Fri04262024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்: போலீசின் அவதூறு! ஊடகங்களின் பக்கமேளம்!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்: போலீசின் அவதூறு! ஊடகங்களின் பக்கமேளம்!!

  • PDF

கடந்த பிப்ரவரி 23 அன்று சென்னை  பச்சையப்பன் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த போலீசு கும்பல், அக்கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கல், செருப்பு, உடைந்த பாட்டில்களை மாணவர்கள் மீது வீசியெறிந்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்தது. தடியடியில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற அக்கல்லூரி ஆசிரியர்களையும் தாக்கிய போலீசு கும்பல், கல்லூரியின் உடைமைகளையும் சேதப்படுத்தியது. இம்மிருகத்தனமான தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முயன்றதற்காக, பொலீசுப் பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் 300 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செயப்பட்டுள்ளது.

 

 

கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் தாக்கி, உடைமைகளையும் சேதப்படுத்தியிருக்கிற போலீசாரின் அடாவடித்தனத்தை எந்த ஊடகமும் கண்டிக்கவில்லை. மாறாக, @பருந்து தினக் கொண்டாட்டத்தை போலீசார் தடுத்ததனால் ஆத்திரமுற்ற மாணவர்கள், பாதுகாப்புப்பணியில் இருந்த துணை கமிசனர் லெட்சுமி மீது பாக்கெட் தண்ணீரைப் பீசூச்சியடித்ததாகவும், மாணவர்கள் போலீசார் தாக்கியதில் பெண் பொலீசு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பொலீசார் படுகாயமுற்றதாகவும், இதன் காரணமாகவே கல்லூரிக்குள் நுழைந்து தடியடி நடத்த வேண்டிய அவசியம் பொலீசசுக்கு ஏற்பட்டதாகவும் திரித்து செய்தி வெளியிட்டு, போலீசின் அத்துமீறலை ஊடகங்கள் நியாயப்படுத்தியுள்ளன.

அன்றாடப் பேருந்து பயணத்தின்போதும், குறிப்பாக பேருந்து தினக் கொண்டாட்ட நாளன்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, சென்னையில் உள்ள வேறு சில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுள் ஒரு பிரிவினர் நாகரிகமின்றிப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொள்வது மறுக்கமுடியாத ஒன்றுதான். ஆனால், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மாணவர்களின் இந்த அராஜகத்தைக் கட்டுப்படுத்திச் சட்டம்ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் நடத்தப்பட்டதல்ல் ஊடகங்களும் போலீசும் சித்தரிப்பது போல தற்செயலாய் நடைபெற்றுவிட்ட தாக்குதல் சம்பவமும் அல்ல.

போலீசின் தடையை மீறிப் பேருந்து தினக் கொண்டாட்டத்தை நடத்த முயன்ற ஒரு சில மாணவர்களை அல்லது போலீசு துணை கமிசனர் லெட்சுமி மீது தண்ணீரைப் பீசூச்சியடித்ததாகச் சொல்லப்படும் அந்தக் குறிப்பிட்ட மாணவரைக் கைது செய்து, இந்தப் பிரச்சினையைத் தடியடியின்றிச் சுமுகமாக முடித்திருக்க முடியும். ஆனால், போலீசோ அப்படிபட்ட முயற்சிகள் எதையும் செய்யவில்லை. மேலும், வழக்கமாகப் @பருந்து தினக் கொண்டாட்டத்தில் பிரச்சினை ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட கல்லூரிக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து, ஆசிரியர்களை வரவழைத்து மாணவர்களை அழைத்துக் கொண்டு போகும்படிச் சொல்வதுதான் இதற்கு முன்புவரை போலீசார் பின்பற்றி வந்த நடைமுறை. ஆனால், இச்சம்பவத்தின்பொழுது போலீசார் அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. சம்பவத்தின் இந்தப் பின்னணி போலீசுக்கு ஏதோவொரு உள்நோக்கம் இருக்கக்கூடும் என்பதைத்தான் உறுதிப்படுத்துகிறது.

கிட்டதட்ட 6,000 மாணவர்கள் படிக்கும் பச்சையப்பன் கல்லூரியில் ஒரு சில மாணவர்கள்தான் கும்பலைச் சேர்த்துக் கொண்டு பேருந்துப் பயணம் போன்ற பொது இடங்களில், அநாகரிகமாகவும், அராஜகமாகவும் நடந்து வருகின்றனர். அதே சமயம், இதற்கு நேர் எதிரான பண்புகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் அக்கல்லூரியில் படித்து வருவது எத்தனைபேருக்குத் தெரியும்?

இலங்கையில் இந்திய அரசின் ஆதரவோடு ராஜபக்சே கும்பல் நடத்திய ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், சென்னை  கிண்டியிலுள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் தமது உரிமைகளுக்காக நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரியும்  இப்படிப் பல்வேறு பிரச்சினைகளுக்காக அரசை எதிர்த்துப் போராடியுள்ள இக்கல்லூரி மாணவர்கள், தற்பொழுது சென்னை நகரில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்காகத் தமது கல்லூரியின் நிலம் அபகரிக்கப்படும் அபாயத்தை எதிர்த்தும் போராடி வருகின்றனர். இவை மட்டுமின்றி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே தம்மிடம் அராஜகமாகவும் அநாகரீகமாகவும் நடந்துகொண்ட போலீசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி, அப்படி நடந்து கொண்ட போலீசை மன்னிப்புக் கேட்க வைத்ததோடு, அப்போலீசாரைப் பணியிடை நீக்கமும் செய்ய வைத்தனர்.

பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை அமைப்பாகத்திரட்டி, அவர்களிடம் தமது உரிமைகளுக்காகவும் பொது பிரச்சினைகளுக்காகவும் போராட வேண்டும் என்ற உணர்வைப் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி என்ற நக்சல்பாரி புரட்சிகர அமைப்புதான் ஊட்டி வருகிறது. இப்படிபட்ட புரட்சிகர அமைப்பின் செல்வாக்கின் கீழ் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திரண்டு போராடி வருவதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத போலீசு, கல்லூரியில் அவ்வமைப்பின் செயல்பாட்டை முடக்க பல்வேறுவிதமான இடையூறுகளையும் நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறது. இத்தடியடி குறித்து உதவி கமிசனர் சாரங்கன் என்.டி.டி.வி.க்கு அளித்த நேர்காணலில், "மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள் என்றால், உள்ளே ஏதோ ஒரு சக்தி அவங்களை இயக்குது' எனக் கூறியிருக்கிறார். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.

நக்சல்பாரி புரட்சிகர மாணவர் அமைப்பின் கீழ் திரண்டுவரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்குலத்தியின் மூலம் பாடம் புகட்ட விரும்பிய போலீசு, அதற்கு பேருந்து தினக் கொண்டாட்டத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. தனது இந்த உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான சாதகமான புறச்சூழலையும் திட்டமிட்@ட உருவாக்கியது, சென்னை போலீசு.

இந்த ஆண்டு நடைபெற்ற அனைத்து பேருந்து தினக் கொண்டாட்டத்திலும் பேருந்து புறப்படும் இடத்திலேயே மாணவர்களைக் கலைந்துபோகச் சொல்லித் தடுப்பதற்குப் பதிலாக, பேருந்தில் மாணவர்களை ஏற அனுமதித்து விட்டு, வழி நெடுகிலும் வழக்கத்திற்கு மாறாக போலீசுப்படையைக் குவித்துப் பீதியூட்டியது. ஆங்காங்கே அப்@பருந்தை வழிமறித்து மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு பேசுவதாகக்காட்டி, அதன்மூலம் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் மாணவர்களுக்கு எதிரான பொதுக்கருத்தையும் உருவாக்கியிருந்தது. மேலும், பேருந்து தினக் கொண்டாட்டத்தைத் தடை செயக் கோரித் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்திரவை, தடியடி தாக்குதல் நடத்துவதற்குத் தரப்பட்ட உரிமமாக எடுத்துக் கொண்டது.

குடிநீர் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தும் போலீசார், அதனை நியாயப்படுத்த தம் மீது யாரோ கல்லெறிந்ததாகப் புளுகுவது வாடிக்கையான ஒன்று. துணைகமிசனர் லெட்சுமி மீது மாணவர்கள் தண்ணீரைப் பீச்சியடித்ததாகச் சொல்லப்படுவதும் இப்படிபட்டபுளுகாக இருக்கலாம். போலீசு நடத்திய தாக்குதலின் இப்பின்னணியைப் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்வதன் மூலம் மட்டுமே, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பற்றி அவதூறு பிரச்சாரத்தை நடத்திவரும் சென்னை போலீசின் முகத்தில் கரியைப் பூச முடியும்; அவர்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பச்சையப்பன் கல்லூரி நிலம் அபகரிக்கப்படுவதையும் தடுக்க முடியும்.

இளங்கதிர் மற்றும் எழில்