Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புலிகள் செய்த குற்றங்கள் தற்காப்பு நிலையிலானதா!? கையறு நிலையிலானதா!?

புலிகள் செய்த குற்றங்கள் தற்காப்பு நிலையிலானதா!? கையறு நிலையிலானதா!?

  • PDF

அரசு செய்த குற்றங்களை அரசியல் ரீதியாக காட்டுபவர்கள், புலிகள் செய்த குற்றத்தை அதன் அரசியலுக்கு அப்பால் நிகழ்ந்த தற்காப்பு மற்றும் கையறு நிலை சார்ந்த ஒன்றாக திரித்துக் காட்ட முனைகின்றனர். இப்படி உண்மையைத் திரிப்பதன் மூலம், புலியை அண்டி பிழைக்கும் சந்தர்ப்பவாத அரசியலை முன்தள்ளுகின்றனர். கடந்த பத்தாண்டுகளாக புலியை விமர்ச்சிக்காத, நடந்த உண்மை நிகழ்வுகளை திரித்த இடதுசாரிய சந்தர்ப்பவாத அரசியல்தான், புலியை விமர்சனத்தில் இருந்து பாதுகாக்கின்ற அபாயகரமான அரசியல். இந்த இடதுசாரியம் புலிகளால் மக்கள் சந்தித்த துயரத்தை பேசாத இடதுசாரியமாகும். மக்கள் தங்கள் சொந்த அனுபவம் ஊடாக சுயாதீனமாக புலி அரசியலை இனங்கண்டு கொள்வதைக் கூட, தடுத்து நிறுத்துகின்ற அரசியல் இது.

 

 

 

இந்த இடதுசாரிகள் புலிகளின் குற்றங்களைப் பற்றி, குறிப்பாக கடந்த பத்தாண்டுகளாள எதையும் பேசாதவர்கள். ஐ.நா அறிக்கை மற்றும் சனல் 4 காட்சிகளில், புலிகள் மேலான குற்றச்சாட்டுக்கள் வெளியானதால் அங்கலாய்த்துப் போகின்றனர். இதனால் அதற்கு திடீர் விளக்கம் கொடுக்கின்றனர். அதை நியாயப்படுத்துகின்றனர். தற்காப்பு மற்றும் கையறு நிலையில் ஏற்பட்ட தவறாக, அது சார்ந்த குற்றமாக காட்ட முற்படுகின்றனர். புலியையும் அரசையும் ஒன்றாக மதிப்பிட முடியுமா என்று வினவுகின்றனர். கடாபி, சதாம் குசைன், முல்லாவையும், ஏகாதிபத்தியத்தையும் எப்படி ஒன்றாக நாம் மதிப்பிட முடியாதோ அப்படித்தான் இதுவும்;. கடந்த பத்தாண்டுகளாக புலிப் பாசிச அரசியலை பேசாதவர்கள் இந்த ஒப்பீட்டைப் பற்றி சொல்லும் போது, குற்றங்களை தற்காப்பு மற்றும் கையறு நிலை என்று திரித்துக் காட்டும் போதும், இந்த ஓப்பீட்டு அரசியல் கபடம் நிறைந்தது.

இந்த வகையில் இன்று வலதுசாரியம் முதல் இடதுசாரியம் வரை, விதவிதமான அரசியல் விளக்கங்கள், தர்க்கங்கள்.

இந்த அறிக்கை மற்றும் காட்சி, ஏகாதிபத்திய நலன் சார்ந்து வெளியானால், இது புலிக்கு எதிராக இருப்பதாக கூறுகின்றனர். அரசு கூறிய குற்றச்சாட்டின அடிப்படையில் தான் குற்றம் சாட்டுவதாக கூறி, இதை உண்மையற்றதாக திரித்துக் காட்ட முனைகின்றனர். தற்காப்பு மற்றும் கையறு நிலையில் நடந்த குற்றமாக கூறும் இவர்கள், அரசு கூறியதைச் சார்ந்த குற்றச்சாட்டுகள் இவை என்பதும் இதில் உள்ள முரண்பாடாகும். சந்தர்ப்பவாத அரசியல் நிலையெடுத்து திரிக்கும் போது, இந்த முரண்பாடு வெளிப்படுகின்றது.

இப்படி ஒருபுறம் இடதுசாரிகள் புலியை தற்காத்துக் கூற, அரசு தரப்புக்கு சார்பான இடதுசாரிகளும் இதையே கூறுகின்றனர். அரசுக்கு எதிரான குற்றச்சாட்டை ஏகாதிபத்திய நலன் சார்ந்ததாகவும், இதனால் அது அரசுக்கு எதிராக இருப்பதாகவும், புலிகள் தரப்பு சார்ந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவற்றைக் கூறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அறிக்கை மற்றும் காட்சி ஏகாதிபத்திய நலன் சார்ந்தது என்ற உண்மையை உள்ளடக்கியது என்பதாலும், அதன் உள்ளடக்கம் அரசு மற்றும் புலியை அடிப்படையாக கொண்டது என்பதாலும், இதன் பின்னுள்ள உண்மையை மறுப்பது அரசியல் அபத்தமாகும். உண்மைகளை உண்மையாக ஏற்றுக்கொள்வதன் மூலம்தான், அதைப் பயன்படுத்தும் பிற்போக்கு சக்திகளின் அரசியல் உள்நோக்கத்தை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த முடியும்.

அரசு மற்றும் புலி தரப்பு சார்ந்து இடதுசாரியம் கூறும் அரசியல் அபத்தத்தை இங்கு நாம் கவனத்தில் கொள்கின்றோம். இங்கு அரசு சார்ந்து கூறுகின்ற கூட்டம், இயல்பாகவே பிற்போக்கான அரசியல் தளத்தில் தொடர்ந்து இயங்குவதால் அம்பலமாகிவிடுகின்றது. புலி சார்ந்த பிரிவுகள் தமிழ்மக்களின் தேசியம் விடுதலையை சார்ந்து நின்று கூறுவதால், இதை குறிப்பாக தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

புலிகளின் குற்றங்கள் எந்த வகைப்பட்டது? அதன் தவறான அரசியல் வகைப்பட்டதா? அல்லது அதன் சரியான அரசியலில் இருந்தான தற்காப்பு மற்றும் கையறு நிலைலை சார்ந்தா? புலிகளின் அரசியல்தான், அதன் பொது அரசியல் நடத்தையாகும்;. இது ஏதோ இறுதியுத்தத்தில் மட்டும் தற்காப்பு மற்றும் கையறு நிலமையில், புலிகள் நடத்திய தவறுமல்ல அல்லது குற்றமுல்ல.

இறுதியுத்தத்தில் தற்காப்பு மற்றும் கையறு நிலமையில் ஏற்பட்ட தவறாக, குற்றமாக காட்டுவதும், திரிப்பதும் புலியின் அரசியலை இதில் மறுத்தலாகும்.

புலிகள் ஒரு பாசிசா, மாபியா இயக்கம் என்பதும், தனிநபர் பயங்கரவாத வலதுசாரிய அமைப்பு என்பதும், ஏகாதிபத்திய நலனை தன் அரசியலாக கொண்டது என்பதும், அரசியல் ரீதியானது. இதை வரையறுக்காத இடதுசாரியம், இதன் அடிப்படையில் அரசியல் கிளர்ச்சியை பிரச்சாரத்தை செய்யாதவர்கள் தான் அரசியல் ரீதியாக நடந்ததை திரித்து காட்ட முற்படுகின்றனர். கடந்த பத்தாண்டுகளாக இதன் தவறுகளையும் குற்றங்களையும் பேசாதவர்கள், திடீரென குற்றங்கள் பற்றி திடீர் அரசியல் விளக்கம் கொடுக்கின்றனர். புலி அரசியல் அல்லாத, ஆனால் அதன் தற்காப்பு மற்றும் கையறு நிலையில் இழைத்த குற்றமாக அதைத் திரிக்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதையொத்த அரசுக்கு சார்பான இடதுசாரிய வாதங்களும், தர்க்கங்களும் ஏற்கனவே உண்டு என்பதுதான். புலிகள் மக்களை பணயக் கைதியாக வைத்திருக்காது விடுவித்திருந்தால், அரசு இந்தக் குற்றத்தை செய்திருக்காது என்ற வாதங்கள். இப்படி பற்பல.

வாதங்கள், தர்க்கங்கள் நடந்த உண்மைகளை தமக்கு சார்பாக்கி, அதை திரிப்பதில் இருந்து தொடங்குகின்றது. நாம் இதை அரசு - புலி இரண்டினதும் அரசியலில் இருந்து அணுகுகின்றோம். அதனூடாக குற்றங்களை இனம்கண்டு அம்பலப்படுத்துகின்றோம்;. பேரினவாத ஓடுக்குமுறை அரசு இனவழிப்பை நடத்தியதும், பிற்போக்கான குறுந்தேசிய தமிழினவாத அரசியல் தன் சொந்த மக்களை இனவழிப்புக்குள்ளாகியதுமே, எம்மண்ணில் நடந்தேறியது.

"இன அழிப்புப் போரை புலிகள் ஆரம்பிக்கவில்லை" என்ற அர்த்தம், புலிகள் இனவழிப்பு அரசியலை நடத்தவில்லை என்று கூறுகின்ற அரசியல் மோசடியை அரங்கேற்றுகின்றது. இனவழிப்பைச் செய்த அரசுக்கு, புலிகளின் இனவழிப்பு அரசியல் உதவி செய்தது. பலி கொடுக்க பலியெடுத்த அரசியல் பின்னணியை இங்கு பொருத்திப் பார்க்கமுடியும். இங்கு "போரை புலிகள் ஆரம்பிக்கவில்லை" என்பது திரிபு. பேச்சுவார்த்தையை முறித்து மீண்டும் வலிந்து யுத்தத்தைத் தொடங்கியது புலிகள் தான். இங்;கு இதை திரிக்க "இன அழிப்புப் போரை" இணைத்து விடுகின்றனர். தர்க்கரீதியாக பார்த்தால், இனவழிப்பு போரை எப்படி புலிகள் தொடங்கியிருக்க முடியும்? போரைத் தொடங்கியது யார் என்றால், அது புலிகள் தான். இதை இந்த இடதுசாரிய சந்தர்ப்பவாதம் திரிக்கின்றது, புலிகள் நடத்திய பேச்சுவார்த்தை தமிழ் மக்களுக்கு எதிராக இருந்ததால், அதில் தோற்ற புலிகள் யுத்தத்தை ஒரு தரப்பாக வலிந்து திணித்தனர். புலிகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக, தனது தற்கொலைக்கு ஊடாக இனவழிப்புப் போராக மாறி அது முடிவுற்றது. இங்கு இனவழிப்பு போர், புலிகள் மீண்டும் வலிந்து தொடங்கிய யுத்தத்தின் தொடர்ச்சியில் வருகின்றது.

"எல்லா மேலை நாடுகளும் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்திருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்னவாக இருக்கும்?" என்பதால், குற்றம் பொய்யாகிவிடுமா? அவனின் நோக்கத்தை அம்பலப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே போல் குற்றத்தை அம்பலப்படுத்துவது முக்கியமானது. அவனின் நோக்கம், புலிகளின் குற்றங்களின் மேல்தான் கட்டமைக்கப்படுகின்றது. "புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்த" நிகழ்வுக்கு முன்பாக, மக்கள் நலன் சார்ந்த சில நிபந்தனைகளை புலிகளை நோக்கி மேற்கு வைத்தது. மேற்கு தன் நோக்கம் சார்ந்து புலிகளைப் பயங்கரவாதியாக அறிவிக்க, புலிகளின் மக்கள் விரோதக் கூறை அது பயன்படுத்தியது. இங்கு இவ்விரண்டையும் பேசாத இடதுசாரியம், யாரை சார்ந்து வெளிப்படுகின்றது. புலியைச் சார்ந்துதான், மக்களைச் சார்ந்தல்ல. மக்கள் நலக் கோரிக்கையை மேற்கு முன்னிறுத்திய அரசியல் வெற்றிடத்தில்தான், சந்தர்ப்பவாத இடதுசாரியம் தொடர்ந்து வாழ முனைகின்றது.

புலிகள் இறுதி யுத்தத்தில் கையாண்ட குற்றங்கள், அதன் தற்காப்பு மற்றும் கையறு நிலையிலானதல்ல. மாறாக இது புலியின் அரசியலால் ஆனது. 1980 களில் மாற்றுக் கருத்தை மறுத்து, மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுப்பவராக தம்மை அரசியல் மற்றும் நடைமுறையாக புலிகள் வெளிப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும், மாற்றுக்கருத்தைக் கொண்டிருந்தவர்களையும், ஆயிரக்கணக்கில் புலிகள் தொடர்சியாக கொன்றனர். முஸ்லீம் மக்களின் அனைத்து சொத்துக்களையும் பிடுங்கிய புலிகள், பல பத்தாயிரம் பேரை சொந்த மண்ணில் இருந்து விரட்டி அடித்தனர். முஸ்லீம் மற்றும் சிங்கள கிராமங்களில் புகுந்த பல ஆயிரம் முஸ்லீம் மக்களையும், சிங்கள மக்களையும் கொன்றனர் புலிகள். கொழும்பு போன்ற நகரங்களில்; பொது மக்கள் மேலும், போக்குவரத்து செய்த மக்கள் மேலும் பாரிய குண்டுத் தாக்குதல்களை நடத்தி பல ஆயிரம் பேர்களைக் கொன்றனர். இப்படிப் பல.

1995ம் ஆண்டு யாழ்குடாவை இராணுவம் கைப்பற்றிய போது, மக்களை பலாத்காரமாக வன்னிக்கு கொண்டு சென்றனர். 1990 முதலாக தங்கள் கட்டுபாட்டுப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுத்த புலிகள், இறுதி யுத்தத்தின் போது மக்களை யுத்த பணயக் கைதியாக மாற்றினர். ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் உள்ளிட்ட இளைஞர் யுவதிகளை பலாத்காரமாகக் கடத்திச் சென்று, அவர்களை யுத்தமுனையில் பலியிட்டனர். உழைப்பு, வாழ்க்கை என அனைத்தையும், தங்கள் பாசியா மாபியா தனத்துக்குள் ஒடுக்கியும் சுரண்டியும் மக்கள் வாழ்வைச் சீரழித்தனர். இதன் ஒரு அங்கம் தான் யுத்தத்தின் இறுதியில் புலிகள் ஆடிய ஆட்டம்.

இது வலதுசாரிய பாசிச மாபியா புலி அரசியல் அடிப்படை, நிலப்பிரபுத்துவ தரகுமுதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏகாதிபத்திய நலன் சார்ந்தது. இது யாழ் பிரதேச மேலாதிக்கத்தையும், சாதியவாதத்தையும், ஆணாதிக்க அடிப்படையையும் கொண்ட, சுரண்டும் வர்க்க நலன் சார்ந்த அரசியலைக் கொண்டது. இதை தங்கள் தேசியமாக வரிந்து கொண்ட ஆயுதமேந்திய தனிநபர் பயங்கரவாதக் கும்பல், முழுமக்கள் மேலும் அதைத் திணித்த போது அதனை பாசிசமயமாக்கியது. இந்த எல்லையில் தனது குழு மாபியாத்தனத்துடன் மக்களை ஒடுக்கியது. இதன் நீட்சியில் தான் புலிகள் அனைத்து அரசியல் நடத்தையும் அடங்கும்.

இதற்கு வெளியில் இது தற்காப்பு மற்றும் கையறு நிலையில் நிகழ்ந்த குற்றமோ, தவறோவல்ல. தன்னைத்தான் தனிமைப்படுத்தி, அதன் அரசியல் நெருக்கடியால் குறிப்பாக வெளிபட்ட தற்செயல் நிகழ்வுகளோவல்ல. அதன் அரசியல் நீட்சியில் இது ஒரு அங்கம். புலி அரசியலை முற்றாக நிராகரித்து அதை அம்பலப்படுத்தி போராடுவதன் மூலம் தான், அரசையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொண்டு, உண்மையான மக்கள் விடுதலைக்கு வழிகாட்ட முடியும். இதைத்தான் மார்க்சியம் எமக்கு கூறுகின்றது.

 

பி.இரயாகரன்

26.06.2011

 

 

Last Updated on Sunday, 26 June 2011 19:06