Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

  • PDF

கேதீஸ்வரனின் மரணத்தின் பின் அவர் கவனித்து வந்த அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக நானே கவனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. உமாமகேஸ்வரனின் அழைப்பின் பேரில் மத்தியகுழு உறுப்பினரான கண்ணாடிச் சந்திரன் இந்தியா சென்றிருந்தார். மத்தியகுழு உறுப்பினர்களான பெரியமுரளியும் ஈஸ்வரனும் கூட அப்பொழுது இந்தியாவிலேயே தங்கியிருந்தனர். இதனால் அமைப்புச் சம்பந்தமான அனைத்துவிடயங்களையும் முடிவுகளையும் தளத்திலிருந்த மத்தியகுழு உறுப்பினர்களான குமரன் (பொன்னுத்துரை) மற்றும் பார்த்தனுடன் கலந்து பேசியே எடுத்து வந்தேன்.

 

 

 

திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் செல்வன்(கிருபாகரன்), மூதூர் அமைப்பாளர் அகிலன், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ரகு, கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கிளி மாஸ்டர், வவுனியா மாவட்ட அமைப்பாளர் வவுனியா சிறி , முல்லைத்தீவு அமைப்பாளர் வரதன், மன்னார் அமைப்பாளர் சயந்தன், ஆகியோருடைய தொடர்புகளை பேண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் அசோக்கும், மகளிர் அமைப்புப் பொறுப்பாளர் செல்வியும் தமது செயற்பாடுகளை தனித்துவமாகவே செய்து வந்தனர். இவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மக்களமைப்பைச் சேர்ந்த அமைப்பாளர்கள் செய்துவந்தனர். ஏனைய மாவட்ட அமைப்பு வேலைகளுக்குத் தேவையான நிதி, பிரச்சார ஏடுகளான பத்திரிகை, சஞ்சிகைகள், பிரசுரங்கள் அனைத்துமே யாழ்ப்பாணத்திலிருந்தே விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிப் பேசும் பொருட்டும், அமைப்பு செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்லும் பொருட்டும் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கூட்டத்தை கூட்டவேண்டியிருந்தது. திருநெல்வேலியில் இதற்கான இடத்தை விபுல் மூலம் ஒழுங்கு செய்து அங்கு யாழ்மாவட்ட குழு கூடியது. இதுவே புளொட்டின் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து உதவி அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களையும் ஒன்றுசேர்த்துக் கூட்டப்பட்ட முதலாவது குழுக் கூட்டமாக அமைந்தது.

இதில் ஜீவன் (தீவுப்பகுதி அமைப்பாளர்), பாலா(சுன்னாகம் அமைப்பாளர்), உரும்பிராய் ராசா ( கோப்பாய் அமைப்பாளர்), குரு ( கரவெட்டி அமைப்பாளர்), கணேஸ் (பருத்தித்துறை அமைப்பாளர்), பவான் ( தெல்லிப்பளை அமைப்பாளர்), மைக்கல்( சாவகச்சேரி அமைப்பாளர்), வினோச்( யாழ்ப்பாணம் அமைப்பாளர்), சுகந்தன்-சிறி( வட்டுக்கோட்டைஅமைப்பாளர்) சின்னப்பத்தர் (இளவாலை அமைப்பாளர்), ரமணன் ( தகவல்துறைப் பொறுப்பாளர்), சிவானந்தி, தர்மலிங்கம், விபுல் ஆகியோர் பங்குபற்றினர். இக்கூட்டத்தில் பங்குபற்றிய அனைத்து அமைப்பாளர்களின் கருத்துக்களும் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் முன்வைக்கப்பட்டன. தனிநபர் முடிபுகள், தனித்தனியே பிரச்சனைகளைக் கையாளுதல் என்பதற்கு மாறாக, குழு ரீதியான செயற்பாடுகள், குழுரீதியான முடிபுகள் என்பதை நோக்கி யாழ்மாவட்ட அமைப்பு செயற்படத் தொடங்கியிருந்தது.

மக்களமைப்பைக் கட்டியெழுப்புதல், பயிற்சிக்கு ஆட்களை அனுப்புதல், ஏனைய இயக்கங்களுடான முரண்பாடுகளைக் கையாளுதல், கருத்தரங்குகள், பாசறைகள் நடத்துவதற்கான ஆட்கள் பற்றாக்குறை போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இவற்றிற்கான தீர்வுகளையும் கூடவே குழு முன்மொழிந்தது.

புளொட்டின் படகுக்குப் பொறுப்பாக இருந்த சதீஸ் படகை கடத்தல் தொழிலுக்கும் பாவித்து வருவது குறித்தும், சுந்தரம் படைப்பிரிவினரின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்தும், குறிப்பாக குரு, கணேஸ், பாலா, சுகந்தன்(சிறி), உரும்பிராய் ராசா, பவான் போன்றோர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். முதலாவது யாழ்மாவட்டக்குழுக் கூட்டத்திலேயே தீர்வில்லாமல் எரிந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையாக சுந்தரம் படைப்பிரிவினரின் பிரச்சனை இருந்தது. இதனால் இதுபற்றி மத்தியகுழு உறுப்பினர்களுடன் கலந்து பேசுவதென்றும், செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு இதுபற்றி அறிக்கை அனுப்பிவைப்பதென்றும் முடிவானது.

ஆனால் இதற்குப் பதில் அனுப்பிவைத்த செயலதிபர் உமாமகேஸ்வரனோ சுந்தரம் படைப்பிரிவினரின் செயற்பாடுகள் குறித்து தான் கவனத்தில் எடுப்பதாகவும், சதீஸ் விவகாரம் கழகத் தோழர் ஒருவர் மேல் ஆதாரமில்லாமல் அபாண்டமாக குற்றம் சாட்டும் ஒரு செயல் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார். பின்நாட்களில் படகுப் பொறுப்பாளர் சதீஸ், புளொட் சித்திரவதை முகாமான ஒரத்தநாட்டில் இருந்த"B" காம்புக்கு விசாரணைக்கென அழைத்து செல்லப்பட்டு, புளொட்டினால் கொலை செய்யப்பட்டார்.

உமாமகேஸ்வரனின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றிருந்த கண்ணாடிச்சந்திரனிடம் பார்த்தனுக்கு மடல் ஒன்றை உமாமகேஸ்வரன் கொடுத்தனுப்பியிருந்தார். பார்த்தனுக்கு அனுப்பப்பட்ட அந்த மடலில் இந்தியாவில் முதற்கட்டமாக பயிற்சி முடித்தவர்கள் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட தயாராக உள்ளனர் என்றும், கிழக்கு மாகாணத்தில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படியும், அதற்காக இராணுவப்பயிற்சி பெற்றவர்களில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உமாமகேஸ்வரனின் மடலின் அடிப்படையில் வேலைகள் தொடங்கப்பட்டது. கண்ணாடிச் சந்திரன் மட்டக்களப்புக்கு புறப்பட்டார். பார்த்தன் மட்டக்களப்பு சென்று பாதுகாப்பாக தங்கி நிற்பதற்கு பாதுகாப்பான இடத்தை திருகோணமலை செல்வனின் (கிருபாகரன்) உதவியுடன் ஒழுங்கு செய்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பினார். " புதிய பாதை" பத்திரிகையை இனிமேலும் யாழ்ப்பாணத்தில் அச்சிடுவது முடியாததொன்று என முடிவாகியது.

பார்த்தன் திருகோணமலையில் காந்தீயம் செயற்திட்டங்களிலும், புளொட்டின் நடவடிக்கைகளிலும் பெருமளவுக்கு ஈடுபட்டதாலும், மட்டக்களப்பு சிறையுடைப்பில் அவரது தொடர்பாலும் இலங்கை அரசால் தேடப்படும் ஒரு நபராக இருந்தார். இதனால் பார்த்தன் தனது முகத்தின் தோற்றத்தை மாற்றியே மட்டக்களப்பு செல்லவேண்டியிருந்ததால் முகத்தை மழுங்கச் சவரம் செய்து போலியான அடையாள அட்டையை தயாரித்து மட்டக்களப்புக்கு கடல்மார்க்கமாக செல்ல வேண்டியிருந்தது.

இந்தியாவிலிருந்து இராணுவப்பயிற்சி பெற்ற முதல் தொகுதி புளொட் உறுப்பினர்கள் மட்டக்களப்பு செல்வதற்காக படகுமூலம் யாழ்ப்பாணம் வந்திறங்கினர். இவர்களில் மது, சிலோன், கோன், நந்தன், வாகீசன் ஆகியோரும் அடங்கி இருந்தனர்.

இவர்கள் வந்த படகை செலுத்திவந்த பாண்டி வெலிக்கடைச் சிறையில் நீண்டகாலமாக குட்டிமணி, தங்கத்துரை போன்றோருடன் இருந்தவர். 1983 வெலிக்கடைச் சிறைப்படுகொலையின் பின் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்ட பாண்டி மட்டக்களப்புச் சிறையுடைப்பின் போது தப்பிவந்தவர்களில் ஒருவர். மட்டக்களப்புச் சிறையுடைப்பில் இருந்து தப்பிவந்த பின்பும் கூட, புளொட்டினுடைய படகை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செலுத்திவந்த தன்னலமற்ற, ஒரு துணிச்சல்மிக்க போராளி. மட்டக்களப்பு சிறையுடைப்பில் இருந்து தப்பி வந்தவர்கள் எல்லோரும் சொந்த மக்களிடமிருந்து அன்னியப்பட்டு இந்தியா சென்று பாதுகாப்பாக இருந்த வேளையில் ( இதில் பரந்தன் ராஜன், அற்புதன் விதிவிலக்கானவர்கள், இருவரும் நடக்கமுடியாத அளவுக்கு காயமடைந்தவர்களாக இருந்தனர்) பாண்டியோ இலங்கை அரசபடைகளால் தேடப்பட்ட நிலையிலும் கூட விடுதலைப் போராட்டத்துக்காக தனது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்ட ஒருவர். 1985ம் ஆண்டு பிற்பகுதியில் படகில் இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்துகொண்டிருந்தபோது கடற்படையினருடன் ஏற்பட்ட சமரில் பாண்டி, சின்னமலை உட்பட பலர் உயிரிழந்தனர்.

இந்தியாவிலிருந்து இராணுவப்பயிற்சி பெற்று யாழ்ப்பாணம் வந்த புளொட் உறுப்பினர்களை கடற்கரையிலிருந்தே வாகனத்தில் ஏற்றிச் சென்ற போத்தார் இவர்களை கல்லுவம் குருவிடம் ஒப்படைத்தார். கல்லுவம் குரு இவர்களை பருத்தித்துறை வழியாக முல்லைத்தீவுக்கு அனுப்பி வைத்தார். சித்திரை 24, 1984 அன்று முல்லைத்தீவில் இருந்து இவர்கள் மட்டக்களப்பு புறப்பட இருக்கும்போது பார்த்தன் மட்டக்களப்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுவிட்டார் என்ற பேரதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

(பார்த்தன் என்கின்ற ஜெயச்சந்திரன்)

பார்த்தனை பொலிசார் உடனடியாக அடையாளம் கண்டிருக்கவில்லை. பொலிஸ் நிலையத்திற்கு பார்த்தனைக் கொண்டு சென்றபோது, பொலிசாரின் துப்பாக்கியைப் பறித்து பார்த்தன் தற்கொலை செய்து கொண்டார். சக கழகத்தோழியான ரஜனி(ஜென்னி) என்பவரை பங்குனி 20, 1984 அன்று யாழ்ப்பாணத்தில் பதிவுத் திருமணம் செய்த பார்த்தனை ஒரு மாதத்தில் நாம் இழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பதிவுத் திருமணத்துக்கு நாலு நாட்களுக்கு முன்னர் திருகோணமையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த ரஜனியை, யாழ்ப்பாணத்தில் சந்தித்த கொக்குவில் கிருபா, கழக மகளீர் அமைப்பை சேர்ந்த அளவெட்டி நந்தா, உரும்பிராய் வனிதா ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு, பார்த்தனை ரஜனியை சந்திக்க அழைத்து சென்றார். பதிவுத் திருமணமாகி இரு வாரங்களில் ரஜனி முதலாவதாக பயிற்சிக்கென புறப்பட்ட யுவதிகளுடன் இந்தியாவுக்கு சென்று விட்டார்.

தள இராணுவப் பொறுப்பாளராகச் செயலாற்றிய பார்த்தனின் மரணத்தால் மட்டக்களப்பில் தாக்குதலுக்கான திட்டம் கைவிடப்பட்டது. தளநிர்வாகப் பொறுப்பாளர் சலீமும், யாழ்மாவட்டப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தியும் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே கேதீஸ்வரனின் மரணமும் தள இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனின் மரணமும் இடம்பெற்றது. நாம் ஒவ்வொரு அடியையும் முன்நோக்கி எடுத்து வைக்கும் போதெல்லாம் பல அடிகள் பினநோக்கி போவதை உணர்ந்தோம்.

இராஜதுரை, சற்குணம் தம்பதிகளின் புதல்வரான திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பார்த்தன் என அழைக்கப்பட்ட ஜெயச்சந்திரனின் அரசியல் வாழ்க்கை மாணவனாக இருக்கும்போது அவரது ஆசிரியரான சுமதி என்று அழைக்கப்பட்ட பயஸ் மாஸ்டரின் இடதுசாரிக் கருத்துக்களிலிருந்து ஆரம்பமாகின்றது.

பின்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலங்களில் மனோமாஸ்டருடன் சேர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயற்பட்டபோதும் கூட இடதுசாரிக் கருத்துக்களை இருவருமே கொண்டவர்களாக இருந்தனர். 1979 இல் சந்ததியாரின் தொடர்புக்கூடாக தென்னமரவாடியில் இருந்து வெருகலம்பதி வரை காந்திய செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த பார்த்தன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து புளொட் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

திருமலையில் பார்த்தன் செயற்பட்ட காலங்களில் அங்கு பயிற்சி முகாமை ஆரம்பித்து ஆயுதப்பயிற்சி அளித்துவந்தார். இந்த பயிற்சி முகாம்களில் ஒன்றான தம்பலகாமம் முகாமில்தான் மட்டக்களப்பு சிறை உடைப்புக்கான முஸ்தீபுகளையும் அதில் பங்கு கொண்டு கைதிகளை பத்திரமாக மீட்பதற்கான செயற்பாடுகளில் பங்குபற்றுபவர்கட்கான தகவல்கள், பயிற்சிகள், ஒத்திகைகள் போன்றனவும் பார்த்தனால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சிகளில் திருகோணமலையை சேர்ந்த ஜோர்ஜ் முக்கிய பங்கு வந்தார். இந்த முகாமின் அன்றாட தேவைகளை சுகுணன் கவனித்து வந்தார். மூஸா இந்த முகாமுக்கு அடிக்கடி விஜயம் செய்து செயற்பாடுகளை மேற்பார்வை செய்தார்.

பார்த்தன் சங்கப்பலகை என்ற வாராந்த அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் மூலம் திருகோணமலை இளைஞர்கள் மத்தியில் சரியான அரசியல் தேடல்கள் ஏற்பட முன்னின்று உழைத்தவர். தமிழீழ விடுதலைக் கழகத்தின் மே தின விழாவை பல்வேறு கெடுபிடிகளின் மத்தியிலும் பொறுப்பாக செய்தவரும், மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பிய போராளிகளை பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கவனமாக காப்பாற்றி அனுப்பி வைத்தவருமான பார்த்தனிடம் எவருடனுமே நட்புறவாக பழகும் அதிசயிக்கத்தக்க ஆற்றலும் மனோதிடமும் இருந்தது.

அதனால் தான் நிராயுதபாணியாகவிருந்த பார்த்தனால் பொலிசாருடன் மோதி அவர்களிடமிருந்து பறித்த துப்பாக்கியால் தன்னுயிரை விடுதலைப் போராட்டத்துக்கு விதையாக்க முடிந்தது. அன்று புளொட்டில் செயற்பட்டவர்களில் இராணுவத்திற்கு தலைமை தாங்கக்கூடிய அனைத்துத் தகுதிகளையும் பார்த்தன் ஒருவரே தன்னகத்தே கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையான கூற்றல்ல.

புளொட்டுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான முரண்பாடு மிகவும் மோசமான நிலையிலிருந்த அன்றைய சூழலில் கூட பார்த்தனின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் எங்கும் ஒட்டியிருந்தனர். நானறிந்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மாற்று இயக்கப்போராளி ஒருவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் இது ஒன்றுதான்.

தொடரும்

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

Last Updated on Tuesday, 14 June 2011 20:57