Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்.

 

அரசாங்கம் கொண்டுவந்துள்ள மிக மோசமான எரிபொருள் விலை அதிகாரிப்பானது நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களது வயிறுகளில் ஓங்கி அடித்த செயலாகும். ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமைகளை மறுத்து ஃபாசிசப் பாதையில் பயணித்து வரும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் தோல்வியே எரிபொருள் விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே விலை உயர்வுகளால் வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாது தத்தளித்து வரும் உழைக்கும் மக்களான தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் மற்றும் அரசாங்க தனியார் துறை ஊழியர்கள் மேலும் அதிகரித்த வாழ்க்கை நெருக்கடிகளுக்குள் அமிழ்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அனைத்து உழைக்கும் மக்களையும் வாட்டி வதைக்கும் எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்படுத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கையை எமது புதிய-ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளை இவ்விலை உயர்வுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என்பதையும், அவ்வாறான மக்கள் போராட்டங்களை எமது கட்சி ஆதரித்து நிற்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்கள் மீதான சுமைகள் தாங்க முடியாதவாறு ஏற்றப்பட்டன. குறிப்பாக மூன்று வீத நாணயப் பெறுமதிக் குறைப்புப் பொருட்களின் மீதான விலைகளை அதிகரிக்கச் செய்து கொண்டன. சம்பள உயர்வு மறுக்கப்பட்டு விலை உயர்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகளை முறையே ரூபா 12, ரூபா 31, ரூபா 35 என்பனவற்றால் உயர்த்தியுள்ளமை சகல நிலைகளிலும் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள நேரடித் தாக்குதலாகும். தனியார் போக்குவரத்துத் துறையினர் நடாத்திய ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு காரணமாக இருபது வீத கட்டண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அவதிப்படும் மக்களுக்கு இக்கட்டண அதிகரிப்புப் பெரும் சுமையாகியுள்ளது. அவ்வாறு டீசல் விலை உயர்வானது சகல பொருட்களுக்கும் விலை அதிகரிப்பை இயல்பாகவே கொண்டு வந்துவிட்டுள்ளது. அதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விலைகள் மேலும் உயர்த்தப்படும். அதேபோன்று மண்ணெண்ணைக்கான விலை அதிகரிப்பு மிகக் குறைந்த வாழ்க்கைத் தரத்தில் வாழ்ந்து வரும் கிராமப்புற விவசாயிகள் மீனவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரைக் கடுமையாகப் பாதித்துள்ளன. இதுவரை காலமும் பேரினவாதத்தினால் மறைக்கப்பட்டு வந்த பொருளாதார நெருக்கடி இப்போது முழு வெளிச்சத்திற்கு வந்துள்ளதுடன் ஆளும் வர்க்கத்தின் சுயரூபத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது. ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும். இதனைத் தவிர வேறு வழி இல்லை என்பதை எமது கட்சி சுட்டிக்காட்டுவதுடன், அத்தகைய வெகுஜனப் போராட்டங்களை ஆதரித்து அவற்றில் கலந்து கொள்ளவும் செய்கிறது.

 

ஊடகங்களுக்கான அறிக்கை
14.02.2012
புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி