Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் “டாஸ்மாக் கடைக்கு இடமுண்டு; ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கபு இடம் கிடையாது!” – தமிழக அரசின் மோசடியை அம்பலப்படுத்தி வி.வி.மு.-வின் ஆர்ப்பாட்டம்

“டாஸ்மாக் கடைக்கு இடமுண்டு; ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கபு இடம் கிடையாது!” – தமிழக அரசின் மோசடியை அம்பலப்படுத்தி வி.வி.மு.-வின் ஆர்ப்பாட்டம்

  • PDF

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா, பயறு வகைகளைப் பயிரிட்டு வந்த போதிலும், முறையான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இல்லாததால், அரகண்ட நல்லூருக்கும் விழுப்புரத்துக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் டிராக்டரில் உற்பத்திப் பொருட்களை எடுத்துக் கொண்டு அலைவது, அல்லது தரகர்களிடம் சிக்கி அற்ப விலைக்கு விற்பது என்கிற அவலம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. திருவெண்ணெய் நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்ற பெயரில் ஒரு மாட்டுத் தொழுவத்தை வைத்துக் கொண்டு அதிகாரிகள் ஒப்பேத்துகின்றனர். 30 கிராம விவசாயிகள் இப்பகுதியில் முறையான கொள்முதல் நிலையம் வேண்டுமென கோரிய போதிலும், அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது.

 

 

ஊர்தோறும் உழைக்கும் மக்களின் தாலியை அறுக்க டாஸ்மாக் கடைக்கு வசதியான இடத்தைத் தேடிக் கொடுக்கும் அதிகார வர்க்கம், இங்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டஇடமில்லை என்று ஏய்த்து வருகிறது. இந்த மோசடியை அம்பலப்படுத்தியும்,  புதிதாக அரசு கொள்முதல் நிலையம் அமைத்துத் தரக் கோரியும் இப்பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி, கடந்த ஜூன் மாதத்தில் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டதும், அதிகாரிகள் ஜூன்16ஆம் தேதியன்று பெண்ணையாற்றின் புறம்போக்குப் பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்க, அந்த இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். ஆனால், இந்த இடம் வனத்துறைக்குச்சொந்தமானது என்றும் அங்கு மரங்கள் வளர்க்கப் போவதாகவும் கூறி, அத்துறையின் அதிகாரிகள் இதற்கு அனுமதி தரமறுத்துள்ளனர்.

கொள்முதல் நிலையம் அமைப்பதைத் தட்டிக் கழிக்க அதிகார வர்க்கம் நடத்தும் இந்த மோசடித்தனத்தை அம்பலப்படுத்தி இவ்வட்டாரமெங்கும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட வி.வி.மு, அதன் தொடர்ச்சியாக விவசாயிகளை அணிதிரட்டி 21.7.2011 அன்று திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அந்நிய, தனியார் முதலாளிகளுக்கு உடனடியாக நிலங்களை ஒதுக்கித்தரும் அரசு, விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிப்பதை அம்பலப்படுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டமும், கடந்த ஜூலை மாதத்தில் எண்டோசல்பானுக்கு எதிராக கிராமங்களில் இவ்வமைப்பினர் நடத்திய தொடர் பிரச்சாரமும் இப்பகுதிவாழ் விவசாயிகளிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தன.

பு.ஜ. செய்தியாளர்,

திருவெண்ணெய்நல்லூர்.