Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் “பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம்! தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்!”

“பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம்! தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்!”

  • PDF

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் ஃபார்மாடெக் எனும் ஊசி மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், தொழில் பழகுனர், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி நியாயமான ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம்.

நிர்வாகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியால் இதுநாள்வரை பல்வேறு சங்கங்களாகப் பிரிந்திருந்த தொழிலாளர்கள், அண்மையில் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் ஓரணியில் ஒரே சங்கமாகத் திரண்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இதைக் கண்டு அரண்டுபோன நிர்வாகம் ஆலை நட்டத்தில் இயங்குவதால் மூடப்போவதாக பீதியூட்டிக் கொண்டே, ஏற்கெனவே தொழிலாளர்களுக்குக் கொடுத்துவந்த தேநீரை நிறுத்தியது. தாகத்துக்குத் தண்ணீர் குடிக்கவோ, கழிவறை சென்று வரவோ தடைவிதித்துக் கெடுபிடி செய்தது. மேலும், சங்கத்தின் முன்னணியாளர்களான 36 தொழிலாளிகளுக்கு எச்சரிக்கைக் கடிதம், 8 தொழிலாளிக்கு விசாரணை அறிவிப்பு, சங்கச் செயலர் தோழர் சீதாராமன் தற்காலிகப் பணிநீக்கம்  எனப் பழிவாங்கியுள்ளது.

பு.ஜ.தொ.மு. என்பது நக்சல்பாரி தீவிரவாத இயக்கம் என்று பீதியூட்டி நிர்வாகத்தின் துணை பொது மேலாளரான ஏகாம்பரம் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு,  இத்தீவிரவாத இயக்கத்தில் இணைந்தால் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பும் வெளியிட்டு எச்சரித்துள்ளார்.

இப்பழிவாங்கலையும் அடக்குமுறைகளையும் எதிர்த்தும் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் 9.12.2011 அன்று ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் பு.ஜ.தொ.மு.வில் இணைந்துள்ள குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் "பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம்! தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்!' என்ற முழக்கத்துடன் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் தோழர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் சீதாராமன், பெண் தொழிலாளி தோழர் கலா ஆகியோர் சட்டவிரோததொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் இறங்கியுள்ள குளோபல் ஃபார்மாடெக் நிர்வாகத்தின் துணைப் பொது மேலாளரான பயங்கரவாதி ஏகாம்பரத்தைக் கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டிய அவசியத்தை விளக்கிக் கண்டன உரையாற்றினர். வர்க்க உணர்வோடும் சங்க ஒற்றுமையோடும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஓசூர் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சுவதாக அமைந்தது.

 

பு.ஜ.செய்தியாளர், ஓசூர்.