Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ஜெய்தாபூர் அணுமின் திட்டம்: ஏகாதிபத்திய சேவைக்கு மக்கள் பலிகிடா!

ஜெய்தாபூர் அணுமின் திட்டம்: ஏகாதிபத்திய சேவைக்கு மக்கள் பலிகிடா!

  • PDF

தென்னை மரங்கள் அசைந்தாட, பாக்கு மரங்கள் தலையசைக்க, மாமரத் தோப்புகள் நிறைந்த கொங்கண் பிராந்தியத்திலுள்ள மதுபான் கிராம மக்களின் கண்களில் அச்சமும் கவலையும் ஆட்கொண்டுள்ளது. அக்கிராமத்தை அடுத்துள்ள கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அரபிக்கடலை வெறித்துப் பார்த்து விம்முகின்றனர். இந்த நிலமும் நீரும் கடலும் ஆறும் காய்களும் கனிகளும் வாழ்வும் வளமும் இனி அவர்களுக்குச் சொந்தமில்லை. இப்பகுதிவாழ் மக்களின் வாழ்வைப்பறிக்க இடியாய் இறங்கியுள்ளது ஜெய்தாபூர் அணு மின்திட்டம்.

ஜெய்தாபூர் அணுமின் திட்டம் என்பது உலகிலேயே மிகப் பெரிய 9,900 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் திட்டமாகும். அணுசக்தி கடப்பாடு மசோதா சட்டமாக்கப்பட்ட பின்னர் உருவாகியுள்ள பேரழிவுத் திட்டம்தான் இது. மகாராஷ்டிராவின் ரத்னாகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் துறைமுகத்தை ஒட்டியுள்ள மதுபான் கிராமத்தில் இது அமையவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது, இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன்படி, அந்நாட்டின் அரிவா எனும் நிறுவனத்தின் ஆறு அணு உலைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.  முதற்கட்டமாக 1650 மெகா வாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் 2012லிருந்து 2017க்குள் நிறுவப்படும் என்றும், இதற்கு மட்டும் ஏறத்தாழ ரூ.25,000 முதல் 35,000 கோடிகள் வரை செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இம்மாபெரும் அணுமின் திட்டத்திற்கென மதுபான் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏறத்தாழ 968 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 2,033 குடும்பங்கள் அவர்களது மண்ணிலிருந்து விரட்டப்படவுள்ளனர். கதிரியக்கம் பரவும் என்பதால் இத்திட்டம் அமைந்துள்ள இடத்தைச்சுற்றி 2 கி.மீ. தொலைவுக்கு அனைத்துக் குடியிருப்புகளும வெளியேற்றப்படவுள்ளன. இதன் படி, கடந்த 2006ஆம் ஆண்டில் நிலத்தைக் கையளிக்குமாறு விவசாயிகளுக்கு அரசு நோட்டீசு அனுப்பியது. இவ்வாண்டு ஜனவரி முதலாக போலீசு துணையுடன் நிலப்பறிப்பு நடந்து வருகிறது.

 

தோட்டக்கலை மண்டலங்களாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரத்னாகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் மா, முந்திரி, தென்னை, பாக்கு மர வளர்ப்பு முதலானவை முக்கியத் தொழிலாக உள்ளது. மாம்பழங்களின் அரசனாகச் சித்தரிக்கப்படும் அல்போன்சோ மாம்பழம் இங்கு பெருமளவில் உற்பத்தியாகி, கணிசமான அளவுக்கு மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஜெய்தாபூர் அணுமின் திட்டம் வெளியேற்றும் கழிவுகளால் இம்மாவட்டங்களில் மரம் வளர்ப்புத் தொழிலும் விவசாயமும் நாசமாகி, ஏறத்தாழ 7 இலட்சம் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

 

ரத்னாகிரி மாவட்டத்தின் கடலோர சக்ரி நாதே கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆண்டுக்கு பத்தாயிரம் டன் அளவுக்கு மீன் பிடிக்கின்றனர். இந்நிலையில், கடல்நீரை அணுமின் நிலையம் உறிஞ்சினாலும், கழிவு நீரை கடலுக்கு வெளியேற்றினாலும் மீன்வளம் நாசமாகும். மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள இக்கிராம மக்களின் வாழ்வுரிமை இத்திட்டத்தால் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடோடிகளாக அலைய நேரிடும். 5000க்கும் மேற்பட்ட கடற்வாழ் உயிரிகளும் ஒருசெல் உயிரி வகைகளும் நிறைந்துள்ள, உலகின் பல்லுயிரிப் பெருக்கக் கடற்பகுதிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொங்கன் கடற்கரைப் பகுதியானது இத்திட்டத்தால் நாசமாகும். மேலும், நிலநடுக்க அபாயமுள்ள பகுதியில் இந்த அணுமின் திட்டம் நிறுவப்படுவதால் பெருத்த அபாயம் ஏற்படும் என்று சுற்றுச்சூழலாளர்களும் புவியியலாளர்களும் எச்சரிக்கின்றனர். இதுமட்டுமின்றி,மரபுரீதியான அனல் மின் திட்டங்களை ஒப்பிடும்போது அணுமின் திட்டங்கள் மிக ஆபத்தானவை. அணுமின் திட்டத்தின் மூலம் பெறப்படும் மின்சாரம், நிலக்கரி மூலமாக அனல்மின் திட்டத்தின் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அடக்கச் செலவைவிட 2 முதல் 3 மடங்கு அதிகமாகும் என அணு ஆயுதத்துக்குத் தடை மற்றும் அமைதிக்கான கூட்டமைப்பு விரிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.

 

இருப்பினும், கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு பிரெஞ்சு அதிபர் வருவதற்கு முன்னதாக, நவம்பர் 28 ஆம் தேதியன்று அவசர அவசரமாகச் சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதை எதிர்த்து கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று இந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு தடையை மீறிப் போராட்டம் நடத்திக் கைதாகினர். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஜி. கோஸ்லே பட்டீல், முன்னாள் கடற்படைத் தளபதி ராம்தாஸ், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் முதலானோர் இப்பகுதிவாழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து நிற்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இப்பகுதிவாழ் மக்கள் எந்தவகையிலான நிவாரணத்தையும் இதுவரை ஏற்கவில்லை. கூடுதல் நிவாரணமும் கோரவில்லை.

 

பிரஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி இந்தியாவுக்கு வந்தபோது, டிசம்பர் 4 அன்று இத்திட்டத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் மீனவர்களும் தடையுத்தரவை மீறி ஜெய்தாபூர் அணுமின் திட்டத்துக்கு எதிராக ஆங்கிலம், பிரெஞ்சு, மராத்தி மொழிகளில் பதாகைகளை ஏந்திப் போராட்டம் நடத்தினர். கொங்கன் பசசோசமிதி, ஜன்ஹித் சேவா   சமிதி, கொங்கன் வினாஸ்கரி பிரகல்ப்விரோதி சமிதி முதலான தன்னார்வ அமைப்பினர் ஜெய்தாபூர் அணுமின் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். அணுமின் திட்டம் அமையவுள்ள பகுதியில் நிரந்தரமாக போலீசுப்படை நிறுத்தி வைக்கப்பட்டு, ரத்னாகிரி மாவட்டமே போலீசு ராஜ்ஜியமாக மாறிவிட்டது. கடந்த இரு மாதகாலமாகப் பள்ளி  கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் விவசாயிகளும் ஆடுமாடு மேய்க்கச் சென்ற பெண்களும் சிறுவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னணியாளர்கள் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டதால், அவர்களில் பலர் இன்று தலைமறைவாகி விட்டனர்.

 

பிரான்ஸ் நாட்டின் ஆறுகளை அணுக்கழிவுகள் மூலம் நாசப்படுத்துவதாக பிரான்ஸ் நாட்டிலேயேய அரிவா நிறுவனத்தின் மீது வழக்கு நடந்து வருகிறது. பின்லாந்து, பிரான்ஸ்,  பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த  ஐரோப்பிய அணுசக்தி முறைப்படுத்தல் ஆணைய அதிகாரிகள், அரிவா நிறுவன அணு உலைகளின் பாதுகாப்பை அங்கீகரிக்கவில்லை. இந்த அரிவா நிறுவனம் தான் இப் போது ஆறு அணுஉலைகளை வடிவமைத்து இந்தியாவில்  நிறுவப் போகிறது.

 

ஏகாதிபத்திய நாடுகளில் தீவிரமாகி விட்ட பொருளாhர நெருக்கடியிலிருந்து மீள போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மேம்பாலங்கள், அணுமின் திட்டங்கள் முதலானவற்றை ஏகாதிபத்திய நிறுவனங்கள் ஏழை நாடுகளில் திணித்து வருகின்றன. சென்னையில் கூவம் ஆற்றின் மேலாக கட்டப்படும் அதிவிரைவு  சரக்குப் போக்குவரத்துக்கான மேம்பாலத் திட்டமானது, உற்பத்திப் பொருட்களை ஏகாதிபத்திய நிறுவனங்கள் விரைவாக துறைமுகத்துக்குக் கொண்டு செல்வதற்காகவே அமைக்கப்படுகிறது. இது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அவசியமான திட்டமாகச் சித்தரிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கூவம் ஆற்றோரக் குடிசைவாழ் மக்கள் கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டனர்.

 

இப்படித்தான், உலக வங்கி நிர்ப்பந்தப்படி நர்மதா அணைக்கட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் அவர்களது மண்ணிலிருந்து விரட்டப்பட்டனர். இப்படித்தான், தாமிரவருணி ஆற்றைகோக் உறிஞ்சவும், போஸ்கோவும் வேதாந்தாவும் ஒரிசாவின் கனிம வளங்களைக் கொள்ளையிடவும் அனுமதிக்கப்பட்டு, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கானதாகச் சித்தரிக்கப்படுகின்றன. இப்படித்தான், ஜெய்தாபூர் அணுமின் திட்டமும் உள்நாட்டுத் தேவைக்கான அவசியமான திட்டமாக இல்லாமல், ஏகாதிபத்தியங்களின் நெருக்கடிக்குத் தீர்வைத் தேடும் திட்டமாக இங்கே திணிக்கப்படுகிறது.  இதனால்தான்,  சுற்றுச் சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், "நான் இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. இது நாட்டின் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். இது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் உருவானதாகும்' என்று விளக்கமளித்து, இது ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்ட திட்டம்தான் என்பதை வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

 

"எங்கள் நிலங்களைப் பறிப்பதற்காக மட்டும் நாங்கள் போராடவில்லை.  இயற்கையை அழிப்பதை எதிர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம்' என்கிறார்கள், ரத்னாகிரி மாவட்ட விவசாயிகளும் மீனவர்களும். அவர்களது நியாயமான போராட்டமும், நர்மதா அணைக்கட்டு திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் போராட்டமும், சட்டிஸ்கர் மற்றும் ஒரிசா மக்களின்போராட்டங்களும், சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகத் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத் தேர்வாய் கிராம மக்களின் போராட்டமும் வௌ;வேறானவை அல்ல. இவையனைத்தும் ஏகாதிபத்தியக் கொள்ளைக்கும் மறுகாலனியாக்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் சங்கமிக்கும் நீரோட்டங்களாகவே உள்ளன. இப்போராட்டங்களை ஒருங்கிணைத்து மறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச் செல்வதே புரட்சிகர  ஜனநாயக சக்திகளின் இன்றைய அவசர அவசியக் கடமையாகியுள்ளது.

 

• குமார்

Last Updated on Sunday, 11 December 2011 21:20