Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தங்கள் குறுந்தேசிய அரசியலைக் காப்பாற்ற, புலி அரசியலுக்கு அரசியல் விளக்கங்கள

  • PDF

பிரிவினையை முன்னிறுத்தும் குறுந் தமிழ்தேசியத்தை நிராகரிக்காத, சுயநிர்ணய அடிப்படையில் ஜக்கியத்துக்கான தேசியத்தை முன்வைக்காத, அரசியல் பார்வைகள் அனைத்தும், ரகுமான் ஜானின் கூற்றுப்படி அயோக்கியத்தனமானது தான். "தம்மை முற்போக்காளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டு இதே தவறை செய்யும் போது அது அவர்களது அறியாமையைக் காட்டவில்லை. மாறாக அவர்களது அயோக்கியத்தனத்தை மாத்திரமே கோடிட்டுக் காட்டுகிறது." இதைக் கூறிய மே18 ரகுமான் கூற்று, அவருக்கே விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. பிரிவினையை முன்னிறுத்தும் குறுந்தேசியத்தை நிராகரிக்காத, அதன் பின் நின்று செய்யும் ஆய்வுகள், விளக்கங்கள், தர்க்கங்கள்;, விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் அனைத்தும் போலியானது புரட்டுத்தனமானது. இங்கு குறுந்தேசிய "பிரிவினை" கூட இதே சமூகத்தின் பின்னணியில் வால்பிடித்து முன்வைத்தவைதான்;. ஏன் ரகுமான் ஜான் குறுக்கி முன்வைக்கும் "தன்னியல்புவாத" போக்கையும், அரசியல் விளக்கத்தையும் தாண்டியதல்ல "பிரிவினை". ஆக இங்கு அரசியல் அயோக்கியர்கள், தங்களைத் தாங்களே இங்கு அம்பலப்படுத்திக் கொள்கின்றனர்.

"சமூகமானது அதன் அத்தனை சிக்கலான பிரச்சனைகளுடனும் கோட்பாட்டு மட்டத்தில் புரிந்து கொள்ளப்படாமல், வெறுமனே அனுபவவாத மட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால் விரிவான கோட்பாட்டு மட்டத்திலான ஆய்வுகள், எதிரிகள் – நண்பர்களை சரிவர வரையறுத்துக் கொள்வது: அரசியல் திட்டம், மூலோபாயம் – தந்திரோபாயம் போன்றவற்றை வரைந்து கொள்வது: அமைப்பு விதிகள்: இராணுவ மூலோபாயம் – தந்திரோபாயம் பற்றிய அறிதல் எதுவுமின்றி போராட்டம் தொடங்கிவிடுகிறது." என்ற "தன்னியல்பு" குறித்த தர்க்கம், இவர்களின் பிரிவினைவாத கோட்பாட்டுக்கும், இவர்களின் தேசியவாதத்துக்கும் தொடர்ந்து பொருந்துவதை மறுத்து விடுகின்றனர். பிரிவினையை தொடர்ந்து முன்னிறுத்தும் தங்கள் அரசியல் போக்கில், கடந்த போராட்டத்தை அணுகி குறுக்கிக் காட்ட முற்படுகின்றனர்.

பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட குறுந்தேசிய அரசியலையும், புலிகளின் அரசியலையும் நிராகரிப்பதற்குப் பதில், புலிகளின் "தவறுகள்" குறித்தும், புலி "ஜனநாயக மறுப்பு" குறித்தும், புலி "தன்னியல்புவாதம்" … குறித்தும் கருத்துரைக்கின்ற அரசியல் அயோக்கிதனத்தை நாம் இங்கு காண்கின்றோம்;. தனிநபரான பிரபாகரன் தான் அனைத்துக்கும் பொறுப்பு என்று வர்க்க அரசியலுக்கு வெளியில் வைத்து எப்படி பொறுப்புக் கூற முடியாதோ, அதே போல்தான் இவை அனைத்தும். "தன்னியல்பு மற்றும் பிரக்ஞை" என்று குறுக்கிக் காட்டுவதும் கூறுவதும், அனைத்தும் பிரபாகரன் என்று கூறுகின்ற அதே சட்டியில் இருந்து கிள்ளி எடுப்பதுதான்.

ஐயர் தன் தொடரில் (நூல் இன்னும் படிக்கவில்லை - இதனால் விமர்சனம் எழுதவில்லை) தான் நம்பிய அரசியலைச் சார்ந்து நின்று அதை முன்வைக்கவில்லை. அருள்எழிலன் போன்ற புலித் தமிழ்தேசியவாதிகள், தம் அரசியல் நோக்கில் நின்று இதைத் தொகுத்த பின்னணியில், இந்த நூல் அரசியல் ரீதியாக புலியை பாதுகாக்கும் அரசியல் எல்லைக்குள் தொகுக்கப்பட்டு குறுக்கப்பட்டு இருக்கின்றது. பிரிவினையை முன்னிறுத்திய குறுந் தமிழ்தேசியம் என்ற வரலாற்றுக் குப்பைத் தொட்டியை, புனிதமாக்கும் வண்ணம் நூல் குறுக்கி விடுகின்றது. இந்த பின்னணியில் பிரிவினை முன்னிறுத்தி தமிழ்தேசியத்தை மீளப் புனிதப்படுத்தி காட்டமுனையும் இனியொருவும் (அருள் எழிலன் இனியொரு ஆசிரியர் குழுவில் இருந்தவர்), மே18 ரகுமான் ஜானும் இந்த நூலை தமது தேசிய அரசியலுக்குப் பொருத்தமாகக் காண்கின்றனர், காட்ட முற்படுகின்றனர்.

ரகுமான் ஜான் மிகத் தெளிவாக இதைக் கூறிச் செய்கின்றார். "இதிலுள்ள பல்வேறு விடயங்களும், வெறும் தகவல்களாக, உணர்வுகளாக முறையாக கோட்பாட்டாக்கம் செய்யப்படாததாகவே இருக்கின்றது. ஆதலால் இந்தப் படைப்பின் முழுமையான உள்ளாற்றலும் (சாத்தியமான) நாம் கைவரப்பெற வேண்டுமாயின், இந்த நூலானது சரியான கோட்பாட்டு சாதனங்களின் உதவியுடன் அணுகப்பட, பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியத்தில் உள்ளது. அந்தப் பாத்திரத்தை நான் எனது உரையில் மூலமாக ஆற்ற முனைகிறேன்." என்கின்றார். இதன் மூலம் ஜயரை அரசியல் மயப்படுத்தி திரித்து விடுகின்றார்.

ஜயருக்கு என்று ஒரு நேர்மையான அரசியல் இருந்து இருக்கின்றது. "கோட்பாட்டாக்கம் செய்யப்படாததாக" அருள் எழிலனுடன் சேர்ந்து இனியொரு மறுத்த நூலாக்கம், இன்று ரகுமான் ஜான் "தன்னியல்பு மற்றும் பிரக்ஞை" அரசியலாக காட்டி திரிக்கின்றார். இதன் மூலம் புலியை "தன்னியல்பு" குறைபாடு கொண்ட இயக்கமாக காட்டி நியாயப்படுத்தி விட முனைகின்றார்.

புலிப் பாசிசத்தை மறுப்பதும், அதன் வர்க்க அரசியலில் இருந்து அதை நிராகரித்து, "தன்னியல்பு" குறைபாடு கொண்ட ஒன்றாகக் காட்டும் அயோக்கித்தனத்தை செய்கின்றார். இந்த அரசியல் பின்னணியில் தான் "யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க சிந்தாந்தத்தின்" விளைவுதான் புலிகள் என்று குறுக்கிக் காட்டுவதும், அதன் தவறாக இதன் குணாம்சமாக புலியை நியாயப்படுத்துவது, இதன் பின்னணியில் தான். புலியின் நடத்தையை தன்னியல்பான செயல்பாடாக இதை இட்டுக் காட்டுவதன் மூலம், முழு மக்களையும் ஒடுக்கிய வலதுசாரிய தேசிய பாசிச அரசியலின் உள்ளடக்கத்தையும், இதன் வளர்ச்சிப் போக்கையும் மூடிமறைக்க முனைகின்றனர்.

இதைச் சமூகம் மீது குற்றஞ்சாட்டும் அயோக்கியத்தனத்தை செய்கின்றார். "விரிவான ஜனநாயக கருத்துக்களோ, சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஒரு சமூகமா" க்கத்தின் விளைவாக அதன் குறைபாடாக புலியை இட்டுக்கட்டி காட்ட முனைகின்றார். இவை உள்ள சமூகத்தில் இது நிகழாது என்ற எடுகோளை அடிப்படையாகக் கொண்டு பினாத்துகின்றார். இவை உள்ள சமூகத்தில் நிகழும். வர்க்க அரசியல்தான், இதைத் தீர்மானிக்கின்றது.

இங்கு மிகத் திட்டமிட்ட "யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க சிந்தாந்தத்தின்" பின்னால் இருக்கும் சுரண்டும் வர்க்க சித்தாந்தத்தை மறுக்கின்றார். இங்கு இதை மூடிமறைப்பதன் மூலம், வர்க்க ரீதியாக தேசியம் சார்ந்த பாசிசத்தின் வளர்ச்சியை அரசியல் நீக்கம் செய்ய முற்படுகின்றனர். பாசிசத்தின் அரசியல் சாரம் சுரண்டும் வர்க்கத்தின் ஜனநாயக மறுப்பு வடிவமாகும். சுரண்டும் வர்க்கம் ஜனநாயகக் கூறுகளை தன்னில் இருந்து நீக்கும் போது, அது பாசிசமாகின்றது. "விரிவான ஜனநாயக கருத்துக்களோ, சமூக நடைமுறைகளோ வழக்கில் இல்லாத ஒரு சமூக"த்தில் கூட நிகழும்.

"யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்க சிந்தாந்தத" மாகக் காட்டப்படும் போது, அதற்கு குறுகிய அரசியல் அடிப்படையை வழங்கி, தேசியத்தை வர்க்கமற்ற பிரிவினைவாதமாகவும் காட்டி, அதன் பாசிசமயமாக்கலை இல்லாதாக்கிவிட முனைதலாகும்;. இதை மூடிமறைக்க தன்னியல்பு பற்றிய திரிபு புகுத்தப்படுகின்றது.

தன்னியல்பு என்பது எங்கும் உள்ளதுதான். சமூகத்தில் தன்னியல்பில் இருந்து தொகுத்தல் தான் தத்துவம், கோட்பாடுகள், நடைமுறைகள் என அனைத்தும். இதன் மூலம் தான் தன்னியல்பைக் கடந்து, திட்டமிட்ட வகையில் சமூகம் முன்னேறுதலாகும்;. இது எவருக்கும், எந்த அரசியலுக்கும் விதிவிலக்கு கிடையாது. புலிக்கு எதிரான போராட்டம் முதல் அனைத்து அராஜகங்களுக்கும் எதிரான போராட்டங்களும், தன்னியல்பில் இருந்து தான் உருவானது. ஒரே இடத்தில் இருந்து மக்களை சார்ந்து கோட்பாடுகள், நடைமுறைகள் கூட உருவானது.

இதே பிரபாகரன் வரிசையில் தான் சந்ததியார், விமலேஸ்வரன், செல்வி ரமணி, கேசவன், விசு, ரஜனி, மனோமாஸ்டர்… போன்றவர்கள் தோன்றினார்கள். இங்கு புலியை நியாயப்படுத்திக் காட்ட, இந்த அளவுகோல் போதுமானதல்ல. புலிகளில் இருந்து மற்றவர்களை வேறுபடுத்தியது அவர்கள் கொண்டிருந்த வர்க்கரீதியான கண்ணோட்டம் தான். இங்கு தன்னியல்பு தான் போராட்டத்தை தவறாக வழிநடத்தியது என்பது தவறு. வர்க்க அரசியல்தான் அதைச் செய்தது.

புலிகள் கொண்டிருந்த வர்க்க அரசியல் தான், சமூகத்தின் வர்க்கப் போக்கு சார்ந்து இயங்கியது. அதை அது பிரதிநிதித்துவப்படுத்தியதால், அந்த வர்க்கத்தின் தன்னியல்பு கூறுகள் அனைத்தும் அந்த வர்க்கத்தில் அரசியலாக மட்டுமின்றி ஸ்தாபன ரீதியாக இயல்பான வடிவம் பெற்றது. இதனால் அது வர்க்கத்தில் இருந்து பிரிந்து, தனித்து தன்னியல்;பாக இருப்பதில்லை. இதனால் அது பாசிசத்தன்மை பெற்று வெளிப்படுகின்றது.

இங்கு "தன்னியல்புவாதம்" தான் காரணம் என்ற அரசியல் மோசடியின் பின்னணியில் புலியை கட்டிப் பாதுகாக்க முனைகின்றனர். தன்னியல்புவாதமல்லாத கருத்தும் திட்டமும் புலிகளிடம் இருந்திருந்தால், புலிகள் சரியாகப் போராடி இருப்பார்கள் என்று கூறுகின்ற அயோக்கியத்தனத்தை நாம் இங்கு மீண்டும் பார்க்கின்றோம். "புலிகளிடம் தெளிவான, திட்டவட்டமான அரசியல் கருத்துக்கள் இருக்கவில்லை." என்று மே18 ரகுமான் ஜான் கூறுகின்ற பின்னணியில், அது இருந்து இருந்தால், புலிகளுக்கு இந்த நிலை இருக்காது என்ற கூற முற்பட்டு இருக்கின்றார்.

வேடிக்கை என்னவென்றால், புலி பாசிச இயக்கமல்ல என்று கூறிக்கொண்டு, புலிக்கு ஆதரவாக புலி உளவாளிகளுடன் கூடி தீப்பொறியை தமிழீழக் கட்சியாக்கியவர் இவர். இதன் போது இந்தத் தன்னியல்புவாதம் பற்றி "உயிர்ப்பில்" எழுதியபடி, தெளிவான திட்டம் மற்றும் அரசியல் கருத்துக்கள் முன்வைத்த இவர்களிடம், புலியையும் புலி அரசியலையும் கடந்து எதுவும் இருக்கவில்லை. வெளியில் இருந்து புலிப் பாசிசத்துக்கு எதிராகப் போராடிய சக்திகளை, அரசியல் ரீதியாக புலித் தேசிய பாசிச அரசியலுக்குள் சிதைத்ததைத்தான், இவர்களி;ன் "தெளிவான திட்டவட்டமான அரசியல் கருத்துக்கள்" செய்தன. இங்கு "தன்னியல்பு"களை புலிகள் களைந்து இருந்;தால் புலிகள் சரியாக இருந்திருப்பார்கள் என்பது, அபத்தமான கோட்பாடாகும். இந்த வகையில் அவரின் "அயோக்கியத்தனம்" என்ற கூற்று அவருக்கே பொருந்துகின்றது. "தம்மை முற்போக்காளர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டு இதே தவறை செய்யும் போது அது அவர்களது அறியாமையை காட்டவில்லை. மாறாக அவர்களது அயோக்கியத்தனத்தை மாத்திரமே கோடிட்டுக் காட்டுகிறது." ஆக மார்க்சியத்தின் பெயரிலும், தன்னைப் புத்திஜீவியாக கூறிக் கொண்டு கூறும் போது, அயோக்கித்தனத்துடன் கூடிய அரசியல் இங்கு கொப்பளிக்கின்றது.

"புலிகளது அரசியல் வறுமை பற்றி விமர்சிப்பவர்கள் எவருமே மாற்றாக ஒரு விரிவான திட்டத்தை வகுத்து முன்வைத்து, ஒரு பலமான அமைப்பை ஒழுங்கமைக்க முடியாதவர்களாகவே உள்ளோம் என்பது ஒரு வேதனையான உடன்நிகழ்வாகும்." என்று கூறி புலியின் இருப்பை தவிர்க்க முடியாத ஒன்றாகக் காட்டி பாதுகாக்க முனைகின்றார். இதன் மூலம் புலியை விமர்சிப்பதை கேள்விக்குள்ளாக்கி, விமர்சிப்பதை நிறுத்தமுனைகின்றார். தமிழீழக்கட்சி புலிகளை விட்டால் வேறு யார் இருக்கின்றனர் என்று கூறி புலியை நியாயப்படுத்திய அதே உள்ளடக்கம், அதே அரசியல் மீண்டும் அதே அயோக்கியத்தனத்துடன். .

 

பி.இரயாகரன்

03.03.2012

Last Updated on Saturday, 03 March 2012 13:31