Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

"புலிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடையவில்லை"!? கேனத்தனமான "புலிப்பாணித்" தீர்ப்பு

  • PDF

வெள்ளைக் கொடியுடன் புலிகள் யாரும் சரணடையவில்லை என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இது மட்டுமின்றி இப்படி பொய் சொன்னதாக கூறி, முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைத்தண்டையும் கூட வழங்கி இருக்கின்றது. புலிகள் வெள்ளைக் கொடியுடன் தம்மிடம் சரணடையவில்லை, நாங்கள் அவர்களை கொல்லவில்லை என்று அரசின் இனவாதக் கூற்றை நீதிமன்றம் வழிமொழிந்திருக்கின்றது. புலிகள் இறுதிவரை சண்டையிட்டு "வீரமணடைந்தனர்" என்றே அரசின் இந்தத் தீர்ப்புக் கூறுகின்றது. இப்படி அரசு புலிக்குச் சார்பாக பிரச்சாரம் செய்கின்றது.

மறுதளத்தில் புலிகள் கூட தாம் சரணடையவில்லை என்று தான் கூறிவருகின்றனர். என்ன பொருத்தம். கணவன் மனைவியாக வாழக் கூடிய எல்லாவிதமான பாசிசத் தகுதிகளும் உண்டு. புலிகள், புலிகளிடம் மருந்துக்குக் கூட இல்லாத "அரசியல் பிரிவு"தான் சரணடைந்ததாக இல்லாத ஒன்றை இருந்ததாக, நடந்ததாக திரித்துக் கூறுகின்றனர். புலிகள் சரணடைவது என்ற முடிவும், சரணடைவும் நடந்தது. இதில் இல்லாத அரசியல் பிரிவு சரணடையவில்லை, எஞ்சிய புலி முழுவதும் சரணடைந்தது. இப்படி உண்மைகள் இருக்க, அதை அரசும் புலியும் மறுப்பதில் இருந்து இதன் பின்னுள்ள குற்றத்தை சேர்ந்து மூடிமறைப்பதில் ஒற்றுமையுடன் இயங்குகின்றனர். இதனால்தான் இந்த புலிகள் சரணடைவு பற்றி பலதரப்புடன் பேசிய இறுதிநேர ஒலி நாடாக்களை, இன்று வரை புலிகள் வெளியிடவில்லை. இப்படி புலிகளே அரசுக்கு சார்பாக, போர்க்குற்ற சாட்சியங்களை மூடிமறைத்துக்கொண்டு தான் போர்க்குற்றம் பற்றி வெளிப்பூச்சுக்கு பேசுகின்றனர்.

புலிகளின் இந்த உதவியுடன் மகிந்த அரசு, தான் முன்கூட்டியே எழுதிய தீர்ப்பை நீதிமன்றத்தில் வைத்து கொடுக்கின்றது. இதில் குற்றவாளியாக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவோ, இப்படித்தான் தீர்ப்பு இருக்கும் என்பதை முன்கூட்டியே அலட்சியமாக சொல்லிவிடுகின்றார். அவரின் நக்கல் நளினம் கலந்த அலட்சியம் முதல் இதை அவர் எதிர்கொள்ளும் விதம் தனித்துவமானது. அது அரசு மற்றும் நீதித்துறையின் மீதான பொது நம்பிக்கையைக் கேலி செய்த வண்ணம், இதன் மேலான நம்பிக்கையை தகர்க்கின்றது. மக்கள் அரசு என்றால் என்ன?, நீதி என்றால் என்ன? என்பதை கற்றுக்கொள்ளுமாறு இந்தத் தீர்ப்பு அறைகூவுகின்றது.

 

சட்டம், நீதி என்பன ஆளும் வர்க்கத்தை மட்டுமல்ல, ஆளும் கும்பலின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தி பாதுகாக்கும் பொம்மலாட்ட நாடகங்கள் ஆகிவிடுகின்றது. இலங்கை வாழும் மக்கள் அனைவருக்கும் தெரியும், புலிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பின் தான் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது. இந்த உண்மை ஒருபுறம் இருக்க, இல்லை இது பொய் என்று கூறும் நீதிமன்ற தீர்ப்பு, நீதி பற்றிய மக்களின் பிரமைகளை ஒருபடி தகர்த்து இருக்கின்றது. இலங்கை இராணுவத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும், இந்த வெள்ளைக்கொடி சரணடைவு பற்றிய விபரமும், அவர்கள் கொல்லப்பட்ட விவகாரமும். இப்படியிருக்க இராணுவத் தளபதி மீதான தண்டனை பொய்யானது என்பதை அறிவர். இது அவர் மீதான அனுதாபத்தை, என்றுமில்லாத அளவுக்கு அவர் சார்பானதாக மாற்றியிருக்கின்றது. உண்மையில் இந்தத் தீர்ப்பு மக்கள் மற்றும் இராணுவத்திடமிருந்து அரசு மேலும் தனிமைப்படவே வைத்திருக்கின்றது.

மறுதளத்தில் உலகம் தளுவிய ஆளும் வர்க்கங்கள் இலங்கையுடள் கொண்டுள்ள முரண்பாட்டை, மேலும் இத்தீர்ப்பு கூர்மையாக்கியுள்ளது. இது இலங்கையை தனிமைப்படுத்தும். புலி சரணடைவை வழிநடத்திய நாடுகளும், போர்க்குற்றம் சார்ந்த விசராணை நடத்தக் கோரும் மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கும் எதிரான தீர்ப்பு இது. இது அவர்களை குற்றவாளியாக்குகின்ற ஒரு தீர்ப்பு. எதிர்வினை நிச்சயமாக இருக்கும்.

 

அரசு பலமுனைகளில் தொடர்ந்தும் தன்னை தனிமைப்படுத்தும் நடத்தைகளையும் தீர்ப்புகளையும் தான், தனக்கு எதிராக வழங்குகின்றது. இதன் விளைவில் இருந்து தன்னை பாதுகாக்க, அடக்குமுறையை நாடுகின்றது. இராணுவ ஆட்சிக்குரிய அனைத்து வடிவங்களையும், மூடிமறைத்துக் கொண்டு தொடர்ந்து கொண்டுவருகின்றது. இதிலும் அது தனிமைப்பட்டு அம்பலமாகி வருகின்றது. தன்னை விமர்சிக்க கூடிய, தன் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கக் கூடிய அனைத்து ஜனநாயக வடிவங்களையும் அடக்கி ஒடுக்குவதில் இன்று குறிப்பாக கவனம் செலுத்திவருகின்றது. இது பரந்த தளத்தில் ஒடுக்குமுறை நடத்ததுவதற்கான அரசியல் தயாரிப்பாகும்.

இப்படி மக்கள் நலன் சார்ந்த சமூகக் கூறுகளை ஒவ்வொன்றாக அழிக்கின்றது. இதன் மூலம் குடும்ப பாசிச ஆட்சி அதிகாரத்தை, ஒடுக்குமுறை மூலம் நிலைநிறுத்தி பாதுகாக்க முனைகின்றது. இந்தவகையில் தான் அரசு முன்கூட்டியே எழுதிய தீர்ப்பை, நீதிமன்றம் வழங்குகின்றது. தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் மகளின் திருமணத்தில் சாட்சிக் கையெழுத்திட்டும், அன்பளிப்பின் பெயரில் பல இலட்சம் லஞ்சம் கொடுத்து நீதிபதியை மகிழ்வித்த மகிந்தாவுக்கு எதிரான ஒரு தீர்ப்பை, இந்த நீதிமன்றங்களில் கனவிலும் கூட நினைக்க முடியாது. மக்கள் தமது சொந்த நீதிமன்றங்களில் தான் உண்மையான குற்றவாளிகளை இனம் காணவும், தண்டிக்கவும் முடியும்.

 

பி.இரயாகரன்

19.11.2011

Last Updated on Saturday, 19 November 2011 14:28