Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் "மகிந்த சிந்தனை" பற்றிய தத்துவார்த்த திரிபுகள்

"மகிந்த சிந்தனை" பற்றிய தத்துவார்த்த திரிபுகள்

  • PDF

சிந்தனையே அல்லாத ஒன்றை, சிந்தனையாக கூறுவதில் இருந்து தொடங்குகின்றது இந்த இடதுசாரிய திரிபும், புரட்டும். சுரண்டும் வர்க்கம் எந்த வடிவில் எப்படி மக்களை மோதவிட்டு சுரண்டி ஆள்வது என்பதை தாண்டி "மகிந்த சிந்தனை" என்று ஓன்று புதிதாக கிடையாது. இதை "மகிந்த சிந்தனை" என்று ஆளும் சுரண்டும் வர்க்கம் கூறி அழைப்பதால், இதுவொரு புதிய சிந்தனையே கிடையாது. இல்லை, இது ஒரு புது சிந்தனைதான் என்று கூறுகின்ற இடதுசாரியம், ஆளும் வர்க்கத்தின் அதே நோக்கை மீள திணிக்கிறது என்பது தான் இங்குள்ள அரசியலாகும்.

 

யுத்தத்தின் பின்னான அரசியல் வெற்றிடமும், கூர்மையாகும் சமூக முரண்பாடுகளும், தவிர்க்க முடியாமல் வர்க்க அரசியலை முன்னிலைக்கு கொண்டு வருகின்றது. மக்களை மந்தையாக்கி நம்பிக்கை ஊட்டக்கூடியதாக இருந்த கடந்தகால வலதுசாரிய போக்குகள் அனைத்தும் அம்பலமாகி வருகின்றது. வர்க்க அரசியலும், வர்க்கக் கட்சியுமே இந்த அரசியல் வெற்றிடத்தை மட்டுமின்றி, முரண்பாடுகளை தீர்க்க ஆற்றல் பெற்றதாக மாறிவருகின்றது. இந்தப் புதிய சூழல் ஆளும் வர்க்கத்தின் முன் அச்சமூட்டக் கூடியதாக மாறிவருகின்றது.

இந்த நிலையில் ஆளும் வர்க்கங்கள் இதை தடுக்கும் வண்ணம், கோட்பாட்டு ரீதியான திரிபுகளைப் புகுத்துவது அந்த வர்க்கத்தின் அணுகுமுறைகளில் ஒன்று. அதுவும் இடதுசாரியத்தின் பெயரில் தான் அதைச் செய்கின்றது. இது உலகம் தளுவிய பொது அணுகுமுறையுமாகும். இதன் பின்னணியில் தங்களை மூடிமறைத்துக் கொண்டும், திடீர் இடதுசாரிய அரசியல் வருகைகள் ஆங்காங்கே அரங்கேறுகின்றது. இது பல தளத்தில் வெளிப்பட்டு வருகின்றது. தத்துவரீதியான புரட்டுகளோ, வெளிப்படையற்றது ஆனால் சூக்குமமானது. இந்தவகையில் இதை இனங்கண்டு அம்பலப்படுத்துவதன் மூலம், தெளிவை உருவாக்குவது அவசியமானது.

இந்த வகையில் "மகிந்த சிந்தனை" பற்றி தத்துவார்த்தத் தெளிவு அவசியமானது. மகிந்த சிந்தனையை மத, சாதிய, இனக் கோட்பாடாக காட்டுகின்ற திரிபு, இடதுசாரிய போக்கின் ஊடாக முன்வைக்கப்படுகின்றது. இன்று இலங்கையில் "மகிந்த சிந்தனை"யின் பெயரில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாசிசமயமாக்கலுடன் கூடிய இராணுவமயமாக்கலுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வும், வர்க்கப் போராட்டமாக மாறக்கூடாது என்பது தான் அனைத்து ஆளும் வர்க்கத்தினதும் கவலை. இதை மத, சாதிய, இனக் கோட்பாடாக காட்டுவதன் மூலம், இந்த எல்லைக்குள் போராட்டத்தை முடக்குவதுதான் இதன் பின்னுள்ள அரசியல் நோக்கம்.

மகிந்தா அரசின் பாசிசமயமாக்கலுடன் கூடிய இராணுவமயமாக்கல் பலமுனை முரண்பாடுகளை சமூகத்தில் உருவாக்குகின்றது. மகிந்த அரசு "மகிந்த சிந்தனையின்" பெயரில் கொண்டுள்ள இந்த ஒடுக்குமுறையை, வர்க்க ஓடுக்குமுறையல்ல என்று கூற முற்படுவதன் மூலம் இதை திசைதிருப்ப முனைகின்றனர்.

"மகிந்த சிந்தனை" என்பது ஒரு சிந்தனையே அல்ல. சிந்தனை என்பது, ஒரு துறைசார் அறிவாகும். இந்தவகையில் கூட "மகிந்த சிந்தனை" புதிய கோட்பாடுமல்ல. இங்கு "மகிந்த சிந்தனை" என்ற ஒன்று இருப்பதாக கூறுவது, அது இதுதான் என்று கூறி திரிப்பது இடதுசாரியத்தின் பெயரிலான திரிபும், புரட்டுமாகும்.

மகிந்த அரச தன் சொந்த நடத்தையை "மகிந்த சிந்தனை" என்று அழைப்பதால், அது புதிய ஒன்றேயல்ல. ஆனால் அதைப் பின்பற்றி இடதுசாரியத்தின் பெயரில் கூறுவது, மகிந்தாவின் அரசியல் வழிப்பட்ட அதே அரசியலை இடதுசாரியத்தின் பெயரில் கூறுவதுதான்.

"மகிந்த சிந்தனையை" மத, சாதிய, இனம் சார்ந்த ஓன்றாக, மகாவம்சத்தின் அடிவந்த அரசியல் சித்தாந்தமாகவும் அதன் சிந்தனையாகவும் காட்டுவதன் மூலம், இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை திசைதிருப்புவதாகும். இலங்கை அரசின் பின்னால் இருக்கக் கூடிய மத, சாதிய, இனக் கூறுகளைக் காட்டி, அதுவாக அரசை இட்டுக் காட்டுவது அரசு பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தை திரிப்பதாகும்.

முதலில் அரசு என்பது எங்கும் எப்போதும் ஒரு வர்க்கத்தின் கருவி. வர்க்கம் என்பது மனித உழைப்பை மற்றொரு மனிதன் சுரண்டும் அடிப்படையில் இருந்து உருவாகின்றது. மனிதனை மனிதன் சுரண்டும் உரிமையை சட்டப்படி பாதுகாக்கின்ற நிர்வாகக் கட்டமைப்புத் தான், அரசாக மாறுகின்றது. இந்த சட்டங்ளைப் பாதுகாக்க நீதிமன்றங்கள் முதல் இராணுவக் கட்டமைப்பு வரை இயங்குகின்றது. இந்த வகையில் அரசு இயந்திரம் இயங்குகின்றது. அரசு என்பது சுரண்டும் வர்க்கத்தின் கருவியாகும். மனித உழைப்பைச் சுரண்டும் உரிமையைத்தான் "ஜனநாயகம்", மனித "சுதந்திரம்" என்கின்றது சுரண்டும் வர்க்கம். இங்கு அரசு என்பது, வர்க்கத்தின் சர்வாதிகாரம் தான். இதை மூடிமறைக்க இதை "ஜனநாயக" ஆட்சி என்கின்றது.

இந்தச் சுரண்டும் வர்க்கம் தனது சுரண்டும் இந்தச் செயலை மூடிமறைக்கவும், அதைப் பாதுகாக்கவும், மதம், இனம் பால் சாதி நிறம் நாடு என்று பலவற்றை முன்னிறுத்தி மக்களை மோதவிட்டு பிரித்தாளுகின்றது. இதைத்தான் "மகிந்தசிந்தனை"யின் பெயரில் இலங்கையில் செய்கின்றது. புதிதாக வேறு ஒன்றையுமல்ல.

இப்படித்தான் இலங்கையில் சுரண்டும் வர்க்கம் மத, சாதிய, இனக் கூறுகளை முன்னிறுத்தி மக்களை மோதவிடுகின்றது. இது இன்று நேற்றல்ல, காலனியாதிக்கத்துக்கு பிந்தைய ஆளும் வர்க்க அரசுகளின் வர்க்க ஆட்சி எங்கும் இது காணப்பபடுகின்றது. காலனிய காலத்தில் இது வேறுவிதமாக திசை திருப்பப்பட்டது. காலனிக்கு பிந்தைய சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சி மத, சாதிய, இன முரண்பாடுகளை முன்னிறுத்தியது. இது மகிந்த அரசு "மகிந்தசிந்தனை"யின் பெயரில் உருவாக்கிக் கொண்ட புதிய சிந்தனையல்ல.

இப்படி இருக்க இடதுசாரியத்தின் பெயரில் இதை திசைதிருப்ப மகாவம்ச வழிவந்த சிந்தனை தான் "மகிந்த சிந்தனை" என்ற புது இணைப்பை இடைச்செருகலாக புகுத்துகின்றனர். இங்கு வேடிக்கை என்னவென்றால் மகாவம்சத்தை சிந்தனை என்று முதலில் திரிப்பதில் இருந்து தொடங்குகின்றது.

1. புத்த மதத்தை சேர்ந்தவர்கள் மகாவம்சத்தை எழுதினார்கள் என்பதற்கு அப்பால், இது ஒரு மத நூலல்ல.

2. இது ஒரு வரலாறு பற்றிய நூல். இது ஒரு சித்தாந்தமோ, சிந்தனையோ, கோட்பாடோ அல்ல.

3. மகாவம்சம் சாதியம் பற்றி நூலல்ல.

4. மகாவம்சம் இனம் சார்ந்த நூலுமல்ல.

இது அன்றைய வரலாற்று சூழலுக்குள் உள்ள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட, ஒரு வரலாற்று நூல். இதை மதம் சார்ந்ததாக, இனம் சார்ந்ததாக, சாதி சார்ந்ததாக காட்டி, பின் இதை சிந்தனையாக காட்டுவது வரலாற்றுப் புரட்டு. இதை ஒரு சிந்தனை சார்ந்தாக, மத சாதிய இனம் சார்ந்தாக, சுரண்டும் வர்க்கம் மக்களை பிளந்து ஆள இட்டுக்கட்டிக் காட்டினால் இதை மறுத்து போராட வேண்டும். இல்லை அதுதான் இது என்று இடதுசாரியத்தின் பெயரில் கூறுபவர்களின் அரசியல் நோக்கம், சுரண்டும் வர்க்கத்தின் நோக்கமும் இங்கு ஓத்துப் போவதையும், ஓரே நோக்கில் நின்று திரிப்பதையும் நாம் இங்கு இனம் காணமுடியும்.

"மகிந்த சிந்தனை" பெயரில் உள்ளது ஆளும்வர்க்கம் சுரண்டுவதற்காக தேர்ந்தெடுத்த பாசிச இராணுவ மயமாக்கலை அடிப்படையாக கொண்டது. இதன் பின்னணியில் பிராந்திய மற்றும் உலகமேலாதிக்க சக்திகளின் முரண்பட்ட நலன் சார்ந்த கூறுகளும் பின்னிப்பிணைந்த ஒன்று. இங்கு குடும்ப நலன் சார்ந்த சுரண்டும் அதிகார வர்க்க கூறுகளும் ஓன்றிணைந்து வெளிப்படுகின்றது. இது சுரண்டும் வர்க்கம், சுரண்டுவதற்கு தேர்ந்தெடுத்துள்ள ஆளும் வர்க்கம் சார்ந்து வெளிப்படும் அரச வடிவம். இதை "மகிந்த சிந்தனை" என்று அவர்கள் கூறுவது ஒருபுறம் இருக்க, இது உலகெங்கும் உள்ளது தான். சுரண்டலை எப்படி எந்த வடிவில் நடத்துவது என்பது தான், இதில் உள்ள குறிப்பான பண்புரீதியான வேறுபாடு. இதை மூடிமறைக்க மத, சாதிய, இனக் கூறுகளை முன்னிறுத்துவது, எங்கும் நடப்பது போன்றுதான் இங்கும் நடக்கின்றது.

இங்கு "மகிந்த சிந்தனை" என்பதாக புதிதாக ஏதோ இருப்பதாக காட்டுவது, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல் பித்தலாட்டமாகும். இது இடதுசாரியத்தின் பெயரில் வரும் போது, வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பும் திரிபும் புரட்டுமாகும்.

பி.இரயாகரன்

15.08.2011

Last Updated on Monday, 15 August 2011 11:10