்றி அறிவித்தது ஏன்? தந்திர உபாயம் சார்ந்து வெளியேறியவர்கள், ஏன் மக்களையும் வெளியேற்றினர்? தந்திர உபாயம் மக்களை தாங்க வைப்பதில் தங்கியுள்ளது. இது தான் யுத்த தந்திரத்தில் மக்கள் யுத்தமாகும். மக்கள் அற்ற பிரதேசத்தில் தந்திரமான யுத்தம் நடத்த முடியாது. சதி தான் செய்ய முடியும். புலிகளை மீறியும், புலிகளால் முழுமையாக வெளியேற்ற  முடியாத எதிர்பாராத இராணுவ முன்னேற்றத்துடன் புலியின் ஊசலாட்டமுமே, மக்களை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை. இந்த எஞ்சிப் போன மக்களுக்குள் தான் புலிகள் மீண்டும் தம்மை நிலைநிறுத்த முடிந்ததும், போராட முடிந்த நிலையுமாகும். இங்கு புலிகள் தன்னிச்சை வழிப்பட்ட வழிகளில் தான், நெருக்கடிக்கு முகம் கொடுத்து பின்வாங்கினர். ஏன் வவுனியா மற்றும் யாழ் மீதான தாக்குதலை அறிவித்தவர்கள், ஏன் தாக்குதலை நிறுத்தினார்கள் என்பதற்கு எந்த விளக்கத்தையும் (நீண்ட காலத்தின் பின் மாவீரர் தின உரையில் யாழ் தாக்குதல்  நிறுத்தியது பற்றி காரணம் கூறப்படுகின்றது) வைத்ததில்லை. இங்கு திட்டமிட்ட முன்னேற்றமல்ல வெற்றியில், வீச்சில் தன்னெழுச்சி வகைப்பட்ட யுத்த பிரகடனங்களும், பின்னால் மௌனமாக கைவிடுதலும்  தன்னெழுச்சி வகைப்பட்டவை. புலிகளின் ஆயுத மோகம், இராணுவ வெற்றிகள் மீதான அரசியல் அடிப்படையில் எழும் தன்னெழுச்சி வாத அரசியல், நிலைமையை குறுட்டுத்தனமாக வழிபட்டு அள்ளுப்பட்டு செல்லும் யுத்த தந்திரமே, இதன் மூல ஊபாயமாக உள்ளது. இதனால் பிரமைகளை உருவாக்கி பின் தொப்பென திடிரென் கைவிடும் அளவுக்கு அடிக்கடி ஊசலாட்டத்துடன் அலைபாய்கின்றது.  இது போல் பல உதாரணம் காட்ட முடியும்.

"யாழில் இருந்து பின்வாங்கிய புலிகள் வன்னியில் தமது இராணுவத் தவறுகளை பலவீனங்களை மீள் பரிசீலனை செய்தனர். தோல்வியின் காரணத்தை கொரில்லா படை வடிவில் இருந்து கிரமமான படை வடிவத்துக்கு வளர வேண்டிய தேவையை, ..." சுயவிமர்சனம் செய்து திருத்தியதாக தமிழீழ புதிய ஜனநாயக கட்சி கண்டுபிடிக்கின்றது. புலிகள் தமது தவறை எங்கே, எப்போது சுயவிமர்சனம் செய்துள்ளனர். புலிகளுக்காக வாக்காளத்து வாங்குபவர்கள் தாங்களாகவே இது நடந்துள்ளதாக பிரகடனம் செய்வது சர்வசாரணமாக நிகழ்கின்றது. சிவத்தம்பி புலிகள் பற்றி குறிப்பீடும் போது, முஸ்லிம் மற்றும் மக்கள் மீதான ஜனநாயக விரோத தன்மையை சுயவிமர்சனம் செய்துள்ளதாக பிதற்றுகின்றார். இது போல் த.பு.ச.க புலிகள் இராணுவ தவறுகளை சுயவிமர்சனம் செய்துள்ளதாக புலிகளின் தேசியத்துக்கு விளக்கம் தந்து முண்டு கொடுக்கின்றனர். புலிகள் வன்னிக்கு பின்வாங்கியது தற்செயலான தன்னிச்சை வகைப்பட்டவையே. குடா நாடு மீதான இராணுவ ஆக்கிரமிப்பு நடந்த போது, பின்வாங்குவது தொடர்பான முடிவுகள் அறிவித்த போது, முரண்பட்ட வடிவில் மிக குறுகிய நேர இடைவெளியில் மூன்று முடிவுகளை பகிரங்கமாக அறிவித்து மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியதுடன், சொந்த அணிகளைக் கூட குழப்பியது அறிந்ததே. வன்னிக்கு வந்த புலிகள் மிக பெரியளவில் குவிந்து கிடந்த அணிகளைக் கொண்டே முல்லை முகாம் அழிப்பு முதல் தொடர்ச்சியான பல தாக்குதலை நடத்திய போது, அவை கூட கொரிலா வடிவத் தாக்குதலை சார்ந்து நின்றதை அவர்களின் முரண்பட்ட விளக்கங்களும், அறிக்கைகளும், நடத்தைகளும் கூட தெளிவுபடவே வெளிப்படுத்தியது. பல தாக்குதலில் மையமான பீரங்கித் தளத்தை அழிப்பதையை அடிப்படையாக கொண்டு நடத்திய கொரிலாத் தாக்குதல்கள், எதிர்பாராத விதமாக முழுமுகாமே புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பீரங்கித் தளம் அழிக்கப்பட்டது வீணான நடத்தையாகவும், புலிகளின் ஆயுத இழப்பாகவும் கூட இது இருந்தது. இது முல்லை முதல் பல தொடர்ச்சியான தாக்குதல்களில் நிகழ்ந்தன. இராணுவ பலவீனங்கள் குவிந்து கிடந்த புலிகளின் அணிகளுக்கு சாதகமானதாக இருந்தது, தற்செயலான நிலைமையில் தன்னிச்சை வழியில் பல வெற்றிகள் சாதிக்கப்பட்டது.

இங்கு கிரமான படையாக மாற்றியதால் (இது எப்படி எங்கு புலிகள் சுயவிமர்சனம் செய்து எப்படி முந்திய நிலையில் இருந்து மாற்றி அமைத்தனர் என்பதற்கு தமிழீழ புதிய சனநாயக கட்சி ஆதாரத்தை தரவில்லை. தரப்போவதுமில்லை. ஏனெனின் இது ஆனையிறவு வெற்றிகளை விளக்க சர்வதேசிய அரசியலற்ற தேசியவாத அடிப்படைக்கு கற்பிக்கப்படும் நியாயவாதங்களேயாகும். தேசபக்தன் இதழ் 17 இல் இது போன்று பல சர்வதேசிய விலகல்களை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. புலிகளின் தேசியத்துக்கும் மக்களின் தேசியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள சர்வதேசியத்தை சரியாக பயன்படுத்தி அதை  முன்னெடுக்காதவரை, புலிகளின் தேசியவாத அடிப்படைகளை நியாயப்படுத்தவும் அதற்கு விளக்கம் சொல்வதுமே நிகழ்வது தவிர்க்க முடியாது என்பதையே தேசபக்தனின் பல கட்டுரைகளில் வெளிப்படுகின்றது. சர்வதேசியம் தேசியத்தை புரிந்து கொண்டு போராடும் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யாத வரை, புலிகளின் தேசியத்துக்கு வால் பிடித்து விளக்குவதே சர்வதேசியம் என்றளவுக்கு சீரழிவது, இன்று மார்க்சியம் சந்திக்கும் பொது நெருக்கடிக்கு எதிரான குறிப்பான பண்புகளில் ஒன்றாக இது உள்ளது.

தேசபக்தன் 18 இல் "50 ஆண்டு கால நவகொலனிய இலங்கை வரலாற்றில்..." என்று குறிப்பிடும் அரசியல் பதம் ஆச்சரியமானது. இலங்கையின் போலிச் சுதந்திரம் நவகொலனியாகவே தொடங்கியதா? கடந்த 50 வருடத்துக்கு முந்திய அரைக் காலனி அரை நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை, எப்படி உங்கள் நவகாலனியக் கோட்பாட்டில் மாறுக்கின்றிர்கள்? அதன் அரசியல் உள்ளடக்கத்தை எதை அடிப்படையாக கொண்டு விளக்குகின்றீர்கள். அதே இதழில் "இந்தியரசின் நெருக்குதல், சூழ்ச்சிகள் நேரடியாக வெளிப்பட்டது.... விடுதலை இயக்கங்களை அரசியல் ரீதியாக பிளவுபடுத்தி சமரசப்படுத்தின" என்ற விளக்கம், இந்திய அரசுதான் இயக்க பிளவை உருவாக்கியதாக காட்டுவது அபத்தமாகும்;. இது தேசிய இயங்களின் பிற்போக்கு மக்கள் விரோத அரசியல் மூடிமறைப்தாகும். இயங்கங்களின் பிற்போக்கு அரசியல் அடிப்படையின் ஜனநாயக விரோத தன்மையே, பிளவின் பிரதான மையமான காரணமாகும் அல்லவா? மேலும் அடுத்த நிலைக்கு விளக்கும் போது "புலிகளின் சுத்த இராணுவக் கண்ணோட்டமும், தனி இயக்க சர்வாதிகார அணுகுமுறையும், ஆக்கிரமிப்பாளர்களின் சூழ்ச்சிகளுக்கு கடந்த காலத்தில் வழி சமைத்துக்கொடுத்தது.." என்கின்றனர். இவைதான் காரணமா? அல்லது புலிகளின் அரசியல் காரணமா? அடுத்து அதே இதழில் "போர் நிறுத்தத்தை தாங்களே முன்வந்த செய்துள்ளனர்" என்று புலிகளின் யுத்த நிறுத்ததை குறிப்பிடும் போது, இது புலிகளை பாதுகாக்க முனைகின்றது. இது இன்றைய சர்வதேச இலங்கை நிலைமைக்கு முற்றாக முரணாது. யுத்தநிறுத்தம் அவாகள் அல்ல, ஏகாதிபத்தியங்களால் எற்படுத்தப்;பட்டன அல்லவா! இது போன்று பல அரசியல் விலகல்களையும், அரசியல் அடிப்படைகளையும் விமர்சிக்க, இன்றுமொரு இதழே தேவைப்படும் அளவுக்கு மலிந்து காணப்படுகின்றது. இது தேசிய, சர்வதேசிய அரசியல் இடை வெளியை புரிந்து கொள்ளத் தவறியதன் வெளிப்பாடாக உள்ளது.