Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சிவத்தம்பியின் அறிவுசார் புலமையும், அதில் மிதக்க முனையும் பச்சோந்திகளும்

சிவத்தம்பியின் அறிவுசார் புலமையும், அதில் மிதக்க முனையும் பச்சோந்திகளும்

  • PDF

கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் ஓன்றை ஒன்று பெருக்கி நேராவது போல்தான், சமூகத்தில் எதிர்மறைகள் ஒன்று சேர்ந்து தம்மை நேராக்குகின்றது. அரசியல் - இலக்கிய பச்சோந்தித்தனமும், சிவத்தம்பியின் அறிவும், எதிர்மறையானது மட்டுமல்ல, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவை ஓன்றையொன்று சார்ந்து, தம்மை நேர்மையானதாகவும், நாணயமானதாகவும் காட்ட முனைகின்றது. அண்மையில் மரணமான சிவத்தம்பியின் மரணம் தரும் இயல்பான துயரங்கள் ஒருபுறம், மறுபக்கத்தில் மரணத்தை முன்னிறுத்தி தம்மை அடையாளப்படுத்த முனையும் அரசியல் - இலக்கிய முயற்சிகள். வழமை போல் மரணம் மூலம் தம்மை முன்னிறுத்த முடியாது போன கவலைகளும், கோபங்களும் பலருக்கு. அரசியல் - இலக்கிய பிழைப்பை நடத்த முடியாத அளவுக்கு, அவரை நாம் அம்பலப்படுத்தியிருந்தோம். இருந்த போதும் அவரின் புலமையை முன்னிறுத்தி, அரசியல் சிணுங்கியபடி வெளிவந்தது. இது அவரின் புலமையற்ற நடைமுறை வாழ்வுசார் அரசியலுக்கு வெளியில் தான், அவரின் புலமைசார் தமிழ் - இலக்கியம் உள்ளதாக காட்ட முற்படுகின்றது.

 

 

அவரின் மரணத்தை அடுத்து, அவரை முன்னிலைப்படுத்தி தங்களை முன்னிறுத்த முனைந்தனர். இந்த வகையில் சிவத்தம்பியின் முன்னைய புரட்டுத்தனமான பச்சோந்தித்தனமான பேட்டிகளை வெளியிட்ட போது, நாம் 2006ம் ஆண்டு அவரை விமர்சனம் செய்த ஒரு கட்டுரையை மறுபிரசுரம் செய்தோம்.

1."சமகால அரசியலில் பச்சோந்தி வேஷம் போட்ட ஒரு பாசிட்டே 'மாமனிதன்" சிவத்தம்பி"

2.யார் இந்தப் புத்திஜீவி?

இக்கட்டுரையை அடுத்து அவரையொத்தவர்கள், அவரைப் புகழ்ந்து தங்களை முன்னிறுத்தும் அரசியல் இலக்கிய சாக்கடை அடைப்புக்குள்ளானது. மறுதளத்தில் தமிழ் - இலக்கியம் என்ற மட்டத்தில் அவரின் படைப்புகளை முன்னிறுத்தி அதேநேரம், இக்கால அவரின் அரசியல் மீது எதையும் பேசாது அல்லது அதை சர்ச்சைக்குரியதாக காட்டியும், அவரின் புலமை மீது மெய் சிலிர்த்த சாதனைகளைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்தனர். ஆக அவரின் அரசியலுக்கு அப்பால், தமிழ் - இலக்கியம் பிரதிபலிக்கும் அரசியல் விமர்சனத்துக்கு அப்பால், வழிபாட்டுக்குரிய ஒன்றாகியது. இங்கு புலமை போற்றப்படுகின்றது. புலமைக்கு வர்க்க அரசியல் இல்லை என்பதே, இந்த அளவீட்டுகான அரசியல் அளவுகோலாகும். அவரின் தமிழ் - இலக்கியம் வெளிப்படுத்தி நிற்கும் அரசியல் என்ன? இதைச் சொல்லும் நிலையில், இதை புரிந்து கொள்ளும் நிலையில் எம்மத்தியில் அரசியல் இலக்கிய நேர்மை கிடையாது.

நாம் அவரின் தமிழ் - இலக்கியம் உள்ளடங்கிய சமகால அரசியல் மீது கடுமையாக அம்பலம் செய்த போது, தமிழ் - இலக்கியம் மீது சில குறிப்புகளை மட்டும் முன்வைத்திருந்தோம். அதை இன்று குறிப்பாக ஆராய்வது அவசியமாகின்றது.

வாழ்வுதான் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றது என்பது, எங்கும் தழுவிய ஒரு பொது உண்மை. இந்த உண்மையைத் தாண்டிய இரு வேறு திசைகளில் அரசியலும், தமிழ் - இலக்கிய படைப்புகளும் வௌ;வேறானதாக இருக்கமுடியாது. அதாவது வாழ்வுசார் நடைமுறையும், தமிழ் - இலக்கியம் சார் படைப்பும் தனித்தனியாக பிரிந்தும், விலகியும் இருக்க முடியாது. இதை இரண்டாகப் பார்க்கின்ற, காட்டுகின்ற திரிபு இன்று புகுத்தப்படுகின்றது. அவரின் புலமையற்ற அரசியலுக்கு வெளியில் தான், அவரின் புலமைசார் தமிழ் - இலக்கியம் உள்ளதாக இட்டுக்கட்டி காட்டுகின்றனர். ஆனால் இவ்விரண்டும் ஒரு அரசியல் அடிப்படையைக் கொண்டது. இதற்குள் தான் சிவத்தம்பி பயணித்தார்.

இலக்கிய உலகின் இரட்டையர்களாக சிவத்தம்பியையும் கைலாசபதியையும் ஒன்றாக ஒரே நேர்கோட்டில் காட்டுவது, இலக்கிய - அரசியல் சார்ந்த பிழைப்புவாதிகளின் பிழைப்புக்கேற்ற அரசியல் தந்திரமாக உள்ள்து.

சிவத்தம்பி 1980 களின் எழுச்சி பெற்ற தேசியத்தின் பிற்போக்கு தேசியக் கூறை மட்டும் ஆதரித்ததால், அவர் விமர்சனத்துக்குரியவராகி விடவில்லை. 1960 களில் எழுந்த புரட்சிகரமான இடதுசாரியத்தையும், அது நடத்திய சாதியப் போராட்டங்களையும் மறுத்தலித்த, பிற்போக்கான அரசியல் கூறை கூடத்தான் ஆரத்தழுவி ஆதரித்து நின்றவர். அவருக்கென்று வர்க்கம் சார்ந்த சமூகக் கண்ணோட்டம் உண்டு. அது படுபிற்போக்கானது. பிற்போக்கை மூடிமறைக்க முற்போக்கை பிரயோகிப்பது 1960 களில் சர்வதேச அளவில் இடதுசாரிய போக்கில் ஒரு அரசியல் வழிமுறையாக உருவானது.

இதன் அடிப்படையில் 1960, 1980 களில், இரண்டு வௌ;வேறான அரசியல் போக்குகளில் முற்போக்கான அரசியல் கூறை எதிர்த்து, பிற்போக்கான அரசியல் கூறுடன் சேர்ந்து பயணித்தவர் தான் இந்தப் புலமை சார்ந்த சிவத்தம்பி. அதேநேரம் தங்கள் பிற்போக்கை மூடிமறைத்து முற்போக்காகக் காட்ட, கடந்த காலத்தை விமர்சனம் செய்தார். இங்கு கைலாசபதி, தான் வாழ்ந்த காலப் பகுதிக்குள், சிவத்தம்பியை ஆதரித்து நின்ற பிற்போக்கான அரசியல் போக்குக்கு எதிரான புரட்சிகரமான அரசியல் போக்குடன் தன்னை இணைத்து வெளிப்படுத்தி இருந்தவர். இங்கு புலமை இரு வேறு திசைகளில் பயணித்தது.

சிவதம்பியின் புலமைசார் இலக்கியம், பிற்போக்கான சமூகம்சார் அரசியலை அடிப்படையாகக் கொண்டது. இந்த நிலையில் சிவத்தம்பியின் படைப்புகள் "முற்போக்காக" அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு, பொது சமூக அறிவுசார் அரசியல் தளம் புரட்சிகர தன்மை கொண்டதாக இருக்கவில்லை என்ற அரசியல் உண்மையை இது போட்டு உடைக்கின்றது.

தேசியம் மற்றும் இடதுசாரியத்தின் பிற்போக்கான கூறுகளை முற்போக்காக முன்னிறுத்தும் கூறு தான், சிவத்தம்பியை "முற்போக்காக" தொடர்ந்து முன்னிறுத்தியது, முன்னிறுத்துகின்றது.

1960 களில் சர்வதேசரீதியாக மார்க்சியம் திரிக்கப்பட்டு, புரட்சிகர அரசியல் கூறு மறுக்கப்பட்டதால் பிளவுண்ட இடதுசாரிய அரசியல் போக்கில், மார்க்சியமல்லாத அரசியல் கூறை வரிந்து கொண்டவர் இந்தச் சிவத்தம்பி. அதன் புலமைசார் அடிப்படையில்தான், சிவத்தம்பியின் படைப்புகள் உள்ளடங்கும். அவரின் அரசியல் சமூக பொருளாதார அடிப்படை, அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூகக் கூறுகளாலானது. சமூகம் புரட்சிகளின்றியும், காலனித்துவத்தின் விளைவுகளாலும், தானாக நிலப்பிரபுத்துவத்தைக் கைவிட்டும் விலகியும் வந்த சமூக அமைப்பின் பிரதிநிதி தான் சிவத்தம்பி. இந்த சமூகப் பிரதிநிதியாக நின்று, கடந்தகால நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை தன் புலமை மூலம் விமர்சித்தார். இதுதான் அவரின் புலமைசார் தமிழ் - இலக்கிய அரசியல் உள்ளடக்கமாகும்.

இறந்து பழமையாகிவிட்ட சமுதாய முறைமைகளை தன் புலமை சார்ந்து விமர்சித்தார். அதை தன் திரிபுவாத "மார்க்சியம்" மூலம் செய்ததால், "முற்போக்காக" வேஷம் போட முடிந்தது. புரட்சிகர கூறுக்கு எதிராக அன்று சோவியத்யூனியன் வழிகாட்டிய அரசியல் - இலக்கிய உத்தியும் இதுதான்.

இங்கு சிவத்தம்பின் மையமான விமர்சனம் அரசியல் உள்ளடக்கம், கடந்து போன நிலப்பிரபுத்துவத்தை விமர்சித்ததாகும். அரை நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ சமூக கூறுகளைச் சார்ந்து நின்று இதைச் செய்தார். சோவியத் திரிபுவாதம் புரட்சிகர வேஷம் போட்ட எல்லைக்குள் நின்று தன் புலமை மூலம் அணுகினார். எதார்த்த அரசியலில், அரை நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவத்தை பிரதிபலித்தார். இதுதான் புலமையற்ற அரசியலுக்கும், புலமைசார் தமிழ் - இலக்கியத்துக்கும் இடையில் உள்ள பிரிக்கமுடியாத உறவு.

அவரின் அரசியல் பிரதிபலிப்பு அரை நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்தபடி, அதுவாக வாழ்ந்தபடி அதற்கு முந்தைய சமூக அமைப்பை விமர்சனம்; செய்வதுதான். இதுதான் அவர் கீறிய கோடும், வரையறையும். இந்த சுத்துமாத்து புலமையைத் தான் போற்றுகின்றனர். சமகால சமூக பொருளாதார சமூக கட்டமைப்பை பாதுகாக்க முற்போக்கான அரசியல் கூறுகளை எதிர்த்து நின்ற அவர், பிற்போக்கு கூறுகளுடன் நின்றபடிதான் கடந்த காலத்தை விமர்சனம் செய்தார். இது அவரின் அறியாமையல்ல. இது அவரின் குழந்தைத்தனமல்ல இது அவரின் அரசியல் தெரிவு.

இந்த வகையில் அவரின் படைப்புகள் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கொண்ட, அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அடிப்படையைக் கொண்டது. இதைத்தான் 1960 களில் புரட்சிகர மார்க்சியத்தை நிராகரித்த சோவியத்யூனியன், புரட்சிகரமற்ற புரட்சிகர மயக்கத்தை உள்ளடக்கமாக கொண்டு புலமைக்கு வழிகாட்டியது. புரட்சிகரமான சமூகக் கூறை நிராகரிக்கும் படைப்புகள், நடைமுறை வாழ்வில் புரட்சிகரமற்ற வாழ்வை நிபந்தனையாகக் கொண்டது. நிகழ்கால சமூகத்தில் வாழ்ந்தபடி அதைப் பாதுகாத்தபடி அல்லது சீர்திருத்தத்தை கோரியபடி, கடந்தகால சமூகத்தை தீவிர விமர்சனத்துக்குள்ளாக்குவதன் மூலம் தம்மை முற்போக்காகவும் புரட்சிகரமாகவும் காட்டிக்கொள்வதைத் தான் சிவத்தம்பி அசகுபிசகின்றிச் செய்தார்.

நிகழ்காலத்தை விமர்சனம் செய்யாது இருப்பது புரட்சிகரமற்ற கூறாக இருக்க, பழமையை விமர்சிப்பது புரட்சிகரமான கூறாக இட்டுக் காட்டுவதன் மூலம் சமூகத்தை செயலற்றதாக்குவதாகும். புலமை சார்ந்த புரட்டு மூலம், சமூகத்தின் முன் புலனாகாத ஒன்றைத்தான், 1960 களில் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்த சோவியத்யூனியன் சமூகத்தின் மேல் திணித்தது. அதன் பிரநிதியாகத் தான், சிவத்தம்பியின் புலமைசார் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தது.

அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவத்தைப் பாதுகாக்கின்ற, அதேநேரம் நிலப்பிரபுத்துவ அமைப்பை விமர்சிக்கின்ற அரசியல் சமூக பொருளாதார அடிப்படையைக் கொண்டது இந்த படைப்புகள். ஏகாதிபத்தியங்கள் தங்களை எந்த விமர்சன எல்லைக்குள் தங்களை மூன்றாம் உலகநாடுகளில் நிலை நிறுத்துகின்றனவோ, அந்த விமர்சன எல்லைக்குள் சிவத்தம்பியின் படைப்புக்கள் அடங்கும். 1960 களில் அன்றைய சமூக ஏகாதிபத்தியமான சோவியத்தின் அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப, மார்க்சியத்தை உள்நுழைத்த விமர்சனம் தான் சிவத்தம்பியின் படைப்புகள். அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவத்துவ சமூகத்தை பாதுகாக்கின்ற எல்லையில், மார்க்சியத்தை புலமை சார்ந்து பிரயோகத்தவர் சிவத்தம்பி. கொந்தளிப்பான சூழலில் தன் சொந்த நடைமுறை வாழ்வை ஒளிக்க முடியாது, சமூகத்தின் போக்கில் தன்னை தக்கவைத்ததன் மூலம் அம்பலமானவர்.

அவரின் சோவியத் சார்பு அரசியல் போக்கு 1980 களில் சோவியத்தின் முடிவுடன் முடிவுக்கு வந்த போது, அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவத்தை பாதுகாக்கின்ற மற்றைய ஏகாதித்தியங்களின் தேவைக்கும் நோக்குக்கும் ஏற்ப பணம் வாங்கி எழுதிய புலமை சார் படைப்புகளும் வெளிவந்தன.

அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவம் சார்ந்து பிற்போக்கான கூறை ஆதரித்தபடி, மார்க்சியத்தை தனக்கு ஏற்ப திரித்து பிரயோகித்தவர், தனிப்பட்ட ரீதியில் நேர்மையானவராகக் கூட வாழ்வில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் மூலமான தேடுதல் மற்றும் ஆய்வுகளை செய்தவர், அதை தன் புலமைக்கு ஏற்ப பயன்படுத்திய போது, மாணவர்களின் அறிவை அரை நிலப்பிரபுத்துவ மேலாண்மையுடன் திருடியவர்.

படைப்புகள் இப்படித்தான் அங்குமிங்கமாக உருவானது. இந்தப் படைப்புகளின் பயன்பாடு என்பது, அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக இருப்பின் எல்லைக்குள்ளான அதன் கல்வி சார்ந்த ஒன்றாக தொடர்ந்து இருக்கும். சமூக மாற்றத்தை ஒட்டிய புரட்சிகரமான சமூகக் கல்வியில், நிலப்பிரபுத்துவத்தின் ஒரு பக்கத்தை புரிந்து கொள்ள இது உதவும். அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவத்தை மூடிமறைத்து பாதுகாத்த உண்மையையும், புரட்சிகரமற்ற அரசியல் உள்ளடக்கத்தையும் விமர்சனம் ஊடாக புரிந்து கொண்டு தான், அவரின் புலமை சார்ந்த படைப்பை நாம் அணுக வேண்டும்.

இல்லாத வாசிப்பும், அறிவும், அவரையொத்த பிற்போக்கு அரசியல் இலக்கிய கூறாகவே வளர்ச்சிபெறும். அரசியல் - இலக்கிய பச்சோந்தித்தனத்தை இது வளர்க்கும். புரட்சிகரமற்ற இந்த அரசியல் - இலக்கிய கூறுதான், நிலவும் இந்த அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்பையும், புரட்சிகரமற்ற அரசியல் - இலக்கிய நடைமுறையையும் தொடர்ந்து தக்கவைக்க உதவுகின்றது. இது தன்னை புரட்சிகரமாக காட்டிக்கொண்டு, புரட்சிகர அரசியலை இல்லாதாக்குகின்றது. இதைத்தான் நாம் இன்று, எங்கும் காணமுடியும்.

 

பி.இரயாகரன்

16.07.2011

Last Updated on Monday, 18 July 2011 18:33