Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி

உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி

  • PDF

1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.

 

 

பழைய ரசியா இல்லாதொழிந்தது. ஊழிக்காலத் தீயிலே மானுட சமுதாயம் உருகித் திரவமாய் ஓடிற்று. இந்தத் தத்தளிக்கும் தீக்கடலிலிருந்து இரக்கமற்ற அப்பட்டமான வர்க்கப் போராட்டமும், புதிய கிரகங்களது மெல்லக் குளிர்ந்து கெட்டியாகும் மொறுமொறுப்பான மேலோடும் உருவாகி வெளிப்பட்டன.

 

ரசியப் புரட்சி இரண்டு அங்கங்களைக் கொண்டது. முதலாவது, பழைய ஆட்சியினை ஒழித்திடுதல், இரண்டாவது புதிய ஆட்சியினை உருவாக்குதல்.

 

ரசிய உழைப்பாளி மக்கள் கடந்து கொண்டிருந்த இன்னல்மிக்க இத்தருணத்தில் ஸ்மோல்னி மாளிகை லெனின் தலைமையிலான புரட்சி போல்ஷ்விக் கட்சியின் செயல்தளமாகச் செயல்பட்டது. சிறுபான்மை மென்ஷ்விக்கு சமரசவாதிகளும், "சோசலிசப் புரட்சியாளர்கள்' என்று தங்களை அழைத்துக் கொண்ட வலதுசாரிகளும் தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைத்து, கெரன்ஸ்கி அரசாங்கம் கூடிய விரைவில் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதாகச் சொல்லி கண்ணா மூச்சி ஆட்டம் ஆடித்தள்ளிப் போட்டு வந்ததையே நியாயப்படுத்தி, மக்களை அமைதியாக இருக்கும்படி கோரிக்கை விட்டனர். இதனால் தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைத்து அரசியல் சாகசக்காரன் கெரன்ஸ்கி, பழைய ரசிய இராணுவ ஜெனரல் கர்னீலவ் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள்.

 

இத்தகைய கடுமையான சூழ்நிலையில் லெனினது போல்ஷ்விக் கட்சி தொழிலாளர்கள், விவசாயிகள், படையாட்களை ஒருங்கிணைத்து புரட்சியை வழிநடத்தியது.

 

ரசியப் புரட்சி முதலாளித்துவப் புரட்சிகளைப் போல புதிய உற்பத்திக் கருவிகளை அல்ல, புதிய வகை மனிதர்களையும் மனித உணர்ச்சிகளையும் உருவாக்கியது. பிறருக்காக அனைவருக்காகவும் அனைவரும் சிந்திக்கும் மனித அறிவு மற்றும் உணர்வு நிலையை உலகுக்கு வழங்கியது. கோடானுகோடி மக்களை ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு புள்ளியில் இணைக்கும்போது இந்தச் சித்திரம் நமக்கும் முழுமை பெறும்.

 

(மூலநூலான ஜான் ரீடின் "உலகைக் குலுக்கிய பத்து நாட்களி'லிருந்து சிறு பகுதியை கீழே வெளியிடுகிறோம்.)

 

நவம்பர் 8, 1917: ஸ்மோல்னியில் சூழ்நிலை முன்பு இருந்ததையும்விட கடுமையாகி ஒரே அமர்க்களமாயிருந்தது. இருண்ட நடைவழிகளில் முன்பு போலவே ஆட்கள் சிட்டாய்ப் பறந்தனர்; தொழிலாளர் குழுவினர் துப்பாக்கி ஏந்தி நின்றனர்; தடித்த கைப்பைகள் வைத்திருந்த தலைவர்கள், நண்பர்களும் துணைவர்களும் புடை சூழ்ந்து வர, வாதாடிக் கொண்டும் விளக்கிச் சொல்லிக் கொண்டும் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டும் பரபரக்க விரைந்து சென்றனர். மெய்யாகவே இவர்கள் மெய்மறந்தோராய் இயங்கினார்கள். இராப் பகலாய்க் கண் துஞ்சாமல் ஓயாது உழைக்கும் அருந்திறல் படைத்தோராய் இருந்தார்கள் — முகம் மழிக்கப்படவில்லை. மேலெல்லாம் அழுக்கு, கண்கள் சிவந்து ஜிவுஜி வுத்தன. அடங்காத ஆர்வத்தை விசையாய்க் கொண்டு தமது நிலையான குறிக்கோளை நோக்கி இவர்கள் முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள். இவர்கள் செய்ய வேண்டியிருந்தவை நிறைய இருந்தன, அளவின்றி நிறைய இருந்தன! அரசாங்கத்தை உருவாக்கியாக வேண்டும், நகரில் ஒழுங்கை நிலைபெறச் செய்தாக வேண்டும், நகரக் காவல் படையைத் தம் பக்கத்தை விட்டுச் செல்லாதிருக்கும்படி பார்த்துக் கொண்டாக வேண்டும், டூமாவையும் இரட்சணியக் கமிட்டியையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும், ஜெர்மானியரை உள்ளே விடாதிருக்க வேண்டும், கேரென்ஸ்கியுடன் போர் புரியத் தயார் செய்தாக வேண்டும், என்ன நடந்திருக்கிறதென்று மாநிலங்களுக்குத் தெரிவித்தாக வேண்டும், அர்ஹான்கேல்ஸ்கிலிருந்து விளதிவஸ்தோக் வரையில் பிரச்சாரம் செய்தாக வேண்டும்.

 

சரியாய் எட்டு நாற்பதுக்கு, இடியென அதிர்ந்த வாழ்த்துக்க ளுக்கும் கையொலி முழக்கத்துக்கும் இடையே தலைமைக் குழுவினர் உள்ளே வந்தார்கள், அவர்களிடையே லெனினும் மேதை லெனினும் இருந்தார். லெனின் விசித்திரமான மக்கள் தலைவர் முற்றிலும் அறிவாற்றல் என்னும் ஒரேதகுதியின் காரணமாய்த் தலைவராகியவர். வண்ணக் கவர்ச்சியில்லை, மிடுக்கில்லை, மனம் தளர்ந்து விட்டுக் கொடுக்கும் இயல்பில்லை, தன்வயப்பட்ட விருப்பு வெறுப்பில்லை, படாடோபமான தனிப் பாணிகள் இல்லை ஆனால் ஆழ்ந்த கருத்துக்களை எளிய முறையில் விளக்கும் ஆற்றலும் ஸ்தூல நிலைமையைப் பகுத்தாராயும் திறனும் நிரம்பப் பெற்றவர். இவற்றுடன் கூட மதிநுட்பமும் அசாதாரணமான தொலை நோக்குப் பார்வையும் சேர்ந்திருந்தன.

 

இப்போது லெனின் உரைமேடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றார். சிமிட்டிக் கொண்ட அவரது சிறு கண்கள் பிரதிநிதிகளது கூட்டத்தின் மீது ஒரு தரம் வட்டமிட்டு விட்டு வந்தன. கையொலி முழக்கம் நிற்பதற்காக அவர் காத்திருந்தார். ஓயாமல் சில நிமிடங்களுக்கு நீடித்த இந்த முழக்கம் அவரைப் பாதித்ததாய்த் தெரியவில்லை. அது நின்றதும் மிகவும் எளிய முறையில் அவர் சுருக்கமாய்க் கூறினார்: ""இப்போது நாம் சோசலிச அமைப்பைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்கலாம்!'' திரும்பவும் கட்டுக்கடங்காத ஆர்வ முழக்கம்.

 

""சமாதானத்தைக் கைகூடச் செய்வதற்கு நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் நம் முன்னுள்ள முதலாவது பணி... போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் நாம் சோவியத்து வரையறைகளின் அடிப்படையில் பிரதேசம் பிடித்தல் இல்லை, இழப்பீடுகள் இல்லை, தேசங்களது சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சமாதானத்தை முன்மொழிவோம். அதேபோது ஏற்கெனவே நாம் வாக்களித்தது போல், இரகசிய உடன்படிக்கைகளை வெளியிட்டு, பழையனவற்றை நிராகரிப்போம்... யுத்தத்தையும் சமாதானத்தையும் பற்றிய பிரச்சினை தெட்டத் தெளிவானது. ஆகவே, போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் பிரகடனம் என்பதான இந்தத் திட்டத்தை இங்கு நான் முன்னுரை எதுவும் இல்லாமலே படித்துக் காட்டலாமென நினைக்கிறேன்...''

 

""போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் பிரகடனம்: நவம்பர் 6,7ஆம் நாள் புரட்சியால் தோற்றுவிக்கப்பட்டு, தொழிலாளர்கள், படையாட்களை, விவசாயிகள் பிரதிநிதிகளது சோவியத்துகளை அடிப்படையாய்க் கொண்டு அமைந்த தொழிலாளர்கள், விவசாயிகளது அரசாங்கம் நேர்மையான, ஜனநாயகத் தன்மையதான சமாதானத்திற்காக உடனே பேச்சவார்த்தைகள் தொடங்கும்படி, போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் அவர்களது அரசாங்கங்களுக்கும் முன்மொழிகிறது....''

 

இடியென அதிர்ந்த கையொலி முழக்கம் பிரகடனத்தை வரவேற்றது. லெனின் தொடர்ந்து விளக்கிப் பேசினார்.

 

மணி சரியாய் 10.35 ஆயிற்று, பிரகடனத்துக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோரும் அவர்களது பிரதிநிதிச் சீட்டுகளை உயர்த்திக் காட்ட வேண்டுமென்று கூறினார் காமெனெவ். பிரகடனம் ஒருமனதாய் ஏற்கப்பட்டது.

 

சொல்லி வைத்தாற் போல் எல்லோரும் ஒரு திடீர் உணர்ச்சியால் உந்தப்பட்டு எழுந்து நின்று, ஒரே குரலாய் ஒருங்கிணையும் வண்ணம் சர்வதேசியக் கீதம் பாட முற்பட்டோம். தலை நரைத்த முதுபெரும் படையாள் ஒருவர் சிறு குழந்தை போல் விம்மியழுதார். அலெக்சாந்திரா கொலன்தாய்ழூ சட்டெனக் கண்ணீர்த் துளியைத் துடைத்து அகற்றிக் கொண்டார். அந்த ஆழ்ந்த பண்ணொலி மண்டபத்தில் பெருக்கெடுத்து, சன்னல்களையும், கதவுகளையும் அதிரச் செய்து, வெளியே நிசப்த வானத்துள் உயர்ந்து எழுந்தது. ""யுத்தம் முடிவுற்றது! யுத்தம் முடிவுற்றது!'' என் அருகே நின்ற இளந்தொழிலாளி ஒருவர் முகம் பளிச்சிட்டு ஒளிரக் கூறினார்.

 

கீதம் முடிவுற்ற நிசப்தத்தால் சங்கடப்படுவோராய் நாங்கள் நின்று கொண்டிருந்த அக்கணத்தில் மண்டபத்தின் பின் வரிசையிலிருந்து பலத்த குரலில் கூறினார் ஒருவர்: ""தோழர்களே! சுதந்திரத்துக்காக உயிர் நீத்தோரை நினைவு கூர்வோம்!'' உடனே எல்லோருமாய்ச் சேர்ந்து சவ அடக்கப் பண்ணை இசைக்க ஆரம்பித்தோம். அடிமேல் அடி வைத்துச் செல்லும் துயரார்ந்த பண். ஆயினும் வெற்றியை முழங்குவது, முழுக்க முழுக்க ரசியப் பண்ணாய் அமைந்தது. நெஞ்சை நெக்குருகச் செய்வது. சவ அடக்கப் பண் இருளில் வதைந்த ரசியப் பெருந்திரளினரது இதயத்தின் பண்ணாய் ஒலிப்பது இந்தப் பெருந்திரளினரின் பிரதிநிதிகள்தான் இம்மண்டபத்தில் அமர்ந்து, தெளிவின்றி மங்கலாய்த் தமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு ஒரு புதிய ரசியாவை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

 

வெஞ்சமரில் உயிர் நீத்தீர்

வீரத் தியாகிகளாய், மக்கள்தம்

விடுதலைக்காக,

மக்கள்தம் மானம் காக்க...

இன்னுயிர் ஈந்தீர், உயிரனையவை யாவும் ஈந்தீர்;

கொடுஞ் சிறையில் வதைபட்டீர்,

கொடுமைக்கோர் அளவில்லை,

கடுங்காவல் கைதிகளாய்ச்

சங்கிலிகளில் தொலைவிடங்கள்

சென்றீர்...

சங்கிலி சுமந்து உடல் வருந்தினீர்,

உள்ளம் வருந்தவில்லை,

பட்டினியில் வதைந்த உம்

சோதரரையே

உள்ளத்தில் நினைத்திருந்தீர்;

ஒடுக்குவோரின் வாள் வீழ்ந்துபடும்,

நீதி வெல்லுமென அஞ்சாது நின்றீர்....

நீவீர் ஈந்த இன்னுயிரின் வெற்றிநாள்

இதோ வருகிறது;

கொடுங்கோன்மை தகர்ந்துவிழும், தளையறுந்து

பேருருவினராய் எழுவர் மக்கள்!

சென்று வருக சோதரர்காள்!

அழியாப் புகழ்கொண்ட

பாதை உமது பாதை!

புதுப்படை வருகிறது

உமைத் தொடர்ந்து,

சாவுக்கு அஞ்சாத படை...

சென்றுவருக சோதரர்காள்!

அழியாப் புகழ் கொண்ட

பாதை உமது பாதை!

சூளுரைக்கிறோம் உமது சமாதியில், விடுதலைக்காக,

மக்கள் தம் இன்ப வாழ்வுக்காக,

போராட, பாடுபட சபதம் ஏற்கிறோம்...

 

இதற்காகத்தான் அங்கே துஞ்சுகிறார்கள், மார்ச் மாதத்தியாகிகள் குளிரில் அமைந்த அவர்தம் சோதரத்துவச் சமாதியிலே. இதற்காகத்தான் ஆயிரமாயிரமாய் மடிந்தார்கள் சிறைக்கூடங்களில், தொலைவிடங்களில், சைபீரியச் சுரங்கங்களில்... இது வந்த விதம் இவர்கள் எதிர்பார்த்தது போன்றதாயில்லை, அறிவுத்துறையினர் விரும்பியது போன்றதாகவும் இல்லை. ஆனால் வந்து சேர்ந்தது இது கரடுமுரடானது, பெரும் பலம் படைத்தது, சூத்திரங்களுக்கு அடங்காதது, உணர்ச்சிப் பசப்புகளை மதியாதது; மெய்யானது...

 

மு பஷீர்

 

அலெக்சாந்திரா கொலன்தாய் (1872 1952): 1915லிருந்து போல்ஷ்விக் கட்சியின் உறுப்பினர், நவம்பர் புரட்சிக்குப் பிறகு பொதுநலத்துறை மக்கள் கமிசார்.

Last Updated on Friday, 06 November 2009 07:27