Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தனியார்மயம் தாராளமயம் ஊழல்மயம்

தனியார்மயம் தாராளமயம் ஊழல்மயம்

  • PDF

ஸ்பெக்ட்ரம் ஊழலில் டாடாவும், அம்பானியும் அடித்த இமாலயக் கொள்ளை அம்பலமாகி, இன்னும் அதன் முதல்நிலை விசாரணைகூட முடியவில்லை, அதற்குள் ஸ்பெக்ட்ரம் ஊழலையே விஞ்சிடும் எஸ்பேண்ட் ஊழல் அம்பலமாகியிருக்கிறது.

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம், பெங்களூருவை மையமாகக் கொண்ட தேவாஸ் மல்ட்டிமீடியா எனும் தனியார் நிறுவனத்துக்கு எஸ் பேண்டு அலைக்கற்றைகளை ஏலம் ஏதுமின்றி அடிமாட்டு விலைக்கு விற்க 2005ஆம் ஆண்டு ஜனவரியில் செய்துகொண்ட மோசடியான இரகசிய ஒப்பந்தமே எஸ்பேண்ட் ஊழல்.

 

இவ்வொப்பந்தம் 2 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இஸ்ரோவிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிட்ட மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கையை இந்து நாளேட்டுக் குழுமம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இந்த தேவாஸ் நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் வேறு யாவருமல்ல் இஸ்ரோவின் முன்னாள் அதிகாரியான டாக்டர் எம்.ஜி.சந்திரசேகரும் அவரது கூட்டாளிகளும்தான்.

 

இவ்வொப்பந்தப்படி, தேவாஸ் நிறுவனத்துக்காக ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவும். இக்கோள்களில் பொருத்தப்பட்டு இருக்கும் "டிரான்ஸ்பாண்டர்' களில் 90 சதவீதத்தை தேவாஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். இவ்வொப்பந்தப்படி, இச்செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கு ரூ.174 கோடியை தேவாஸ் நிறுவனம் இஸ்ரோவிற்குத் தரும். விண்ணில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், அலைக்கற்றை வாடகையாக ரூ.1150கோடியை இந்நிறுவனம் இஸ்ரோவுக்கு வழங்கும். அதாவது, இஸ்ரோ கட்டமைத்து ஏவும் செயற்கைக்கோள்களின் அலைக்கற்றையில் 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை தேவாஸ் பயன்படுத்திக் கொள்ள, அது தரும் வாடகை வெறுமனே ரூ.1150 கோடிதான்.

 

ஆனால் இதே எஸ்பேண்டின் 15 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 2008இல் இந்திய அரசு,

பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றுக்கு ரூ.67,719 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது. இதிலிருந்தே இவ்வொப்பந்தத்தின் மோசடித்தனத்தையும், ஊழலின் பிரம்மாண்டத்தையும் புரிந்து கொள்ளலாம்.

 

இந்த அலைக்கற்றைகளைப் பயன்படுத்தி இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் நேரடி டிவி நிகழ்ச்சிகளையும், தரைவழிக் கம்பித் தடம் மூலம் செல்போன், தொலைபேசி, இன்டர்நெட் சேவைகளையும் வழங்கிட முடியும். இந்த ஒப்பந்தம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும்போது, இத்துறையில் ஏகபோகமாகக்  கோலோச்சப்போகும் தேவாஸ், அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அடையப்போகும் இலாபம் பல இலட்சம் கோடிகளாக இருக்கும்.

 

செயற்கைக் கோள்களை ஏவுவதில் இஸ்ரோ தாமதம் செய்தால், தேவாஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு தரவேண்டும் என ஒப்பந்தம் சொல்வதால், ஏரியன்ஸ்பேஸ் எனும் ஐரோப்பிய நிறுவனம் மூலம் ரூ.2400 கோடி செலவில் செயற்கைக் கோளை ஏவ இஸ்ரோ முயல்கிறது. ஆனால், இஸ்ரோவே இச்செயற்கைக்கோள்களை ஏவினால், அதற்குச் சில நூறு கோடிகள் மட்டுமே செலவாகும்.

 

அடிமாட்டு விலைக்கு அலைக்கற்றைகளை வாங்க ஒப்பந்தம் போட்ட 5 பின், தேவாஸ் நிறுவனம் தனது பங்குகளைக் கொள்ளை இலாபத்திற்கு விற்றுள்ளது. டாய்ச் டெலிகாம் எனும் ஜெர்மனி நிறுவனம் தேவாசின் பங்குகளில் 17 சதவீதத்தை 76 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. கொலம்பியா கேப்பிட்டல் மற்றும் டெலிகாம் வெஞ்சுரர்ஸ் ஆகியவையும் தேவாசின் பங்குகளைப் பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளன.

 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க முடியாத அளவிற்கு தகவல்கள் வெளிவந்து விட்ட பிறகும், அவ்வூழலைக் கூட்டணிக் கட்சியான தி.மு.க. செய்ததாகக் காட்டித் தப்பித்துவிட காங்கிரசு கும்பல் முயலுகிறது. ஆனால், பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் விண்வெளித்துறையிலேயே வரலாறு காணாத ஊழல் நடந்திருந்தபோதிலும் அதுகுறித்து பேச மறுக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங். இவ்வூழல் குறித்துத் தினமும் ஒவ்வொரு பொய்யாகச் சொல்லி வருகிறது, விண்வெளித் துறை அமைச்சகம்.

 

பிரதமருக்கு ஒப்பந்தம் பற்றி எதுவுமே தெரியாது என பிரதமர் அலுவலகம் புளுகியது.  ஆனால், இவ் வொப்பந்தம் போடப்பட்டபோது விண்வெளித்துறை இணை அமைச்சராக இருந்த சவாண், அப்போதே ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வந்ததாகக் கூறியதும் இந்தப் புளுகு சந்தி சிரித்தது. ஒப்பந்தம் போடப்படுவதற்கு 2வாரம் முன்பு வரை தேவாஸ் நிறுவனத் தலைவர் பிரதமர் அலுவலக அதிகாரிகளைப் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

 

இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு என்று மத்திய அரசின் தணிக்கைத்துறை சொன்னதும், பிரதமர் அலுவலகமோ 'இந்த ஒப்பந்தப்படி அலைக்கற்றை ஒதுக்கப்படுவது நடைமுறைக்கு இன்னும் வராததால், அரசுக்கு வருவாய் இழப்பேதும் இல்லை' என்றது. இதுவும் ஓரிரு நாட்களில் பொய் என்பது தெரிந்து போனது. அதிகாரப்பூர்வமாக அலைக்கற்றை ஒதுக்கப்படும் முன்பே தேவாஸ் நிறுவனம் ஏற்கெனவே எஸ்பேண்ட் அலைக்கற்றையைப் பெற்று, இந்திய ரயில்வேக்கு இண்டெர்நெட் சேவைகளை வழங்க சில முன்னோட்டங்களையும் செய்து காட்டி வருகிறது எனும் விசயமும் அம்பலமாகிவிட்டது.

 

இவ்வாறு அடுத்தடுத்து அம்பலமான அரசு, இந்த ஊழல் குறித்து விசாரிக்க இருநபர் குழுவை அமைத்தது. அதில் ஒருவரான பி.கே.சதுர்வேதி, அமைச்சரவைச் செயலராக இருந்து இந்த ஒப்பந்தத்தை அனுமதித்தவர். திருட்டுக்குத் துணை நின்றவனிடமே திருட்டைப் பற்றி விசாரிக்கச் சொல்வதா என்ற கேள்விக்கு அமைச்சர் அம்பிகா சோனி "தன் மீதான குற்றச்சாட்டை சதுர்வேதி மறுத்திருக்கிறார். தம்மால் வெளிப்படையான அறிக்கையைத் தர முடியும் என சதுர்வேதிகூறி இருக்கிறார்' என்று "விளக்கினார்!"

 

பின்னர் அவசர அவசரமாக ஒப்பந்தத்தை ஆய்வு செய்த விண்வெளி ஆணைய அதிகாரிகள், இரண்டு மணி நேரத்தில் தமது விவாதத்தை முடித்துக் கொண்டு, "பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்' என அறிவித்தனர். இதனை அடுத்து, ஒருவழியாக ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த மைய அரசு, ""அலைக்கற்றையின் தேவை அதிகமாக உள்ளது. இராணுவம், துணை ராணுவம், ரயில்வேதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பயன்பாட்டுக்குத் தேவைப்படுகிறது. நாட்டின் தேவையைக் கருத்தில் கொண்டு ஆன்ட்ரிக்ஸ் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகளை ஒதுக்க இயலாது' என்ற காரணத்தைக் கூறி, ஊழல் நடந்திருப்பதை மறைத்தது.

 

2ஜி அலைக்கற்றை ஊழலை விடப் பெரிதான எஸ்பேண்டு ஊழலைத் தனது அரசியல் இலாபத்திற்காகவேனும் மக்களிடம் அம்பலப்படுத்தி, "திருவாளர் பரிசுத்தம்' மன்மோகன் சிங்கைத் தனிமைப்படுத்தும் வேலையைச் செய்யக்கூட எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. அறிக்கைப் போரோடு நின்றுகொண்டன.

 

நாட்டின் வளம் சூறையாடப்பட்டதை விட, அது அரசாங்க ஒப்புதல் பெறப்படாததுதான் தவறு என பா.ஜ.க. கவலைப்பட்டது. பா.ஜ.க.வின் கவலைக்கும் காரணமிருக்கிறது. ஏனெனில், இந்த தேசத் துரோக ஒப்பந்தத்தின் ஆணிவேரே 2003இல் வாஜ்பேயி காலத்தில் நடைபெற்ற ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தையில் உள்ளது.

 

"ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைப்பட்டியலில் (பொக்ரான் அணுகுண்டு வெடிப்பை அடுத்து 1998இல் அமெரிக்கா சில முக்கிய இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தது) இஸ்ரோவும் இருந்தது. அவ்வாறு இருக்க, அமெரிக்க மூலதனத்தைக் கணிசமாகப் பெற்றிருக்கும் தேவாஸ் நிறுவனத்துடன் இஸ்ரோ எப்படி ஒப்பந்தம் போட முடிந்தது? தேவாஸ் நிறுவனத்தின் முக்கிய ஆலோசகர்களாக அமெரிக்க அரசின் முன்னாள் வெளியுறவுச் செயலர் மெடலின் ஆல்பிரைட்டும், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சான்டி பெர்கரும், அமெரிக்கத் தொழில் மற்றும் வர்த்தகச் சங்கத்தைச் சேர்ந்த தாமஸ் டோனோஹ் சீனியரும் இவ்வொப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அரசுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இந்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலும் விண்வெளித்துறை கமிஷனும் இவ்வொப்பந்தத்தை ரத்து செய்யப் பரிந்துரைத்து 6 மாதமாகியும் அரசு ஏன் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முயன்றது?' என "மார்க்சிஸ்ட்' கட்சி எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு அரசு இன்னமும் பதிலேதும் சொல்லவில்லை.

 

இதுவரை வரலாறு காணாத ஊழல்கள் அம்பலமாகும்போதெல்லாம், அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்பேர்வழிகள்தான், என்றும் நேர்மையான அதிகாரிகள் கையில் அதிகாரம் இருந்தால் ஊழல்களே இருக்காது என்றும் ஊடகங்களும் அதிகாரவர்க்கமும் தொடர்ச்சியான பிரச்சாரத்தை செய்துவந்தன. இந்த பாமரத்தனமான வாதம், எஸ்பேண்ட் ஊழலில் கந்தலாகியுள்ளது.

 

பாதுகாப்பு அம்சங்களைக் காரணம் காட்டி இஸ்ரோவிற்கு ஒதுக்கப்படும் நிதியோ, அதன் செலவீனங்களோ தணிக்கை செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதில்லை. இதனால் அங்கு அதிகாரிகள் நடத்தி வரும் தேசத்துரோக ஊழல்கள் மூடிமறைக்கப்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இஸ்ரோவில் மட்டுமல்ல, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களின் அதிகார வர்க்கமே பொதுச்சொத்தை சூறையாடி நாட்டையே திவாலாக்கிக் கொண்டுள்ளது. பெல், பி.எஸ்.என்.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் மேலதிகாரிகள் தங்கள் மனைவி அல்லது உறவினர் பெயரில் சிறுதொழில்கூடங்களை ஏற்படுத்திக்கொண்டு, இரகசிய ஒப்பந்தங்கள் மூலம் கொள்ளையடிப்பதும், பல நேரங்களில் பொதுத்துறைக்கு சொந்தமான மூலப்பொருட்களையும், எந்திரங்களையும் கடத்திச் செல்வதும், விருப்ப ஓய்வில் சென்று அதே பொதுத்துறைக்கே ஒப்பந்தக்காரராவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. டி.ஆர்.டி.ஓ. எனும் இராணுவ ஆய்வு நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல. பதவியில் இருக்கும்போதே வர்த்தகத் தொடர்புகள் மூலம் பினாமி நிறுவனங்களை உருவாக்கி, அதற்கு ஒப்பந்தங்களை அளிப்பது முதல் விருப்ப ஓய்வில் போய் அதே வர்த்தகத் தொடர்புகளைத் தங்கள் நிறுவனங்களுக்கு மடைமாற்றிக் கொள்வதும் டி.ஆர்.டி.ஓ. விலும் நடந்து வருகின்றன.

 

மத்திய அரசின் பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு அடுத்தபடி அதிகமாக நிதி ஒதுக்கப்படுவது

விண்வெளி ஆய்வுக்குத்தான். இந்த அதிகபட்ச நிதி ஆதாரங்களை வைத்துக் கொண்டு மீன் வளங்களைக் கண்டறிந்து இந்திய மீனவர்களுக்கு உதவி இருக்க முடியும். சுனாமி, கடற்சீற்றம் போன்ற இயற்கைப் பேரிடர்களைக் கண்டறிந்து மக்கள் உயிரைக் காத்திருக்க முடியும். ஆனால், மக்களின் பணத்தைத் தின்று கொழுத்த இந்திய விண்வெளி ஆய்வுத் துறை அதிகார வர்க்கமோ, பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களைக் காட்டிக் கொடுத்தும், விலை மதிப்பிடமுடியாத அலைக்கற்றை களை அடிமாட்டு விலைக்கு அந்நியர்கள் பயன்படுத்திக் கொள்ளையடிக்கத் துணையாக நின்றும் "சேவை' செய்துள்ளது.  இந்தச் சேவையைச் செய்திட இவர்களுக்கு உதவியிருப்பது தனியார்மயம், தாராளமயக் கொள்கையே!

 

அழகு

Last Updated on Sunday, 11 December 2011 21:23