Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பரமக்குடி துப்பாக்கிச் சூடு: பார்ப்பன ஜெயா அரசின் வன்கொடுமை வெறியாட்டம்!

பரமக்குடி துப்பாக்கிச் சூடு: பார்ப்பன ஜெயா அரசின் வன்கொடுமை வெறியாட்டம்!

  • PDF

உழைக்கும் மக்களின் இரத்தத்தைக் குடிக்கும், ஆதிக்க சாதிவெறிபிடித்த, அதிகாரத் திமிரெடுத்த  காட்டேரிதான் தமிழக போலீசு என்பதை பரமக்குடியில் நடந்துள்ள கொலைவெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதுடன், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள ஓர் அபாய எச்சரிக்கை. தமிழகத்தில் போலீசு ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது என்பதற்கான அறிவிப்புதான் பரமக்குடியில் நடந்துள்ள கொலைவெறியாட்டம்.

 

 

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் தடியடித் தாக்குதலிலும் பல்லவராயனேந்தல் கணேசன், வீரம்பல் பன்னீர், மஞ்சூர் ஜெயபால், சடையனரி முத்துக்குமார், கீழக்கொடுமலூர் தீர்ப்புக்கனி, காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகிய 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பரமக்குடியைத் தொடர்ந்து இளையான் குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆனந்த் என்ற மாணவன் குண்டடிபட்டுள்ளார். மதுரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜெயபிரகாஷ், பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்

றும் கொலைவெறித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். செப்.11 அன்று 2,000 பேர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கிராமங்கள் தோறும் தேடுதல் வேட்டையை போலீசு நடத்தி வருவதால், வயற்காட்டில் ஆண்கள் ஒளிந்து கிடக்க வேண்டிய பயபீதியான சூழலைத் தென்மாவட்டங்களில்ஜெயா அரசு உருவாக்கியுள்ளது.

செப்டம்பர் 11ஆம் தேதி, தாழ்த்தப்பட்டோரால் போற்றப்படும் தியாகி இமானுவேல் சேகரனின் 54ஆவது நினைவு நாளாகும். அந்நாளில் தங்களது தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை இராமநாதபுரம் மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பிருந்தே தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரு பிரிவினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தேவர் சாதி ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு நிகழ்ச்சியாக, குறிப்பாக தேவர் சாதிவெறியர்களால் குலதெய்வமாகக் கொண்டாடப்படும் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு நாளைப் போலவே இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியைத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தி வருகின்றனர்.

தேவர் குருபூசைக்கு இணையாக தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூசையை நடத்தவிடக்கூடாது என்று  திட்டமிட்டு, இவ்வாண்டு அந்நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பது, எதிர்காலங்களில் பயபீதியூட்டி முற்றாகத் தடுத்து நிறுத்துவது என்ற நோக்கத்துடன் ஜெயலலிதா அரசின் ஆதரவுடன்  ஆதிக்க சாதி வெறிபிடித்த போலீசு இக்கொலைவெறியாட்டத்தை நடத்தியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு  அக்டோபர் 30ஆம் தேதியன்று நடந்த தேவர் குருபூசையின் போது முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரான நயினார் நாகேந்திரன்,  அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேவர் ஜெயந்திநாள் அரசாங்க நிகழ்ச்சியாக நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். 2010ஆம் ஆண்டு அக்டோபரில் மைய அரசு முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு, அவரைச் சுதந்திரப் போராட்ட வீரராகவும், அரசியல் தலைவராகவும் சித்த

ரித்தது. இந்தப் பின்னணியில், கடந்த மே 2011 இல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றதும் பல்வேறு தலித் தலைவர்கள் அவரைச் சந்தித்து, இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அந்தக் கோரிக்கையை அரசு ஏற்கவோ செயல்படுத்தவோ முன்வரவில்லை.

இவ்வாண்டு இமானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி, பரமக்குடி பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு அரசு எஸ்.சி. - எஸ்.டி. போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனின் குருபூசைக்கான தட்டியில் "தெய்வத்திருமகன் இமானுவேல் சேகரன்' என்று குறிப்பிட்டுள்ளதை தேவர் சாதி வெறியர்கள் ஆட்சேபித்திருக்கின்றனர். தெய்வத்திருமகன் என்ற அடைமொழி தங்கள் சாதித் தலைவனுக்கு மட்டுமே உரியது என்றும் வேறு எவரும் இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆட்சேபித்துத் தேவர்சாதி வெறியர்கள் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். புகார் கொடுத்த சாதிவெறியர்களை அப்படியே தீண்டாமைக் குற்ற வழக்கில் உள்ளே தள்ளியிருக்க வேண்டும்.

ஆனால், காக்கி உடை அணிந்த காவலர்கள் வேடத்தில் இருக்கும் ஆதிக்க சாதி வெறியர்கள், தேவர் சாதி வெறியர்களை அழைத்துப் போக்குவரத்து அதிகாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, "பேனரை வைத்துக்கொள்ளட்டும், ஆனால், விழா நடக்காது' என்று தேவர் சாதிவெறியர்கள் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளனர். மேலும், குருபூசைக்கு இரு நாட்களுக்கு முன்னதாக இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூசப்பட்டிருந்த ஈரம் காயாத சிமெண்ட் பீடத்தில் "தேவர் பேரவை' என்று எழுதி, அதில் மலம்கழித்து வைக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் இமானுவேல் சேகரனின் குருபூசையின் போது சாதி வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிடும் நோக்கத்துடன் ஆதிக்க சாதி வெறியர்களால் திட்டமிட்டே  நடத்தப்பட்டுள்ளன.

ஆதிக்க சாதிவெறியர்களின் கூட்டாளியான ஜெயா அரசு, பரமக்குடியில் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே ஏராளமான போலீசைக் குவித்து, தலித் மக்களை அச்சுறுத்தியிருக்கிறது. முத்துராமலிங்கத்தின் குருபூசைக்கு வரும் ஓட்டுக்கட்சித் தலைவர்களைப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் போலீசு, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு வந்த ஜான் பாண்டியனைப் பொய் வழக்கில் கைது செய்து தலித் மக்களை ஆத்திரமூட்டி, தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் தொடங்கியது.

சாதாரணமாக எல்லா மக்களும் சாலை மறியல் செய்வதைப் போலத்தான் தலித் மக்களும் ஜான் பாண்டியனை விடுதலை செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல், தான் முன்கூட்டியே போட்டிருந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கிறது, போலீசு. போலீசின் மீதும், போலீசு வாகனங்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுவது பச்சைப்பொய். துப்பாக்கிக் குண்டடிபட்டு மக்கள் விழத் தொடங்கிய பின்னர்தான் ஆத்திரம் கொண்ட கூட்டத்தினர் திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

குண்டடிபட்டுக் கீழே விழுந்தவர்களின் மீது ஆதிக்க சாதிவெறிபிடித்த போலீசு மிருகங்கள் துப்பாக்கிகளின் பின்புறக் கட்டையாலும் பூட்சு காலினாலும் தொடர்ந்து தாக்கி அரைகுறை உயிருடன் இருந்தவர்களையும் கொன்றொழித்துள்ளது. படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை மருத்துவமனையில் தரையில் வீசியெறிந்துவிட்டுச் சென்றுள்ளன, காக்கியுடை மிருகங்கள். நண்பகலில் படுகாயமடைந்தவர்களுக்கு இரவு 10 மணிக்குப் பின்னர் தான் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலை மறியல் செய்த தி.மு.க.வினரையோ அல்லது ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் சாலை மறியல் செய்யும் அ.தி.மு.க.வினரையோ என்றைக்காவது இப்படித் தமிழக போலீசு தாக்கியிருக்கிறதா? அல்லது தேவர் சிலை மீது காக்கை எச்சமிட்டதற்காகச் சாலை மறியல் செய்து போவோர் வருவோரையெல்லாம் தாக்கி காலித்தனத்தில் ஈடுபடும் தேவர் சாதி வெறியர்களை என்றைக்காவது தமிழக போலீசு தாக்கியிருக்கிறதா? தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மட்டும் குறி வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் அவர்களை நாய்களைப் போல அடித்து இழுத்துச் செல்வதற்கும் காரணம், போலீசின் ஆதிக்க சாதிவெறி மட்டுமல்ல் தம்முடைய ஆட்சி நடக்கிறது என்று தேவர் சாதிவெறியர்கள் கொண்டிருக்கும் விசேடத் திமிர், கட்சி, அதிகாரவர்க்கம், போலீசு ஆகிய அனைத்திலும் ஊடுருவியிருக்கிறது.

செப். 11 அன்று பரமக்குடியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியது இதை உறுதிசெய்யும் விதத்திலேயே இருந்தது. "மண்டல மாணிக்கத்தில் தெய்வத் திருமகன் முத்துராமலிங்கத் தேவரைக் கொச்சைப்படுத்தும் விதமாக சுவரில் எழுதப்பட்டிருந்தது. இதுவே பரமக்குடி சம்பவத்திற்கு  மூல காரணம்' என்று குறிப்பிட்டார்.

ஆனால், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உண்மையறியும் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை நடந்தது என்ன என்பதை மட்டுமின்றி, அப்பகுதியின் நிலைமையையும் விவரிக்கிறது.  மண்டலமாணிக்கம் ரிசர்வ் ஊராட்சித் தொகுதியில் உள்ள பச்சேரி  கிராமதேவேந்திரகுல வேளாள மக்கள், காலணி அணிந்து தெருவில் நடக்கும் உரிமை கூட இல்லாமல், மறவர் சாதிவெறியர்களின் அடக்குமுறை, வன்கொடுமையின் கீழ்  பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். பாப்பாபட்டி, கீரிப்பட்டியைப் போன்ற சாதி ஆதிக்கமும் இரட்டைக் குவளை முறையும் உள்ள ஊர்தான் அது.

தலித் மக்கள் நெருங்க முடியாத  கூட்டுறவு சங்கச் சுவரில், மறவர் சாதி காலிகளே, "தேவர் வாழ்க!' என்ற வாசகத்துக்குக் கீழே "ஒன்பது' என்று எழுதி விட்டு போலீசில் பொய்ப்புகார் கொடுத்திருக்கின்றனர். செப்டம்பர் 9ஆம் தேதியன்று  இரவில் பழனிக்குமார் என்ற சிறுவனையும் படுகொலை செய்திருக்கின்றனர்.

உண்மை இவ்வாறிருக்க, சாதி வெறியர்களின் கதை வசனத்தைத் தனது சொந்த சரக்காக சட்டமன்றத்தில் அவிழ்த்து விட்டிருக்கிறார் ஜெயலலிதா. யாரோ சுவரில் ஒன்பது என்று எழுதிவிட்டால், அது ஒரு சிறுவனைக் கொலை செய்வதற்கான நியாயம் ஆகிவிடுமா? அந்த ஆதிக்க சாதி நியாயத்தை அங்கீகரிப்பதாகவே இருந்தது ஜெயலிதாவின் பேச்சு.  முத்துராமலிங்கத்தை, தெய்வத்திருமகன் என்று குறிப்பிடுவதே, தேவர் சாதிவெறியை வழிமொழியும் நடவடிக்கைதான். இதுவும் போதாதென்று போலீசு வெறியாட்டத்தை மூடிமறைத்து சாதிக் கலவரம் என்று அவர் கூசாமல் புளுகியிருக்கிறார்.மொத்தத்தில், பிரச்சினையை உருவாக்கியதும், தூண்டியதும் தலித் மக்கள்தான் என்று குற்றம் சாட்டுவதை நோக்கமாகக் கொண்டே மேலிருந்து கீழ்வரை காய்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன.

மண்டலமாணிக்கம்பச்சேரி பழனிக்குமாரைக் கொடூரமாகக் கொலை செய்தது, குருபூசை தினத்தன்று ஜான்பாண்டியனைக் கைது செய்து தாழ்த்தப்பட்டோரை ஆத்திரமூட்டியது, இந்த நிகழ்ச்சியை ஒட்டி சென்னைஅடையாறு துணை ஆணையர் செந்தில் வேலன் பரமக்குடிக்குக் கொண்டு வரப்பட்டது, கற்கள் கைத்துப்பாக்கிகள்உருட்டுக் கட்டைகள் இவையெல்லாம் முன்கூட்டியே சேகரிக்கப்பட்டு தயார் நிலையில் வைத்துக்கொண்டு  போலீசு வெறியர் கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது  ஆகிய இவையனைத்தும் திட்டமிட்டே  போலீசு மிருகங்கள் நடத்திய பயங்கரவாத வெறியாட்டம்தான் இது என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன.

தலித் மக்கள் 6 பேரைத் துடிக்கத் துடிக்கச் சுட்டுக் கொன்ற கொலைகார போலீசு டி.ஐ.ஜி. சந்தீப் பட்டேல், டி.சி. செந்தில் வேலன், டி.எஸ்.பி. கணேசன், ஆய்வாளர் சிவக்குமார், ஆயுதப்படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி ஆகியோர் மீது கொலை வழக்குத் தொடரப்படவேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தியும் ஜெ.அரசு அதனைப் பொருட்படுத்தவே இல்லை. கொலை வழக்கில் இப்போலீசுக் காலிகளைக் கைது செய்து தண்டிப்பதோடு மட்டுமின்றி, சாதிவெறியாட்டம் போட்ட குற்றத்திற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்து இரட்டைத் தண்டனை அளிக்கப்படவேண்டும். போலீசு டி.ஐ.ஜி.யே தலித் மக்களின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியால் சுடுகிறார் என்றால், எந்த அளவுக்கு ஜெயா அரசின் அதிகாரபூர்வ ஆதரவுடன் போலீசு சாதிவெறியாட்டம் போட்டுள்ளது என்பதை உணர முடியும்.

அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறாமல் இருப்பது, இப்பகுதியில் 144 தடையுத்தரவு இன்னமும் நீக்கப்படாமல் இருப்பது, 2,000க் கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பது, துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடித்தனத்தில் ஈடுபட்ட கொலைகாரப் போலீசு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது  ஆகிய இவையனைத்தும் இது அரசாங்க ஆதரவுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள மிகக்கொடிய வன் கொடு மைப் படுகொலை என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன. விலங்குகள் தாக்கி விவசாயிகள் மாண்டுபோனால் கூட ரூ.3 லட்சம் இழப்பீடு தரும் அரசு, போலீசு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி தலித் மக்களுக்கு ரூ. 1 லட்சம் என்று கூறி, தாழ்த்தப்பட்ட மக்களைக் கேவலப்படுத்தியிருக்கிறது.

பாசிச ஜெயாவின் முந்தைய ஆட்சியில் கொடியங்குளம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போலீசு நடத்திய, வெறியாட்டத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட கோமதி நாயகம் கமிசன், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி  தாமிரபரணி படுகொலைகளுக்காக நியமிக்கப்பட்ட மோகன் கமிசன் ஆகியவற்றைப் போலவே, இப்போது ஆட்சியாளர்களின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் கமிசனை ஜெயா அரசு நியமித்துள்ளது. தலித் மக்களின் படுகொலையை அலட்சியப்படுத்தி, முதலில் வெறும் ஆர்.டி.ஓ.விசாரணை நடைபெறும் என்று அறிவித்த ஜெயலலிதா, பின்னர் எதிர்ப்பு வலுத்ததால்தான் ஓய்வு பெற்ற நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பணியிலுள்ள நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிசன் அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தலித் அமைப்புகளும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கோரிய போதிலும் ஜெயா அரசு அதனை ஏற்க மறுத்துள்ளது.

வாச்சாத்தி, சிதம்பரம் பத்மினி விவகாரம், சின்னாம்பதி, கொடியங்குளம்  என பாசிச ஜெயலலிதா ஆட்சியில் எல்லாக் காலகட்டங்களிலும் தாழ்த்தப்பட்டோர் மீதான கொடிய தாக்குதல்களையும் போலீசு மிருகங்களின் பயங்கரவாத அட்டூழியங்களையும் பட்டியலிட முடியும்.  ஜெ. ஆட்சியை, போலீசு தனது சொந்த ஆட்சியாகவே கருதுகிறது. தறிகெட்டு வெறிபிடித்த மிருகமாக ஆட்டம் போடுகிறது. இந்த போலீசு ராச்சியத்தை முளையிலேயே கிள்ளி எறியத் தவறினால், இன்று பரமக்குடியில் தலித் மக்களுக்கு நடந்திருக்கும் அநீதி, நாளை எல்லாப் போராட்டங்களையும் கையாள்வதற்கான நியதியாக மாறிவிடும்.

. குமார்

Last Updated on Tuesday, 10 January 2012 20:35