Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மக்கள் மத்தியில் வேலை செய்தல் எப்படி?

மக்கள் மத்தியில் வேலை செய்தல் எப்படி?

  • PDF

வர்க்க அரசியல் முன்வைக்கும் தனிநபர்கள் முதல் கட்சிகள் வரை, மக்களை அணிதிரட்டி போராட முடிகின்றன்றதா எனின் இல்லை. விருப்பங்கள் நடைமுறையாவதில்லை. இதற்கான செயல்பாடுதான், வர்க்க அரசியலின் நடைமுறையாகின்றது. சரியான வர்க்கப் பார்வை கொண்ட கண்ணோட்டங்கள், தானாக தன்னளவில் புரட்சி செய்யாது. மக்களிடம்; அதை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு வெளியில் மக்கள் தம்மளவில், தம் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடுகின்றனர். இப்படி இருக்க வர்க்க சக்திகள் அந்த மக்களின் நடைமுறை போராட்டங்களில் தம்மை இணைத்துக் கொண்டு, ஈடுபட ஏன் முடியவில்லை என்பதை, குறைந்தபட்சம் அரசியல் விவாதமாக முன்னெடுக்காத வரை, எமது வர்க்க அரசியல் அர்த்தமற்றுப் போய் விடுகின்றது.

 

 

இந்த வகையில் நான், நாம் முன்வைத்த வர்க்க அரசியல், எதற்காக? இதை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். எம்மை நாம் அறிவு சார் புத்திஜீவியாக, அரசியல் பிரமுகராக நிலைநிறுத்த, வர்க்க அரசியலை முன்வைக்கின்றோமா!? சமூகத்தை அறிவு மூலம் விளக்குவதா வர்க்க அரசியல்!? சமூகத்தை மாற்றுவதல்லவா வர்க்க அரசியல். இதற்காக நடைமுறையில் மக்கள் போராட்டங்களில் நாம் பங்குபற்றுவது, தலைமை தாங்குவது, வழிகாட்டுவது அவசியமானது, நிபந்தனையானது. இதை நாம் செய்யாத வரை, இதற்காக நாம் போராடாத வரை, எம்மை நாம் வர்க்க சக்தியாக கூறிக்கொள்வது எதற்காக? இந்த கேள்வி அனைத்து மட்டத்திலும், எங்கும் எழுப்பப்பட வேண்டும். இது முதன்மையான அரசியல் விவாதமாக இன்று மாறவேண்டும்.

இலங்கையில் மக்கள் மத்தியில் வேலை செய்யும் வர்க்க நடைமுறை என்பது, இன்றுவரை நடைமுறைக்கு வராத ஒன்றாக தொடர்ந்து இருக்கின்றது. சமூகத்தில் முரண்பாடுகளும், தன்னியல்பான போராட்டங்களும் நடப்பது மட்டுமின்றி, அது வலதுசாரியப் போராட்டமாக மாறி சீரழிகின்றது. வர்க்க அரசியலின் செயலற்ற தனம், வர்க்க அரசியலுக்குரிய சரியான சூழலை கூட அரசியல் ரீதியாக படிப்படியாக இழந்து வருகின்றது. இதனால் நடக்கும் போராட்டங்கள், மறுபடியும் வர்க்க அரசியலில் இருந்து விலகிச் செல்லுகின்றது.

சமூக முரண்பாடுகளையும், மக்களின் அன்றாட பிரச்சனைகளையும் கையில் எடுக்காத வரை, அதை முன்னின்று தலைமை தாங்காத வரை, மக்களுக்கு வர்க்கம் தலைமை தாங்க முடியாது. இங்கு மூன்று விடையங்கள் இதற்கு தடையாக அல்லது இதன் பின்னணியில் இருப்பதை பொதுவாக காணக் கூடியதாக இருக்கின்றது.

1. பிரதானமானதும் முதன்மையானதும், வர்க்க சக்திகள் இதை செய்யத் தயாராக எம்;மை நாம் அரசியல் ரீதியாக தயார்படுத்தி இருக்கின்றோமா? இல்லை. இதை இலக்காகக் கொண்டு அணிதிரள்வதும், இதை சாதிக்க முனைவதும் முதன்மையான அரசியல் செயல்பாடாக கொண்டு இருக்க வேண்டும். இதை செய்கின்றோமா எனில் இல்லை.

2. அறிவுசார் வர்க்க அரசியல் மூலம் எம்மை நாம் அரசியல் பிரமுகராக, சமூகத்தை விளக்கும் புத்திஜீவியாக, எம்மை நாம் நிலைநிறுத்தும் அறிவுசார் வட்டத்துக்குள் வர்க்க அரசியலை முடக்கிக்கொள்ளுகின்றோமா? இதை நாம் எம்மிடம் கேட்டாக வேண்டும்.

3. எங்கிருந்து, எப்படி மக்களை அணிதிரட்டுவது என்பது தொடர்பான பொதுவான தெளிவின்மை.

இப்படி மூன்று கூறுகளைச் சுற்றி நாம் எம்மை முடக்கி உள்ளோம். மக்களை அணிதிரட்டுவது தொடர்பாக அண்மையில் நடந்த ஒரு உதாரணத்தை அடிப்படையாகக் கொண்டு இதை அணுகுவோம். யாழ்ப்பாணத்தில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மிகப் பின்தங்கிய மீன்பிடி கிராமம் ஒன்றில் நடந்த ஒரு சம்பவம். இந்தக் கிராமத்துக்கு மின்சாரமில்லை. தேர்தல் காலம். கிராமத்தில் தமிழ் குறுந்தேசிய வீராப்பு வேறு. மின்சாரத்தை எப்படி பெறுவது? அந்தக் கிராமம் மின்சாரத்தை அரசிடம் தான் கோர வேண்டும். கோராமல் அது வராது. இது தானாக வர இது மக்கள் அரசல்ல அல்லது அங்கு பெரு மூலதனம் எதுவும் கிடையாது.

மின்சாரத்தை அரசிடம் கோரிச் செல்ல வேண்டும். இதற்காக மக்களை அணிதிரட்டிச் செல்லும் போது தான், மின்சாரம் வரும், விழிப்புணர்வு வரும், போராட்டம் வரும், மக்கள் அமைப்பு வரும். இந்த அரசியலை தமிழ் குறுந்தேசிய அரசியல் மறுக்கின்றது. இப்படியிருக்க அந்த கிராமத்து ஒருபகுதி இளைஞர்கள் கூடி, தம் கிராமத்துக்கு மின்சாரத்தை தரக் கோரும் மகஜர் ஒன்றை அரசிடம் கொடுக்க முடிவு எடுக்கின்றனர். இந்த வகையில் மகஜர் ஒன்றை டக்ளஸ் இடம் கொடுக்கின்றனர். தேர்தல் காலமாக இருந்ததாலோ என்னவோ, சில தினங்களில் மின்சாரம் கிடைத்துவிடுகின்றது. இது ஒரு விதிவிலக்கான நிகழ்வுதான். இப்படிக் கோருவது தவறு என்றும், துரோகம் என்று கூறுகின்ற அரசியல் மக்களை செயலில் இறக்காது.

இங்கு இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வது அவசியம். இந்த மாதிரியான பொதுவிடையங்கள் மீது மக்கள் அனைவரையும் கூட்டி எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில், அரசிடம் கோரிக்கையாக முதலில் முன்வைக்க வேண்டும். அரசின் பதில்களைக் கொண்டு மக்கள் முடிவுகளை தொடர்ந்து எடுக்கவேண்டும். மக்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், அதற்காக போராட வேண்டும். இதை வழிகாட்டுவது கட்சியின் அரசியல் பணி.

அரசியல் தீர்வுக்கு வெளியில் இன்று கிராமங்களிலும், மீள்குடியேற்ற பிரதேசத்திலும் நிலவுகின்ற பிரச்சனைகள், அன்றாட வாழ்வுசார் பற்றாக்குறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக உள்ளது. அவர்கள் இதுபற்றி பேசுவது இயல்பானது. இங்கு அரசியல் உரையாடல் என்பது, இதற்கு வெளியில் தான் இருக்கும் என்று நாம் கருதினால், எம்மால் அம்மக்களுக்கு வழிகாட்ட முடியாது போய்விடும்;. எம் வர்க்க அறிவுசார் அறிவை, மற்றவனுக்கு புகட்டுவது அரசியலல்ல. இதை செய்யும் கற்பனைகளுடன் மக்களை நாம் அணிதிரட்ட முடியாது. மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைக்கு முன்னின்று வழிகாட்டுவது தான் அரசியல். இதுதான் வர்க்கத்தின் கடமை.

அன்றாட வாழ்வியல் தேவைக்கு பணம் கொடுப்பது, பணத்தை அவர்கள் எதிர்பார்ப்பதே அரசியல் உறவாக இருக்கும் பட்சத்தில், இதைத்தாண்டி அங்கு எந்த அரசியலையும் செய்யமுடியாது. இது சாராம்சத்தில் தன்னார்வக் குழுக்களின் அரசியல் வடிவமாகும். இது வர்க்க அரசியலல்ல. தனிமனித அன்றாட வாழ்வுசார் பிரச்சனைகள், அந்தக் கிராமத்தில் பெரும்பான்மை சமூகம் முன் நிலவுகின்றது. கிராம மக்களை ஒன்றிணைத்து, அரசிடம் தங்கள் பிரச்சனையை விளக்கி இதைக் கோருகின்ற வண்ணம் தான், கட்சி மக்களைச் சார்ந்து அணுக வேண்டும். இங்கிருந்து தான், இதனூடகத்தான் போராட்டங்களை வழிநடத்த முடியும். சமூகம் முழுக்க அரசிடம் இதை கோரிப் பெறும் வண்ணம், போராடிப் பெறும் வண்ணம் வழி நடத்தவேண்டும்;.

தனிநபருக்கு, சிலருக்கு கொடுக்கும் தன்னார்வ அரசியலை நாம் பின்பற்ற முடியாது. மக்கள் மறுவாழ்வு தான் முதன்மையானது என்ற அரசியல், பொருள் நிதி உதவி என்று கூறுகின்ற மனிதநேய பொது அரசியல் போக்கின் பின் கட்சி செயல்பட முடியாது. அரசு செய்ய வேண்டிய வேலையை, அரசு ஊடாக பெறும் வண்ணம் கட்சி மக்களை வழிகாட்ட வேண்டும்;. மக்கள் ஊடாக, அவர்களைக் கொண்டு தீர்வு காணும் அணுகுமுறையை வழிகாட்டுவது தான் மக்கள் அரசியல். அரசு தான் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து, மக்கள் அரசிடம் கோருகின்ற வண்ணம் கோரிக்கைகளை போராட்டங்களை முன்தள்ள வேண்டும்;. இதன் மூலம்தான், அரசுக்கு எதிரான மக்கள் திரள் அமைப்பை உருவாக்க முடியும்.

சில உதாரணங்களைக் பாருங்கள். காணாமல் போனவர்களை சார்ந்த குடும்பங்கள், அவர்களை தேடும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர். இதைக் கட்சி தலைமை தாங்கவில்லை. ஏன் வர்க்க சக்திகள் இதில் பங்குபற்றுகின்றனரா எனின் அதுவுமில்லை. இதன் பின்னால் தமிழ்தேசியம் கூட இல்லை. ஏன் வர்க்க கட்சிகள் இதை வழிநடத்த முடியாமல் போனது? சரி இதனுடன் சேர்ந்து போராட முடியாமல் இருப்பது ஏன்? இதை நாம் கேள்விக்குள்ளாக்கி, எம்மை நாம் சரி செய்யாத வரை இலங்கையில் வர்க்க அரசியலுக்கு எந்த இடமுமில்லை.

ஊடகங்கள் மீதான தாக்குதலும் தொடர் போராட்டங்களும், தொடரும் இராணுவ அத்துமீறல்களும் போராட்டங்களும் ஆகட்டும் சமூக கலாச்சார சீரழிவுக்கு எதிரான போராட்டமாகட்டும், எதிலும் வர்க்க சக்திகள் தலையிடவில்லை, போராட்டத்தை முன்னெடுக்கவில்லை, பங்குபற்றுவது கூட கிடையாது.

இனப்பிரச்சனை "தீர்வு" குறித்தோ, கைதிகளின் விபரத்தை முன்வைக்கக் கோரி… என்று பல நூறு பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் மக்களை வழிகாட்ட முடியாத வர்க்க அரசியலின் பின்னணியில், நாம் வர்க்க சக்திகள் என்று தொடர்ந்து கூறிக்கொண்டு இருப்பதற்காக நாம் முதலில் வெட்கப்பட வேண்டும்;.

சரி இந்தப் பொதுவான போராட்ட நிகழ்;ச்சிநிரலுக்கு வெளியில், வர்க்கக் கட்சி மக்களை அணிதிரட்டி இயங்கின்றனரா எனின், இல்லை. வர்க்க சக்திகளின் முதன்மையான இன்றைய பிரச்சனை, எம்மை நாம் எப்படி நடைமுறைப் போராட்டத்தில் இணைப்பது என்பது தான். இதற்கு நாங்கள் தடையாக இருப்பின், அதைக் களைவதன் மூலம் தான் இந்த அரசியல் சூழலை நாம் எம்மில் இருந்து மாற்ற முடியும். எமக்கு வெளியில் போராட்டங்கள் நடக்கின்றன என்பதை கவனத்தில் எடுத்தல் அவசியம். நாங்கள் இதற்கு தலைமை தாங்க முடியாது இருப்பதற்கு நாங்கள் தடையாக இருக்கின்றோமா என்பதை கேள்விக்குள்ளாக்கிய அரசியல் விவாதத்தை மக்கள் போராட்டங்கள் கோரி நிற்கின்றது. அடிப்படையானதும் முதன்மையானதுமான அரசியல் விடையம் இதுதான் இன்று இருக்கின்றது.

 

பி.இரயாகரன்

20.08.2011

Last Updated on Saturday, 20 August 2011 07:59