Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் கூடிச் சதி செய்த குற்றவாளிகள், வழங்க முனையும் தூக்குத்தண்டனை

கூடிச் சதி செய்த குற்றவாளிகள், வழங்க முனையும் தூக்குத்தண்டனை

  • PDF

இலங்கை இனப்பிரச்சனையின் பின்னணியில் ராஜீவ் மட்டும் கொல்லப்படவில்லை. சில இலட்சம் பேர் கொல்லப்பட்டவர்கள் இருக்க, ராஜீவ் கொலை வழக்கில் மட்டும் தண்டனை என்பது எப்படி நீதியாக இருக்கும்? இந்தத் தண்டனைக்குப் பின்னால் கையாளப்பட்ட சட்ட நடைமுறைகள் அனைத்தும், நீதியைக் கேலி செய்கின்றது. ஒரு கட்டைப் பஞ்சாயத்து மூலம், குற்றமற்றவர்கள் குற்றவாளியாக்கப்பட்டனர். இதற்காகவே தடாச் சட்டத்தின் கீழான விசாரணையையும் தண்டனையையும் வழங்கினர். இந்த தடாச் சட்டம் தொடர்ச்சியாக சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் பயன்படுத்தியதை அடுத்து, நீக்கப்பட்டது என்பது மற்றொரு கதை.

 

 

கொல்லப்பட்ட ராஜீவ் ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்வியின்றி, கட்டைப் பஞ்சாயத்து தீர்ப்பை இந்திய நீதிமன்றம் வழங்கியது. ராஜீவ் தலைமையிலான இந்தியா, இலங்கையில் அத்துமீறிய ஆக்கிரமிப்பை நடத்தியது மட்டுமின்றி, பாரிய மனிதப்படுகொலைகளை ஈழ மண்ணில் நடத்தியது. பெண்களை மானபங்கப்படுத்தியது. இதற்காக எந்தச் சட்டமும் எவரையும் தண்டித்தது கிடையாது. இதன் எதிர்வினைதான் ராஜீவ் படுகொலை.

இப்படிக் கொல்லப்பட்ட ராஜீவ் தலைமை உள்ளிட்ட இந்திய அரசு நீண்டகாலமாக மற்றொரு நாட்டின் உள் விவகாரத்தில் அத்துமீறி தலையிட்டு வந்தது. இனப்பிரச்சனையைப் பயன்படுத்தி இலங்கைக்குள் தனக்கான கூலி இராணுவத்தை உருவாக்கியது முதல் அவர்களை மீள அழிப்பதற்கான சர்வதேச சதிவலையில் இந்தியா ஈடுபட்டது.

ராஜீவ் கொல்லப்பட்ட அரசியல் பின்னணியில், இந்திய அரசு வழங்கிய இராணுவப் பயிற்சி, ஆயுதங்கள், பணம் துணையாக இருக்க, அவர்களைக் கூலிப் படையாக மாற்றிய தனிநபர் பயங்கரவாத அரசியல் பின்னணியும் இதற்கு துணையாக இருந்தது. இப்படி இதன் பின்னணியில் கூட இந்திய அரசு குற்றவாளியாக இருக்க, இதை சுற்றி இயங்கிய அல்லது நேரடியாக இதில் ஈடுபடாத அப்பாவிகளை குற்றவாளியாக்கிய தூக்குத்;தண்டனை என்பது, நீதிக்குப் புறம்பான கடைந்தெடுத்த அரசியல் படுகொலையாகும்.

20 வருடங்கள் கடந்த நிலையில் தூக்குத் தண்டனைக்குரிய திடீர் அரசியல் பின்னணி என்ன?

1. இலங்கை அரசுக்கு எதிராக உலகளவில் போர்க்குற்றம் தொடர்பான அரசியல் நெருக்கடிகளில் இருந்து இலங்கையை மீட்க, இந்தியா செய்யும் அரசியல் முயற்சி இது. இந்த தூக்குத் தண்டனையை முன்னிறுத்தி உலகெங்குமான கவனத்தை இதற்குள் திசை திருப்புவதன் மூலம், புலிகள் என்ற குற்றக் கும்பலை முன்னிறுத்தி மகிந்த அரசை விடுவிப்பதாகும்.

2. தமிழகத்தில் தனக்கு எதிரானதும், இலங்கை அரசுக்கு எதிரானதுமான பாராளுமன்ற கட்சிகளின் பொதுக் கருத்தை உடைக்க, இந்தத் தூக்குத்தண்டனை பயன்படுகின்றது. இதன் மூலம் தமிழகத்தில் பிளவை உருவாக்கி, தனது நடத்தை மூலம் இலங்கை அரசை பாதுகாக்க முனைகின்றது.

3. தன்னையும், தன் நோக்கத்தையும் மூடிமறைக்கவும், தனக்கு எதிரான அணியில் பிளவை உருவாக்கவும், இலங்கை தமிழ் அரசியல் குழுக்களை டெல்லிக்கு வரவழைத்து குலைக்க வைக்கின்றது.

இந்த பின்னணியில் இந்தியாவின் பிராந்திய நலனுக்காக அரங்கேற்ற முனையும் தூக்குத்தண்டனை. அன்று பகத்சிங்கை தூக்கில் போட காங்கிரசும் காந்தியும் பிரிட்டிஸ் காலனியவாதிகளுடன் கூடி நடத்திய அதே கூட்டுச்சதிப்பாணியில் தான், காங்கிரஸ் கட்சியும் இந்திய இலங்கை அரசும் தூக்குத்தண்டனையை திடீரென அரசியல்ரீதியாக முன்னுக்கு கொண்டு வந்துள்ளன. இதன் மூலம் இலங்கை அரசின் போர்க்குற்றம் உள்ளிட்ட, போர்க்குற்ற கும்பல் மக்களை ஊடுருவித்தாக்கும் புதிய இராணுவ மயமாக்கல் சூழலை, உலகெங்கும் மூடிமறைக்கும் சதியில் இந்தியாவின் பிராந்திய நலன் முனைப்பாகவே உள்ளது.

இதன் பின்னணியில் ராஜீவ் கொலை தொடர்பாக, இதன் பின்னணி பற்றிய தகவல்கள் பற்பல. ஆனால் புலிகள் எப்போதும் கூலிக்குழுவாகவே இயங்கிவந்தது. புலிகள் போன்ற மக்கள்விரோத வலதுசாரிய கூலிக்கும்பல் பலருக்கு விலை போனதுபோல் தான், பலரை விலைக்கு வாங்கியும் வந்தது. ஈழ விடுதலை மீதான உணர்வுகளையும் பயன்படுத்தியது இந்தக் கொலையையும் செய்தது இதன் பின்னணியில் தான். இப்படி திட்டமிட்டு இந்த கொலையை முன் நின்று செய்தவர்கள் பல்வேறு காலகட்டத்தில் இறந்துவிட்டார்கள். இவர்களுடன் ஏன் எதற்கு என்று தெரியாது நின்றவர்களை, தொடர்பு கொண்டவர்களை குற்றவாளியாக்கியே தண்டித்தது. இதிலும் அரசியல் உயர் மட்டங்களில் இருந்தவர்கள் மற்றும் காங்கிரஸ்காரர்களை விடுவித்தபடி, சித்திரவதைகள் மூலமும் பலாத்காரமாக பெறப்பட்ட குற்றவாக்கு மூலங்கள் மூலமும், வழக்கு சோடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ராஜீவ் கொன்றது ஏன் என்ற கேள்வியை கேட்காமல் விட்டதுபோல், குற்றவாளியாக்கப்பட்டவர்களுக்கும், கொன்றவர்களுக்கும் இடையில் என்ன தொடர்பு என்பதை கேட்காத கட்டைப்பஞ்சாயத்து தண்டனையைத்தான் வழங்கியது.

புலிகள் ராஜீவைக் கொன்றதன் பின்னணியில் இருந்த அரசியல், தன் இன மக்களை கொன்றதற்கான அரசியல் பழிவாங்கல்கள் தான். புலிகள் நடத்திய கொலை அரசியல்ரீதியாக தவறாக இருந்த போதும், ராஜீவ் போன்ற குற்றவாளிகள் தண்டனைக்குரியவர்கள் தான். இலங்கையில் அதது;மீறித் தலையிட்டு சில ஆயிரம் மக்களை கொன்றவர்கள், சில ஆயிரம் கோடி சொத்துக்களை அழித்தவர்கள், பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்கள், இனப்பிரச்சனையை நீடித்து வைத்திருக்க, தான் உருவாக்கிய கூலிப்படைகளைக் கொண்டு எல்லைப்புற கிராமங்களில் பாரிய இனப்படுகொலைகளை நடத்தினர்.

இந்த அரசியல் பின்னணியில் தான், இவர்கள் பயிற்சியும் ஆயுதமும் பணமும் கொடுத்து உருவாக்கிய புலிகள் இயக்கத்திற்கு இரையானார்கள். இதன் அரசியல்ரீதியான நீண்டகால அரசியல் விளைவை உணர முடியாத புலிகளின் கூலிக்குழு மனப்பாங்கை உருவாக்கியதன் மூலம் தான், அதற்கு தாம் பலியானார்கள்.

1985 இல் திம்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான அரசியல் நெருக்கடியை உருவாக்க, இந்தியா அனுராதபுரப் படுகொலையை (150 மேற்பட்ட மக்களை கொன்று) புலிகள் மூலம் நடத்தியது. இதற்காக இந்தியா புலிக்கு 50 கோடியைக் கொடுத்தது. இதுபோல் ராஜீவை கொல்ல, மூன்றாவது தரப்புக் கூட புலிக்கு பணம் அல்லது ஆயுதம் கொடுத்து இருக்கலாம்! இந்தக் கூலி மனப்பாங்கை விடுதலைப் போராட்டமாக புலி முதல் அனைத்து குழுக்களுக்கும் கற்;பித்தவர்கள் இந்த இந்தியா தான். தங்களைக் கொன்ற ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு பணம் வாங்கியவர்கள் இதே புலிகள் தான். சமாதானத்தை விரும்பிய மக்கள், ரணிலுக்கு வோட்டு போடவிடாது தடுக்க, தமிழ் பகுதிகளில் வாக்கெடுப்பைத் தடுக்க புலிக்கு பணம்கொடுத்தது மகிந்த தலைமை.

இப்படி கூலிக்கு மாரடித்த புலிகள் பின் விடுதலையைக் கண்டவர்களும், அறியாமையில் உழன்றவர்களும்;, ஏன் எதற்கு என்று தெரியாத சூழலில் தொடர்பு கொண்டவர்களையும் குற்றவாளியாக்கிய இந்தியா, இருபது வருடம் கழித்து மற்றொரு அரசியல் நோக்கத்துக்காக தூக்குத்தண்டனையை முன்னிறுத்தி இருக்கின்றது.

தண்டனையைக் கொடுப்பதன் மூலம், அப்பாவிகளைக் கொல்லும் அதேநேரம், தன் பிராந்திய மேலாதிக்க நலனுக்காக சட்டப்படியான படுகொலையையும் நடத்த முனைகின்றது.

 

பி.இரயாகரன்

28.08.2011

 

 

 

Last Updated on Sunday, 28 August 2011 20:26