Wed04172024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

  • PDF

"சமூகவிரோதி"களும் மரணதண்டனையும்

ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அவர்களின் ஆரம்பகாலங்களிலேயே "சமூக விரோதிகள்" என்ற சொல்லை உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர். சமூகத்தில் சிறுகளவுகளில் ஈடுபடுவோர், கொள்ளைகளில் ஈடுபடுவோர், தெருச்சண்டியர்கள், விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவோர் போன்றோரை "சமூகவிரோதிகள்" என அழைக்கத் தொடங்கினர். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டனர் அல்லது மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இத்தகைய செயலை மிகச் சிறிய அமைப்பாக இருந்த தமிழீழ விடுதலை இராணுவம்(TELA) உட்பட புளொட், தமிழீழ விடுதலைப் புலிகள் வரை மேற்கொண்டனர்.

 

 

ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஆரம்பகாலங்களிலேயே இயக்கங்களுக்குள் தோன்றி வளர்ந்த "சமூகவிரோதி" என்ற பார்வையும் "சமூகவிரோதி" ஒழிப்பு நடவடிக்கைகளும் 1983 யூலைக்குப் பின்னான இயக்கங்களின் வளர்ச்சியையொட்டி தீவிர நடைமுறைவடிவம் பெற்றது. "சமூகவிரோதி" என ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களால் இனம் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். குடும்பவறுமை காரணமாக, ஒருவேளை உணவுக்காக திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கூட ஈவிரக்கமின்றி மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த "சமூகவிரோதி" ஒழிப்பானது சில சமயங்களில் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்களில் அங்கம் வகித்தவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின்பாலானதாகவும் தனிப்பட்ட சமுதாய, சாதிய குரோதங்களின் பாலானதாகவும், தனிநபர் பழிவாங்கல்களாகவும் இருந்துள்ளது என்பது மற்றொரு உண்மையாகும்.

புளொட் இந்தச் "சமூகவிரோதிகள்" ஒழிப்பு நடவடிக்கையில் ஆரம்பகாலங்களிலிருந்தே ஈடுபட்டு வந்தது. புளொட் சிறுகுழு வடிவில் இருந்த ஆரம்பகாலங்களிலேயே இத்தகைய "சமூகவிரோதி" ஒழிப்புக்கள் ஒரு சிலரின் முடிவாக இருந்து வந்தது. புளொட்டால் மரணதண்டனை வழங்கப்பட்டவர்கள் மேல் சில சமயங்களில் தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. தனிப்பட்ட குரோதங்கள் தீர்த்துக் கொள்ளப்பட்டன.

சுழிபுரத்தைச் சேர்ந்த சிவனடியார் மகாலிங்கம் என்பவரை புளொட்டின் சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்கள் "சமூகவிரோதி" எனச் சுட்டுக் கொன்றனர். ஆனால், பிற்காலத்தில் அதே சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்கள் இக்கொலை பற்றித் தெரிவிக்கையில் சிவனடியார் மகாலிங்கம் தன்னை விடச் சாதியில் மேலான புளாட் உறுப்பினரின் உறவினரான கணவனை இழந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்தமையாலேயே அவர் "சமூகவிரோதி" எனக் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணச் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சாதியமைப்பு முறையின் தாக்கம் எந்தளவுக்கு விடுதலை அமைப்புகளுக்குள் செல்வாக்கு செலுத்தியது என்பதற்கு ஒரு உதாரணமாகும்.

சில சமயங்களில் சமூகவிரோதி என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை இயக்கங்களின் கொடூரமான விசாரணைகளின் போது இறந்த சம்பவங்களும் உண்டு.

புளொட்டை பொறுத்தவரை 1983 இறுதிவரை மேற்கொள்ளப்பட்ட "சமூகவிரோதி" ஒழிப்பு நடவடிக்கைகளை புளொட்டால் செய்யப்பட்டவை என உரிமை கோரியிருக்கவில்லை. புளொட் என உரிமைகோருமிடத்து புளொட்டுக்கெதிரான உணர்வலைகள், எதிர்ப்புக்கள் மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் என புளொட் தலைமையிலிருந்தவர்கள் எண்ணியிருந்தனர். இதனால் புளொட்டால் மேற்கொள்ளப்பட்ட "சமூகவிரோதி" ஒழிப்பு " சுந்தரம் படைப்பிரிவு", "காத்தான் படைப்பிரிவு", "சங்கிலியன் பஞ்சாயம்" போன்ற வெவ்வேறு பெயர்களில் உரிமை கோரப்பட்டு வந்தது.

1984 ம் ஆண்டிலிருந்து புளொட்டின் மக்களைப்பின் வளர்ச்சியுடன் நிலைமைகள் மாற்றமடையத் தொடங்கின. மாவட்ட அமைப்புக்களில் செயற்பட்டுவந்த அமைப்பாளர்கள் மக்கள் மத்தியில் செல்லும்போது முகம் கொடுக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக இந்தச் சமூகவிரோதிப் பிரச்சனைகள் இருந்தது. இதனால் அமைப்பாளர்கள் "சமூகவிரோதிகள்" குறித்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்பாளர் சந்திப்புக்களில் வேண்டுகோள் விடுத்தனர். கடந்தகாலங்களில் புளொட் "சமூகவிரோதிகள்" ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்திருந்ததால் நாமும் இந்த "சமூகவிரோதிகள்" ஒழிப்பில் முரண்பாடற்றவர்களாக இருந்தோம்.

ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைப்புவடிவிலான செயற்பாடுகள் ஆரம்பித்த பின்னர் எந்தவிதமான முடிவாக இருந்தாலும் - மிகவும் மோசமான தவறான முடிவுகளாக இருந்தாலும் கூட - அந்த முடிவுகள் குழுமுடிவாக இருந்ததேயன்றி தனிப்பட்ட ஒருவருடையதாகவோ அல்லது ஒரு சிலரது முடிவாகவோ இருந்ததில்லை. அத்துடன் "சமூகவிரோதிகள்" ஒழிப்பாக இருந்தாலும் சரி ஏனைய நடவடிக்கையாக இருந்தாலும் சரி வெவ்வேறு பெயர்களில் உரிமை கோராமல் "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்" என்றே உரிமை கோரினோம்.

"சமூகவிரோதிகள்" ஒழிப்பு: சமூகத்தைப்பற்றிய தவறான புரிதலின் வெளிப்பாடு

"சமூகவிரோதிகள்" பற்றிய பிரச்சனையை நாம் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பின், அதுவும் நிலப்பிரபுத்துவ தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாத, சமூக ஏற்றத்தாழ்வுகளினால் விளைந்ததொன்றாக நாம் பார்க்கத் தவறியிருந்தோம். அது மட்டுமல்லாது மிகவும் மோசமான சாதிய அமைப்பு முறையை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக அமைப்பின் குறைபாடாக, ஒரு சமூகப் பிரச்சனையாக பார்ப்பதற்கு தவறியிருந்தோம். "சமூகவிரோதிகள்" பற்றிய பிரச்சனை ஒரு வர்க்கபார்வையற்ற, சமுதாயத்தைப்பற்றிய சரியான புரிந்துணர்வற்றதொன்றாகவே காணப்பட்டது. சமூகத்தைப் பற்றிய தவறான புரிதலிலிருந்து, சமூகத்தைப் பற்றிய தவறான பார்வையிலிருந்து பிரச்சனைகள் அணுகப்பட்டன. சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த வறியமக்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருந்தனர். இவர்களது பின்தங்கிய சமூகநிலையிலிருந்து ஊற்றெடுக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு (அவர்களையே போராளிகளாக மாற்றுவதற்குப் மாறாக) அவற்றை அணுகுவதற்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட "சமூகவிரோதிகள்" ஒழிப்பின் நேரடியான தாக்கத்தை சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட வறிய மக்களே முகம் கொடுக்க நேர்ந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் "சமூக விரோதிகள்" என மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட வறியமக்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மையானது.

இந்தச் "சமூக விரோதிகள்" ஒழிப்பில் சில சமயங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் அல்லது குடும்ப உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். இது எத்தகைய தவறான, மிகவும் மோசமான முடிவுகளை நாம் எடுத்திருந்தோம் என்பதைக் காட்டுகிறது.

நாம் (புளொட்) ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு இத்தகைய கொடூரமான செயற்பாடுகளில் ஈடுபட்டதானது எமது கருத்துக்களுக்கும் செயல்களுக்குமான முரண்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

"தராக்கி" சிவராமை புளொட்டுக்குள் உள்வாங்கிய கண்ணாடிச்சந்திரன்

மத்தியகுழு உறுப்பினரான கண்ணாடிச்சந்திரனால் வெளியிடப்பட்ட உரிமைகோரும் துண்டுப்பிரசுரமும், அதனால் ஏற்பட்ட குழப்பங்களும் அமைப்புக்குள் விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பிக் கொண்டிருந்தன. இவற்றை மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்த நாம் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இதேகாலப் பகுதியில் புளொட்டின் தகவல் பிரிவில் ரமணனுடன் செயற்பட்ட கைதடியை சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தர்மலிங்கம், மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த அக்கரைப்பற்றை சேர்ந்த தர்மரத்தினம் சிவராம் என்பவர் புளொட்டில் இணைந்து செயற்பட விரும்புவதாக கண்ணாடிச்சந்திரனிடம் தெரிவித்தார்.

(தர்மரத்தினம் சிவராம் - தராக்கி)

சிவராமை கண்ணாடிச்சந்திரன் சந்தித்துப் பேசுவதற்கு தர்மலிங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டார். சிவராமை சந்தித்துப் பேசிய கண்ணாடிச்சந்திரன் சிவராமை புளொட்டில் இணைத்துக் கொள்ள உடன்பட்டார். நீண்ட நாட்களாக யாழ் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த தர்மரத்தினம் சிவராம் தன்னை ஏதாவது ஒரு இயக்கத்துடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். எந்த இயக்கமுமே சிவராமை உள்வாங்க முன்வராத நிலையில் இறுதியில் கண்ணாடிச்சந்திரன் மூலமாக புளொட்டுடன் தொடர்பை ஏற்படுத்தி புளொட்டுடன் இணையும் முயற்சியில் இறங்கினார். அவரின் முயற்சி வெற்றியடைந்தது.

(சிவராமால் படுகொலை செய்யப்பட்ட அகிலன் - செல்வன்)

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற தர்மரத்தினம் சிவராம் கண்ணாடிச்சந்திரனால் புளொட்டுக்குள் உள்வாங்கப்பட்டு சில நாட்களிலேயே யாழ் மாவட்டத்தில் மக்கள் அமைப்பில் செயற்பட்டு வந்தவர்களுக்கு அரசியல்வகுப்பு எடுக்கும்படி கண்ணாடிச்சந்திரனால் பணிக்கப்பட்டிருந்தார். தர்மரத்தினம் சிவராம் மார்க்சிய நூல்கள் உட்பட பல்வேறு நூல்களையும் கற்றறிந்தவராக இருந்த அதேவேளை பேச்சுவன்மையும் அவரிடம் காணப்பட்டது. சிவராமை அமைப்புக்குள் உள்வாங்கி சிலநாட்களுக்குள்ளாகவே அவரை புளொட் உறுப்பினர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க அனுமதித்தது என்னைப் பொறுத்தவரை தவறானதொன்றாகவே உணரப்பட்டது. புளொட்டுக்குள் இராணுவப் பயிற்சிக்கென வந்தவர்கள் எல்லோரையுமே அவர்கள் பின்னணி என்னவென்று சரிவர ஆராயாது உடனேயே இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பியது போல, சிவராமின் பின்னணி என்ன என்று சரிவர தெரியாமலேயே புளொட்டுக்குள் உடனேயே இணைத்தது மட்டுமல்லாமல், அவரை அரசியல் வகுப்புக்கள் எடுக்குமாறும் கண்ணாடிச்சந்திரன் பணித்தது மிகவும் தவறானதொன்றாகும். மத்திய குழு உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கீழணி உறுப்பினர்கள் தட்டிக் கேட்கக்கூடிய நிலவரம் அப்போது புளொட்டில் இருக்காததால் கண்ணாடிச்சந்திரனுக்கு எனது முரண்பாட்டைத் தெரிவிக்க முடியவில்லை.

"எஸ் ஆர்" என்று புளொட்டில் அழைக்கப்பட்ட தர்மரத்தினம் சிவராம் தனது பேச்சுவன்மையாலும், கவர்ச்சிகரமான பேச்சாலும் புளொட்டுக்குள் ஒரு கூட்டத்தை தன்னைச் சுற்றி உருவாக்கி கொண்டிருந்தார். தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என பெருமையாக சொல்லிக்கொண்டு, சேகுவரா போல முகத்தில் தாடியுடனும், ஒரு அதீத சிந்தனையாளன் போன்ற முகபாவனைகளோடும், தர்மரத்தினம் சிவராம் அரசியல் வகுப்புக்களை எடுத்துவந்த வேளை, சிவராமால் சிலவேளைகளில் மறைக்க முடியாமல் போன அவரது சூழ்ச்சியே உருவான வஞ்சகமான பார்வைகளை சிலர் இனம் காணத் தவறவில்லை.

இந்தியாவில் பயிற்ச்சி முடித்த புளொட் இராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள் சிறு சிறு குழுக்களாக இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு எந்தவிதமான வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. கண்ணாடிச்சந்திரன் இவர்களுக்கு பொறுப்பாகவும் இவர்களது தேவைகளை கவனிக்க வேண்டியவராகவும் இருந்தார்.

தள நிர்வாகத்தை கவனித்தலுடன், இந்தியாவில் இருந்து பயிற்ச்சி முடித்து வந்தவர்களுடனான உறவுகளை பேணுதல் போன்ற வேலைப்பளுவும், இராணுவப் பயிற்ச்சி முடித்து வந்தவர்களின் எதிர்பார்ப்புகளை சரிவரப் பூர்த்திசெய்ய முடியாத நிலையும் இந்தியாவில் இருந்து பயிற்ச்சி முடித்து வந்தவர்களுக்கும் கண்ணாடிச்சந்திரனுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்ற வழிகோலியது.

கூடவே கண்ணாடிச்சந்திரனிடம் காணப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மீதான "கடும் போக்கும்" பணம் சம்பந்தமான விடயங்களில் கண்ணாடிச்சந்திரன் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடான, கறாரான போக்கும் கூட (இது என்னைப் பொறுத்த வரையில் தூய்மைவாதமே) இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்தவர்களுக்கும், கண்ணாடிச்சந்திரனுக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு காரணமாக அமைந்தது.

தன்மேல் சுமத்தப்பட்டிருந்த தாங்க முடியாத வேலைப்பளுவை உணர்ந்து கொண்ட கண்ணாடிச்சந்திரன் சில வேலைகளை ஏனையவர்களுக்கு பகிர்ந்தளித்து தன் மேல் உள்ள வேலைப் பளுவை குறைக்க முன்வந்தார். "செய்தி மக்கள் தொடர்பு திணைக்களம்" என்றொரு பிரிவை ஏற்படுத்தி அதற்கு பொறுப்பாக திருநெல்வேலியை சேர்ந்த விபுல் என்பவரை நியமித்தார். விபுலின் கீழ் திருநெல்வேலி ஞானம், கோண்டாவில் சிறி போன்ற பலர் பணியாற்றினார். புளொட்டினது அனைத்து பிரச்சார ஏடுகள், பத்திரிகைகள் உட்பட அனைத்து மக்கள் தொடர்பு வெளியீடுகளையும், அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிப்பதே செய்தி மக்கள் தொடர்பு திணைக்களத்தின் பணியாக இருந்தது.

தளத்தில் நிதி சம்பந்தமான பணிகளுக்கு சிவானந்தியை நியமித்ததை அடுத்து, நிதி சம்பந்தமான விவகாரங்களை சிவானந்தி கவனித்து வந்தார்.

சாவகச்சேரி பகுதிக்கு அமைப்பாளராக செயற்பட்டு வந்த சிவானந்தி தளத்தின் நிதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, சாவகச்சேரியை சேர்ந்த அப்பன் என்பவர் சாவகச்சேரிக்கு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தனது வேலைப்பளுவை குறைக்க, கண்ணாடிச்சந்திரன் பொறுப்புக்களை பகிர்ந்தளித்து கொடுத்த போதும்கூட தளத்தில் இருந்த மத்திய குழு உறுப்பினர்களான குமரனும் (பொன்னுத்துரை) கண்ணாடிச்சந்திரனுமே தளத்தில் அனைத்து செயட்பாடுகளையும் முடிவெடுத்து செயற்படுத்திக் கொண்டிருந்தனர்.

தொடரும்.

 

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

Last Updated on Friday, 15 July 2011 22:11