Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் “இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு மீனவர்களைப் பலியிடாதே! மீனவர்களின் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்தும் உரிமையைச் சட்டப்படி வழங்கு! கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டு!” பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொதுநல வழக்கு.

“இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு மீனவர்களைப் பலியிடாதே! மீனவர்களின் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்தும் உரிமையைச் சட்டப்படி வழங்கு! கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டு!” பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொதுநல வழக்கு.

  • PDF

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், இந்திய மேலாதிக்கம் மற்றும் இந்திய ஓட்டுப் பொறுக்கிகளை அம்பலப்படுத்தியும், மீனவர்களுக்கு ஆயுதம் ஏந்தும் உரிமை கோரியும், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் சுவரொட்டி, துண்டறிக்கை, ஆர்ப்பாட்டங்கள் போன்ற வடிவங்களில் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. இந்திய அரசிடம் மீனவர்கள் பாதுகாப்புக் கோருவது பயனற்றது. சிங்களக் கடற்படையைத் தமிழக மீனவர்கள் திருப்பிச் சுட்டுக்கொல்லாதவரை நடந்துள்ள கொலைகளுக்கு நீதி கிடைக்காது எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

 

இதனை ஒட்டி, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அதன் மதுரைக் கிளை வழக்குரைஞர் வாஞ்சிநாதன், இரண்டு பொதுநல வழக்குகளை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

 

"இந்திய அரசியல் சட்டப்பிரிவு 19(1)(ஜி)யின் படி மீன்பிடி உரிமையும், சட்டப் பிரிவு 21இன்படி வாழ்வுரிமையும் மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். இவற்றைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு அக்கடமையிலிருந்து தவறிவிட்டதால், தமிழக மீனவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே, மீனவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைவருக்கும் உரிமம் கொண்ட துப்பாக்கிகளை இலவசமாக அளிக்கவேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இத்தற்காப்பு உரிமையை நிலைநாட்ட வேண்டும்' என்று ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் மீது ஏன் புலன்விசாரணை நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

 

மற்றொரு பொதுநல வழக்கில், "இந்திய  இலங்கை ஒப்பந்தங்கள் 1974, 1976இன்படித் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், கச்சத்தீவை மையப்படுத்தித் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் கடல் எல்லையை இந்திய அரசு வரையறுக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.

 

மேற்படி வழக்குகள் 15.2.2011 அன்று விசாரணைக்கு வந்து வழக்குரைஞர் லஜபதிராய் ஆஜராகி வாதிட்டபோது, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவைக் காரணம் காட்டி, நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

 

 

மீனவர் படுகொலைக்குத் துணைநிற்கும் இந்திய அரசை எதிர்த்தும், சுனாமி குடியிருப்பு கட்டியதில் நடந்துள்ள பலகோடி ஊழலை அம்பலப்படுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 21.2.2011 அன்று ம.உ.பா. மயத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் களும் மீனவர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

 

பு.ஜ.செய்தியாளர்கள்