Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தங்கள் மனிதவிரோத குற்றங்களை மூடிமறைக்க இலக்கியம், இலக்கியமும் அரசியலும்

  • PDF

30 வருடமாக புலி அரசியலையும், அதன் மனிதவிரோத குற்றங்களையும் எதிர்த்து போராடியதை எற்காது, முள்ளிவாய்க்காலுக்கு பின்னான புலிகள் பற்றி விமர்சனமும் அதன் அரசியலும் எதுவாக இருக்கின்றது? அதன் நோக்கம் என்னவாக இருக்கின்றது? முள்ளிவாய்க்காலுக்கு முன் இவர்களுக்கு புலிகளுடன் முரண்பாடு இருந்து இருப்பின், எந்த அரசியலின் அடிப்படையில் இவர்கள் முரண்பட்டு இருப்பார்கள்? அதை இன்று என்னவாக, எப்படி அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்? இதை எல்லாம் மூடிமறைக்க, இலக்கியம் என்ற தகுதி போதுமா? இப்படிப்பட்ட இவர்கள வேறுயாருமல்ல, புலிகளின் அரசியல் தவறுகள் எல்லாம் தெரிந்தவர்களாக இவர்கள் இருந்ததுடன், புலிகளின் குற்றங்களுக்கும் தவறுகளுக்கும் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.

40 வருடங்களாக இலங்கையில் தொடர்ந்த மனிதவிரோத குற்றங்களுக்கு அரசை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. அதற்கு மேலாக புலிகளையும், துரோகக் குழுக்களையும் சேர்ந்து குற்றம்சாட்டுவதால் மட்டும் குற்றவாளிகளை நாம் இன்று இனம் காணமுடியாது. குற்றவாளிகள் இந்த அளவீட்டை கொண்டு, தம்மைப் புனிதர்களாக காட்ட முனைகின்றனர்.

இந்த பொது அளவீடு புலிகள் இருந்த காலம் வரை தான் பொருந்தும். புலிகள் இல்லாத போது, எல்லா சந்தர்ப்பவாதிகளும் (புலிப் புத்திஜீவிகள் உள்ளடங்க) இந்த அளவீட்டுக்குள் தம்மை ஒளித்துக் கொள்கின்றனர்.

இதில் முக்கியமாக புலிகளுடன் ஒன்றிணைந்திருந்து இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியல் பேசியவர்கள், இன்று மாபெரும் மோசடிக்காரர்களாக இலக்கிய முகமூடி அணிந்தபடி வெளிவருகின்றனர். பிரமுகர்களாக மக்களை சார்ந்து நிற்காத இந்த பன்னாடைகள் பலர், கடந்த காலத்தில் மனித விரோத குற்றங்களிற்கு துணை நின்றவர்கள்.

புலிகள் இருந்த காலத்தில் புலிகளுடன் கூடி நின்று இலக்கியமும், இலக்கிய அரசியலும் பேசியவர்கள், கடந்தகால புலியின் மனித விரோத குற்றங்களை நன்கு தெரிந்து அவற்றிற்கு உடைந்தையாக இருந்தவர்கள். எல்லாம் தெரிந்து துணை நின்ற இவர்களை, சாதாரண புலி உறுப்பினர்களுடன் ஒப்பிட முடியாது. இவர்கள் என்ன நடக்கின்றது என்பது நன்கு தெரிந்து, அதற்கு உதவியவர்கள். இன்று அதே இலக்கியமும், இலக்கிய அரசியல் மேலாண்மை மூலமும், மீண்டும் வேசத்தை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.

இலக்கியம் பேசுவதாலோ, இலக்கிய ஆளுமையினை வெளிப்படுத்துவதாலோ இவர்களை நாம் போற்ற வேண்டுமா? சொல்லுங்கள். இவர்கள் சமூகத்தின் முன்னோடிகளாக, நேர்மையானவர்களாக மாறி விடுவார்களா? சொல்லுங்கள். சாதாரண மனிதனுக்கு இல்லாத இந்த சிறப்புத் தகுதியை இவர்கள் பெற்றுவிடுவார்களா? சொல்லுங்கள்.

சமூகத்தை நலமடிக்கும் பிரமுகர்களைக் கொண்ட இந்த சமூக அமைப்பில், இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியல் பேசுகின்ற தகுதி மட்டுமே சமூகத்தை வழி நடத்த, அதை பற்றி கருத்து சொல்ல போதுமான தகுதியாக இன்று காட்டி விட முனைகின்றனர். இன்று நடப்பது இதுதான்.

பாரிய மனிதவிரோதக் குற்றவாளிகள் இலக்கியம், இலக்கிய அரசியல் அரங்கில் ஒளித்துக் கொள்கின்றனர். படைப்பை முன்வைத்து தம்மைத்தாம் புனிதாரக்குகின்றனர். ஆக புலியை குற்றம் காண்கின்றனரே ஒழிய புலி அரசியலை அல்ல. ஆக இவர்கள் புலிகளின் பரந்துபட்ட மக்கள் விரோத அரசியலை விமர்சனத்திற்கு உள்ளாக்குவதில்லை.

இங்கு யார் குற்றவாளிகள், அதற்குரிய அளவீடுகள் என்ன? இதைப்பற்றி சமூக அக்கறையுடன் எவர் அணுகுகின்றனர். சொல்லுங்கள். சமூக நோக்கமற்ற பிரமுகர்கள் தமக்குள் முதுகு சொறிந்து கும்மியடிக்கும் பின்புலத்தில், இலக்கிய ஆளுமை மூலம் மனிதவிரோத குற்றவாளிகள் மீண்டும் மக்களை ஏமாற்ற வருகின்றனர்.

இந்த வகையில் கடந்த 30 வருட புலிகளின் சர்வாதிகார பாசிச அமைப்பில், அங்கு நடந்தேறிய குற்றங்களுக்கு யார் பொறுப்பு? இதற்கு பதிலளிக்கவேண்டிய பொறுப்பில் இருந்து இலக்கிய ஜம்பவான்கள் ஒளித்து ஒடுவதன் மூலம், தம்மை தாம் ஒளித்துக் கொள்கின்றனர். தம் இலக்கிய ஆளுமை மூலம், தம் இருண்ட பக்கத்தை மூடிமறைத்து, தம் இலக்கியம் மூலம் தமக்கு ஒளிவட்டம் கட்டுகின்றனர்.

புலி அமைப்பில் கீழ்மட்ட அணிகளில் இணைந்திருந்து போராடியவர்களும், குற்றத்ததைச் செய்தவர்களும், குற்றவாளிகள் அல்லர். இதுதான் விடுதலை, இதுதான் தியாகம் என்று நம்பியவர்கள்; அவர்கள். அவர்களுக்கு இதை வழிகாட்டியவர்கள் தான், இதற்கான முழுப் பொறுப்புக்குரியவர்கள். நடந்தேறிய குற்றங்களுக்கு இவர்கள் தான் முழு பொறுப்பு. இந்த வகையில் யார் இதற்கு பொறுப்பு? சொல்லுங்கள்.

புலிகளின் தலைமையும், இலக்கியமும், இலக்கிய அரசியலும் பேசி இதை முன்னின்று வழிநடத்திய கூட்டமும் தான் இதற்கு பொறுப்பாகும்.

இந்த வகையில் புலித் தலைமை முதல் இதை நியாயப்படுத்திய இலக்கியமும், இலக்கிய அரசியல் செய்தவர்கள் வரைதான், இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கியவர்கள். சாம்பல் இலக்கியம், கறுப்பு-வெள்ளை …என்ற இலக்கிய அரசியல் பேசுகின்ற, இப்படி எல்லாம் தெரிந்த இலக்கிய ஜம்பவான்கள் துணையின்றி புலிகளின் குற்றங்கள் எதுவும் நடந்தேறியிருக்கவில்லை. கம்யூனிச குற்றங்கள் பற்றியும், நாசிய குற்றங்கள் பற்றி எல்லாம் பேசுகின்ற இவர்களின் துணையின்றி, புலிகளின் குற்றங்கள் எப்படி நடந்து இருக்க முடியும்? சொல்லுங்கள். சாரதாரண மக்களுக்கு உண்மைகளை தெளிவூட்ட வேண்டியவர்கள், அதை செய்ய முடியாத சூழல் அங்கிருந்திருந்தால் மௌனமாகி இருந்திருக்க வேண்டும். அதைச் செய்யாது மனித விரோத குற்றங்களை மூடி மறைத்தும்;, இலக்கியம் - இலக்கிய அரசியல் மூலம் புலிகளின் மக்கள் விரோத செயற்பாடுகளிற்கு எற்ப பிரச்சாரம் செய்தனர்.

ஆம் இப்படிப்பட்ட இவர்களும் போர் குற்றவாளிகள் தான். கடந்த 30 வருடங்களாக புலிகள் மக்களிற்கு இழைத்த குற்றங்களின் பின்னால் இருந்து இயங்கியவர்கள். முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் அரசின் குற்றங்களுக்கு உடந்தையாக இலக்கியமும், இலக்கிய அரசியலும் பேசுகின்றனர். 1980 களில் தொடங்கிய முதல் 10 வருடத்தில் மனித விரோத குற்றத்தை எதிர்த்த மக்களின் பல முனை போராட்டங்களையும், எதிர்த்து நின்றவர்கள் தான் இவர்கள். அந்த போராட்டங்களின் மீது அன்று சேறு அடிப்பதில் தான் தொடங்கியது இவர்களின் இலக்கியமும், இலக்கிய அரசியலும். இன்று அதை மூடிமறைக்கும், அதே பாசிச வக்கிரத்துடன், இன்று அரசுடன் சேர்ந்து ஜனநாயக வேசம் போடுகின்றனர். அன்றிலிருந்து முள்ளிவாய்க்கல் வரை, எல்லாம் தெரிந்து கொண்டு குற்றங்களிற்கு உடந்தையாக துணையாக நின்று, இலக்கியமும், இலக்கிய அரசியலும் செய்தவர்கள் இவர்கள்.

கொலை செய்தவன் குற்றவாளியல்ல. அவன் இயக்க வைக்கப்பட்டவன். ஆனால் குற்றம் நடப்பது தெரிந்து, அதை வலுவூட்டி அதற்கு துணை நின்றவர்கள் தான் குற்றவாளிகள். இந்த வகையில் புலியுடன் நின்று இலக்கியமும், இலக்கிய அரசியலும் செய்தவர்கள் குற்றவாளிகள். இலக்கியமும், இலக்கிய அரசியலும் மனித உணர்வுகளை மைய்யப்படுத்தி இயங்குவது. இதற்கு தெளிவூட்டாது நஞ்சிட்டவர்கள் தான் இலக்கியமும், இலக்கிய அரசியலும் பேசியவர்கள். இன்றும் அதைத்தான் இவர்கள் தொடர்ந்து செய்கின்றனர்.

நேர்மையான இலக்கியமும், இலக்கிய அரசியலும், எந்த சூழலிலும் மக்களை நலமடிக்கும் காரியத்தை செய்ய முடியாது. அதற்கு காரணங்களை கற்பிக்க முடியாது. எல்லாம் தெரிந்த இவர்களே இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்களும் ஆவர். சூழல் தடுத்திருந்தால் மக்களை நலமடிக்கும் இலக்கியமும், இலக்கிய அரசியலும் செய்வதை விடுத்து மௌனமாக ஒதுங்கி இருக்க  வேண்டும். இதுதான் குறைந்தபட்ச நேர்மை. இன்று அரச பாசிச பயங்கரவாதம் நிலவும் சூழலுக்கு, இது தான் பொருந்தும். போராட்ட உணர்வுகளை நலமடிக்கும் அரசின் புனர்வாழ்வு அரசியலும், மக்களை நலமடிக்கும் உங்கள் பிரமுகர்தன இருப்பு அரசியலும் இன்று ஒரு புள்ளியில் பயணிப்பதையே, புலிக்கு பின்னான இலக்கியமும், இலக்கிய அரசியலும் செய்தவர்களிடையேயான பொதுப் பண்பாக உள்ளது.

அன்று புலிகளால் கைது செய்த மற்றும் கடத்திச் செல்லப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது? புலிகள் காலத்தில், புலிகளினால் காணமல் போனவர்களுக்கு என்ன நடத்தது? அவர்கள் சரணடையக் கோரி சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? வீதிகளில் அரங்கேற்றிய ஆயிரக்கணக்கான படுகொலைகளுக்கு யார் பொறுப்பு? இப்படி பற்பல. சட்டம் நிதி… எதுவுமற்ற குற்றங்கள் நடந்தேறினவே, யாரால்? அரசுக்கு நிகராக புலிகள் அரங்கேற்றிய மனிதவிரோத குற்றங்களோ பலவிதம். இந்த குற்றத்தில் சில, அரசை மிஞ்சிவை, அந்தளவுக்கு அவை கொடூரமானவை. இதற்கு எல்லாம் யார் பொறுப்பு? நீங்கள் இல்லையா? சொல்லுங்கள். சாம்பல் இலக்கியம், கறுப்பு-வெள்ளை இலக்கிய அரசியல் பேசும் உங்கள் இலக்கிய மற்றும் இலக்கிய அரசியல் வல்லமைக்கு இது தெரியாது போனது எப்படி? சொல்லுங்கள். நீங்கள் குற்றவாளிகள் அல்ல என்றால், நீங்கள் யார்? அதையாவது உங்களால் முன்வைக்க முடியுமா?

புலிகளுடன் இருந்த காலத்தில், அதாவது முள்ளிவாய்கலுக்கு முன்னான புலிகளின் அரசியலுடன் இன்று வரை முரண்பாடு கொள்ளாதவர்கள், எப்படி எந்த அரசியலில் முள்ளிவாய்கலுக்கு முன் புலிகளுடன் முரண்பட்டு இருப்பார்கள்!? சொல்லுங்கள். 1980 முதல் புலி அரசியலையும், அதன் மனித விரோத தொடர் போக்கையும் எதிர்த்துப் போராடிய அரசியலையும் போராட்டங்களையும் அங்கீகரிக்காத, அதை கண்டுகொள்ளாத இவர்கள், எந்த வகையில் தான் புலிகளுடன் அரசியல் ரீதியாக முரண்படுகின்றனர்? ஆக இங்கு தங்கள் "ஆளுமைமிக்க" இலக்கியமும், இலக்கிய அரசியல் மூலம், வேசம் போட்ட அரசியல் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இந்த வகையில் புலத்தில் 20 வருடங்களாக புலியெதிர்ப்பு பொதுத்தளத்தில் மக்களை சார்ந்து நிற்காத இலக்கிய - இலக்கிய அரசியல் பிரமுகர்கள் புலிகளிலிருந்த இலக்கிய - இலக்கிய அரசியல் செய்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, இன்று மக்களை நலமடிக்கும் இலக்கியமும், இலக்கிய அரசியலும் செய்கின்றனர்.

பி.இரயாகரன்

29.06.2012

Last Updated on Friday, 29 June 2012 19:22