Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் ஆன்மீக வல்லரசு – ஏழை இந்தியாவில் வாழும் பணக்காரக் கடவுள்கள்

ஆன்மீக வல்லரசு – ஏழை இந்தியாவில் வாழும் பணக்காரக் கடவுள்கள்

  • PDF

உண்மையில் இது ஒரு பொற்காலம்தான். சாயிபாபா உயிரோடு இருந்தபோது கக்கிய தங்க லிங்கங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தங்கத்தை பாபா இறந்தபின் அவருடைய தனியறையான யஜுர்வேத மந்திரம் கக்கிக் கொண்டே இருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிலவறையிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட தங்கம், வைரங்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள். இல்லை, 5 இலட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்படக் காத்திருக்கின்றன.

 

இந்தியாவின் முதற்பெரும் கோடீசுவரனான முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை ரத்தன் டாடா பிடித்து விட்டார் என்று சமீபத்தில்தான் செய்தி வெளிவந்தது. ஆன்மீக உலகிலும் அதிரடி மாற்றம். இந்தியாவிலேயே மிகப்பெரும் கோடீசுவரர் என்ற இடத்தை நெடுங்காலமாகக் கைப்பற்றி வைத்திருந்த திருப்பதி ஏழுமலையானை வீழ்த்தி அந்த இடத்தைப் பிடித்து விட்டார் பத்மநாபசாமி. ஏழு மலையானின் சொத்து மதிப்பு 40,000 கோடிதானாம். பத்மநாபசாமியின் இன்றைய நிலவறைச் சொத்து மதிப்பு நிலவரமே ஒரு இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது. திருமாலைத் தோற்கடித்தவரும் திருமாலே என்பதனால் வைணவர்கள் ஆறுதல் கொள்ளலாம்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை, உலகப் பணக்கார மனிதர்களின் பட்டியலோடு உலகப் பணக்காரக் கடவுளர்களின் பட்டியலையும் வெளியிடுமானால் ஆன்மீக உலகின் அசைக்க முடியாத வல்லரசு இந்தியாதான் என்ற உண்மையை உலகம் புரிந்து கொள்ளும். நிற்க. மீண்டும் நாம் பத்மநாபசாமி கோவிலுக்கே வருவோம்.

சீரங்கத்து அரங்கநாதனைப் போலவே, பாம்புப் படுக்கையின் மீதில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பத்மநாபசாமியின் கோவிலுக்குக் கீழே, கல் அறைகள் என்று அழைக்கப்படும் ஆறு நிலவறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. காற்றோட்டமில்லாத இந்தப் பொந்துகளின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களை வெளியே எடுத்து, அவற்றைப் பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தப் புதையல் வேட்டை நடந்து வருகின்றது.

சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மகாவிஷ்ணுவின் தங்கச்சிலை, தங்கத்தினால் செய்யப்பட்டு வைரக் கற்கள் பதிக்கப்பட்ட இரண்டு தேங்காய் மூடிகள், பத்தரை கிலோ எடையுள்ள 18 அடி நீள மார்புச் சங்கிலி, 36 கிலோ எடையுள்ள தங்கத் திரை, தங்க அங்கி, 500 கிலோ தங்கப் பாளங்கள், தங்கத்தில் வில் அம்பு, வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தட்டுகள், பல நூறு கிலோ எடையுள்ள தங்க மணிகள், நகைகள், கிழக்கிந்தியக் கம்பெனியின் தங்கக் காசுகள், நெப்போலியனின் தங்கக் காசுகள், ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஆன்ட்வெர்ப் நகரின் வைரங்கள் ..

தங்கம், வைரம் என்ற முறையில் இவற்றின் சந்தை மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் வருவதாகவும், புராதனக் கலைப்பொருட்கள் என்ற வகையில் மதிப்பிட்டால், இவற்றின் மதிப்பு பத்து இலட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம் என்றும் கூறுகின்றன பத்திரிகைகள். நிலவறைக்குள் தங்கம் இருக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதன் அளவுதான் யாரும் எதிர்பாராதது. இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்பட வேண்டும். அவற்றைத் திறப்பதற்கு முன் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்கிறது போலீசு.

கோவிலைச் சுற்றிலும் நெருக்கமாக வீடுகள் இருப்பதுடன், பூமிக்கு அடியில் இரண்டரை அடி நீள அகலத்தில் பழங்காலத்து பாதாள சாக்கடை ஒன்று இருப்பதால், அந்த பாதாள சாக்கடை வழியாக யாரேனும் நிலவறைகளுக்குள் புகுந்து தங்கச் சுரங்கத்தைக் கொள்ளை யடிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சுகிறது போலீசு. எனவே, பத்மநாபசாமி கோவிலுக்கு அருகில் குடியிருக்க நேர்ந்த துர்ப்பாக்கியசாலிகள் அனைவரும் போலீசின் கண்காணிப்புக்கு உரியவர்கள் ஆகி விட்டார்கள்.

ஒரு இலட்சம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள இந்தத் தங்கப் புதையல் எப்படி வந்தது? மன்னர்களின் ஆடை ஆபரணங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், அவர்களது சொத்துகள் ஆகிய அனைத்தும் மக்களின் ரத்தத்தை வரியாகப் பிழிந்து எடுக்கப்பட்டவைதான் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. பார்ப்பனக் கொடுங்கோன்மையின் வரலாற்று உதாரணமாக இருந்த கேரளத்தில், விவசாயிகள் எவ்வளவு இரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டனர் என்ற உண்மையைக் கடந்த நூற்றாண்டின் மாப்ளா விவசாயிகள் போராட்டம் வெளிக்கொணர்ந்தது. இன்று பத்மநாபசாமி கோவிலின் தங்கப்புதையலும், வைர நகைகளும் அந்தச் சுரண்டலின் ஆபாசமான நிரூபணமாக மின்னுகின்றன.

ஸ்விஸ் வங்கிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில் கோவில்கள்தான் மன்னர்கள் தமது செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்கான பெட்டகங்களாக  இருந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவ சாதிய சமூகத்தின் அதிகாரமும், அரசு அதிகாரமும் கோவில் வழியாகவே செலுத்தப்பட்ட காரணத்தினால், கோவில்கள் அறிவிக்கப்படாத அரசு கஜானாக்களாகவே இருந்திருக்கின்றன. ஆகையினால்தான் இராசராச சோழன் முதல் கஜினி முகமது வரையிலான மன்னர்கள் அனைவரும் தாங்கள் ஆக்கிரமிக்கும் நாட்டில் உள்ள கோவில்களைக் குறிவைத்துக் கொள்ளையிட்டிருக்கிறார்கள். தங்கத்தைக் கோவிலுக்குப் பதிலாகச் சுடுகாட்டில் புதைத்து வைப்பது மரபாக இருந்திருந்தால், கஜினி முகமதுவும் சோமநாதபுரத்தின் கோவிலுக்குப் பதிலாக அந்த ஊரின் சுடுகாட்டைத்தான் சூறையாடியிருப்பான்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் இந்த அளவுக்குத் தங்கம் சேர்ந்ததற்குச் சில குறிப்பான காரணங்களும் உள்ளன. அன்று ஐரோப்பாவுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி ஆகிய நாடுகள் திருவிதாங்கூரைக் காட்டிலும் பன்மடங்கு செல்வ வளம் மிக்கவையாக இருந்தன. 18ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னனாக இருந்த மார்த்தாண்ட வர்மா, இந்த நாடுகளின் மீது படையெடுத்து அந்நாடுகளின் செல்வத்தைக் கொள்ளையிட்டிருக்கிறான். இவையன்றி மன்னன் விதிக்கும் அபராதங்கள் அனைத்தும் கோவிலின் பெயரில் தங்கமாக வசூலிக்கப்பட்டதால் அவையும்,  வணிகர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குச் செலுத்திய காணிக்கைகளும் தங்கமாகச் சேர்ந்திருக்கின்றன.

18ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கட்டபொம்மன், மருது முதலானவர்களும், மைசூரில் திப்புவும் ஆங்கிலேயனை எதிர்த்து நின்றபோது, கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழகத்தில் ஆற்காட்டு நவாபும் கும்பினியின் கைக்கூலிகளாக இருந்தனர். கும்பினியின் எடுபிடியாக இருந்த திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக திப்பு படையெடுத்த போது, கேரளத்தின் வடபகுதியில் இருந்த குறுநில மன்னர்கள் பலரும் தமது பொக்கிஷங்களைத் திருவிதாங்கூர் மன்னனிடம் கொடுத்துப் பதுக்கி வைத்திருக்கின்றனர். இதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன என்று கூறும் கேரளத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்  கோபாலகிருஷ்ணன், இந்த நிலவறைகள் எல்லாம் அப்போதுதான் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சியது மட்டுமல்ல, அரசகுடும்பங்களுக்குள் வழக்கமாக நடக்கும் அரண்மனைச் சதிகளும், உள்குத்துகளும் கூட இப்படி தங்கத்தைப் புதைத்து வைக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.

அவ்வாறின்றி, ஆன்மீக அடிப்பொடிகள் சித்தரிப்பதைப் போல இவையெல்லாம் கடவுளுக்கு வந்த காணிக்கைகள் அல்ல. ஒரு வாதத்துக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் அதற்குக் கணக்கும் இல்லை, யார் கொடுத்த காணிக்கை என்பதற்கான விவரமும் இல்லை. கோவிலில் மணி அடிப்பவனுக்கும், சமையற்காரனுக்கும், விளக்கு போடுபவனுக்கும் ஆண்டுக்கு எவ்வளவு கலம் நெல் அளிக்க வேண்டும் என்பதைக் கல்வெட்டில் செதுக்கிவைக்கும் அளவுக்கு "யோக்கியர்களான' மன்னர் பரம்பரையினர், பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள "காணிக்கைகளை' புதைத்து வைத்திருப்பது பற்றி ஒரு துண்டுச் சீட்டில் கூட எழுதி வைக்காததற்கு வேறு என்னகாரணம்?

இந்தப் புதையல் அனைத்தையும் மக்கள் நலனுக்கும், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், கேரள பகுத்தறிவாளர் சங்கத்தை சேர்ந்த காலநாதன், வரலாற்றாய்வாளர் செரியன் போன்றோர் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டவுடனே ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் காலிகள்  நள்ளிரவில் காலநாதன் வீட்டைக் கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.

"தற்போது எடுக்கப்பட்டுள்ள நகைகள் எல்லாம் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்' என்பது காஞ்சிபுரத்து யோக்கியர் ஜெயேந்திரனின் கருத்து. "அவை தொல்லியல் துறைக்குச் சொந்தம்'

என்பது கே.என். பணிக்கர் போன்றோரின் கருத்து. "மாநில அரசுக்குச் சொந்தம்' என்பது வேறு சிலர் கருத்து. "அனைத்தும் பகவான் பத்மநாபசாமிக்கே சொந்தம்' என்பது மாநில முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து.

"பகவான் பத்மநாபஸ்வாமியும், அவருடைய கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்' என்பது தற்போதைய திருவிதாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. அது வெறும் கருத்து அல்ல. இந்தக்கோவிலும், அதன் சொத்துக்களும் மக்களுக்குச் சொந்தமா அல்லது மன்னர் குடும்பத்துக்குச் சொந்தமா என்பது உச்சநீதி மன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கு. இந்த வழக்கின் அங்கமாகத்தான் தற்போதைய புதையல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதால் மேற்கூறிய கேள்விக்கான விடையைப் புரிந்துகொள்வதற்கு இவ்வழக்கு பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியம்.

•••

1947 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு மன்னருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், கேரளத்தின் மற்ற கோவில்களெல்லாம் அறநிலையத்துறையின் கீழ்

கொண்டு வரப்பட்டாலும், பத்மநாபசாமி கோயில் மட்டும் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை உத்திரவாதம் செய்து கொண்டார் திருவிதாங்கூர் மன்னர். பத்மநாப சுவாமியின் மீது மட்டும் மன்னர் கொண்டிருந்த அளவுகடந்த பக்திக்குக் காரணம் என்ன என்பது அப்போது புரியவில்லையெனினும் இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

"இந்துக் கோவில், இந்து மன்னர், இந்துப் புதையல்' என்று சங்க பரிவாரத்தின் அமைப்புகள் தற்போது கூச்சல் எழுப்புகின்றனர். . கிறித்தவர்கள், முஸ்லிம்களிடத்திலிருந்தும் திருவிதாங்கூர் மன்னர் பிடுங்கிய வரிதான் தங்கப்பொக்கிஷமாக மின்னிக் கொண்டிருக்கிறது.  எனினும், இந்தப் பொக்கிஷத்தை என்ன செய்வது என்பது பற்றி கிறித்தவர்களோ முஸ்லிம்களோ கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர் இந்து வெறியர்கள். அவர்களது அபிமான திருவிதாங்கூர் மன்னரும், திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் அகண்ட பாரதத்திலிருந்து திருவிதாங்கூரைத் துண்டாடவும், அதன் பின் பாகிஸ்தானுடன் கூட்டணி சேரவும் முயன்றார்கள் என்ற வரலாற்று உண்மை அரை டவுசர் அம்பிகள் பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1947 இல் மேற்படி இந்து மன்னரும், அவருடைய திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் திருவிதாங்கூரை (கேரளத்தை) தனிநாடாக அறிவித்து பிரிந்து போவதற்கே முயன்றனர். அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படும் மோனோசைட் எனும் தாது திருவிதாங்கூர் கடற்கரையில் நிறைந்திருந்ததால் திருவிதாங் கூரைத் தனிநாடாக்கி விட்டால், அதனைப் பிரிட்டன் மட்டும் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்று பிரிட்டிஷ் அமைச்சர்களும், சி.பி. ராமசாமி ஐயரும் சேர்ந்து இரகசியத் திட்டம் தீட்டினர். பாகிஸ்தானும் திருவிதாங்கூரும் தனியே நட்புறவு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று ஜூன், 1947 இல் ஜின்னாவுக்குக் கடிதம் எழுதினார் சி.பி. ராமசாமி ஐயர். ஜூலை 1947இல் தனிநாடாகச் செல்லப் போவதாக மவுண்ட்பாட்டனிடம் ராமசாமி ஐயர் அறிவிக்கவும் செய்தார். ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான புன்னப் புரா வயலார் விவசாயிகள் எழுச்சியும், சமஸ்தானம் முழுவதும் மன்னராட்சிக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் மன்னருடைய தனிநாட்டுக் கனவில் மண் அள்ளிப் போட்டன. (ஆதாரம்,  தி இந்து, 25.5.2008)

இதுதான் "இந்துப் பொக்கிஷத்தை'ச் சுருட்டிக் கொண்டு போவதற்கு "இந்து மன்னன்' செய்த சதியின் கதை. சமஸ்தான மன்னர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி இந்திய யூனியனுடன் இணைத்த இரும்பு மனிதர் சர்தார் படேல், திருவிதாங்கூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில், பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்.

1991 இல் பலராம வர்மா இறந்த பின் அவரது தம்பியான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அடுத்த வாரிசு என்ற முறையில் கோவிலின் மீது உரிமை கோரியதுடன், கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் தனிச்சொத்துக்கள் என்றும் கூறினார். இதனை எதிர்த்து கோவிலின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்ற வழக்குரைஞர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் (உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா  எதிர் யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன்) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:

"சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366 (22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமைகோர முடியாது.

பத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.

தற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப்படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.

ஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும். கடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக்கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.

எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும்.

இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.'

மேற்கூறிய தீர்ப்பில் கேரள உயர்நீதி மன்றம் மாநில அரசு என்று குறிப்பிட்டு விமரிசிப்பது மார்க்சிஸ்டு கட்சி அரசைத்தான். மே.வங்கத்தில் தரகு முதலாளி டாடாவுக்கு ஆதரவாக புத்ததேவ் பட்டாச்சார்யா. கேரளத்தில் திருவிதாங்கூர் மன்னனுக்கு ஆதரவாக அச்சுதானந்தன்! கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னரிடமே இருக்கட்டும் என்று கூறிய மார்க்சிஸ்டு கட்சி அரசு, அதனை மறுத்து உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அந்தத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது. மூன்று மாதங்களுக்குள் கோவிலை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனவரி 31, 2011 இல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அச்சுதானந்தன் அரசு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை.

விளைவு, மார்த்தாண்ட வர்மா உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, மேற்கூறிய உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் வாங்கி விட்டார். கோவிலை மாநில அரசு மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை பெற்றதன் மூலம், கோவிலின் நிர்வாகத்தை மார்த்தாண்ட வர்மா தன்னுடைய கைகளில் வைத்திருக்கிறார். சுரங்க அறையிலிருந்து பொக்கிஷங்களை எடுத்துப் பட்டியலிடுவதற்கு மட்டும் உச்சநீதி மன்றம் ஒரு குழுவை நியமித்திருக்கின்றது.

பொக்கிஷங்கள் மக்களுக்குத்தான் சொந்தம் என்பதை நாம் அரசியல் ரீதியாகக் கூறுகிறோம். சட்டப்படி அது அரசுக்குத்தான் சொந்தம் என்று தனது தீர்ப்பில் விளக்கியிருக்கிறது கேரள உயர்நீதி மன்றம்.

ஆனால் பொக்கிஷங்களும், கோவிலும் தனக்குச் சொந்தம் என்பது மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. சங்கராச்சாரியின் கருத்தும் அதுதான். "பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடக் கூடாது' என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கருத்து. "பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். கோவில் நிர்வாகம் மன்னனுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடத்

தேவையில்லை' என்பது மார்க்சிஸ்டுகளின் கருத்து. "பொக்கிஷம் பத்மநாப சுவாமிக்கு சொந்தம்' என்பது காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து. இவர்கள் எல்லோரது கருத்தும் சாராம்சத்தில் ஒரே கருத்துதான்.

யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்று எந்தவித விவரத்தையும் காட்டாமல், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்துக் கொண்டு, கேட்டால் பகவானுக்கு வந்த காணிக்கை என்கிறார்கள். காணிக்கைக்குக் கணக்கு எழுதி வைக்கக் கூடாது என்று பகவான் சொன்னாரா,அல்லது பக்தன் சொன்னானா? கணக்கில் வராத பணத்தைத்தானே கருப்புப் பணம் என்று அழைக்கிறார்கள்?

திருவிதாங்கூரின் பாதாள அறையிலிருந்து மட்டுமல்ல, புட்டபர்த்தியிலுள்ள பாபாவின் தனியறையான யஜுர்வேத மந்திரத்திலிருந்தும் தங்கமும் வைரமும், கட்டு கட்டாகப் பணமும், காசோலைகளும் வருகின்றன. தனியறையில் படுத்து ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காணிக்கைகளை ஆராயக் காரணம் என்ன? பெண்டாட்டி, பிள்ளை இல்லாத பாபா யாருக்காக காணிக்கைப் பணத்தை தனியறையில் ஒதுக்கி வைத்தார்? வந்த காணிக்கைகளை அறங்காவலர் குழுவிடம் கொடுத்து ரசீது போடாமல், கோடிக்கணக்கான ரூபாயை ஏன் தன்னுடைய தனியறையில் பதுக்கி வைத்துக் கொண்டார் என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பவில்லை. பத்திரிகைகளும் எழுப்பவில்லை. பக்தர்களுக்கும் அது உரைக்கவில்லை.

அலைக்கற்றை ஊழலில் ஈட்டிய கணக்கில் வராத காசை சோதனை போட்டுப் பிடிக்கும் வருமான வரித்துறையோ, சி.பி.ஐ யோ பாபாவின் அறையைச் சோதனை போடவில்லை. ஒருவேளை கலைஞர் டிவிக்கு பதிலாக "கலைஞர் கோவில்' என்றொரு ஆன்மீகக் கம்பெனியைத் தொடங்கி, அக்கோவிலின் உண்டியலில் 200 கோடி ரூபாயை காணிக்கையாக வரவு வைத்திருந்தால், கணக்கே கொடுக்காமல் பணத்தையும் காப்பாற்றி, கனிமொழியையும் கூட காப்பாற்றியிருக்கலாமோ?

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்குச் சொந்தமாக்குவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம். கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வெளிநாட்டுக்கு ஓடுவதும், கே மேன் ஐலாண்ட், மொரிஷியஸ் போன்ற தீவுகளைத் தேடுவதும் மேற்கத்திய சிந்தனை முறையில் உதித்த வழிமுறைகள். பாரம்பரியமிக்க நமது பாரத மரபில் இதற்கான பல வழிமுறை கள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் தொன்மையானது திருவிதாங்கூர் நிலவறை. நவீனமானது பாபாவின் யஜூர்வேத மந்திரம். இவை எந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிடிக்கும் சிக்காதவை.

ஏனென்றால் இவை ஆன்மீக உரிமைகள் என்ற இரும்புப் பெட்டகத்தினால் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் பௌதீகத் திருட்டுச் சொத்துகள். தற்போது தோண்டியெடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் தொல்லியல் மதிப்புமிக்க செல்வங்கள் அல்ல. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் தங்கத்தின் வடிவிலான பணம். அவ்வளவே. அவை இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரிமையான சொத்து. அவர்களுடைய முன்னோர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட செல்வம்; சுரண்டப்பட்ட உழைப்பு.

திருவிதாங்கூர் அரசாட்சி கீழ் விவசாயிகள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மீதும் நம்பூதிரிகளும், நாயர்களும் இழைத்த கொடுமைகளையும், அவ்வரசாட்சியின் கீழ் மக்களுடைய அவலமான வாழ்நிலையையும், ஆங்கிலேயனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நம் நாட்டு மக்களுக்கு அந்த மன்னர் பரம்பரை இழைத்த துரோகத்தையும் காட்சிப்படுத்தி, இரத்தம் தோய்ந்த அந்த வரலாற்றின் பின்புலத்தில், கண்டெடுக்கப்பட்ட இந்த ஒரு இலட்சம் கோடிப் புதையலைப் பார்வைக்கு வைக்க வேண்டும்.

அப்போதுதான் இந்தப் புதையல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் காட்டிலும், யாரிடமிருந்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையின் முக்கியத்துவம் நிலை நிறுத்தப்படும்.

• மருதையன

 

•••

சோம்பேறிகளுக்குச் சோறுபோடும் சத்திரம்!

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் தாங்கள் பத்மநாபசாமியின்  சேவகர்கள் என்றும், தங்களது சொத்து முழுவதையும் கடவுளுக்கே அர்ப்பணித்தவர்கள் என்றும் பெருமைபடக் கூறிக்கொள்வர். விரைவில் வெளிவர இருக்கும் "திருவாங்கூர்: விதியின் சுவடுகள்' என்ற நூலில் தற்போதைய மன்னர் உத்திராடம் திருநாள் மகாராஜா கீழ்க்கண்ட சம்பவத்தை மன்னர் பரம்பரையின் பக்திக்குச் சான்றாக பதிவு செய்திருக்கிறார்.

1900ஆம் ஆண்டில் கர்சன் பிரபு வைஸ்ராயாகப் பதவியேற்றவுடன், திருவிதாங்கூருக்கு விஜயம் செய்தார். அவரை வரவேற்று குதிரைச் சாரட்டில் அழைத்துச் சென்றார் அன்றைய மன்னர் மூலம் திருநாள் ராமவர்மாமகாராஜா. குதிரை வண்டி கோவிலைக் கடந்து செல்லும்போது, எழுந்து நின்று கடவுளை வணங்கினார் மன்னர். அவர் செய்வது என்னவென்று புரியாத கர்சன்,

"மன்னர் அவர்களே! உங்கள் நடவடிக்கையின் பொருள் என்ன?' என்று வினவ, "இது எங்கள் கடவுள் சயனித்திருக்கும் கோவில். நான் கடவுளுக்கு என் மரியாதையைத் தெரிவித்துக் கொண்டேன். கோவிலைக் கடந்து செல்லும்போதெல்லாம் நான் இப்படித்தான் வணங்குவேன்' என்று கர்சனுக்கு விளக்கினாராம்.

"ஓ.. அப்படியா, "சோம்பேறிகளுக்குச் சோறு போடும் சத்திரம்' என்று சொல்கிறார்களே, அந்த இடம் இதுதானா?' என்றாராம் கர்சன். கோபம் கொப்பளித்த போதும், நாகரிகம் கருதி அதை வெளியில் காட்டிக்கொள்ளாத மன்னர், அன்று மாலை கர்சனுக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்தாராம். "கர்சன் பிரபு மன்னர் பதவியையே பறித்தாலும் சரி, கடவுளுக்காக மன்னர் பதவியை இழக்கத் தயார்' என்றாராம் மன்னர். மன்னருடைய மன உறுதியைக் கண்ட கர்சன், அதன் பிறகு தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தாராம். அதன் பின்னர்தான் மன்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம்.

வெள்ளையனுக்கு நாட்டையே எழுதிக் கொடுத்துவிட்டு, அவனுக்கு சொம்பு தூக்கி, அடியாள்  சேவையும் செய்த மன்னர், கடவுளுடைய மானத்தைக் காப்பாற்றிய கதை இது.

•••

யோகக்காரன்

"அவனுக்கென்னப்பா யோகக்காரன்!!' என்ற பேச்சை தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பரவலாகக் கேட்கலாம்.

உண்மையில் இந்தச் சொல்லின் பின்னால் ஒரு ரத்தக்கறை படிந்த வரலாறே இருக்கிறது. தென் திரு விதாங்கூர் நாட்டில் இருக்கும் கோவில் வரலாறெல்லாம்  உழைக்கும் சாதியினரைச் சுரண்டிய வரலாறே. ஆதியில் "மகாசபை'யின் நிர்வாகத்தின் கீழ் இருந்த கோவில்களும், கோவில்களின் ஏகபோகமாக இருந்த நஞ்சை நிலங்களும் உழுபடைச் சாதியினரின் உழைப்பை மேல்வாரமாக ஒட்டச் சுரண்டிக் கொழுத்தன.

இந்த மகாசபைதான் ஆண்டவனின் பேரால் அதிகாரத்தை உழைக்கும் மக்கள் மீது ஏவியது. இச்சபையின் உறுப்பினராக இருக்க ஒரே தகுதி  பிறப்பால் நம்பூதி ரிப் பார்ப்பனராய் இருக்க வேண்டும் என்பதுதான்.

சோழப் பேரரசின் உச்சத்தில் "மகாசபை' என்ற அதிகார நிறுவனம் ஆட்டம் கண்டது. அவ்விடத்தே யோகக்காரர்களின் ஆட்சி வந்தது. யோகக்காரர்களாகவும் நம்பூதிரிகளே ஆரம்பத்தில் இருந்தனர். பின்னர் நாயர்களும், நம்பூதிரிகளும் சேர்ந்து யோகக்காரர் சபையை அலங்கரித்தனர். (அலங்கரிப்பதென்ன... குத்தகைதாரர்களை ஒட்டச் சுரண்டிக் கொழுத்தனர்).

பிறகு, கர்னல் மன்றோ திருவிதாங்கூர் ரெசிடெண்டாக ஆன பின் (அதாவது, விஷ்ணுவாகிய பத்மநாப சுவாமியும் மேற்படியாரின் பூலோக ஏஜெண்டான மார்த்தாண்ட வர்மாவின் வாரிசுகளும் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்தின் கீழ் அடங்கிய பின்னர்) இந்த யோகக்காரர்களைப் பதவி நீக்கம் செய்தார். கோவில் நிலங்களையும், கோவில்களையும் முதலில் பத்மநாபபுரத்துக்கும் பின்னர் திருவனந்தபுரத்துக்கும் எனத் தலைநகரை மாற்றிக் கொண்ட நாயர்சாதி மன்னர் களின் கீழ் அரசுடைமை ஆக்கினார்.

அன்று கஷ்டப்பட்டு உழைக்காமலேயே, சகல சவுகரியங்களையும் தாணுமாலயன் பெயராலும் ஆதிகேசவன் பெயராலும் ஆண்டனுபவித்துக் கொழுத்த அந்த "யோகக்காரன்'கள் தான் இன்னும் மக்கள் மொழியில் "யோகக்காரன்யா..அவன்' என வழங்கப்படுகின்றனர்.

மன்றோவின் காலத்திற்கு முன்னரும், பின்னரும் கோவில் நிலங்களில் பாடுபட்ட விவசாயிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மேல்வாரங்களே இன்று பத்மநாபசாமி கோவில் பாதாள அறைகளில் தங்கமாக மின்னுகின்றன. நியாயப்படி திருவிதாங்கூர் நாட்டின் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட தென் கேரளம்) உழைக்கும் சாதியினர் அனைவருக்கும் இதன் மீது உரிமை உண்டு.