Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புலித் தலைவர்களின் மரணங்களுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

  • PDF

தமிழ் சமூகம் இதைக் கடந்து வெளிவரவில்லை. பகுத்தறிவுடன் நடந்தது என்ன என்பதை சுயமாக அறிய முடியாத வண்ணம், சமூகம் மூடிய இருண்ட கற்பனையில் வழிகாட்டப்பட்டு இருக்கின்றது. நடந்த உண்மைகள் புதைக்கப்பட்ட நிலையில், இதில் இருந்து விடுபடமுடியாத அறியாமைக்குள் சமூகத்தை முடக்கி வைத்திருக்கின்றது. இதன் மீது தெளிவைப் பெறும்வண்ணம், அடிப்படைத் தகவல்களை கொண்ட உங்களுடனான ஒரு உரையாடல் தான் இது.


பிரபாகரன் கொல்லப்படவில்லை, இன்னும் உயிருடன் உள்ளார் என்று இன்றும் கூறுகின்ற நம்புகின்ற அரசியல் பின்னணியில் அனைத்து உண்மைகளையும் நாம் தெரிந்தாக வேண்டும். இதற்கு மாறாக, அரசு பிரபாகரனை சண்டையில்தான் கொன்றோம் என்று கூறுகின்ற அரசியல் பின்னணியில், அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்தாக வேண்டும். இன்னொரு பகுதி அரசு சொல்வது தான் உண்மை, பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறுகின்ற அரசியல் பின்னணியில், அரசு சொல்வது உண்மையா என்பதை நாம் சுயவிசாரணை செய்தாக வேண்டும்.

 

புலி - அரசு இரண்டும் நடந்த உண்மையை, மக்களுக்கு முன் மூடிமறைத்து இருக்கின்றன. இவர்களின் இறுதி உரையாடல்கள் முதல் அவர்களின் கையில் கிடைத்த ஆவணங்களை அழிக்கின்றன, அழித்தும் வருகின்றன. வெளிவந்த காட்சிகளோ வெட்டியும், சுருக்கியும், மூடிமறைத்தபடியே, அரசியல் உள்நோக்குடன் வெளிவருகின்றது. இப்படி இங்கும் அங்குமாக உண்மைகள் மூடிமறைக்கப்பட்ட இந்தப் பின்னணியில், நடந்த போர்க்குற்றங்கள் மூடிமறைக்கப்படுகின்றன. அரசும் புலிகளும் தத்தம் பக்கத்தில் நடந்ததை மூடிமறைக்கும் அரசியல் பின்னணியில், அரசுக்குச் சார்பாக புலிகளும், புலிகளுக்குச் சார்பாக அரசுமாக, முழு உண்மைகளையும் புதைத்து விடுகின்றனர். இதுதான் இதன் பின்னுள்ள அரசியலின் ஒட்டுமொத்த சாரம். யுத்தம் தொடர்ந்த வரை, மக்களை புலி பலிகொடுக்க அரசு பலி எடுத்தது. இதைச் சுற்றியே அரசியல் மற்றும் தர்க்கங்கள் கட்டமைக்கப்பட்டன. இதைச் சுற்றியே அரசியல் நடத்தைகள் முதல் போராட்டங்கள் வரை அங்குமிங்குமாக நடந்தேறின. இந்த அரசியல் பின்னணியிலான நடத்தையூடாக புலிகளும் அரசும் செய்த கொடுமைகளையும், கொடூரங்களையும், மக்கள் தாம் கண்கண்ட காட்சிகளையும் சுதந்திரமாக பேசமுடியாத வண்ணம், அவர்களை திறந்த வெளிச்சிறையில் அடைத்து வைத்திருக்கின்றது அரசு. இதன் மூலமும் நடந்த உண்மைகள் தொடர்ந்து புதைக்கப்படுகின்றன. ஆக அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்களுக்கும், உலகுக்கும் மூடிமறைத்து வரும் பின்னணியில், இதை நாம் விரிவாகவும் குறிப்பாகவும் தெரிந்துகொள்ள முனைவோம்.


புலிகள் தம் மரணத்துக்கு முன் எடுத்த முடிவு என்ன?


மரணம் வரை போராடுவதா? இல்லை சரணடைவதா? ஆம் அவர்கள் சரணடைவைத்தான் தேர்ந்தெடுத்தனர். இந்த அரசியல் பின்னணியில்

1. மக்களை பணயக் கைதிகளாக்கி அவர்களை ஆயிரம் ஆயிரமாக பலி கொடுத்த புலிகள், அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல பின்னர் அனுமதித்தனர்.


2. புலிகள் கைதியாக வைத்திருந்த சிங்களப் படையினரை, வெளிப்படையான எந்த நிபந்தனையுமின்றி தமது இறுதி நாட்களின் போது விடுவித்தனர்.

3. புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட பெரும் பகுதியினரை (குறைந்து 15 ஆயிரம் புலிகள்) மக்களுடன் மக்களாக வெளியேற புலிகள் இறுதியில் அனுமதித்தனர்.


ஆக இப்படித்தான் யுத்தமுனை திடீரென வெறுமையாகியது. மிகப் பெரியளவில் மக்களை பலியிடும் புலிகளின் அழிவு அரசியலைக் கைவிட வைத்த, புதிய அரசியல் சூழல் என்ன? புலிகளின் ஈவிரக்கமற்ற கொலை வெறித்தனமும், பலி வாங்கும் குணமும் திடீரென கைவிடப்பட்டது எதனால்? இந்தப் பின்னணிக்குரிய அரசியல் சூழல் என்ன?


புலிகளின் முக்கிய புள்ளிகளின் சரணடைவுக்குரிய நாடகம் ஒன்று, அங்கு எந்தச் சந்தேகமும் இன்றி அரங்கேறியது. இது தான் அனைத்தையும் மாற்றியது. பாதுகாப்பாக முக்கிய புலிகளும், அவர்களின் குடும்பமும் வெளியேறும் சரணடைவு நாடகம் ஒன்று அங்கு திட்டமிட்டு அரங்கேறியது. இதில் ஈடுபட்ட புலத்துப் புலிகள் இதை மூடிமறைக்கின்றனர். இதை அரசும் மறுக்கின்றது. புலிகளோ தங்கள் அரசியல் பிரிவு மட்டும் சரணடைந்ததாக அதைச் சுருக்கிக் கூறுகின்றனர். அரசோ இப்படி சரணடைந்தவர்களை, சரணடையாத புலிகள் கொன்றதாக கூறுகின்றது. இப்படி புலிகளின் அரசியல் பிரிவு சரணடைந்ததாக கூற, அதை புலிகளின் இராணுவப் பிரிவு கொன்றதாக அரசு கூறுகின்றது. இல்லை அரசுதான் கொன்றதாக புலிகள் கூறுகின்றனர். இப்படி சரணடைவு பற்றிய திரிபும், யாரால் எந்த நிலையில் வைத்து எப்படி கொல்லப்பட்டனர் என்ற உண்மைகளையும் புதைக்கின்ற அரசியல் பின்னணியில் தான், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற கதை வரை புனையப்படுகின்றது. கொலைக்கு உடந்தையாக, அதை மூடிமறைக்கின்ற அரசியல் பின்னணியில், உண்மைகளை தங்கள் சதிகளின் பின்னணியில் புதைக்கின்றனர்.


பிரபாகரன் உட்பட்ட முக்கிய புலிகள் சரணடைந்த பின்னர் தான் கொல்லப்பட்டனர்.


அரசு சொல்வது போல், பிரபாகரன் சண்டையில் கொல்லப்படவில்லை. நடேசன் போன்றவர்களை, சரணடையாத பிரபாகரனின் புலிகள் கொன்றதான அரசின் கூற்று பொய். மாறாக நம்பவைத்த ஒரு சரணடைவு நாடகத்தின் பின் அரசு தான் அவர்களைக் கொன்றது.


பிரபாகரனின் 14 வயது மகன் சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டார். இதை சனல்-4 காட்சி இன்று மீள உறுதி செய்திருக்கின்றது. பிரபாகரனின் 14 வயது மகன் உடலில் குண்டு பாய்ந்த விதம் முதல் கண் பார்வை பற்றிய ஆய்வுகள் இதை மேலும் உறுதி செய்கின்றது. இப்படி உண்மை இருக்க, சரணடைவை விரும்பாத மற்றொரு பகுதி (அதாவது பிரபாகரன்) பிரபாகரனின் மகனைக் கொன்றதாக அரசு கூறுகின்றது. அரசின் இந்தக் கூற்றைத்தான் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று கூறுகின்றவர்களும், பிரபாகரன் சரணடையாது வீரமரணம் அடைந்ததாக கூறுகின்ற பிரிவும் கூட மறைமுகமாக கூற முற்படுகின்றது. இப்படி நடந்த உண்மைகளையும், நடந்த குற்றங்களையும் பரஸ்பரம் மூடி மறைக்கின்றனர்.


பிரபாகரனின் 14 வயது மகன் கொல்லப்பட்ட அதே காட்சியை ஒத்த, புலிகளின் முன்னணி இராணுவத் தளபதிகளின் பல படங்கள் வெளிவந்திருக்கின்றது. இந்த வகையில் குறுகிய இடைவெளியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சூசை, பானுவின் படங்களுக்கும், பிரபாகரனின் 14 வயது மகனின் படத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமை இதை மேலும் தெளிவாக உறுதி செய்கின்றது. இதில் இருந்து சற்று வேறுபாடாகவே பிரபாகரனின் படங்கள் கூட வெளியாகி இருக்கின்றன. அவையும் மிக அருகில் வைத்து கொன்றதை உறுதி செய்கின்றன. இது போல் ரமேஸ் சித்திரவதை செய்யப்பட்ட வீடியோ முதல் அவர் கொல்லப்பட்ட பின் எரியூட்டப்படும் பல காட்சிகள் இன்று வெளியாகி இருக்கின்றன. இது போல் பல கொலைக் காட்சிகள் உட்பட பாலியல் ரீதியான நடத்தைகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இதை மேலும் உறுதி செய்கின்றது. இதே போல் மக்களுடன் மக்களாக வெளியேறி, தங்கள் முன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டு, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன் துணிச்சலுடன் சிலர் சாட்சியமளித்தனர். இப்படி அங்கு நடந்தது என்ன என்பதை, மூடிமறைப்பின் பின்னான பல உண்மைகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளமுடிகின்றது. அன்று வெளியான உத்தியோகபூர்வமான அறிக்கைகள், பேட்டிகள் இதை மேலும் உறுதி செய்கின்றன. அன்று அங்குமிங்குமாக வெளியான வைகளையும், தொடரான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியையும் அடிப்படையாகக் கொண்டு இதை நாம் தெரிந்து கொள்வோம்.


ஒரு சதியும் நாடகமும் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது. நம்ப வைத்து கழுத்தறுக்கும் நம்பிக்கை மோசடியில், பலர் ஒரே மாதிரி ஈடுபட்டனர். அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளி விவகார செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்த பின்னர், 15.05.2009 இல் வெளியிட்ட அறிக்கை, இந்த சதி நாடகத்தின் வெளிப்படையான ஒரு பக்கம். அந்த அறிக்கை இலங்கை அரசுடனான அவரது கூட்டுச் சதியை நாசூக்காக, புலிகளை நம்பவைக்கும் மோசடியுடன் வெளியாகியது. அதில் 'இலங்கையில் போர்ப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளது." என்று 15.05.2009 அறிவிக்கின்றார். அத்துடன் அதில் 'போர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகளை கண்டறிய அமெரிக்க குழு இலங்கை சென்றது. எவ்வகையில் உதவி செய்ய முடியும் என்ற அறிக்கையையும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வழியாக வெளியுறவுத்துறைக்கு வழங்கியுள்ளது. அதில் போர் பகுதியில் தமிழர்களுக்கு அமெரிக்க கடற்படை வழியாக உதவுவதற்கான பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளோம்." என்கின்றது. இப்படி வெளியான அந்த அறிக்கை, இந்த படுகொலைகளும் சரணடைவும் நடக்க முன்பு வெளிவருகின்றது. புலியை மீட்பது போன்று, அமெரிக்க கடற்படை தரையிறங்கியதா!? ஆனால் நிச்சயமாக இங்கு புலிகளை நம்பவைக்கும் வண்ணம், கப்பல் உட்பட மூன்றாம் தரப்பு அங்கு நிச்சயமாக பிரசன்னமாகி இருந்துள்ளது. அதே நேரம் புலிக்கு 'பொது மன்னிப்பு இலங்கை வழங்க வேண்டும்" என்ற அமெரிக்காவின் கோரிக்கையும் வெளியாகியது. புலிகளை நம்பவைத்து கழுத்தறுக்கும் பொதுச் சதிடன் கூடிய ஒன்றாக இது இருந்துள்ளது. மக்கள் மீட்பு என்பது, புலிச் சரணடைவுடன், புலியினை அரசியல் ரீதியாக முடிவாக்கும் சதியின் அடிப்படையில் இருந்துள்ளது.


எரிக் சொல்கைம் இந்த நாடகத்தின் மற்றொரு சதிகாரன். 17.05.2009 பல தரம் (வெளிநாட்டு உள்நாட்டு) புலியுடன் தான் தொடர்பில் இருந்ததாக கூறியுள்ளார். இந்த பின்னணியில் பேசப்பட்டது முதல் வழிகாட்டப்பட்டவை அனைத்தும் மூடிமறைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படி மோசடி செய்து கொல்ல உதவிய பின், நடந்ததையிட்டு 'இது மிகவும் கோரமானது"என்கின்றார். இதேபோல் கடைசி நிமிடங்களில் ஐ.நாவைச் சேர்ந்த நம்பியாரும் (வெளிநாட்டு - உள்நாட்டு) தொடர்பில் இருந்துள்ளார். இவையெல்லாம் இவர்கள் கூறியவைகள் தான். இந்தச் சதியின் சில வெளிப்பாடுகள் தான் இவை. மீண்டும் நம்பியார் ஏன் இலங்கை சென்றார்!? எல்லாம் இதற்காகத்தான். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் அடிக்கடி இலங்கை சென்றது இதற்காகத்தான். 17.05.2009 அன்று புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி (பத்மநாதன்) புலிகளின் சரணடைவு பற்றிய தன் பேட்டியில் கூறுகின்றார் "..அதனால் தான் நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்படமுடியாது. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல் மரணத்துக்கு பயமற்று எடுத்துள்ளார்கள். எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை என்றும் இப்போதைய நிலமையில், இந்த யுத்தத்தை சிறிலங்கா இராணுவம் எம்மக்களைக் கொன்று குவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.. மிகத் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம், எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக் கொள்வதை விட வேறு தெரிவு எங்களுக்கு இல்லை இப்படிக் கூறினார். இந்தப் பின்னணியில் தான், இந்த முடிவின் அடிப்படையில்தான் சரணடைவு அன்று நடக்கின்றது. ஆம் ஒட்டு மொத்த புலிகளும் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு மக்களுடன் மக்களாக வெளியேறுகின்றனர், முன்னணிப் பகுதி தாம் மட்டும் பாதுகாப்பாக வெளியேற, தம் குடும்பங்களுடன் சரணடைகின்றது.


முக்கிய புலிகளின் குடும்பங்கள், மக்களுடன் மக்களாக வெளியேறவில்லை. பிரபாகரனின் தாய் தகப்பன் மட்டும், அவர்களின் உடல்நிலை காரணமாக விதிவிலக்கு. ஆக இந்தச் சரணடைவு நேரடியாக அரசிடமல்லாத மூன்றாம் தரப்பின் முன்னிலையில் தான் நடந்தேறியது. சரணடைந்தவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் உத்தரவாதத்தின் அடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட முக்கிய புலிகள் அவர்கள் குடும்பங்கள் ஓட்டுமொத்தமாக சரணடைந்தனர். இவர்கள் சரணடைந்த போது, மக்களிடம் கறந்த கோடிக்கணக்கான பணம் (இலங்கை மற்றும் சர்வதேச கரண்சி) மற்றும் தங்கம் முதல் கொண்டு முக்கிய இயக்க ஆவணங்களுடன், தாம் மட்டும் தப்பிச் செல்லும் பின்னணியில் தம்முடன் எடுத்துச் சென்றனர். இதன் பின் நடந்தது என்ன? தமிழ்நெற்றுக்கு பத்மநாதன் வழங்கிய பேட்டி ஊடாக தெரிந்து கொள்வோம். எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. எங்களின் முடிவை நாம் சர்வதேசத்துக்குக் கூறியிருந்தும், சிறிலங்காவின் தாக்குதல்களை நிறுத்தச் சொல்லிக் கேட்டிருந்தும், கொழும்பானது அதைப் பொருட்படுத்தாது இதுதான் முடிவென்று இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்தது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி சரணடைந்து வெள்ளைக் கொடியைத் தாங்கிச் சென்ற போராளிகளையும் தலைவர்களையும் சர்வதேச மரபைப் பொருட்படுத்தாது இரக்கமில்லாமல் கொன்றுள்ளது. சர்வதேசச் சமூகமும் சிறிலங்காவுக்கு எதிராக ஒரு திடமான நிலையை எடுத்து சிறிலங்காவை ஒரு முறையான முடிவை எடுக்கச் சொல்லி ஊக்குவிக்கவில்லை. நடந்த நிகழ்வுகளையிட்டு நாங்கள் மிகவும் துக்கத்திலுள்ளோம் என்கின்றார். இங்கு சர்வதேசச் சமூகம் தம்மை ஏமாற்றியதையும், படுகொலைக்கு உதவியதையும் தெளிவாக்குகின்றார். மேலும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம் தரப்பு ஒன்றினால் இந்த அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதன்பின்னர், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் முன்னேறி வந்த சிறிலங்கா படையினரிடம் அவர்கள் சரணடைந்தனர் அன்று நடந்த நிகழ்வைப் பற்றி புலிகள் கூறினர்.


இந்தப் பின்னணியில் தான் அரசு தகவல் முன்னுக்கு பின் முரணாக வெளி வருகின்றது. செய்தி பல முறை திருத்தப்படுகின்றது. கைதைத் தொடர்ந்து எடுத்த முடிவுகள், மூன்றாம் தரப்பின் வேண்டுகோளுக்கு அமைய மீளக் கையாளப்படுகின்றது. பொதுவாக செய்தி வழங்கும் இராணுவ தகவல்கள், பின் மறுக்கப்பட்டு மாற்றப்படுகின்து. அரசின் இந்தக் குழப்பம், இந்த படுகொலைச் சதியை மேலும் அம்பலப்படுத்துகின்றது. இந்த சரணடைவு பற்றி இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பாலித கொஹண பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். அது பற்றி அவர் கூறும் போது புலிகள் சரணடைய விரும்புவதாக வடபகுதியில் பணியாற்றிய சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிலிருந்தும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை தனக்குப் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக பாலித கொஹண பிரித்தானிய ஊடகமொன்றிடம் கூறினார். இந்த சரணடைவின் பின்னான தனது வழிகாட்டலை இதற்கு ஒரே வழிதான் உண்டு. இராணுவ முறைப்படி கையில் வெள்ளைக் கொடியுடன் பயமுறுத்தாத வகையில் மெதுவாக வந்து சரணடைய வேண்டும் என நான் கூறியிருந்தேன் என்று வெளிவிவகார அமைச்சர் பாலித கொஹண தெரிவித்தார். அவ்வாறு அவர்கள் சரணடைந்தால் உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என நோர்வே அமைச்சர் இறுதியாகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் பாலித கொஹண அந்த ஊடகத்திடம் காண்பித்துள்ளார். இந்தப் பின்னணியில் சரணடைவு நடந்தது.


16-17.05.2009 அன்று ஜனாதிபதி சர்வதேச நாடொன்றில் வைத்து ஆற்றிய உரையில், நாட்டில் பயங்கரவாத பிரச்சனை முடிந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அத்துடன் தன் பயணத்தை திடீரென நிறுத்தி நாடு திரும்பினார். 17.05.2009 அன்று எல்லாக் கொலைகாரர்களும் புடை சூழ, மகிழ்ச்சியாக மண்ணை முத்தமிட்டார். இந்த நிகழ்வு நடக்கும் போது, புலித்தலைவர்கள் கதை (சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர்.) முடிந்துவிட்டது. அந்த பின்னணியில் தான் இந்த ஆர்ப்பாட்டம், மகிழ்ச்சி என அனைத்தும்; ஒருங்கே நடந்தேறியது. இப்படி புலித் தலைமையின் கதை முடிந்ததை அமைச்சர்களாக உள்ள டக்கிளஸ் மற்றும் கருணா சார்பு இணையங்கள் செய்தியாக கொண்டு வருகின்றன. இதில் சரணடைவு பற்றிய குறிப்புகளும் உள்ளது.


17.05.2009 மக்கள் முழுமையாக வெளியேறியதாக அரசு அறிவித்தது. புலிகள் தம் சரணடைவுக்கு நல்லெண்ண அறிகுறியாக மக்களை விடுவித்தனர். இந்த நிகழ்வுக்கு முன் மக்கள் உயிர் இழப்பை தவிர்க்க, ஆயுதத்தை கைவிட்டு விட்டதான பத்மநாதனின் கூற்று வெளிவருகின்றது. இவை அனைத்தும் மூன்றாந்தரப்பின் சதிக்கு உட்பட்ட ஒன்றுதான். அடுத்த சம்பவத்தைப் பாருங்கள். இராணுவத்தை சேர்ந்த ஏழு கைதிகளை, புலியிடமிருந்து தாம் மீட்டதாக இதே நாள் அரசு அறிவிக்கின்றது. உண்மையில் புலிகள் சரணைடைய முன்னர் அவர்கள் நல்லெண்ணமாக விடுவித்த கைதிகளைத்தான், தாங்கள் மீட்டதாக அரசு கதை விடுகின்றது. இப்படி புலிகள் முன்னைய நிலைக்கு மாறாக எதிர்மறையில் பிறிதான ஒரு நகர்வு நடக்கின்றது. இந்த அடிப்படையில் அரசின் முன்னுக்குப் பின் முரணாக செய்திகள், இவற்றை மேலும் உறுதி செய்கின்றது. இந்தக் கூட்டுச்சதியை அவர்களின் ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் அம்பலமாக்குகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது 'இன்று காலை" (19.05.2009) தான் என்றும், அதை கருணா அன்றைய பிபிசி தமிழ் சேவையில் பலதரம் உறுதி செய்கின்றார். 18ம் திகதியே பிரபாகரன் கொல்லப்பட்டதாக அரசதரப்பில் இருந்து வெளியிட்ட செய்தி, பின் 19ம் திகதி காலையே கொல்லப்பட்டதென்ற செய்தியும் சரி, தொடர்ந்து டிஎன்ஏ மூலம் உறுதி செய்துள்ளதாக கூறுவதன் மூலம், இதன் முழுச் சதியும் மொத்தத்தில் தொடர்ந்து அம்பலமாகியது. ஏமாற்றி சரணடைய வைத்தவர்கள் மேல், படுகொலை, அவர்களின் உடலங்கள் என்று நாடகமே அரங்கேறுகின்றது. இப்படி சரணடைந்தவர்கள் மீதான விசாரணை என்பது, இலங்கை மற்றும் இந்திய அரசு நடத்திய அனைத்துக் குற்றங்கள் மேலான விசாரணையாக மாறும். அத்துடன் இதுவே அரசியல் போராட்டமாக மாறும். அதைத் தவிர்க்க, இந்திய, இலங்கை அரசுகள் சேர்ந்து இந்த படு கொலை செய்து அழிப்பதை தெரிவு செய்தன. இதனால் எவரும் உயிருடன் பிடிபடவில்லை என்றால், எவரையும் உயிருடன் விட்டுவைக்க அவர்கள் தயாராகவில்லை. விசித்திரமான உண்மைகள். தமக்கு தேவையான தகவல் சார்ந்த விசாரணையின் பின், தொடர்ச்சியாக படுகொலைகள் அரங்கேறுகின்றது. இந்த இடத்தில் சூசையின் பேட்டியில் (17.05.2009) மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் அனைத்து மக்களையும் ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் நேரடியாக செல்வராஜா பத்மநாதனூடாகத் தொடர்பு கொண்டு வெளியேற்றுமாறு கேட்டிருந்தோம். என்கின்றார். இப்படி சரணடைவுக்கு பின்னான நிகழ்வைத்தான் பத்மநாதன் வஞ்சகமான துரோகத்தமான முறையில் கொல்லப்பட்டதாக கூறுகின்றார். உண்மையில் இது நடந்தது. புலித்தலைவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதியின் பெயரில், சரணடைய வைத்தபின் அவர்கள் திட்டமிட்டவகையில் படுகொலை செய்யப்பட்டார்கள். பத்மநாதன் கூறுகின்றார்.

வழுதி கூறுகின்றார் வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர். சரி அவர்கள் யார்? எப்படி? என்ன முயற்சி, யாருடன்? இங்குதான் சதி, சூழ்ச்சி என எல்லாம் ஒருங்கே அடங்கிக்கிடக்கின்றது.....


புலிகளுடன் இறுதி நேர தொடர்பில் இருந்த புலிகளின் முக்கிய புள்ளியான வழுதி தம்மையும், இந்த சரணடைவின் பின் தாங்களும் செயல்பட்டதை மறுத்து ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ஆனால், அது வெளியிலிருந்து யாராலும் கொடுக்கப்பட்டதல்ல என்கின்றார். இந்த சரணடைவு அவர்களின் முடிவு என்று கூறுகின்ற பின்னணியில், இதுவொரு அப்பட்டமான பொய். வழுதியின் அதே கட்டுரையில் இந்த சதியின் பின்னணி பற்றி போரை இடைநிறுத்தி, ஆயுதங்களை மௌனிக்கச் செய்வதற்கு மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது. என்கின்றார். அப்படியாயின் எதன் அடிப்படையில்? எந்த நம்பிக்கையின் அடிப்படையில்? அதை உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்? இதில் உங்கள் பங்கு என்ன? என்ற கேள்வி சதியை மேலும் தெளிவாக்கின்றது. புலிக்கு நடந்த கதியை அம்பலமாக்குகின்றது. தாங்களும் சேர்ந்து நடத்திய அந்தச் சதியை பற்றி அப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும் படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் என்னிடம் சொன்னார். வழுதி கூறுகின்றார், வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர். சரி அவர்கள் யார்.., எப்படி.., என்ன முயற்சி.., யாருடன்? இங்குதான் சதி, சூழ்ச்சி என எல்லாம் ஒருங்கே அடங்கிக்கிடக்கின்றது என்கின்றார்.


சரி அந்த சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி என்றால், அவர்கள் யார்? சரி உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம் என்றது பொய்யல்ல, என்றால் சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி என்பது எதைக் குறிக்கின்றது. எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன் என்றால், யாருடன் சேர்ந்து இந்த சதி செய்யப்பட்டது? புலிகளை சரணடைய வைக்க சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கினார்கள். இந்தப் பின்னணியில் தான் ஆயுதத்தை கீழே போட்ட புலிகள் பாரிய பணக்கட்டுகளையும் தூக்கிக் கொண்டு அப்பிரதேசத்தை விட்டு வெறியேறும் வண்ணம் சரணடைந்தனர். வழுதி கூறுகின்றார் வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர். சரி அவர்கள் யார்? எப்படி? என்ன முயற்சி, யாருடன்? இங்குதான் சதி, சூழ்ச்சி என எல்லாம் ஒருங்கே அடங்கிக்கிடக்கின்றது. மேலும் வழுதி கூறுகின்றார் இதே தகவல் பத்மநாதன் அண்ணனுக்கு சூசை அண்ணனால் சொல்லப்பட, அவரும் உருத்திரா அண்ணனும் தமது பங்கு நடவடிக்கைகளை எடுத்தனர். சரி என்ன நடவடிக்கை? யாருடன் சேர்ந்து? இப்படித்தான் தமது பங்கு, எனது பங்கு என்பதன் மூலம் தான், அவர்கள் இறுதியில் சரணடைய வைக்கப்பட்;ட நிலையில், அவர்கள் தாமாக முன்வந்து சரணடைந்தனர். இதன் பின் அவர்கள் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இதுதான் நடந்த உண்மை. இதை மூடிமறைக்கின்ற அரசியல் பின்னணியில், அரசு மட்டுமல்ல அரசுக்கு வெளியில் உள்ள போர்க்குற்றவாளிகளும் உள்ளனர். இதுதான் இதன் பின்னுள்ள மற்றொரு உண்மையாகும்.


- பி.இரயாகரன்.

முன்னணி இதழ்-5

Last Updated on Friday, 18 May 2012 10:44