Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் அமெரிக்காவிடம் தமிழனை அடகு வைத்த கூட்டமைப்பு, இந்த அரசியல் சூழலை மாற்றாது உதவும் இடதுசாரிகளும்

அமெரிக்காவிடம் தமிழனை அடகு வைத்த கூட்டமைப்பு, இந்த அரசியல் சூழலை மாற்றாது உதவும் இடதுசாரிகளும்

  • PDF

எது தவறானதோ அதை மாற்றியமைக்க போராடாதவர்களும் அதற்கு உதவுகின்றனர். இது மறுக்க முடியாதவொரு உண்மை. ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து, மாற்றத்தை முன்வைத்து செயல்பூர்வமாக மக்களை அணிதிரட்டிப் போராடாத வரை, வெறும் விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் எதையும் மாற்றிவிடாது. விமர்சனங்கள் அபிப்பிராயங்கள் என அனைத்தும், மக்களை அணிதிரட்டிப் போராடும் அரசியலாக மாற வேண்டும். வர்க்கப் போராட்டம் என்பது இதற்கு அப்பால் கிடையாது.

கடந்த காலம் மட்டுமல்ல நிகழ்கால சூழலும் கூட, மக்களைக் கடந்த அரசியல் சக்திகளின் கையில் இருப்பதுடன், மக்களுக்கு எதிரானதாக தொடர்ந்தும் இயங்குகின்றது. 1983 இல் இலங்கையை அடிமைப்படுத்த இந்தியாவுக்கு தேவைப்பட்ட தமிழ் கூலிப்படை போல், இன்று அமெரிக்காவுக்கு கூலி படை தேவைப்படுகின்றது. இதற்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத்தான் பயன்படுத்தினர், பயன்படுத்துகின்றனர். இதைக் கூட்டமைப்பு 60 வருடமாக அங்குமிங்குமாக காட்டிக்கொடுத்த தொடர்சியான துரோகத்தின் மூலம் தான், தங்கள் வயிற்றை வளர்க்கின்றனர். இதற்கு வெளியில் துளியளவு கூட இதில் எந்த நேர்மையும் அவர்களிடம் கிடையாது.

இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மக்களை அணிதிரட்டாதவர்கள், தமக்கு வாக்குப் போடுவதற்கு மட்டும் வழிகாட்டினர். தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் பிரச்சனையை சிங்கள மக்களிடம் கொண்டு செல்லாதவர்கள், சிங்கள் மக்களை தமிழ்மக்களின் எதிரியாக காட்டியபடி, பாராளுமன்ற தொழுவத்தில் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் பன்றிகளாக கட்டிப் புரண்டனர். கடந்தகாலம் முழுக்க இந்தியா என்றவர்கள், இன்று அமெரிக்கா என்கின்றனர். இந்த அரசியல் மீது நம்பிகை கொண்டு வீங்கி வெம்பியவர்கள் தான், ஆயுத வன்முறை மூலம் இதைத் தீர்க்க முடியும் என்று நம்பி ஆயுதத்தை வழிபட்டவர்கள் சொந்த மக்களை அந்த ஆயுதம் மூலம் ஒடுக்கினர். இப்படி கூட்டணி அரசியல் வழியில் இந்தியா முதல் பல தரப்பினரின் கைக்கூலிகளாக மாறினர்.

இப்படி போராட்டத்தை அடகு வைத்து சொந்த மக்களை அழித்த அரசியலின் பின்னணியில், இந்த கூட்டமைப்பின் அரசியல்தான் வழிகாட்டியது. சொந்த மக்களை நம்பிப் போராடாதவர்கள், சிங்கள மக்களிடம் தங்கள் நியாயத்தை எடுத்துச் செல்லாதவர்கள், தன்னை ஓத்த மக்களை ஓடுக்கும் ஆளும் வர்க்கத்திடம் தீர்வைக் கோருவதைத் அரசியலாக செய்தனர். அவன் தருகின்றான் இல்லை என்று கூறி, காலாகாலமாக கயிறுவிடுவதான் மூலம் 60 வருடமாக ஓரே அரசியலை மீண்டும் மீண்டும் செய்கின்றனர்.

இன்றைய உலக ஒழுங்கின் முரண்பட்ட ஏகாதிபத்திய நலனுக்குள், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் இனப்பிரச்சனை ஊடாக பலமுனையில் உள் நுழைந்து வருகின்றது. இதற்கு கைக்கூலிகளாக புலிக்கு அப்பால் கூட்டணியும் களமிறங்கி இருக்கின்றது. இது மீண்டும் ஒரு கூலிப்படையை உருவாக்கும் எல்லைவரை முன்னேறுமா என்பது, இலங்கையை ஆளும் வர்க்கங்களின்; கையில் தான் உள்ளது.

இந்த இனப்பிரச்சனை மூலம் அன்னிய நலன் சார்ந்த ஆதிக்கத்துக்கு, இலங்கையைப் பிரித்தாளும் இனவாதிகள் மட்டும் காரணமல்ல. இதை எதிர்த்து போhராடதவர்களும் காரணமாக உள்ளனர்.

பிரதான முரண்பாட்டை தீர்க்கும் வண்ணம் அணிதிரட்டாத இடதுசாரிய அரசியல் தான், இந்தச் சூழல் தொடர்வதற்கு முழுப்பொறுப்;புமாகும். இந்த வகையில் போராடாத இடதுசாரிகள் தான் இதற்கு முழுப்பொறுப்பாகும். இடதுசாரிகள் பிரிவினைக்கு எதிராக பிரிந்து செல்லும் உரிமையையும், ஓடுக்கும் ஜக்கியத்துக்கு எதிராக பிரிந்து செல்லும் ஜக்கியத்தையும் முன்வைத்து போராடாத வரை, இனப்பிரச்சனை ஊடாக இலங்கை ஆளும் வர்க்கங்களினதும்; அன்னிய சக்திகளினதும் நலனுக்கு உதவுபவராக இடதுசாரியத்தை மாற்றிவிடுகின்றனர். இப்படி இலங்கை அரசியலை ஆளும் வர்க்கங்கள் தான் முற்றுமுழுதாக முடிவெடுக்கின்றனர்.

அரசியல்ரீதியான செயல்பூர்வமான தலையீடு இன்றி, ஆளும் வர்க்கங்கள் முன்தள்ளும் இனவாத அரசியலின் பின் மக்கள் செம்மறியாக பயணிப்பதுதான், தமிழ் - சிங்கள மக்களின் இன்றைய நிலையாகும். இலங்கை மக்கள் இன ரீதியாக நாலாக பிரிந்திருப்பதும், இதன் அடிப்படையில் பாராளுமன்ற பன்றித் தொழுவத்துக்கு ஆட்களை தெரிவு செய்வதும் தொடருகின்றது.

இதில் இருந்து மக்களை மீட்டு எடுப்பதும், இனப்பிரச்சனைக்கு தீர்வு முன்வைத்து அணிதிரட்டுவதுமே மார்க்சியவாதிகள் முன்னுள்ள முதன்மையான பாரிய அரசியல் பணியாகும்.

மார்க்சியத்தின் பெயரில் இனவாதிகளாக இருப்போரும், மார்க்சியத்தின் பெயரில் இனவுரிமைகளை அங்கீகரிக்க மறுப்பவர்களும், அங்குமிங்குமாக இனவாதிகளுக்கு உதவும் அரசியலையே தொடர்ந்து முன்தள்ளுகின்றனர். சரியான புரட்சிகரமான மார்க்சியம் மக்களைச் சார்ந்து உருவாகாத இன்றைய அரசியல் சூழலில், இலங்கை மக்கள் ஆளும் வர்க்க கைக்கூலிகளால் ஏகாதிபத்தியத்திடம் அடகுவைக்கப்படுகின்றனர். ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் மக்கள் தொடர்ந்து ஓடுக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும்; என்றுமில்லாத அளவில் முதன்மை பெற்ற அரசியலாக மாறி கூர்மையாகி வருகின்றது.

பாராளுமன்ற பன்றித் தொழுவத்தில் புரண்டு எழுபவர்கள் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதில் கூர்மையாக்குபவராக எப்படி உள்ளனரோ, அதுபோல்தான் செயல்பூர்வமாக நடைமுறையில் மாற்றத்தை முன்னெடுக்காதவர்களின் அரசியலும் உள்ளது.

இதில் இருந்து மாறுபட்ட வகையில் மக்களின் உரிமைகளை அங்கீகரித்து, அதற்காக போராடுவதை நடைமுறையில் தேர்ந்தெடுப்பதுதான், மக்களை நேசிக்கின்றவர்கள் இன்றைய வரலாற்றில் செய்ய வேண்டிய அரசியல் தேர்வாகும். இதற்கு அப்பாற்பட்ட அனைத்தும் அர்த்தமற்றவை. அவை மக்களுக்கு எதையும் பெற்றுத் தராது. இது வரலாற்றின் குப்பைத் தொட்டியை நிரப்பத்தான் உதவும்;.

பி.இரயாகரன்

31.10.2011