Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. பகுதி 5

கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. பகுதி 5

  • PDF

.. இராசரத்தினமும் டானியலும்

“நான் கடிதம் எழுதிக் கேட்டிருந்தபடி டானியல் அவர்கள் முதன் முதலாக என்னை ஈழகேசரிக் காரியாலயத்தில் சந்திக்கின்றார். மிக  அமைதியாக, அடக்க ஒடுக்கமாக” என்கின்றார் வ. அ.

இதற்கான காரணம் பின்னர்தான் எனக்கு விளங்கியது. யாழ்ப்பாணத்து உயர்சாதிக்காரர்கள்,  பஞ்சமர் என்ற கீழ்சாதி மக்களை ஒதுக்கியே வாழ்ந்தார்கள். மூதூரில் பிறந்த என்னை கற்பனை  பண்ணிக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குப் பஞ்சமர்கள் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வாழ்ந்தார்கள். அரசியலில் கொம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அவர்களைப்  அணைத்துப் பிடித்தது. கொம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கொண்ட பஞ்சமர்கள் சிலர் இலக்கிய நாட்டங் கொண்டு தம் எழுத்துக்களில் சாதித் திமிரை சாடினார்கள். அப்படியாக வந்த பல எழுத்தாளர்களில் டானியலும் ஒருவர். இப்படி தன் ‘இலக்கிய நினைவுகள் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். வ.அ.

 

1952.ல் சுதந்திரன் பத்திரிகையில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் டானியலின் ‘அமரகாவியம’  எனும் சிறுகதை முதற் பரிசைப் பெறுகின்றது. அதற்கான நடுவர்களில் தானும் ஒருவரெனவும்,  இச் சிறுகதை எப்படியும் பரிசு பெறுமென நம்பியதாகவும், தன் நம்பிக்கை வீண்போகவில்லை என்கின்றார் வ.அ. தவிரவும் 11.ஆண்டுகளுக்குப் பிறகு,  இச் சிறுகதையே டானியலுக்கும் எஸ்.பொ.விற்குமான கலை இலக்கிய அரசியல் சர்ச்சையாக உருவெடுக்கின்றது.

ஸாகிறாக் கல்லூரி விவகாரத்திற்குப் பிறகு 1963 ஒக்டோபரில் யாழ் இந்துக் கல்லூரியிpல்  சாகித்திய மண்டல விழா நடைபெற்றது. இக்காலம் கலை கலைக்கான தமிழ்த் தேசியவாதிகளின் மரபும், இடதுசாரிகளின் மரபு மீறும் முற்போக்கான போராட்டங்களும் தீவிரமான உச்சநிலையில் இருந்த காலமாகும். அப்போது சாகித்திய மண்டலப் பரிசுக்கான கதையாக இளங்கீரனின் “நீதியே நீ கேள்” கதையே தேர்ந்தெடுக்கப்பட்டது. சாகித்திய மண்டலக் குழுவில் அப்போ  சதாசிவம், எவ்.எக்ஸ்.சி.நடராசா போன்றவர்கள் இருந்தனர்.   பின்னர், சாகித்திய மண்டலக் குழுவில் இருந்த முஸ்லிமான சலிமை திட்டமிட்டு அழைக்காமல், இவர்களே கூடி இளங்கீரனின் கதையை நீக்கிவிட்டு வேறொரு கதைக்கு பரிசை அறிவித்தார்கள்.

சாகித்திய மண்டல விழா யாழ் இந்துக்கல்லுரியில் நடந்தபோது.  இக்கூட்டத்துக்கு  சு.நடேசபிள்ளை தலைமையேற்றார். இந்த விழாவுக்கு இ.மு.ஏ.சங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடப்பட்டிருந்தது. அழைப்புக்கு நன்றி தெரிவித்து அதன் செயலாளர் பிரேம்ஜி சாகித்திய மண்டல குழுவுக்கு எழுதிய கடிதத்தில் கதைக்கான பரிசுத் தேர்வில் முறைகேடு இடம் பெற்றுள்ளதாயும் தமது படைப்பாளிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாயும், தாம் விழாவுக்கு வந்து பரிசு வழங்கும் சமயம் அதை எதிர்க்கும் முகமாக வெளியேறிச் செல்வோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். விழாவில் பரிசு வழங்கும் சமயம் வந்தபோது பிரேம்ஜி எழுந்து இது முறைகேடாக தேர்ந்தெடக்கப்பட்ட பரிசு என்று ஆட்சேபனை எழுப்பினார்.

அவருக்கு ஆதரவாகப் பல குரல்கள் சபையில் இருந்து எழுப்பப்பட்டதால், வேறு வழியின்றி சு.நடேசபிள்ளை பிரேம்ஜியை மேடைக்கு வந்து அவரின் கருத்துக்களை கூறுமாறு அழைத்தார். பிரேம்ஜி மேடையேறிப்பேசத் தொடங்க, கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து தனது சேட்டைக் கழற்றி எறிந்தவிட்டு, ஒரு கதிரையை எடுத்துச் சுழற்றத் தொடங்கினார். அப்போது பல எதிர்க் கருத்துக்கள் எழுந்தன. இச்சமயம் சலீம் மேடையேறி தான் சாகித்திய மண்டல பரிசு தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்தபோதும் திட்டமிட்டு புறக்கணித்ததாகவும், இளங்கீரன் முஸ்லீம் என்பதாலே இது நடந்ததாகவும் கோபமாகக் கூறினார். இதனால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. சத்தமும் வாத பிரதிவாதங்களும் எழுந்தன. இச்சமயம் டானியலுடன் வந்திருந்த இளைஞர்கள் மேடையை நோக்கி முட்டைகளை எறிந்தனர்.

இதைக்கண்டு  ஆவேசம் அடைந்த எஸ்.பொ. அம்மேடையேறி  எழுத்துலகில் நான் இரண்டு ஆண்டுகள் ‘அஞ்ஞாதவாசம்’  செய்த காலத்தில் கதைகளை எழுதி என் நண்பர்களான டானியல், டொமினிக் ஜீவா ஆகியவர்களுக்கு கொடுத்தேன். டானியலுக்கு எழுதிக்கொடுத்த ‘அமரகாவியம்’  என்ற கதை தான் சுதந்திரன் சிறுகதைப் போட்டியிற் பரிசு பெற்றது என பகிரங்கமாக பேசினார். இதில் இங்கே எஸ்.பொ.வின் காழ்ப்புணர்வை விட,  இதன் உண்மை நிலைமைகளை காண்போம்.

*


கைலாசபதி தினகரன் பிரதம ஆசிரியராக இருந்தபோது முற்போக்காளர்கள் மட்டுமல்ல, நற்போற்காளர்கள் என்பவர்களும், அதற்கப்பாற்பட்டவர்களும் தினகரனில் எழுதியவர்கள் தான். அப்போ இவர்களுக்குள் உந்தப் போக்குகள் அடிபிடிகள் இருக்கவில்லை. விடுமுறை நாட்களில் எல்லோரும் சந்திப்பதும் கூட்டான கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள் நடாத்துவதும் இயல்பு. இது கட்டுரை, கவிதை, சிறுகதைகளின் உருவம், உள்ளடக்கம், கருவுருவாக்கம் பற்றியதாகவும் இருக்கும். கைலாசாதி கூட ஒவ்வோர் எழுத்தாளர்களின் துறை சார்ந்து, அவரவர்களின் திறமைக்கேற்ப எழுத ஊக்கம் கொடுத்தவர் தான். அவர் கொடுத்த உருவ உள்ளடக்க கருவுருவாக்கத்தில் அவரின் சக எழுத்தாளர்கள் எழுதிய கலை இலக்கியப் படைப்புக்களும் உண்டு.  அதற்காக அவர் தான் கொடுத்த கருவுருவாக்கத்தில் எழுதியவர்களை பட்டியலிடவில்லை. மாறாக அவரை நேரில் சந்திக்கும் போது  நன்றி சொல்ல முற்பட்டவர்களைக் கூட, அவர் கண்டித்ததும் உண்டு. இதை சில்லையூர் செல்லராஐன்,  செ. யோகநாதன், எம்.சின்னத்தம்பி போன்ற எழுத்தாளர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

எஸ்.பொ.  “நற்போக்காளர்” ஆவதற்கு முன்னர் டானியலின் கலை இலக்கிய நண்பர். அதன்பால் சந்திப்புக்கள் கலந்துரையாடல்கள் கருத்துப் பரிமாறல்கள் நடத்தியவர்கள் தான். இந்நோக்கில் ‘அமரகாவியம்‘  கதைக்கான கருவை கொடுத்திருக்கலாம். அதற்காக அக் கதையையே தான் எழுதிக் கொடுத்தாக சொல்வது எல்லோருக்கும் காதில் பூ வைக்கும் வேலைதான். எஸ். பொ.விற்கு “பொய், சூதுவாது, கள்ளம், கபடம்,  காழ்ப்புணர்வு என்றால் என்னவென்றே தெரியாது”.  அவர் ‘எக்காலும் சொல்வதெல்லாம் உண்மையே’.  அக்கால் கொண்டு அவர் சொல்லதை நம்புவோமாக! மேலும் இவர் பற்றி இனிமேலான பதிவுகளிலும் பார்ப்போம்.

போட்டி முடிவுகள் சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டு ‘அமரகாவியம்’ கதையும் வெளியான பின்னர் நான் டானியலுக்கு  ஓர் பாராட்டுக் கடிதம் எழுதினேன். என் பாராட்டுக்  கடிதத்திற்கு டானியல் அவர்கள் பதில் எழுதியிருந்தார். அத்துடன் சில கதைகளையும் எனக்கனுப்பி, அதை ஏதாவது பத்திரிகைகளுக்கு அனுப்பி பிரசுரிக்குமாறு கேட்டிருந்தார் என சொல்கின்றார் வ.அ.  மேலும் “யாழ்ப்பாணத்து பாவப்பட்ட பஞ்சமர்களின் வாழ்க்கையை அறிய வேண்டின், டானியல் அவர்களது பஞ்சமர், கோவிந்தன் ஆகிய நாவல்களையும் அவரின் மற்ற எழுத்துக்களையும் படித்தாக வேண்டும்” என்கின்றார்.

‘அமரகாவியம்’  சிறுகதைக்குப் பிற்பாடு  வ.அ.விற்கு எழுதியனுப்பிய சிறுகதைகளை டானியலுக்கு   எழுதிக் கொடுத்தது யார்?.   இது பற்றிய தகவல்கள் எஸ்.பொ.விடம் இல்லையோ?.  சிறுகதைகளைத் தான் யாரும் எழுதிக் கொடுக்கலாம். ஆனால் நாவல்களை?.   இது போன்ற கேள்விகள் இயல்பாக எழுப்பப்பட வேண்டியவை!.  ஆனால் இதை ஏன் வ.அ. இராசரத்தினம் எழுப்பவில்லை?.  டானியல் எழுத்தாளராக மட்டுமல்ல,  ஓர் பேராசிரியராகவும் வாழ்ந்தார் என காணும் இவர், எஸ்.பொ.வின் ‘நற்போக்கையே’  ஏற்காத இவர், ஏன் எஸ்.பொ.விடம் இக் கேள்விகளை எழுப்பவில்லை?.  இங்கே தான் கைலாசபதி சாதி பார்த்தார் என என்.கே. ரகுநாதன் (நிலவினிலே பேசுவோம் கதைமூலம்) 40.வருடங்களாக உலாவ விட்டது போல், வ.அ.வும் டானியல் ‘இரவல் எழுத்தாளன்’ எல்லோரும் எண்ணட்டும் என கேள்வி கேட்காமல் சென்றாரோ? ன கேட்கத் தோன்றுகின்றது.

(தொடரும்)

 

1.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக….. (பகுதி-1)

2.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக.. (பகுதி-2)

3.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக….. (பகுதி-3)

4.கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..பகுதி 4

Last Updated on Wednesday, 25 May 2011 05:29