Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மன்னாரில் முஸ்லீம் தமிழ் இன மத மோதலை தூண்டிவிடும் அரசியல் பின்னணி குறித்து..

  • PDF

இனவாதமும், மதவாதமும் கொண்ட அரசியல் கண்ணோட்டமும், அது சார்ந்த செயல்பாடும் தான் இதன் பின்னால் காணப்படுகின்றது. இலங்கையில் பெரும்பான்மை சார்ந்த இனவாதம் மட்டுமல்ல, சிறுபான்மை சார்ந்த இனவாதமும் காணப்படுகின்றது. கடந்தகாலத்தில் இனவாதம் இழைத்த மனிதகுற்றங்களை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாத சமூகத்தில், அந்த அரசியல் தொடரப்படுகின்றது. தங்கள் இனம் சார்ந்து பாதிக்கப்பட்ட மற்றைய இன மக்கள் தம்முடன் மீள இணைந்து வாழ முன்னின்று வழிகாட்டாத குறுகிய இனவாதத்தைக் கொண்டு, மக்களை மோத வைக்கின்ற நிகழ்வுதான் மன்னார் சம்பவம். இனம் கடந்து, மதம் கடந்து மனிதனாக உணராத குறுகிய உணர்வுகளும், இதை தூண்டும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் இதன் பின் குளிர்காய்கின்றனர். சிங்களப் பேரினவாதம் மட்டும் தான், பௌத்த மதம் மட்டும் தான், மக்களைப் பிளக்கின்றது என்பது கடைந்தெடுத்த பொய். மாறாக பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்கள் கூட, இன மத வாதிகளாக, ஒடுக்குபவராக, இனப்; பிளவை தூண்டுபவராக உள்ளனர். இதில் ஒன்றை தூண்டி ஒடுக்குவது என்ற வகையில், அரசின் பங்கு சார்ந்த கூற முதன்மையான அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றது.

இந்த அரசியல் பின்புலத்;தில் சிங்களப் பேரினவாதமும் சார்ந்த பௌத்தம் மட்டுமின்றி அதிகார வர்க்க சார்ந்த குறுகிய இன மத உணர்வுகள் தூண்டிவிடப்படுகின்றது. மன்னாரில் அரசு இதைத்தான் செய்கின்றது. இந்த வகையில் அரசினது இனவாதமும்;, அரசின் இனவாத கொள்கையை முன்னெடுக்கும் அமைச்சரும், அவரின் குறுகிய இன மத வாதக் கொள்கையும் இதன் பின்னுள்ளது. இதற்கு பக்கபலமாக இருப்பது தமிழ் இனவாதம். முஸ்லீம் மக்களுக்கு புலிகள் இழைத்த கொடுமைகளுக்கு, கொடூரங்களுக்கும் பரிகாரமும் நிவாரணம் காண முனையாத வண்ணம், தமிழ் இனவாதிகளாக தொடர்ந்து செயல்படுகின்றனர். மொத்தத்தில் இனம் மதம் என்ற குறுகிய உணர்வுகள், எங்கும் தூண்டிவிடப்படுகின்றது.

இலங்கையில் சிங்களப் பேரினவாதம் மட்டும் இருக்கவில்லை, தமிழ்பேரினவாதம் கூட தான் காணப்படுகின்றது. எங்கெல்லாம் பெரும்பான்மையாக யார் உள்ளனரோ, அங்கு அவர்கள் சிறுபான்மையை ஒடுக்கினர். இதில் தமிழ், சிங்கள, முஸ்லீம் .. என்று எந்த வேறுபாடு இன்றி இதில் அவர்கள் ஈடுபடுகின்றனர். தங்களை மனிதனாக அடையாளப்படுத்தாது, இன மத குறுகிய அடையாளங்களுக்குள் நின்று மற்றவனின் ஒடுக்குமுறை பற்றி மட்டும் பேச முற்படுகின்றோம். அதேநேரம் ஒடுக்குபராக இருக்கின்றோம்.

புலிகளால் மன்னாரில் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள குடியேறுவதற்கு உரித்துடையவர்கள். இந்த வகையில்

1.தங்கள் சொந்த நிலங்களுக்கும் வீடுகளுக்கும் மீளச் சென்று வாழ, தமிழ் மக்கள் முன்னின்று உதவ வேண்டும்;. அவர்கள் தங்கள் சட்டப்படியான சொத்துக்களையும், வாழ்வு சார்ந்த உரிமைகளையும் மீளக் பெறும் உரித்துடையவர்கள்.

2.இவர்களின் அடுத்த தலைமுறையினர் அந்த பிரதேசத்தில் வாழ்வதற்கான உரித்துடையவர்கள். ஆனால்

2.1.வேறு இடங்களில் தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களுக்கு (நிலம் - வீடு - தொழிலைக் கொண்டவர்களுக்கு) இந்த உரிமை கிடையாது. இதே அளவுகோள் தமிழ் மக்களுக்கும் கூட பொருந்தும்.

2.2.தாய் தகப்பனுடன் சேர்ந்து, வேறு மாற்று வாழ்வின்றி அகதியாக தொடர்ந்து வாழ்ந்தவர்களுக்கு, அவர்களின் பாரம்பரியப் பிரதேசத்தில் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். இது இந்த பகுதிகளில் வாழும் மக்களை பாதிக்காத வண்ணம், அவர்களின் வாழ்விடத்தை அபகரிக்காத வண்ணம், அவர்களின் இணக்கத்துடன் இதை முன்னெடுக்க வேண்டும்.

இந்த வகையில் அல்லாத இனவாதக் குடியேற்றங்களையும், குறுகிய அடையாள இன-மத அரசியல் அடையாளக் குடியேற்றங்களையும், செயற்பாடுகனையும், ஒரு இன மதம் சார்ந்த அரசியல் மற்றும் அதிகார செயல்பாடுகளையும் தான், அரசு மன்னாரில் தூண்டிவிட்டு இருக்கின்றது. இதைத்தான் அரசு இலங்கை முழுக்க செய்கின்றது.

அதிகாரம் சார்ந்து இன மத ஒடுக்குமுறை மூலம் அரசியல் நடத்துகின்ற போக்குதான் அரசின் இன்றைய பொது செயல்பாடாகிவிட்டது. மறுதளத்தில் இனம், மதம் என்று அடையாளங்களை முன்னிறுத்திய அரசியல் பின்புலத்தில், பெரும்பான்மை சிறுபான்மையை ஒடுக்குவது பொதுவான அரசியலாகிவிட்டது.

இன்று இலங்கை அரசு கடைப்பிடிக்கும் இனவாத மற்றும் மதவாதக் கொள்கை, நாட்டின் பல பாகத்தில் புதிய முரண்பாடுகளை உருவாகி வருகின்றது. இந்த வகையில் மன்னாரிலும் தன் முஸ்லீம் அமைச்சர் மூலம், அவர் கொண்டுள்ள இன மத அடையாளம் மூலம், முரண்பாட்டை தூண்டிவிட்டு இருக்கின்றது. தன் அதிகாரத்தைக் கொண்டு அமைச்சர், இனம் மதம் சார்ந்து கையாளும் கொள்கை, மக்களை பிளந்து முரண்பாட்டையும் மோதலையும் தூண்டிவிட்டு இருக்கின்றது.

புலிகளின் குறுந்தேசிய இனவாதம் பாசிசமாகிய முஸ்லீம் மக்களை வேட்டையாடி துரத்திய நிகழ்வையும், அதன் வி;ளைவையும் அரசு மீள இனவாதமாக்கி மீள் குடியேற்றமாக காட்டி கையாளுகின்றது. இனம் சார்ந்த இனவாதத்தையே அரசியலாக கொண்ட தமிழ் தலைமைகள் இதற்கு துணையாக உள்ளனர். கடந்த காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான புலிகளின் இனவாதத்தையும் விமர்சிக்கவும் கண்டிக்கவும் சுயவிமர்சனம் செய்யவும் தயாரற்ற நிலையில், பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள தமிழ் மக்களுடன் இணைந்து வாழ வழிகாட்டத் தவறிய இனவாத பின்புலத்தில் தான், இன்று இதை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது.

இதை எல்லாம் நாம் புரிந்து கொள்வதன் மூலம், மன்னார் நடப்பது என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடியும். எமக்குள் இருக்கும் இனவாதத்தையும், எம்மைச் சுற்றிய இனவாதத்தையும் களையாத வரை, இதற்கு நாம் துணைபோகின்றவர்களாகவே தொடர்ந்து இருக்கிறோம் என்ற உண்மை, இதற்கு எதிரான எமது போராட்டத்தைக் கோருகின்றது.

 

பி.இரயாகரன்

28.05.2012

Last Updated on Monday, 28 May 2012 18:54