Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் செல்வி முன்னெடுத்த அரசியலை முன்னிறுத்தாத அனைத்தும் நேர்மையற்றவை

செல்வி முன்னெடுத்த அரசியலை முன்னிறுத்தாத அனைத்தும் நேர்மையற்றவை

  • PDF

செல்வியை நாம் நினைவுகூர்வது, அவர் கொண்டிருந்த அரசியலுக்காகத்தான். இதனால் தான் அவர் இறுதியாக புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் போராட்டம் புலிக்கு எதிராக மட்டுமல்ல, தான் இருந்த இயக்கத்துக்கு எதிராகவும், அந்த இயக்கத்துடன் தொடர்ந்து இருந்த தன் காதலனுக்கு எதிராக, அவரின் போராட்டம் எந்தவிதமான சரணடைவுக்கு விட்டுக்கொடுப்புக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது.

இந்த நிலையில் நாம் எதற்காக இன்று செல்வியை முன்னிறுத்துகின்றோம்? இந்த நோக்கம் கூட செல்வியின் அரசியல் நோக்கத்தை கடுகளவும் சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பலர் பல காரணங்களைக் காட்டி, தங்கள் நோக்கத்துக்கு ஏற்ப செல்வியை குறுக்கிக் காட்டிவிட முனைகின்றனர்.

 

புலிகள் அவரைக் கடத்திக் கொன்றார்கள் என்பதாலா! இல்லை. அவர் ஒரு பெண் என்பதாலா!! இல்லை. அவர் ஒரு கவிஞர் என்பதாலா!!! இல்லை. அவர் நாடகத் துறை சார்ந்தவர் என்பதாலா! இல்லை. சர்வதேச விருது பெற்றவர் என்பதாலா!! இல்லை. அவர் எமக்கு நன்கு தெரிந்தவர் என்பதாலா!!! இல்லை. இவை எல்லாம் என்பதாலா! என்றால், அதுவும் இல்லை.

புலிகளால் கொல்லப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்க, கடத்தப்பட்டவர்கள் பல நூறாக இருக்க, காணாமல் போனவர்கள் புதையுண்ட பூமியில், செல்வி எந்த விதத்தில் மற்றவர்களை விட முக்கியமானவர்!? முதன்மையானவர்!? போராட்டத்தின் பெயரில் செல்வி உட்பட பல ஆயிரம் பேரை புலிகள் வதைத்துக் கொன்ற போது, அரசோ இதைப் போல் பல மடங்காக அதைச் செய்தது. புலி - அரசு எந்தவிதத்திலும் இதில் இருந்து குறைந்ததல்ல. இதற்குள் பலியான செல்வி எந்த வகையில் வேறுபடுகின்றார்?

ஆம் அவர் இப்படி இரண்டு தரப்பாலும் பலியானவர்களை முன்னிறுத்தி, அதற்கான போராட்டத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டார். இந்தப் போராட்டத்தின் ஊடே, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து, தன்னை அரசியல் மயப்படுத்தத் தொடங்கினார்.

இதனால் தான் எமக்கு தனித்துவமாக அறிமுகமானார். 1985 ஆம் ஆண்டு முதன் முதலாக எனது போராட்டத்தின் போது, எனக்கு ஆதரவான குரலுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் அவரைச் சந்தித்தேன். ஆம் ராக்கிங்குக்கு எதிராக "றாகிங் என்பது பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு பண்பாட்டு அம்சமா" பார்க்க என்ற துண்டுபிரசுரத்தை முதலாமாண்டு மாணவனாக தனித்து விநியோகித்த போது, அங்கு ஏற்பட்ட போராட்டத்தின் போதுதான் எனக்கு அறிமுகமானார். அத் துண்டுப்பிரசுரம் மாணவர்களிடமிருந்து பறித்து எரியூட்டப்பட்டது. அதேநேரம் "ஒரு மனநோயாளி பல்கலைக்கழகத்தில்" என்ற துண்டுப்பிரசுரத்தை எனக்கு எதிராக வெளியிட்டனர். இதை அடுத்த நாள் பத்திரிகைகளில் கூட கட்டாயப்படுத்தி வெளியிட வைத்தனர்.

இதை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எனது துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து, பல்கலைக்கழகத்தில் புரட்சிகரமான சிந்தனை என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதை அடுத்து அதை வாபஸ் வாங்கும்படி கோரி, பல்கலைக்கழகத்தில் கட்டாய பகிஸ்கரிப்பை ஒரு சில நாட்கள் தொடாந்து நடத்தினர்.

இதன் போது தனிமைப்பட்டு நின்ற எனக்கு, பெண்கள் கொண்ட குழு ஒன்று எனக்கு ஆதரவாக தன்குரலை முதன் முதலின் என்னுடன் சேர்ந்து உயர்த்தியது. இதில் முன்னணியில் நின்ற பலரில் செல்வியும் ஒருவர். இப்படித்தான் பெரும்பான்மையான மாணவர்களை எதிர்த்து, எதிர்நீச்சல் போட்டபடி ஒரு புரட்சிக்காரியாகவே செல்வி எனக்கு அறிமுகமானார். நான் அந்த மண்ணை விட்டு வெளியேறும் வரை, தொடர்ந்து ஒன்றாக ஓரே வழியில் பயணித்தோம். ஒரே போராட்டப் பாதையில் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொண்டோம்.

இந்த வகையில் இந்த மண்ணில் செல்வி எந்த வகையில், ஏன், எப்படி தனித்துவமானவராக இருந்தார் என்றால், அவர் கொண்டிருந்த புரட்சிகரமான அரசியல்தான். மற்றவர்கள் செய்யத் தயங்கிய விடையத்தை, முன்னின்று முன்னெடுத்தார். இங்கு மரணம் என்பது போராட்டமாக, அதை தன் வாழ்வாக நேசித்தார். இதற்கு முந்தைய தன் கடந்தகால அரசியலை சுயவிமர்சனம் செய்து கொண்ட போது, அவர் மக்களை மேலும் ஆழமாக நேசிக்கத் தொடங்கினார். ஒடுக்கப்பட்ட அரசியல், அந்த மக்களின் விடுதலைக்கான போராட்டப் பாதை என்பதை அனுபவரீதியாக கற்ற போது, அதுவே அவரின் பிற்கால அரசியலானது.

இதற்கு முன்பாக அவர் புளொட் மகளிர் அமைப்பினை தன் கடின உழைப்பால் உருவாக்கிய போது, அரசியல்ரீதியாக அது பற்றிய தெளிவு இருக்கவில்லை. அந்த அமைப்பு படிப்படியாக தன் சொந்த உறுப்பினருக்கே சுதந்திரத்தை மறுத்தது. தன் உறுப்பினர்களை சித்திரவதை முகாங்களில் வதைத்து படுகொலையும் செய்த போதுதான், அவர் அதற்கு எதிராக தன் போராட்டத்தை தொடங்கினார்.

இப்படித்தான் செல்வி தனித்துவமாக போராடத் தொடங்கினார். எல்லோரையும் விட இந்த போராட்டத்தின் முதல் அணியில் தன்னையும் இனம்காட்டிக் கொண்டு, ஒரு முன்னோடியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு போராடினார். அக்காலத்திலும் அதன் பின்னும் இவரைக் காதலித்தவர் அந்த இயக்கத்தில் தொடர்ந்து இருந்ததுடன், தீப்பொறிக்கு வெளியேற்றத்தின் பிந்தைய அராஜகக் குழுவின் மத்திய குழுவில் இணைத்துக் கொண்ட போதும் சரி, பின்னர் இந்தியா என்ற உளவு அமைப்பு பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ். குழுவை உருவாக்கிய போது அதில் அவர் இணைந்த போதும் கூட, செல்வியின் பலமுனைப் போராட்டம் மிகக் கடுமையானதாக எந்தச் சரணடைவுமின்றி இருந்தது.

இப்படிப் பலமுனையில் போராடியபடி தான், மக்களை நேசிக்கக் கற்றுக் கொண்டார். இதன் போது மார்க்சியத்தை உள்வாங்கி கற்கத் தொடங்கினார். இப்படிப் போராட்டமும் கற்றலும் ஒருங்கே அவரின் வாழ்வு முழுக்க நீடித்தது.

இது போன்று போராட்டத்தின் முன்னணியில் பலர் முன்னின்றனர். அன்று முள்ளிவாய்க்காலின் முடிவை இவர்கள்தான் முன் கூட்டியே சொன்னவர்கள். போராட்டம் என்றால் என்ன?, யாருக்காகப் போராட்டம்?, யார் போராட வேண்டும்? என்று கூறியவர்களைக் கொன்று போராட்டத்தையே அழித்தவர்கள் புலிகள்.

மறுபக்கத்தில் இதைச் சொல்லி தாம் போராட ஜனநாயகம் வேண்டும் என்று சொன்னவர்கள், புலிகள் உடலால் அழித்ததை கோட்பாட்டு ரீதியாக புலிக்கு நிகராக மக்களுக்கான அரசியலை அழித்தனர். இதன் ஒரு பகுதியினர் தான் அரசின் பின் அணிதிரடண்டனர். ஆக இங்கு போராடுவதற்காக ஜனநாயகத்தை கோரியவர்கள், போராடுவதற்கு பதில் போராட்டத்தை அழித்;தனர். இப்படித்தான் ஜனநாயகம் இன்று விளக்கம் பெற்று, மக்களுக்கு எதிராக முகம் கொண்டு நிற்கின்றது.

செல்வியைப் புலிகள் கொன்றார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, புலியெதிர்ப்பு அரசியல் செய்கின்றனர். மறுபக்கத்தில் அரசின் கையில் செல்வி சிக்கியிருந்தால் அதே கதிதான் அன்றும் இன்றும். தம்மை புத்திஜீவியாகக் காட்டிக்கொள்ளும் சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள், செல்வியைச் சொல்லியும் தம்மை முன்னிறுத்தி பிழைக்கின்றனர். இப்படி பலர், பல முகத்துடன்.

கடந்த வரலாறுகளில் அங்குமிங்குமாக நின்றவர்கள் சொல்வதே வரலாறாக காட்டிவிட முனைகின்றனர். இன்றும் எம்மைச் சுற்றியும், அதுதான் நிலைமை. தத்துவ விண்ணர்கள், மோசடிக்காரர்கள், பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகள்... இன்று எம்மைச் சுற்றி தொடர்ந்து அரசியல் செய்கின்றனர். மக்களைக் கொன்ற புலிகள், புலித் தலைமையை சரணடைய வைத்து சாகடித்த புலிகள், அரசியலை காட்டிக்கொடுத்தவர்கள் முதல் அரசியல் குற்றத்தை இழைத்தவர்கள் வரை, எந்த விமர்சனம், சுயவிமர்சனமுமின்றி அனைவரும் அரசியல் செய்யமுடிகின்றது. கடந்த அரசியல் வரலாற்றை மூடிமறைத்துக் கொண்டுதான், இன்று தொடர்ந்து அனைத்தையும் அரங்கேற்ற முனைகின்றனர். கடந்தகாலம் பற்றிய மக்களின் அறியாமை என்னும் இருட்டில், தமக்குத் தாமே ஒளிவட்டம் கட்டுகின்றனர். கடந்தகாலத்தில் மக்கள் மேலான கொடுங்கோன்மைகளை மூடிமறைப்பதன் மூலம், நிகழ்கால அரசியலை பலர் தொடர்ந்து செய்ய முனைகின்றனர்.

கடந்த காலத்தில் பல முனையில் கொன்று குவித்தவை, வரலாற்றில் இருந்து மெதுவாக மறைந்து போகின்றது. இந்தக் குற்றங்கள் கூட, அரசியல் ரீதியாக இன்று மறுதலிக்கப்படுகின்றது. மறுபக்கத்தில் இதை எதிர்த்து போராட முனைந்தவர்கள் மேல் நடத்திய உட்படுகொலைகள், வரலாற்றில் அரசியல் ரீதியாக புதைக்கப்பட்டுவிட்டது. மாற்று இயக்கப் படுகொலைகள் எதுவும் எம்மண்ணில் நடந்ததாக சொல்லும் வரலாற்றுக் குறிப்புகள், அரசியல்ரீதியாக இன்று நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. புலிகள் ரெலோ போராளிகளை வீதிவீதியாக எரித்துக் கொன்ற உண்மையை, இன்றைய வரலாற்றில் பொய்யான இட்டுக்கட்டலாகவே வரலாறு பதிவு செய்ய முனைகின்றது.

புலிகள் தங்கள் இறுதி யுத்தத்தின் போது, மக்களைப் பணயம் வைத்து கொன்ற வரலாறு என்பது, வரலாற்றுப் பதிவுகளில் இன்று காண முடியாத ஒன்றாக மாறிவருகின்றது. புலிகளின் தலைவர் சரணடைந்ததும், அவர் கொல்லப்பட்டதும் வரலாற்றில் நடவாத ஒன்றாக புனைய முனைகின்றனர்.

அரசு மற்றும் புலிகளுக்கு எதிராக மாற்றைத் தேடியவர்கள் மேல் நடத்திய மக்கள் விரோத அரசியல் பக்கங்;கள், வரலாற்றின் முன் இருண்ட பக்கமாகிவிட்டது. இந்தப் போக்குக்கு எதிரான போராட்டங்கள், வரலாற்றின் முன் காயடிக்கப்படுகின்றது.

இப்படி மக்களுக்கு எதிரான கடந்தகாலத்தின் அனைத்து வரலாறும், அரசியல் ரீதியாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருகின்றது. மக்களுக்கான போராட்டம், இது சார்ந்த உழைப்பும், தியாகங்களும், அரசியலில் பிழைக்கத் தெரியாதவர்களின் கையாலாகாத்தனமாக வரலாற்றில் காட்டப்பட்டு வருகின்றது.

இன்று அரசியல் என்பது, கடந்த எதிர்ப்புரட்சி வரலாற்றைக் குழிதோண்டி புதைக்கும் சாக்கடையில் தான், அரசியல் புத்துயிர்ப்பு பெறுகின்றது. இந்த அரசியல் அவலத்தை, அரசியல் ரீதியாக எத்தனை பேர் புரிந்துள்ளனர். எத்தனை பேர் இன்று எதிர்வினையாற்ற முனைகின்றனர். கடந்த எம் வரலாற்றில் நடந்தவைகளை, அதற்கு யார் எப்படி துணையாக வரலாற்றில் நின்றனர் என்பதை, அரசியல் ரீதியாக இனம் காட்டாத புதிய அரசியல் போக்குகள், நிச்சயமாக மீளவும் மனிதகுலத்தை தொடர்ந்தும் ஒடுக்கவே உதவும்.

இதன் மூலம் கடந்த எம் துயரமான மனித வரலாறு, ஆதாரமற்ற கட்டுக்கதையாக மாறிவருகின்றது. இதை அனுமதித்து அரசியல் செய்வதை விட, நேர்மையாக அரசியலில் இருந்து நாம் விலகிக்கொள்ளலாம்.

கடந்தகாலத்தில் எம்மக்களுக்கு எதிரான வரலாற்றை இருட்டில் வைத்திருப்பதே, இன்று பலரின் "இடதுசாரிய" பம்மாத்து அரசியலாக உள்ளது. மக்களை அவர்களின் சொந்த விடுதலைக்கு முன்னின்று வழி நடத்த முனையாது செயல்பட்டவர்கள், அதை மூடி மறைப்பதே இன்றைய புரட்சிகர அரசியல் என்கின்றனர். இதை நாகரிகமான பண்பான அரசியல் நடைமுறையுடன் கூடிய தோழமை என்கின்றனர்.

செல்வியின் இலட்சியம், கனவுகள் அனைத்தும் இதற்கு முரணானது. மக்களை நேசிக்கின்ற, மக்கள் விடுதலைக்காக சொந்தக் காலில் நின்று போராடுகின்ற, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சமூகங்களின் கோட்பாட்டால் ஆனாது. இதில் சூது வாதுக்கும், சதிக்கும் இடம் கிடையாது.

பிசாசைக் கொண்டு பேயை அழித்தல் அல்லது பேயைக் கொண்டு பிசாசை அழித்தல் என்பதற்கு எதிரானது. சொந்த மக்களை நம்பி அணிதிரட்டுவதைத் தவிர வேறு எந்த மார்க்கத்தையும் செல்வி அங்கீகரித்தது கிடையாது. இதற்கு எதிராக துணிந்து போராடியதால் மரணித்தவர்.

இந்த வகையில் இதை நாம் இன்று அவரின் அரசியலை உயர்த்துவதுதான், அவரின் நோக்கத்துக்கும் அது சார்ந்த அவரின் தியாகத்துக்கு நாங்கள் வழங்கும் மதிப்பும் மரியாதையும் தோழமையுமாகும். இந்த வகையில் 1980களில் உருவான புரட்சிகரமான கூறுகளையும், 1990 அதன் நீட்சியாக புலத்தில் நீடித்த புரட்சிகர கூறுகளையும், 2000 இன் பின் இன்று வரை எஞ்சிய புரட்சிகரமாக தனிக் கூறுகளையும் முன்னிறுத்தி அரசியலையும், அதை ஒட்டிய தியாகங்களையும் முன்னிறுத்தி தொடர் போராட்டம் தான் இன்று வரை மக்களுக்கானதாக உள்ளது. செல்வி விட்டுச் சென்ற அதே அரசியல் நீட்சிதான் அவை. இதுவல்லாத அனைத்தும் மக்களுக்கு எதிரானது.

 

பி.இரயாகரன்

16.10.2011

Last Updated on Wednesday, 19 October 2011 12:56