Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் எமது பிரச்சாரமும், எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரமும்

எமது பிரச்சாரமும், எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரமும்

  • PDF

முன்னேறிய நிலையில் எமது கருத்து ஆதிக்கமும், அதை முன்வைக்கும் திறனும், எமது செயல்பாட்டில் இல்லை. அதுபோல் எமது அமைப்பின் ஒட்டுமொத்த ஒரு கூறாக இது முன்னேறிவிடவில்லை. இது எம்மைச் சுற்றி அரசியல் எதார்த்தம். இது உள் மற்றும் வெளி முரண்பாடுகளை உருவாக்குகின்றது.

நாம் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் போது, எதிர்ப்பிரச்சாரத்தை நாம் எதிர்கொண்டாக வேண்டும். அதை முறியடிக்கும் அரசியற்பலத்தை நாம் பெற்றிருக்கவேண்டும். எமது பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாதபோது, எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரம் தன்னை மூடிமறைத்துக் கொண்டும், தன்னை சார்பானதாக நிறுத்திக்கொண்டும், ஒரு இடைவெளியை உருவாக்கி அதன் ஊடாக எதிர்ப்பிரச்சாரத்தை முன்தள்ளுகின்றது. இன்று பொதுவில் பலதரப்பும் எம்மை நோக்கிக் கூறுவது, உங்கள் கருத்துக்கள் எல்லாம் சரி, ஆனால்? என்றவாறு ஏதோ ஓன்றை எப்போதும் கூற முற்படுவதன் மூலம் தான் எதிர்ப்பிரச்சாரத்தை முன்தள்ளுகின்றனர். கருத்தியல்ரீதியாக இதை எதிர்கொள்ள அவர்களால் முடிவதில்லை. நாங்கள் வெளிப்படுத்தும் கருத்து சரி என்பவர்கள், அதை தம்மளவில் கூட முன்னெடுப்பதில்லை. இப்படி எதிர்ப்பிரச்சாரம் கருத்துக்கு வெளியில் அமைகின்றது.

 

 

 

இதுவொருபுறம் இருக்க, இன்று நாம் அரசியல் பிரச்சாரத்தினை முன்னெடுக்கும் போது, அரசியல்ரீதியாக இரண்டு தளத்தில் அதை முன்வைக்கின்றோம்.

1. முன்னணி ஊழியர்களை உருவாக்குவதும், முன்னணி ஊழியர்களை அரசியல்ரீதியாக வளர்த்தலும்;

2. பரந்துபட்ட மக்களை எம் அரசியற்பிரச்சாரம், கிளர்ச்சி ஊடாக எமது பக்கம் கொண்டு வருதலும், அவர்கள் அமைப்பாக்கலும்

இந்த நோக்கில் தான் தமிழரங்கம், முன்னணி இரண்டும் இயங்குகின்றது. தமிழரங்கத்தின் அரசியல்ரீதியான வளர்ச்சிப் படிநிலையின் அடுத்த கட்டம் தான் முன்னணியின் உருவாக்கம். முன்னணியை உருவாக்குவது மட்டுமே எம் நோக்கமல்ல. மக்களை அரசியல்ரீதியான செயலுக்கு வழிகாட்டும் அரசியல் முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்டுதான் முன்னணி உருவாக்கப்பட்டது. இதை நாம் புலத்தில் இருந்து சிந்திப்பது ஒரு முரணாக இருந்த போதும், இந்த முரண்பாட்டை புரிந்து கொண்டுதான், அரசியல் எல்லையை வரையறுத்துக் கொண்டுதான் இதை அணுகுகின்றோம். எமது செயல்பாட்டினால் உருவாகும் அரசியல் ரீதியான தாக்கம், இலங்கையில் அரசியல்ரீதியான சமூகப் பிரிவுகள் மேல் கருத்தியல் ரீதியான தாக்கத்தைக் கொடுக்கின்றது. நாம் உடன்பட்ட பொதுக்கருத்தின் வழி சிந்திப்பதையும், ஓரு நேர்கோட்டு செயல்பாட்டுக்கான அரசியல் தேவையையும் பல மட்டத்தில் உருவாக்கி வருகின்றது. இந்த வகையில் சரியான பாதையில், சரியான அரசியலிலும் நாம் தொடர்ந்து பயணிக்கின்றோம். இந்த நிலையில் எமது பிரச்சாரம் பற்றியும், எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரம் பற்றிய அரசியல் தெளிவும் அவசியமானது.

இங்கு எமது பிரச்சாரத்தின் மையமான கோட்பாட்டு அரசியல் வரையறை, வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. நிலவும் சமூக முரண்பாடுகள் மீதான அரசியல் கண்ணோட்டம் வர்க்க அரசியலை, அடிப்படையைக் கொண்டது. இதுதான் எமது அரசியல் அணுகுமுறையாகும்.

இங்கு வர்க்கங்கள் பலவாக இருப்பதால், எதிரி வர்க்கத்தை இனம் காட்டி அம்பலப்படுத்துவது போல், நட்பு வர்க்கத்தை அரவணைத்து செல்கின்றோம். சமூக முரண்பாடுகள் (தேசியம், சாதியம், பெண்ணியம் …) மீதும் இதே அரசியல் அளவுகோலைத்தான் நாம் அளவுகோலாக கொள்கின்றோம்.

இங்கு கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் அரசியல் சார்ந்து, சமூகத்தை கருத்தில் ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் வழிநடத்தும் பிரிவாக உள்ளனர். இவர்கள் தங்கள் செயல்பாடுகள், கருத்துக்கள் சார்ந்து, ஒரு வர்க்கத்தைப் பிரதிபலிக்கின்றனர். இப்படி சமூகம் மேல் தம்மை நிலைநிறுத்தும் பிரிவாக இருக்க, இதற்கு வெளியில் மக்கள் இந்த வர்க்க, சுரண்டல் சமூக அமைப்பை எதார்த்தத்தில் பிரதிபலிக்கின்றனர். இங்கு முரண்பாடுகள் முதல் போராட்டங்கள் வரை நிகழ்கின்றன. இந்த வர்க்கப் பின்னணியில் தான் கட்சிகள், குழுக்கள், தனிநபர்களின் செயல்பாடுகள், கருத்துகள் என அனைத்தும் அமைகின்றது.

இதனால் எமது செயல்பாடு இரண்டு அரசியல் தளத்தில் அவசியமானதாகின்றது.

1. மக்களை நேரடியாக நாம் அணுகி அவர்களை அணிதிரட்டுவது

2. கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் அரசியல் ரீதியாக எதிர்கொண்டு, மக்கள் முன்னும் ஊழியர்கள் முன்னும் தனிமைப்படுத்துவது

இங்கு

1. ஒன்றை நிராகரித்து விட்டு ஒன்றை மட்டும் தனித்து அணுகுவது தவறானது.

2. அதுபோல் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளாது குழப்பி அணுகுவது தவறானது.

3. ஒன்றை அணுகுவதன் மூலம் மற்றதை வழிக்கு கொண்டு வர முடியும் என்பது தவறானது.

இங்கு வர்க்க ரீதியான முரணான போராட்டத்தை அனைத்து அரசியல் தளத்திலும் நாம் நடத்தியாக வேண்டும். கருத்து என்ற வகையில், சமூகத்தை பிழையாக வழிநடத்தும் அனைத்தையும் அணுகி அம்பலப்படுத்த வேண்டும்.

நாங்கள் எதைச் செய்ய விரும்புகின்றோமோ, அதைத்தான் அவர்கள் தங்கள் வர்க்கம் சார்ந்து செய்ய முற்படுகின்றனர். கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் தங்கள் வர்க்கத்தின் நலன் சார்ந்து, மக்களை தம் பின் அணிதிரட்ட முனைவதுடன், எமது கருத்துகள் கோட்பாடுகள் மேல் எதிர்ப்பிரச்சாரத்தை நடத்துகின்றன.

இங்கு மக்கள் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படுவது மட்டுமின்றி, ஊழியர்கள் மத்தியில் கருத்தியல் மற்றும் கோட்பாடுகள் மீது ஊசலாட்டமும் எழுகின்றது. கட்சிகள், குழுக்கள், தனிநபர்களை எதிர்கொள்ளாமல், இதை அம்பலப்படுத்தாமல் நாம் வர்க்க அமைப்பாக முன்னேற முடியாது.

மக்களை அணிதிரட்டும் போது நாம் நேரடியாக அவர்கள் பிரச்சனைகள் ஊடாக அணுகுகின்றோம்;. இதன் போது

1. எம் கருத்தை முன்வைகின்றோம்.

2. அவர்களிடம் கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் முன்வைத்த கருத்துகள், எப்படி தவறானது என்பதை விளக்கி வென்று எடுக்கின்றோம். ஆகவே இங்கு கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் பற்றிய அரசியல் தெளிவு அவசியமானது.

இங்கு கட்சிகள், குழுக்கள், தனிநபர்களை அணுகும் போது, அதுவொரு கோட்பாட்டு விவாதமாக மாறுகின்றது. இங்கு அவர்களின்

1. அரசியல் கருத்துக்களும் அதன் கோட்பாடுகள் மீதும்,

2. அரசியல் ரீதியான நடத்தைகளை அடிப்படையாக கொண்டு, அவர்கள் நடத்தை மீதும்,

ஒரு அரசியல் விமர்சனமாக மாறுகின்றது. இங்கு இதில் ஒன்று அநேகமாக முதன்மை பெறும். கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் பாத்திரங்கள், சூழல் என்பன இதைத் தீர்மானிக்கின்றது. இதை தவிர்த்துவிட்டு அரசியல் செய்வது என்பது, கற்பனைக்குரியது. மற்றவை தவறானது என்று சொல்லாது கருத்து மற்றும் விமர்சனம் செய்யாத கோட்பாடுகள், எம்மை நாம் நிராயுதபாணியாக்கி சரணடைய வைப்பதுதான்.

நீங்கள் எம்மை விமர்சிக்காது உங்கள் கருத்துகளை மட்டும் முன்வைத்து, ஏன் மக்களை அணிதிரட்ட முடியாது என்று எதிரி கோருகின்றான். தம் மீதான விமர்சனம் மூலம், மக்கள் தம்மை விட்டு விலகுவது கண்டு அவர்கள் கொள்ளும் அச்சம் தான் இவ்வாறு கோரவைக்கின்றது. இதே அடிப்படையில் கருத்தில் மற்றும் கோட்பாட்டுத் தளத்தில் கோரப்படுகின்றது. தம்மை விமர்சிக்காத, தூய்மையான கோட்பாட்டை மட்டும் முன்வைக்குமாறு கோருகின்றனர். தாங்கள் தொடர்ந்து அம்பலமாவதையடுத்து, இது அக்கம் பக்கமாக தம்மை காட்டிக்கொண்டு வெளிப்படுகின்றது.

இன்று கருத்தியல் ரீதியாக நாம் மிகச் சரியாக இருப்பதால், எம்மை மீறிய கருத்துகள் இன்று கிடையாது. இதனால் நாம் எதிரிகளை பல முனைகளில், பல வடிவில் சந்திக்கின்றோம். எம் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள், கருத்து சொல்லும் எம் முறைக்கூடாக அதை கேள்விக்குள்ளாhகி அணுகுகின்றனர். அதுவும் ஒரு அரசியல் தான்.

கருத்தைப் பிரதிபலிக்கும் மொழி முதல், கருத்தை முன்வைத்த தனிநபரை மையப்படுத்திய எல்லைக்குள், இந்த விவகாரத்தை சுருக்கிவிட முனைகின்றனர். இதுதான் எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரத்தின் உத்தி. இதை நாம் எதிர்கொண்டு எதிர்வினையாற்ற முடியாத போது, மொழி, கருத்தாடலில் வரும் தனிநபர்களை கருத்துத்தளத்தில் இருந்து நீக்குவதன் மூலம் எமக்கு எதிரான எதிர்வினையை இல்லாதாக்க முடியும் என்று நம்புகின்றனர். இது அரசியல் போக்காக மாறுகின்றது.

இந்த எதிர்ப்பிரச்சாரத்தின் அரசியல் சாரத்தை பின்நவீனத்துவம் வழிகாட்டுகின்றது. அது கூறுவது போல் படைப்பை படைத்த பின், படைப்பை படைத்தவன் அதற்கு பொறுப்பில்லை என்ற அடிப்படையில் விமர்சனத்தில் இருந்து படைப்பாளிக்கு அரசியல் விலக்கை கோருகின்றனர். படைப்பாளி இந்த வர்க்க அமைப்பின் ஒரு பிரதிநிதி என்ற உண்மையை இது மறுக்கின்றது. படைப்பு தன் வர்க்கம் கடந்து சுயாதீனமாக இயங்குகின்றது என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. படைப்பாளி மீதான விமர்சனங்கள் அவசியமற்றவை, படைப்பு மீதான விமர்சனம் தான் அவசியமானது என்ற எல்லைக்குள் இது சுருங்கிவிடுகின்றது. படைப்பை விமர்சி, படைப்பாளியை விமர்சிக்காதே என்ற அரசியல் கோட்பாடாக மாறுகின்றது. இப்படி பின்நவீனத்துவம் சொன்ன, படைப்பைப் படைத்த பின், படைப்பாளி அதற்கு பொறுப்பல்ல என்ற கோட்பாட்டை தான் இன்று எமக்கு எதிரான எதிர் பிரச்சாரம் முன்வைக்கின்றது.

இது கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் மீதான விமர்சனம் அவசியமற்றது என்ற அரசியல் கோட்பாட்டை உருவாக்குகின்றது. கருத்துகள், கோட்பாடுகள் சுயாதீனமாக இயங்கி, மக்களை அணிதிரட்டவல்லன என்ற கற்பனையை உருவாக்குகின்றது. கருத்துக்கள் மக்களைப் பற்றிக் கொண்டால் மாபெரும் சக்தியாக மாறும் என்ற மாவோவின் கூற்றை, தன்னியல்பாக நடக்கும் என்று கருதுமளவுக்கு, வெறும் கருத்தைப் பிரச்சாரம் செய்தால் போதும் என்ற அரசியல் வரையறையை கோருகின்றது. இதுவொரு அரசியலாக மாறுகின்றது. சரியான கருத்துகள், கோட்பாடுகளை, மற்றையவற்றை விமர்சிக்காது சுயாதீனமாக வைக்கக் கோருகின்ற அரசியல் கோட்பாடு, தன்னை அரசியல் எதிர்நீச்சலில் இருந்து விடுபடும் தத்துவமாக மாறுகின்றது.

இன்று தமிழரங்கம் முன்வைக்கும் கருத்துகளும், அதன் சரியான தன்மையும், நடைமுறை ரீதியான ஒரு செயல்பாட்டு தளத்துடன் ஒன்றிணைந்ததாக மாறிவிடவில்லை. இதை நடைமுறையாக்கும் பணி எம் அன்னியமான சூழல்கள் சார்ந்தும், பொதுவாக உள்ள பல சமூக அரசியல் தடைகளையும் தாண்டி முன்னேற வேண்டியுள்ளது. எமது எந்தக் கருத்தும், செயலும் இதை செய்யத்தான் முன்வைக்கப்படுகின்றது.

இங்கு இந்தக் கருத்து, கருத்தை வைக்கும் முறை இதைச் செய்யத் தடையாக இருக்கின்றதா? இப்படி ஒரு வாதம், தர்க்கம் நடைமுறையில் செயலுள்ள அமைப்பைக் கட்டத் தடையாக உள்ள உண்மையான காரணத்தை கண்டறிந்து, அதை கடப்பதை தடுக்கின்றது.

எமது பிரச்சாரம் இரண்டு வகையில் வரையறுக்கப்பட்டு வெளிப்படுகின்றது. தமிழரங்கம் மூலம் முன்னணி ஊழியர்களை உருவாக்க முனைகின்றது. முன்னணி ஊடாக மக்களை திரட்ட முனைகின்றது. இது பொதுவான கொள்கை. நடைமுறையில் இதைச் செய்வதில் உள்ள தடைகள் பல. உதாரணமாக முன்னணி மக்களை அணுகும் பாதையில் பாசிசத்தை எதிர் கொண்டாக வேண்டும். இதுபோல் நாம் வாழும் சூழல், எம் குட்டிபூர்சுவா இயல்புகள் என்று பற்பல.

இது ஒருபுறமிருக்க, அக்கம்பக்கமாக எமக்கு சமாந்தரமாக கருத்துகளை முன்வைப்பவர்கள் தான், கருத்தளவில் எம்மை எதிர்த்து தீவிரமாக செயலாற்றுகின்றனர். இன்று எந்த விடையங்கள் மீதும் நாம் முன்வைக்கும் கருத்து அரசியல் ரீதியாக முன்னேறியது என்பதால், அதற்கு மாற்றாக எவராலும் எதையும் வைக்க முடியாது போகின்றது. நிகழ்வுகள் மீது இதை நாம் உடனடியாக முன்வைக்கும் போது, நாம் அல்லாத மற்றைய தரப்புக்கு கருத்து இல்லாமல் போகின்றது. இதை நாம் நடைமுறைப் போராட்டத்தில் பயன்படுத்திவிட்டால், நாம் தீர்மானகரமான அரசியல் சக்தியாகி விடுவோம்;.

இந்தக் கருத்தியல் ரீதியான முன்னேறிய நிலையும், அதை முன்வைக்கும் திறனும் இன்னமும் அமைப்பின் முழுமையான அரசியல் திறனாக மாறிவிடவில்லை. இது இன்னமும் தனிநபர்களை மையப்படுத்தியதாக இருப்பதால், ஒரு அமைப்பு என்ற வகையில் நாம் தொடர்ந்து அரசியல் ரீதியாக பலவீனமாகவே இருக்கின்றோம். ஒரு விடையத்தை புரிந்துகொள்வதில் இருந்து அதை நடைமுறைப்படுத்தும் வடிவங்கள் வரை, ஒரு பொது அரசியல் கண்ணோட்டமாக மாறிவிடவில்லை.

அரசியல்ரீதியாக தனிநபர்களை சார்ந்ததாக அமைப்பு இருக்கும் வரை, தனிநபர்களை மையப்படுத்தி பல கூறுகள் கொண்டதாக அமைப்பு வடிவமும் உள்ளடக்கமும் மாறுகின்றது. அரசியல்ரீதியான கூட்டு வேலைமுறைக்கு பதில், முதலாளித்துவ நிர்வாக வடிவம் மூலம் நிர்வகிக்கும் அமைப்பாக மாறுகின்றது. தனிநபர்கள் தம்மை மையப்படுத்திவிடும் போக்கு வெளிப்படுகின்றது. அது நிர்வாகக் குறைபாடு கொண்டதாக இருக்கும் போது, அரசியல் ஆளுமையற்றதாக இருக்கும் போது, அரசியல் ரீதியாக முன்னேறிய கருத்துகளை கொண்டதாக இல்லாது இருக்கும் போது, அதன் விளைவு, அமைப்பாக இயங்கும் அதன் குறைந்தபட்ச அரசியல் திறனை அற்றதாக்கிவிடும்.

மக்களுடன் தொடர்பற்ற அமைப்பு கற்றுக்கொள்ள முடியாது போகின்றது. இந்தவகையில் செயலற்ற அமைப்பு, கூட்டாக கற்றுக்கொள்ளும் அரசியல் வெளி இருப்பதில்லை. தானாக கற்றுக்கொள்ளும் சூழல் இருப்பதில்லை. இது அரசியல் வெற்றிடத்தில் மக்களை வழிநடத்தும் ஆளுமையை அதற்கு மேலும் இல்லாதாக்குகின்றது.

இதை நாம் புரிந்துகொண்டு கூட்டுவேலையை உருவாக்குவதன் மூலம்தான், ஒரு அமைப்பாக நாம் இயங்க முடியும். பிரச்சாரத்தின் முழுமையை எடுத்துச் செல்ல முடியும். எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரத்ததை முறியடிக்க முடியும். நாம் அரசியல் ரீதியாக முன்னேறிய ஒரு அமைப்பாக எம்மை நாம் புடம் போடத் தவறும் போது, எதிர்ப்பிரச்சாரம் எமது செயல்பாட்டை முடக்கி எமக்கு எதிரான தனது குற்றச்சாட்டுக்களைக் கொண்டு அமைப்பைச் சீரழிக்கும்.

எம்முன்னுள்ள பெரும் சவால் அரசியல்ரீதியாக முன்னேறிய கூட்டு வேலைமுறையை உருவாக்குவதும். பரந்துபட்ட மக்களுடன் அரசியல் பிணைப்பை உருவாக்குவதும் தான்.

 

பி.இரயாகரன்

26.07.2011

 

 

Last Updated on Tuesday, 26 July 2011 15:32