Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் உடுக்கையடிக்கும் பத்திரிகைகள் சாமியாடும் தேர்தல் ஆணையம்

உடுக்கையடிக்கும் பத்திரிகைகள் சாமியாடும் தேர்தல் ஆணையம்

  • PDF

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கடும் நடவடிக்கைகளால் சுதந்திரமான  நியாயமான தேர்தல் நடந்துள்ளதாகவும், அதனாலேயே தமிழகத்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு பெருமளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் பார்ப்பன ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் சித்தரிக்கின்றன.

 

 

யாருமே உரிய ஆவணங்கள் இல்லாமல் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலாக ரொக்கமாக பணம்  நகைகள் எடுத்துச் செல்ல முடியாது என்பதிலிருந்து, வாக்காளர்களுக்கு இலவச அன்பளிப்புகள் வழங்க முடியாது என்பது வரை தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன. சுவர்களில் வரையப்பட்ட சின்னங்கள், தலைவர்களின் படங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்களின் சிலைகள் தேர்தல் வரை மூடிவைக்கப்பட்டன. இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு போலீசு டி.ஜி.பி.க்கள் முதல் மாவட்ட ஆட்சியர்  உயர் போலீசு அதிகாரிகள் வரை பலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விளம்பரங்கள் வெளியிடுவது, தொண்டர்களுக்குத் தேநீர் வாங்கித் தருவது உள்ளிட்டு வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் கண்காணிக்கப்படும் என்று கெடுபிடிகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க பார்வையாளர்  குழு, ஒவ்வொரு தொகுதியிலும் வீடியோ கண்காணிப்புக் குழு, தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க பறக்கும் படைகள், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டமாநில குழுக்களின் ஒப்புதல் பெற்ற பிறகே விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக்கப்பட்டன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் இப்படி கெடுபிடி செய்ய என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார், கருணாநிதி. "தேர்தல் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே திருவிழா போல களைகட்டிவிடும்; ஆனால் இப்போது தேர்தல் கமிசனின் கெடுபிடியால் அது களையிழந்து விட்டது' என்றும், "மினி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் குற்றம் சாட்டினார். மாநிலத்தின் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமுன்னர், மாநில அரசை தேர்தல் ஆணையம் கலந்தாலோசிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டிய போதிலும், விதிகளின்படி இத்தகைய ஆலோசனைகள் தேவையற்றவை என்று திமிராக பதிலளித்தது தேர்தல் ஆணையம்.

மேலும், தேர்தல் முடிந்து விட்ட பின்னரும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரையிலும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அதிகாரிகள் சில முக்கிய ஆய்வுக் கூட்டங்களைக்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் நிலையில், அதற்கேற்ப வேளாண் துறையில் உரிய முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அத்தகைய ஆய்வுக் கூட்டங்களைக்கூட நடத்தக் கூடாது என்கிறது தேர்தல் ஆணையம். "தமிழகத்தில் நடப்பது எனது ஆட்சியா அல்லது தேர்தல் ஆணையத்தின் ஆட்சியா?' என்று கருணாநிதி வெளிப்படையாகவே கேள்வி எழுப்பி, "நிர்வாகம் ஸ்தம்பித்துப் போனால் அதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு என்று அறிக்கை வெளியிடும் அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் எல்லையற்ற அதிகாரம் கொடி கட்டிப்பறந்தது.

இருப்பினும்,  ஓட்டுக்குப்பணம் கொடுப்பதைத் தடுக்கவே தேர்தல் ஆணையம் கெடுபிடிகளை விதிப்பதாகவும், அதனாலேயே தி.மு.க.வும் கருணாநிதியும் அலறுவதாகவும் ஜெயா ஆதரவு  பார்ப்பன ஊடகங்கள் கொச்சைப்படுத்திக் கேலி செய்தன.

தேர்தல் ஆணையம் தனது கடமையை பாரபட்சமின்றி செய்வதைப் பாராட்டாமல், அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாக கருணாநிதி கூறுவது ஆச்சரியமளிக்கிறது, என்றது தினமணி.

அனைத்து முதலாளித்துவ ஓட்டுக் கட்சிகளும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாலும் தி.மு.க. மீது மட்டும் குறிவைத்து பார்ப்பன ஊடகங்கள் குற்றம் சாட்டின. தேர்தல் முடிந்த பின்னர் ஜெயலலிதா விடுக்கும் அற்பத்தனமான ஆதாரமற்ற அவதூறு அறிக்கைகளைக்கூட ஊதிப்பெருக்கி, இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் தி.மு.க. எதிர்ப்புப் பிரச்சாரத்தை இந்த ஊடகங்கள் நடத்துகின்றன.

தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடத்தை விதிகளால், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் தேர்தல் கட்சிகளின் ஆடம்பரங்களும் ஆட்டம்பாட்டங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா கட்டுப்படுத்தப்பட்டது, சுவரொட்டி, பேனர், கொடிகள் தோரணங்களுக்குத் தடை, பரிசு வழங்கத்தடை, வாக்காளர்களைக் கவர்வதற்கான நடவடிக்கைகளுக்குத் தடை முதலான நடவடிக்கைகள் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இது தேர்தல் கமிசனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. கத்தியின்றி, ரத்தமின்றி, ஒரு அமைதிப் புரட்சி நடந்துள்ளது. அதன் காரணமாகவே அதிக அளவில் வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களித்துள்ளனர்' என்று ஆளும்வர்க்க ஊடகங்கள் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை வரவேற்று ஆதரிக்கின்றன. பா.ஜ.க.வும் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை நியாயமான பாரபட்சமில்லாத நடவடிக்கைகளாகச் சித்தரிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் பணப்பட்டுவாடா தடைப்பட்டு வாக்காளர்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்ததாக இந்த ஊடகங்கள் பூரிப்புடன் செய்தி வெளியிட்டன. தேர்தல் முடிந்ததும் இப்போது இதே பத்திரிகைகள், பணப்பட்டுவாடா இரவு நேரத்தில் கன ஜோராக நடந்தது என்றும், எல்லோர் கையிலும் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார் என்றும் எழுதுகின்றன. வாக்கு எண்ணிக்கையை ஒரு மாத காலத்துக்குத் தள்ளிவைக்க எவ்வித நியாயமான காரணமும் இல்லாத போதிலும், ஜனநாயகத்தை நிலைநாட்ட இதுவும் தவிர்க்கவியலாத அவசியம் என்று நியாயப்படுத்தின.

தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் எந்தவிதத்திலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதையோ, பிரியாணி விருந்து அன்பளிப்புகள் அளிப்பதையோ, ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை வாரி வழங்குவோம் என்று மக்களை ஈர்ப்பதையோ, சாதிய உணர்வுகளைத் தூண்டுவதையோ, ரவுடித்தனத்தையோ தடுக்கவில்லை. அவை வழக்கம் போல கன ஜோராகத்தான் நடந்துள்ளன. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், குறிப்பாக திருமங்கலம் இடைத்தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் செல்லாக் காசாகிப் போனதை நாடறியும். தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் பதிவாவதும், தேர்தல் முடிந்த பின்னர் அந்த வழக்குகளை அப்படியே கைகழுவதும்தான் நடக்கிறது. இதற்காக யாரும் இதுவரை தண்டிக்கப்படுவதோ, பதவி பறிக்கப்படுவதோ நடப்பதில்லை.

வேட்பாளர் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிசன் வரையறுத்துள்ளது. ஒரு வேட்பாளர் தொகுதி முழுக்க வாகனத்தில் சுற்றிவருவதற்கான டீசல் செலவுக்குக்கூட அந்தத் தொகைபோதாது என்பது தேர்தல் ஆணையத்துக்கும் தெரியும். வேட்பாளருக்கும் தெரியும். ஆனாலும் தேர்தல் கமிசனின் விதிப்படி  செலவுகளைச் செய்துள்ளதாகவும், தாங்கள் யாருக்கும் பணப்பட்டுவாடா செய்யாததைப் போலவும் வேட்பாளர்கள் கணக்கு காட்டி ஏய்க்கின்றனர். தேர்தல் ஆணையமும் இதை ஏற்கிறது. தேர்தல் ஆணையம் சூரத்தனம் காட்டுவதும் ஓட்டுக் கட்சிகள் பம்முவதுமான இந்தக் கோமாளிக் கூத்து தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படியானால் தேர்தல் ஆணையம் இவ்வளவு கெடுபிடிகளைக் காட்டுவதன் நோக்கம்தான் என்ன? இன்று தேர்தலில் ஒருவர் வேட்பாளராக நிற்கவேண்டுமென்றால் குறைந்த பட்சம் ரூ.5 கோடி செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற நிலைமைதான் உள்ளது. நேரடியாகவும் தங்களது பினாமிகள் மூலமும் சுயநிதிக் கல்லூரி, ரியல் எஸ்டேட்,  மணல் திருட்டு, கார்ப்பரேட் மருத்துவமனைகள் நடத்தும் கோடீசுவரர்களைத்தான் எல்லா ஓட்டுக் கட்சிகளும் வேட்பாளர்களாக நிறுத்துகின்றன. மறுபுறம், முதலாளிகளே இன்று நேரடியாக அரசியல்வாதிகளாகவும் மாறியுள்ளனர். இதற்கேற்ப கோடீசுவரர்களுக்கு மட்டுமே உரித்தானதாக, பரந்து பட்ட உழைக்கும் மக்களை தேர்தல் அரசியலிலிருந்து விலக்கி வைப்பதாக தேர்தல் நடத்தை விதிகள் மாற்றப்பட்டுள்ளன. முன்பெல்லாம் சாமானிய மக்கள் பங்கேற்கக்கூடிய அவர்களாலேயே மேற்கொள்ளக் கூடிய எளிய பிரச்சார முறைகள் இருந்தன. ஆனால் இப்போது கோடீசுவரர்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய தேர்தல் என்பதால், தொலைக்காட்சி பிரச்சாரம், விளம்பரம், கார்களில் பவனி  என இவற்றுக்கெல்லாம் ஆற்றல் கொண்டவர்களுக்கு ஏற்ப தேர்தல் பிரச்சார முறையும் மாறிவிட்டது. உழைக்கும் மக்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஒரே வேலை வாக்களிப்பது மட்டுமானதாக மாற்றப்பட்டுள்ளது.

தனியார்மயம்  தாராளமயக் கொள்கையுடன் நாடும் மக்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், இத்தகைய மறுகாலனியாக்கச் சித்தாந்தப்படி, அரசுக்கும் மக்களுக்குமிடையிலான உறவில் குடிமக்களை வெறும் நுகர்வோராக மட்டுமே அரசு கருதுகிறது. கடுமையாக உழைத்து வாழ்வை விதம் விதமாக அனுபவிக்க வேண்டுமென்ற உணர்வைத்தான் அது கற்பிக்கிறது. அரசியல் என்பது சாக்கடை, குறுக்கு வழியில் கொள்ளையடிக்கவே அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்றும், அரசியல் சாராத படித்த வர்க்கத்தினரும் நிபுணர்களும் நிர்வாகத்தை நடத்தினால்தான் நாடு முன்னேறும் என்று போதிக்கப்பட்டு அரசியலிலிருந்தே, அரசியல் நடவடிக்கைகளிலிருந்தே படிப்படியாக மக்கள் விலக்கி வைக்கப்பட்டு வருகிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத்திட்டங்களிலும் குளங்கள், ஏரிகள், ஆறுகள், காடுகள் போன்ற இயற்கை வளங்களை பராமரித்துப் பயன்படுத்துவதற்கான சுயேச்சையான அதிகாரம் கொண்ட குழுக்களிலும் ஊராட்சி, நகராட்சி தலைவர்கள், தன்னார்வ குழுக்கள், மகளிர் சுயநிதி உதவிக் குழுக்கள் ஆகியோருடன் மக்களில் சில முக்கியமானவர்களையும் பங்கேற்க வைப்பது; இதன் போக்கில் மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் வாயிலாக, தங்கள் மூலம்தான் அரசாங்கம் நடத்தப்படுகின்றது என்ற எண்ணத்தை வேர்மட்ட அளவில் ஏற்படுத்தி, மக்களை அரசியல் பக்கம் போகாமல் தடுக்கும் உலகவங்கி திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வேறுபட்ட கொள்கைகளுக்காக வௌ;வேறு அரசியல் கட்சிகளில் மக்கள் அணிதிரள்வதும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அதனடிப்படையில் ஓட்டுப் போடுவதுமான சாத்தியத்தை அரசியல் அரங்கிலிருந்து நவீன தாராளவாதம் எனப்படும் மறுகாலனியாதிக்கப் போக்கு நீக்கி வருகின்றது. "சிறந்த அரசாளுமை' என்பதே எல்லா அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டுமென்று இப்போக்கு வரையறுத்துள்ளது. புதிய தாராளவாத வகையிலான கட்டுமான சீர்திருத்தங்களை கறாராகவும் ஈவிரக்கமின்றியும் செயல்படுத்துவதையே சிறந்த அரசாளுமை என்று உலக முதலாளித்துவும் போற்றுகிறது. இதற்கேற்ப ஓட்டுக் கட்சிகளுக்கிடையே கொள்கை வேறுபாடுகள் இல்லாமல் போய்விட்டன. எல்லா ஓட்டுக் கட்சிகளும் கார்ப்பரேட் கொள்ளைக்கான சேவையில் ஓரணியில் நிற்பதாக மாறிவிட்ட பிறகு, கொள்கை வேறுபாடுகள் காலிப் பெருங்காய டப்பாவாக மாறிவிட்டன. பணபலம், சாதிய பலம், குண்டர் பலத்தைக் கொண்டு தேர்தலைச் சந்திப்பதாக ஓட்டுக் கட்சிகளும் இன்று மாறிவிட்டன.

ஒரு பொதுக் கூட்டம் என்றால் மேடை அமைப்பது, தோரணம் கட்டுவது, சுவரொட்டி விளம்பரம் செய்வது,மக்களைத் திரட்டி வருவது  என இதுநாள்வரை தொண்டர்கள் செய்து வந்த பணிகளை இப்போது காண்டிராக்டர்களிடம் ஓட்டுக் கட்சிகள் ஒப்படைத்துவிட்டன. ஓட்டுக் கட்சிகளின் தன்மையும் இப்போது மாறிவிட்டதால், அவற்றுக்கு மக்களை அரசியல்  ரீதியில், கொள்கை அடிப்படையில் அணிதிரட்டவோ, அரசியல் போராட்டங்களை நடத்தவோ அவசியமில்லாமல் போய்விட்டன. அரசு அதிகாரத்திலிருந்து சொல்லிக் கொள்ளப்படுகிற ஜனநாயகத்தை வெளியேற்றி விட்டு, முதலாளித்துவ வர்க்கக் கோடீசுவரர்கள் அதனைக் கைப்பற்றியிருப்பது போலவே, எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலும் உட்கட்சி ஜனநாயகம் ஒழிந்து ஒருகும்பல் அல்லது குடும்பத்தின் அதிகாரமாக சீரழிந்திருக்கிறது.

முன்பு சேஷன் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தபோது, இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகள் கறாராகத் திணிக்கப்பட்டன. இது, தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தவேண்டும் என்ற நல்லெண்ணத்திலிருந்து உருவானதல்ல. மாறாக, மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு ஏற்ப அரசு நிர்வாக அமைப்பிலும், தேர்தல் முறையிலும் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக அதற்கேற்ப தேர்தல் நடத்தை விதிகளும் மாற்றப்பட்டன. ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது,சுவரெழுத்துகள் சுவரொட்டிகளால் நகரின் அழகு கெடுகிறது என்று கூறி இவற்றுக்குத் தடைவிதித்து புதுப்புது ஜனநாயக விரோதச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இப்படி மறுகாலனியத்துக்குப் பொருத்தமான முறையில், அரசு அமைப்பிலும் அரசியல் கட்சிகளிலும் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களுக்கு ஏற்ப அரசியலிலிருந்தும், அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் மக்களை விலக்கி வைப்பது என்ற நோக்கத்தை நிறைவேற்றவே தேர்தல் ஆணையம் இம்சைஅரசனாக ஆரவாரம் செய்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைய அரசியலமைப்பு முறை மீது நம்பிக்கை ஏற்படுத்த ஓட்டுக்கட்சிகளின் அராஜகங்களுக்கு எதிராகக் கெடுபிடிகளைக் காட்டுகிறது. இன்றைய அரசிமைப்பு முறை மீதும், ஓட்டுச் சீட்டு தேர்தல் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையிழந்து புரட்சிகர இயக்கங்களின் பக்கம் மக்கள் திரும்புவாதைத் தடுக்கும் நோக்கில், இன்றைய அரசியலமைப்பு முறையில் சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டால், விதிகளைக் கறாராகச் செயல்படுத்தினால் தேர்தல் அராஜகங்களைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊடகங்களின் சந்தை நடுத்தர வர்க்கத்தினரிடம் மையமாக இருப்பதால், நடுத்தர வர்க்கத்தின் கருத்தைப் பிரதிபலித்து இத்தகைய நடவடிக்கைகளை அவை ஆரவாரத்துடன் வரவேற்கின்றன.

இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, தேர்தல் ஆணையம் ஏதோ சுதந்திரமான  நடுநிலை யான தேர்தலை நடத்தும் நோக்கத்தில் நடத்தை விதிகளைக் கறாராகச் செயல்படுத்துவதாகக் கூறி ஆளும் வர்க்கங்களும் அவற்றின் ஊதுகுழல்களாக ஊடகங்களும் மக்களை ஏய்த்து வருகின்றன.

 

தனபால்