Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மேற்கத்திய கல்வியும், மாணவ மாணவிகளின் பண்பாடுகளும் எம்நாட்டுக்கு மாற்றாக முன்னிறுத்த முடியுமா?

  • PDF

வேலணை மத்திய மகாவித்தியாலய நிகழ்ச்சியில் பிரதம விருந்தினர் உரை ஒன்றை செய்த வாசுதேவன்,  மேற்கின் மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் அதன் பண்பாட்டையும், இலங்கைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூறிய, உலகமயமாதலின் பண்பாட்டு அடிப்படைகளை காவிச் செல்ல தயாராக இருப்பதை பறைசாற்றினர். மூன்றாம்  உலக நாடுகளின் கல்வி சமூக கண்ணோட்டமற்ற  மூடத்தனத்தையும், நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்திலும், ஆசிரியர் மாணவர் உறவில் உள்ள அதிகார வடிவங்கள் விமர்சனத்துக்குரியவை தான். இந்தக் கல்வியை உருவாக்கிய காலனியாதிக்கவாதிகளின் பொருளாதார நோக்கத்தை ஈடு செய்வதில், இதன் அடிப்படை நோக்கமும்  உள்ளடக்கமும் இதன் சாராம்சமாக இன்று வரை திகழ்கின்றது. ஆனால் இதை அரசியலில் இருந்து பிரித்து எடுத்து மேம்போக்காக எதிர்த்து மேற்கின் கல்வி மற்றும் பண்பாட்டினை முன்னிறுத்தி, அதை எமது கல்விக்கு மாற்றாக முன்வைத்து தீர்க்கக் கோருவது தான் இங்கு விசித்திரமானது. உலகமயமாதலை தூக்கி முன்னிறுத்தி காவிச் செல்ல நேரடி ஆக்கிரமிப்புகள் தேவையில்லை, புத்திஜீவித்தனத்துடன் கூடிய மேற்கு பொருளாதார பலத்தினை ஆதாரமாக கொண்ட அறிவுத்துறையினர் மட்டும் போதுமானதாகும்.

 

அவர் மேற்கின் ஆக்கிரமிப்பு கல்வியை காவிச் செல்ல, அங்கு வெளியிட்ட மலர் கட்டுரையிலும், பேச்சிலும் பிரதிபலிக்க தவறவில்லை. அதை அறிவின் மேன்மையின் மயக்கத்தில் திணிக்க முயல்வதைப் பார்ப்போம்.  ~~கருப்பையிலிருந்தே, புலன்களின் உணர்திறன் செயற்பட ஆரம்பித்தவுடனேயே மனித உயிரின் அறிவும், ஆர்வமும் ஆரம்பித்துவிடுகிறது|| என்பது எமது நாட்டின் கல்வியின்  மூடத்தனம் போல இதுவும் கருத்துமுதல்வாதமாகும். எப்படி இந்து மத கற்பனைகள் எமது கல்வியை குருடாக்கி மலடாக்கின்றதோ, அதே போல் இதுவுமொன்று. புலன்திறன்கள் தான் தொடர்புபட்டுள்ள பொருட்களின் மீதே செயற்பட ஆரம்பிக்கின்றன. இதை மறுப்பதில் கருத்துமுதல்வாதம் புகுந்து கொள்கின்றது. பொருட்கள் இன்றி, பொருளுடன் தொடர்பின்றி உணர்வுகள் பிறப்பதில்லை. ஒரு குழந்தை பிறக்கும் சமூகம், நாடு, பண்பாடு சார்ந்து கூட வேறுபட்ட உணர்வை, பிறக்கும் இடம் சார்ந்து பெறுவது என்பது, அங்கு காணப்படும் பொருட்கள் மீதான மனித உணர்வுகளைச் சார்ந்து பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுகின்றது. வேறுபட்ட சமூகத்தில் வாழ்ந்தாலும் குழந்தை வேறு சமூகத்தில் பிறந்து வாழ்கின்ற போது, குறித்த சமூகத்தின் உணர்வுகளையே குழந்தை பெறுகின்றது. இங்கு உணர்திறன் என்பது புற உலகு சார்ந்தே பிறக்கின்றதே ஒழிய, அக உணர்வு சார்ந்து அல்ல. அறிவும் ஆர்வமும் புற உலகின் பொட்ருகளின் மீதே உணர்வாக உருவாகின்றதே ஒழிய அக உணர்வில் இருந்து பிறப்பதில்லை. இது அச்சமூகம் பொருட்கள் மீதான தனது உழைப்பை எதன் அடிப்படையில் எப்படி கையாண்டு என்ன பண்பாட்டைக் கொண்டுள்ளதோ, அதையே புலனறிவாக கொள்கின்றது. ஒரு சமுதாயத்தின் உறவுகள், பண்பாடுகள் அச்சமுதாயத்துக்கேயுரிய உழைப்பின் மீதான வடிவங்கள் சார்ந்த, உறவுகளிலிருந்தே உருவாகின்றது. மேற்கின் பண்பாட்டை அப்படியே மூன்றாம் உலக நாடுகளின் கல்விச் சாலைகளில் ஏற்படுத்த முனைவது, கோருவது அடிப்படையில் மேற்கின் பொருளாதார உலகமயமாதல் பண்பாட்டு அடிப்படைகளை நிறைவு செய்யும் இயந்திரங்களையும், காவல் நாய்களையும் உற்பத்தி செய்ய வழிகாட்டுவது தான். எம்நாட்டின் மீதான ஆங்கிலேய காலனியாக்கத்தில் அவர்கள் திணித்த கல்வியின் அடிப்படை உள்ளடக்கம், காலனிய நலன்களை விரிவாக்கவும் பாதுகாக்கவும்  விசுவாசமான நாய்களை உருவாக்க முடிந்தது. அவர்கள் கொடுத்த சுதந்திரம் என்பது, காலனிய கல்வியை விசுவாசமாக பின்பற்றி காலனிய நலன்களை அவர்களின்றி பாதுகாக்கும் விசுவாசத்தையே ஆட்சி மாற்றம் ஆக்கியதன் பின்னணியில், காலனிய கல்வி ஆதாரமாக இருந்தது, இருக்கின்றது. மேற்கின் கல்வி முறை, ஏகாதிபத்திய உலகமயமாதல் விசுவாச இயந்திர காவல் நாய்களையும், அவர்களின் பொருளாதார நலன்களையும் விரிவாக்கவும் உதவுமே தவிர, சமுதாய நலன் சார்ந்து சமூகத்துக்கு எதையும் பெற்றுத்தராது.

அடுத்து மேற்கின் ஆசிரியர் மாணவமாணவியர் கல்வி முறையிலான உறவுகள் வன்முறை கொண்டது அல்ல என்றும், ஆசிரியரை மாணவன் மதிப்பது அடக்குமுறையின் அதிகாரச் சின்னமென்றார். எனவே வன்முறையற்ற கல்வி அவசியம் என்றும், மேற்கில் மாணவர்கள் ஆசிரியர் மீதான வன்முறை விதிவிலக்கானது என்றும், அது எம்மிடமும் உண்டு என்றார். மேற்கு மாணவர்களிடையே வன்முறை என்பது விதிவிலக்கான சம்பவங்கள் என்று பிரஞ்சில் மாமேதை, சமூக இயக்கத்தையே திரித்துக் காட்டிவிடுகின்றார். இந்த நிகழ்ச்சி நடந்த பின்னால் வெளியாகிய FRANCE SOIR (2.2.2001) பத்திரிகையில், பிள்ளைகளின் வன்முறை பற்றி முன் பக்க தலைப்புச் செய்தியை வெளியிடுகின்றது. இது போன்று பல ஆய்வு மற்றும் புள்ளிவிபரங்களை பிரஞ்சுப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. பிரஞ்சு சமூகத்தில் அதிதசுதந்திரம் வழங்கப்பட்டு விட்டதாக விவாதங்களும் உண்டு. இந்த அதித சுதந்திரம் மூலதனத்தின் சுதந்திரமாக இருப்பதால், அது சமூகத்தில் வக்கரித்து பிறக்கின்றது என்பது ஆய்வுக்குள்ளாவதில்லை. சதந்திரம் என்பது மற்றவன் மேல் தான் செயற்படுகின்றது என்பதும், அடக்குமுறையின்றி சுதந்திரம் என்பது கற்பிதமாகும். சுதந்திரம் எவ்வளவுக்கு அதிகமானதாக இருக்கின்றதோ, அந்தளவுக்கு அடக்குமுறை அதிகமாக இருப்பதை பறைசாற்றுகின்றது. அதாவது பள்ளமின்றி மேடோ, கூட்டல் இன்றி கழித்தலோ, நேர் மின்னேற்றம் இன்றி எதிர்மின்னேற்றமோ, ஏழ்மையின்றி வசதியோ, தாழ் சாதியின்றி உயர் சாதியோ எப்படி இருக்க முடியாதோ, அதுபோல் தான் அடக்குமுறையும் சுதந்திரமுமாகும். சுதந்திரம் எவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ, அங்கு அடக்குமுறையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதன் உள்ளடக்கமாக இருக்கின்றது. பிரான்சில் அதிக சுதந்திரம் வேண்டும் என்று கோரும் வலதுசாரிக் கட்சி, மாணவ மாணவியர் வன்முறையில் ஈடுபடுவதால் பெற்றோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று, தொலைக்காட்சியில் விவாதம் செய்கின்றனர். பிரஞ்சு மாணவ மாணவிகளின் மீதான தண்டனை, பாடசாலையில் தனிமைப்படுத்தி விடுவது, வெளியேற்றுவது, பெற்றோரிடம் புகார் கூறுவது, தனியான விசேட பாடசாலைக்கு அனுப்புவது, உளவியல் மருத்துவத்;தை திணிப்பது, தனிச் சிறைகளில் அடைப்பது என்ற விரிவான தண்டனை முறை நடைமுறையில் உள்ளது. பொலிஸ் கைது செய்வது என்று இவை பரந்த வடிவில் காணப்படுகின்றது. தண்டனையும், வன்முறையும் உடல் சார்ந்ததாக மட்டும் குறுக்கி பார்த்து விளக்கும் ஜனநாயகவாதிகளின் அடிப்படை எல்லைக்குள் தான், தண்டனை பற்றியும் சுதந்திரம் பற்றியும் பிதற்ற முடிகின்றது. ஒரு மனிதனின் சொந்த உழைப்பை சுரண்டுவது ஜனநாயகமாக உள்ள வரை, சுரண்டப்படுவது ஜனநாயக விரோதமாக, அவன் மேலான சர்வாதிகாரமாக தெரிவதில்லை. இது தான் தண்டனை வடிவத்திலும் வெளிப்படுகின்றது. தண்டனை என்பதை உடல் சார்ந்ததாக மட்டும் பார்ப்பவர்கள், உளவியல் தண்டனைகளை வரவேற்று அங்கீகாரிக்கின்றனர். உடல் தண்டனையை விட உளவியல் தண்டனையே கொடூரமானது. அதை மூடிமறைத்த படி தான் அதை எமது கல்வியில் புகுத்த கோருகின்றனர்.

இன்று அமெரிக்காவில் பாடசாலை மாணவர்கள் துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் செல்லுகின்றனரா என்று, ஆயுதம் ஏந்திய நபர்கள் ஆயுதப் பரிசோதனை செய்தே வகுப்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இது ஏன்? இது போன்று இன்று ஐரோப்பாவில் வளர்ந்து வருவதையும், தொடர் வன்முறைகளும் தொடர்ச்சியாக இச் சமூகத்தில் புதிய நெருக்கடியாகியுள்ளது. இன்று தனியாக எந்த சாதாரண மனிதனும் பிரான்சில் பாடசாலைக்கு முன்னால் செல்வது என்பது துணிச்சலுக்குரிய ஒருவிடயமாகிவிட்டது. ஏன் நடைமுறையில் சின்ன உதாரணத்தைப் பார்ப்போம். பிரான்சில் பாடசாலைக்குள் மாணவ மாணவிகள் கல்வியல்லாத எந்த நிலையிலும், ஒரு நிமிடம் கூட ஏன் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவதில்லை? கண்காணிப்பின்றி, பாடம் அல்லாத எந்த நிலையிலும் பாடசாலைக்கு செல்ல ஏன் அனுமதிப்பதில்லை? ஆனால் எம் ஊரில் பாடசாலை அல்லாத எந்த நேரத்திலும் பாடசாலையில் இருக்க முடிவது ஏன்? ஒரே ஒரு காரணமே இங்கு உண்டு. எமது மாணவ மாணவிய சமுதாயம் வன்முறை அற்றதாகவும், மேற்கு மாணவ மாணவிய சமூகம் வன்முறை கொண்டதாகவும் உள்ளது. மேற்கில் ஆசிரியர் அற்ற எந்த நிலையிலும், மாணவ மாணவிய தங்கியிருப்பு என்பது, பாடசாலை பொருட்கள் மீதான வன்முறையாகிவிடுகின்றது. மலசலகூடம் எதுவும் சேதமின்றி இங்கு பாடசாலையில் காணமுடியாது. அதனால் இன்று மலசலகூடத்துக்கும் கண்காணிப்பு கமரா பூட்டப்படுகின்றது. பாடசாலை கமரா கொண்டு கண்காணிக்கும் ஒரு நிலையிலும், பாடசாலை மீதான வன்முறை விரிவாக உள்ளது. இங்கு மாணவர் சமூகம் கண்காணிப்பின் எல்லைக்குள் கண்காணிக்கப்பட்டே ~~சுதந்திரமாக|| ஒழுங்குபடுத்தப்பட்டு அடிமையாக அடக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அற்ற எல்லா நிலையிலும் மாணவ மாணவியர் வன்முறை கும்பலாகிவிடுகின்றது. இதற்கு வயது வேறுபாடு கூட கிடையாது. கண்காணிப்பினுள் வன்முறை ஒரு பொது நிகழ்வாக அடிக்கடி பீறிட்டு வெடிக்கின்றது. பிரான்சின் சில பகுதிகள் இரவு நேரங்களில் மாணவ மாணவிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகின்றது. பொலிஸ் உட்புகுந்தால் சிதைந்து போன நகரப் பகுதியையே விடியக்காலை மீட்கின்றனர். இதனால் அரசு பொலிஸ் கண்காணிப்பின் அடிப்படையாக கொண்டு, இப்பகுதிகளில் தீடீர் திடீரென குடும்பத்துடனேயே பெரிய குடி நகர்த்தலை பரந்த பிரதேசத்துக்குள் செய்து, மாணவ மாணவிகளின் வன்முறை அமைப்பு ஒழுங்கை சிதைக்கின்றனர். புதிய வன்முறை ஒழுங்கு உருவாக்கும் காலம் வரை இப்படித் தான் வன்முறையை சமாளித்து சமாளிக்க முனைகின்றது. வன்முறை என்பது சமூக பொருளாதார கல்வியின் அடிப்படை உள்ளடக்கத்தில் இருப்பதை மூடிமறைப்பதன் மூலம், இந்த பொருளாதார விரிவாக்கத்தை பாதுகாக்கின்றனர். ஆனால் வன்முறை இதுபோன்று எமது ஊரில் இல்லை. அப்படி இருப்பின் அது விதிவிலக்குகளே. மேற்கின் கல்வி அடிப்படையில் உலகமயமாதலை விரிவாக்கும் வன்முறையை கொண்டே கட்டமைக்கப்படுவதால், வன்முறை பண்பாடாகவும் கலாச்சாரத்தின் ஊற்று மூலமாக கல்வியாகின்றது.

எமது நாட்டில் சாதியத்தினாலும், வறுமையினாலும், இனவாதத்தினாலும், பாலியலாலும் மறுக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியும், வசதியும் அடிப்படையானதும் அவசியமானதுமான உடனடிப் பணியாக எம்முன்னுள்ளது. இதை நோக்கி எமது கவனம் குவிக்கப்பட வேண்டும்;. கல்விச் சாலையில் மேற்கின் கற்பனையுடன் பகட்டு மேற்கின் கனவுக் கல்விக்கு வசதியையும் வாய்பையும் ஏற்படுத்தும் பண்பாட்டுக் கலாச்சாரத்தை எதிர்த்து, கல்வி மறுக்கப்பட்டவனி;ன் கல்வி முதன்மையானதும் அடிப்படையானதுமாகும்;. ஆசிரியர் மாணவர் உறவுகளில் உள்ள ஜனநாயக மீறல் என்பது எமது அடிப்படைக் கல்வியை, சமூகத்தின் தேவையிலிருந்தே உருவாக்க முடியுமே ஒழிய, வெளியிலிருந்து திணிப்பது என்பது அத்துமீறலாக சமூக விரோதமாக பரிணமிக்கின்றது.

 

மேலும் அவர் ~~கிணற்றுக்குள் தவளை வளர்த்த காலமே கரையேறிவிட்டது. சமுத்திரத்தில் முதலை வளர்க்க ஆசிரியர்கள் தம்மை நவீனப்படுத்த வேண்டும்|| என்றார். எவ்வளவு விசித்திரமான உலகமயமாகும்; கைக்கூலித்தனம். எமது பண்பாட்டுக்கு மாற்றாக மேற்கின் கல்வி முறையை புகுத்தும் ஒரு மாற்றுத் தான், இவரின் நவீனத்துவக் கண்டுபிடிப்பு. நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ காலனித்துவ கிணற்றுத் தவளை கல்வி முறை அறிவியலை, அச்சமுக இருப்பு சார்ந்து கட்டமைக்கப்படுகின்றது. இங்கு தனிப்பட்ட ஆசிரியன் மீது குற்றம் சுமத்துவதும், பரிசளிப்பதும் என்பது; சமூக பொருளாதார உறவை விடயத்தின் உள்ளடக்கத்திலிருந்து பிரித்தெடுப்பதாகும். நவீன கல்வி என்பது ஏகாதிபத்திய உலகமயமாதல் சுரண்டல் சமூக பொருளாதார அமைப்பு சார்ந்து, பரந்த சமுத்திரத்தில் முதலையாக இருக்க கோருகின்றார். சுத்தியும் சுத்தி தண்ணீருக்குள் (சுரண்டல் எல்லைக்குள்ளான கல்வி) ஒரு முதலையாக காலத்தை ஓட்டக் கோருகின்றார். முதலை தரையில் உயிர் வாழ முடியாத சமுத்திரத்தின் எல்லைக்குள் மூழ்க வேண்டியது தான்;. அதாவது மேற்கின் கல்வி சமுத்திரத்தில் முதலைத் தன்மை கொண்டவை தான்;. அறிவை, மனித இயற்கை மற்றும் உழைப்பில் இருந்து அகற்றி, உலகமயமாதலை விரிவாக்கும் தளத்தில் சமுத்திர முதலையாக இருக்கக் கோருவதே. எப்படி நிலப்பிரபுத்துவ கல்வி கிணற்றுத் தவளையாக உள்ளதோ, அதே போல் மேற்கு கல்வி சமுத்திர முதலைக் கல்வி தான். இரண்டும் தரையில் வாழ முடியாது. கிணற்றுத் தவளை தரைக்கு வந்து போகவோ வாழவோ முடியாது. முதலை தரைக்கு வரமுடியும், ஆனால் சமுத்திரத்தை விட்டு தரையில் தூரச் செல்லவோ, தரையில் உயிர் வாழவோ முடியாது. மண்டிப் போன மூலதனத்தை விரிவாக்கும் இயந்திர உறுப்பு சார்ந்த கல்வி அறிவுடன், பகட்டுச் சுதந்திரத்தில் போலியாக வாழ்வதே நிகழ்கின்றது. இதற்கு மூன்றாம் உலக நாடுகள் பலிக்கடாவாகும்;. மூன்றாம் உலக நாடுகள் சுரண்டப்படுவது நிறுத்தப்படின், தவிர்க்க முடியாமல் மேற்கின் கல்வியும், கல்விமுறையும் தகர்ந்து போகும்;.

அடுத்து இணையம் பற்றிய பிதற்றலைப் பார்ப்போம்;. "வீட்டிலிருந்தவாறே உலகின் மிகப்பெரிய நூல் நிலையங்களுக்குள் நுழையும் வாய்ப்பு சாதாரண விடயமாகி விட்டது. செய்தித்துறையின் மீதான மேற்கத்திய நாடுகளின் சர்வாதிகாரத்தை நொருக்கியெறியும் சாதனையை இணைய வலையம் வெகுவிரைவில் ஆற்றி முடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை" என்று கூறி அமைதியாகும் படி உபதேசம் செய்கின்றார். பிரஞ்சு மொழி மன்னன், இணைய பொறியியலாளரின் (எஞ்சினியரின்) அறிவுக்கு, இது எப்படி எதன் வழியில் சாத்தியம் என்பதை ஆதாரமாக நிறுவ வேண்டும் என்ற தரவுகள் கூட அவசியமற்றதாகிவிடுகின்றது. இணைய பொறியியலாளர்களை உருவாக்க கற்பிக்கும் போதே, மேற்கின் கல்வி முறை இதைச் சொல்லத் தயங்குவதில்லை. அதை அப்படியே எமக்கு கொஞ்சம் திருத்தி சொல்வதே இங்கு மீள நிகழ்கின்றது. இதை புத்ஜீவி சொல்கிறேன் சந்தேகமின்றி  ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேறு பிரகடனம் செய்கின்றார்.

ஆனால் உண்மை நிலை என்ன.  இணையம் என்பது மனிதனுக்கு புறம்பாக, மனிதனின் இன்றைய அறிவைத் தாண்டி எந்தச் செய்தியையும் வெளியிடுவதில்லை. மனிதன் தான் செய்தியினை அதற்குள் புகுத்துகின்றான். உலகெங்கும் உள்ள மனிதன் தன் சமூகத்தின் பொருளாதார பண்பாட்டு கலாச்சார எல்லைக்குள் சிந்திப்பதைத் தான், மீள முன்வைக்க முடிகின்றது. இந்த நிலையில் உலகமயமாதல் எல்லையில் மனித அறிவுகள் அதற்குள் பெரும்பான்மையாக அதுவே அறிவாக உள்ள நிலையில், இணையமும் அதன் எல்லைக்குள் தான் செய்தியை கொண்டிருக்கின்றது அல்லவா. சமூகத்தின் அறிவைத் தாண்டி இணையம் ஒன்று வெட்டிக் கிழிப்பதில்லை. தமிழ் பேசும் மக்களை எடுத்தால் அதன் அறிவின் எல்லை, இந்த சமுதாய எல்லைக்குள் எப்படி உள்ளது என்பதை இணையத்தில் புகுந்தாலே வெட்ட வெளிச்சமாக நிர்வாணமாகின்றது. இதுபோல் தான் அனைத்து மொழியும். வரையறுக்கப்பட்ட ஏகாதிபத்திய உலகமயமாதல் அறிவு எல்லைக்குள், இணையம் திறந்த புத்தகமாகவே உள்ளது. அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் கண்காணிப்பிற்கு உள்ளாகியே உலகு முழுக்கச் செல்லுகின்றது. எது தடை செய்யப்பட வேண்டுமோ, அவை தடை செய்யப்படுகின்றன. இங்கு அதை மீறியும் வருகின்றது எனின் இரகசிய இணைய வழிமுறையும், மற்றும் கணணி கண்காணிப்பின் போதாமையுமே காரணமாக உள்ளது. இணையம் கண்காணிப்பை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இணையம் மூலம் தனிமனிதனின் எழுத்துகள் கணணியில் எழுதிக் கொண்டிருக்கும் போதே கண்காணிக்கப்படுகின்றது.

இணையம் மனிதனுக்கு எதை நுகரக் கொடுக்கின்றது. ஆணாதிக்க வக்கிரத்துக்கு தீனி போடுகின்றது. இன்டர்நெட்டில் எதை ஆராய்கின்றனர் என யாகூ (YAHOOL) என்ற இணையம் ஆராய்ந்த போது செக்ஸ் என்ற அதிர்ச்சியே உலகுக்கு எஞ்சியது. இன்டர்நெட்டில் அதிகம் இறக்குமதியானது  சின்டி மார்கோலிஸ் (CINDY MARGOLIS) நீச்சல் உடைகள்தான். சின்டியின் நூறு பிரசித்தி பெற்ற போட்டோக்கள் 750000 பேர் பிரிண்ட் எடுத்துள்ளதை அமெரிக்க ஒன்லைன் அறிக்கை தெரிவிக்கின்றது. சிண்டி தனக்கு வரும் ஈ-மெயில் நாற்பது சதவீதம் எப்படி உடல் அழகைப் பேணுகின்றீர்கள் எனக் கேட்டு வருகின்றது என்கின்றார். இன்ரநெற் தொடர்பான ஆய்வு ஒன்றை செய்த அமெரிக்காவிலுள்ள "கார்னேஜி மெல்லோன் பல்கலைக் கழகம்" "தகவல் மாநெடுஞ்சாலையில் நடக்கும் பாலுறவு வக்கிர இலக்கியங்களின் வியாபாரம்| என்றொரு தலைப்பில் செய்தது. அதன்படி 18 மாதத்தில் 917410 பாலுறவு வக்கிரப் படங்கள், சிறுகதைகள், சித்தரிப்புகள், ஆண்டுத் திரைப்படங்கள் இன்ரநெற்றில் புகுத்தப்பட்டதை குறிப்பிட்டதுடன், 83.5 சதவீதம் பேர் இதைக் கண்டு கழிப்பதையும் அம்பலமாக்கினர். பல்கலைக்கழக இன்ரநெற் பயன்பாட்டில் 40 க்கு 13 பாலியல் வக்கிரத்துக்குள் நீடிப்பதை வேறு அம்பலமாக்கியுள்ளது. இந்த சேவையை வழங்கும் அமெரிக்காவின் 5 பெரிய ஜனநாயக நிறுவனங்கள், 10 லட்சம் டாலருக்கு மேல் இதன் மூலம் சம்பாதிக்கின்றனர். இணையம் மனிதனுக்கு கல்வியையோ, அறிவையோ, சமூக நோக்கத்தையோ புகட்டவில்லை. மாறாக ஆணாதிக்க நிற இன சுரண்டலை போதிப்பதன் ஊடாக, சுரண்டலை விரிவாக்கி மனிதனை முடமாக்குவது நிகழ்கின்றது.

அற்ப நுகர்வையும், அற்ப சந்தோசங்களையும் வீட்டுக்குள் புகுதியதுக்கு அப்பால், இணையம் எதையும் சமூகத்துக்கு கொடுத்துவிடவில்லை. முன்பு உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், கலை இலக்கிய நிகழ்ச்சிகள் என்று மனிதன் சமூகத்துடன் உறவாடி செய்தவைகள் எல்லாம், முடங்கிப் போன நாலு சுவருக்குள், கம்யூட்டர் முன் எல்லா வக்கிரங்களும் புகுந்து மனித இயற்கை வாழ்வியல் சிதைந்து, இயந்திர பண்பை  நாலு சுவருக்குள்ளும் பெற்று பொம்மையாகின்றான்.

இணையம் என்பது மனித சமுதாய பயன்பாட்டின் தேவைகளில் இருந்து அன்னியப்பட்டு மூலதனத்தை உருவாக்கும் ஊடகமாக இருப்பதால், இதன் ஊடாக அதிக மூலதனத்தை சம்பாதிக்க விரும்புபவன், எப்படி இணையத்தின் ஊடாக மூலதனத்தை பெற முடியும் என்றே சிந்திக்கின்றான். இந்த மனித விரோதிகளின் கையில் இணையம் உள்ள நிலையில், அங்கு மனிதனை எப்படி ஏமாற்றி எவ்வளவு வேகமாக மூலதனத்தை திரட்ட முடியும் என்பதே நோக்கமாக உள்ள நிலையில், இணையம் பாலியல் சுதந்திர ஜனநாயக வக்கிரத்தால் நிரம்பி வழிகின்றது. பார்வையாளன் ஒரு சினிமாப் படம் பார்ப்பது போல், அதில் கவர்ச்சி பாலியலைத் தேடி நாயாக அலைவது போல், இது இணையத்தில் நேரடியாக அடைவது அன்றாட பொழுதுபோக்காக மாறிவிட்டது. தொடர்ச்சியாக இவை பற்றிய     ஆய்வுகள் தௌ;ளத் தெளிவாக அம்பலம் செய்கின்றது. சினிமா தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள்  வக்கிரத்தை தேடி அடைவது என்பது போய், இங்கு குறி வைத்தே வக்கிரத்தை அடைவதே இணையத்தில் மையமான உள்ளடக்கமும் வக்கிரமுமாகும். அதாவது உலகமயமாதலில் பணம் உள்ளவன் எதையும் அனுபவிக்க முடியும் என்பதை, இணையத்தில் அனைத்து மக்களுக்குமான காட்சியூடாக, வக்கிரமாக சுயதிருப்தியடையத் தூண்டுவதில் இணையம் தலையாய பாத்திரத்தை வகிக்கின்றது. சமுதாயம் சமூக நலன்களை புறந்தள்ளி சிலரின் நலன்களை பிரதிபலிக்கும் உலகமயமாதல் உலகத்தில், இணையமும் அது சார்ந்தே தனது உள்ளடக்கத்தையும், பயன்படுத்தலையும் தீர்மானிக்கின்றது. எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளும் சமூகத்துக்கு எப்படி எதிராக இருக்கின்றதோ, அதுவே இணையத்துக்கும் பொருந்தும். இங்கு விதிவிலக்காக கற்பிப்பது என்பது, புத்திஜீவித்தனத்தின் மோசடியுடன் கட்டமைக்கப்படுவதாகும்.