Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!

போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!

  • PDF

ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் சிறுவர்கள் முன்னணியில் நிற்பதை ஒரிசா மாநில அரசு மட்டுமின்றி, பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவுஜீவிகளும் கண்டித்து வருகின்றனர். அம்மாநிலத்தில் மதிய உணவுத்  திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள நவீன் பட்நாயக் அரசு, போராடும் சிறுவர்களின் படிப்பு பாழாவதாகப் புலம்புவது நகைப்புக்குரிய முரண்.

 

 

சிறுவர்கள் "தவறான' பாதைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து ஆராய குழந்தை உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிசன் போராட்டங்கள் நடந்துவரும் பகுதிக்கு தனது அதிகாரிகளை அனுப்பி வைத்தது.  அந்த அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம், "குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள்' என அறிவுறுத்தியபொழுது, "நாங்கள் எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்; அதற்கு முன்னால் பள்ளிக்கூடங்களிலிருந்து போலீசாரை வெளியேற்றுங்கள்' எனப் பதிலளித்து, போராட்டக்காரர்கள் அதிகாரிகளுக்கு நிலைமையைப் புரிய வைத்தார்கள்.

போஸ்கோவிற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவரும் திங்கியா, கோவிந்த பூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் இன்று போலீசு பாசறைகளாக மாற்றப்பட்டுள்ளன. "எங்கள் பள்ளிக்கூடத்திலுள்ள ஆறு வகுப்பறைகளில் நான்கை போலீசு ஆக்கிரமித்திருக்கும்பொழுது, எங்களால் எப்படி பள்ளிக்கூடத்தை நடத்த முடியும்?' எனக் கேட்கிறார், பாலியா நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்.

"அவர்கள் எங்களது பெற்றோரை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பும் அதேசமயம், நாங்கள் வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்க விரும்புகிறார்கள்' என ஒரிசா அரசின் குரூர புத்தியை நையாண்டி செய்கிறான், ஒரு மாணவன்.

ஆங்கிலேய காலனிய ஆட்சியில் போலீசார் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தேடிவந்த பொழுது, பாஜி ரௌத் என்ற 13 வயது படகோட்டும் சிறுவன், அப்போலீசாரை படகில் ஏற்றிச் செல்ல மறுத்ததற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகியானான். "ஒரிசாவின் தேசிய வீரனாகக் கொண்டாடப்படும் பாஜி ரௌத்தின் கதையை எங்களுக்குக் கூறி, அச்சிறுவனைப் போல நாட்டைக் காக்க வேண்டும் எனப் போதிக்கிறார்கள்; அதேசமயம், நாங்கள் எங்களது கிராமங்களை போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற போராடத் துணிந்தால், எங்களை மோசமாக நடத்துகிறார்கள்' என அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறான், 10 வயதான ராகேஷ் பர்தன்.

"நாங்கள் எங்கள் வயல்களையும் கிராமத்தையும் இழந்துவிட்டால், இங்கே பள்ளிக்கூடமே இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்' என 14 வயது சிறுவனான பீஷ்வாம்பர் மோகந்தி பதில் அளிக்கிறான்.

பள்ளிக்கூட மாணவர்கள் இப்போராட்டத்தில் முன்னணியில் நிற்பது பற்றி ஆசிரியர்கள் என்ன கருதுகிறார்கள்?  "அவர்கள் தமது பெற்றோர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளைக் கொண்டு தாக்குவதைப் பார்க்கிறார்கள்; அவர்கள் தமது வெற்லை கொடிக்கால் வயல்களும் வீடுகளும் போலீசாரால் நாசப்படுத்தப்படுவதைப் பார்க்கிறார்கள்; இவையெல்லாம் ஒரிசாவின் வளர்ச்சிக்காகச் செய்யப்படும் நல்ல காரியங்களென அரசாங்கம் கூறுகிறது. இதன் பிறகு அவர்களால் போராடாமல் வேறெப்படி இருக்கமுடியும்?' எனச் சிறுவர்கள் பக்கமிருக்கும் நியாயத்தை எடுத்துக் கூறுகிறார், ஒரு ஆசிரியர்.

பள்ளிக்கூடங்கள் போலீசு பாசறைகளாக மாற்றப்படும்பொழுது, மாணவர்கள் போராளிகளாக மாறுவது தவிர்க்க முடியாதது. அறிவுக்கண்ணைத் திறப்பதுதான் கல்வியின் நோக்கமெனில், இப்பழங்குடியினச் சிறுவர்கள் வெறும் ஏட்டுக் கல்வியை மட்டுமல்ல, வர்க்கப் போராட்டக் கல்வியையும் கற்றுத்தேறியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் பதில்களே நமக்கு உணர்த்திவிடுகின்றன.