Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் கோவை என்.டி.சி. தொழிற்சங்கத் தேர்தல்: பு.ஜ.தொ.மு. மாபெரும் வெற்றி!

கோவை என்.டி.சி. தொழிற்சங்கத் தேர்தல்: பு.ஜ.தொ.மு. மாபெரும் வெற்றி!

  • PDF

தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசியப் பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமான 7 மில்களிலும் (கோவை5, கமுதி1, காளையார்கோவில்1) டிசம்பர் 18 ஆம் தேதியன்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்தது) பெருவெற்றி பெற்றிருக்கிறது.

 

மொத்த வாக்குகளில் முதலிடத்தை தொ.மு.ச.வும் (2 பிரதிநிதிகள்), இரண்டாமிடத்தை பு.ஜ.தொ.மு.வும், (ஒரு பிரதிநிதி), மூன்றாமிடத்தை சி.ஐ.டி.யு.வும் (ஒருவர்), நான்காம் இடத்தை ஐ.என்.டி.யு.சி.யும் (ஒருவர்) பெற்றிருக்கின்றன. ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க. சங்கங்கள் உள்ளிட்ட 8 சங்கங்கள் தோல்வியடைந்தன.

 

இந்தத் தேர்தல் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக நடத்தப்பட்டிருக்கும் தொழிற்சங்கத் தேர்தல். 1974 இல் தேசியப் பஞ்சாலைக் கழகத்தின் ஆலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இங்கு தொழிற்சங்கத் தேர்தலே நடந்ததில்லை. ""செக் ஆஃப்'' முறையில் தொழிலாளிகளிடம் சந்தாவை மட்டும் வசூலித்துக் கொண்டு, தொழிலாளிகளை நாட்டாமை செய்து கொண்டிருந்த இந்தச் சங்கத் தலைமைகளுக்கு நிர்வாகமும் மனமகிழ்ச்சியுடன் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

 

என்.டி.சி. மத்திய அரசு நிறுவனமாக இருந்தபோதிலும், இங்கு தொழிலாளர்களின் நிலைமை மிகவும் கொடூரமானது. 20 ஆண்டுகளாக வருடாந்திர ஊதிய உயர்வே கிடையாது. 28 ஆண்டுகள் பணியாற்றிய நிரந்தரத் தொழிலாளியின் மொத்த சம்பளமே 9000 ரூபாய்தான். ஆனால், அதிகாரிகளுக்கோ 6ஆவது ஊதியக் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு அதிகாரிகளுக்குரிய ஊதியம். புதிதாக வேலைக்குச் சேரும் அதிகாரிக்குத் துவக்கச் சம்பளமே ரூ.40,000க்கு மேல்.

 

இந்த அநீதிகளை எதிர்த்து சங்கத் தலைமைகள் எதுவும் போராடியதில்லை. மாறாக, ""நிர்வாகத்திடம் பகல் ஷிப்டு வாங்கித்தர 1000 ரூபாய், குவார்ட்டர்ஸுக்கு ரூ.5000, விருப்ப ஓய்வு வாங்கித்தர ரூ.50,000, இவையன்றி நிர்வாகத்திடம் முன்பணமோ கடனோ பெறவேண்டுமானால் அதற்கு ஒரு ரேட் ...'' என்று 36 ஆண்டுகளாகத் தொழில் நடத்தி வந்தார்கள், இந்தத் தொழிற்சங்க புரோக்கர்கள்.

 

தொழிலாளி வர்க்கத்தின் மீது சதித்தனமாகத் திணிக்கப்பட்டிருந்த இந்தக் கட்டப் பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தேர்தலை நடத்த வைப்பதற்கும் பு.ஜ.தொ.மு. தொடர்ந்து போராடியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியது.

 

தேர்தல் நடத்தப்பட்டால் பு.ஜ.தொ.மு. வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தினாலும், 36 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத ஜனநாயக உரிமையைத் தொழிலாளி வர்க்கத்துக்கு வழங்கினால் நேரக்கூடிய அபாயம் குறித்த கவலையினாலும் உறக்கம் இழந்த தொழிற் சங்கத் தலைமைகள், தேர்தலுக்கு உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்க அரும்பாடுபட்டனர்.

 

தேர்தலை நிறுத்துவதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் பு.ஜ.தொ.மு. முறியடித்தது. அதன் பின்னர் நடைபெற்றிருப்பதுதான் இந்தத் தேர்தல். எனவே, இத்தேர்தலில் பு.ஜ.தொ.மு பெற்றிருக்கும் வெற்றியினைக் காட்டிலும், தேர்தலை நடத்த வைத்துத் தொழிலாளிகளின் ஜனநாயக உரிமையை மீட்டுக் கொடுத்ததுதான் பு.ஜ.தொ.மு.வின் முதன்மையான வெற்றி.

 

இரண்டாவது வெற்றி, தற்காலிகத் தொழிலாளர்கள் 300 பேருக்கு வாக்குரிமை பெற்றுத் தந்ததாகும். என்.டி.சி.யின் 7 மில்களிலும் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் சுமார் 2600 பேர். தற்காலிகத் தொழிலாளர்கள் 2600 பேர். இவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வருபவர்கள். இவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை கோரிப் போராடியது பு.ஜ.தொ.மு. 240 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தவர்களுக்குச் சட்டப்படி பணி நிரந்தரம் கோரும் உரிமை உண்டு என்ற போதிலும், அப்படி ஒரு கோரிக்கைக்கான போராட்டத்தை துரோகத் தொழிற்சங்கத் தலைமகள் நடத்தவேயில்லை. தற்காலிகத் தொழிலாளர்களின் வாக்குரிமைக்காக பு.ஜ.தொ.மு. விடாப்பிடியாகப் போராடவே, ""300 தொழிலாளர்கள் மட்டும்தான் 240 நாட்களுக்கு மேல் வேலை செய்தவர்கள்'' என்று ஒரு பொய்க்கணக்கைக் காட்டித் தொழிலாளர் துறை ஆணையரின் ஒப்புதலைப் பெற்றது நிர்வாகம். இந்த 300 தொழிலாளிகளுக்கு வாக்குரிமையைப் பெற்றதன் மூலம், அவர்களுடைய பணி நிரந்தரத்துக்கான உரிமைக்கு மட்டுமின்றி, மீதமுள்ள 2300 தற்காலிகத் தொழிலாளர்களின் பணிநிரந்தர உரிமைக்கும் கால்கோள் இடப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்னரே பு.ஜ.தொ.மு. ஈட்டிய இரண்டாவது முக்கியமான வெற்றி இது.

 

மூன்றாவது வெற்றிதான் பு.ஜ.தொ.முவின் தேர்தல் வெற்றி. இந்த வெற்றியும் எளிதில் அடையப்பட்டதல்ல. தேர்தல் நடைபெற்ற 7 மில்களில் ஒரு மில்லில் மட்டுமே கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் ஏற்கெனவே இயங்கி வருகிறது. அதனுடைய செயல்பாடு ஏற்படுத்திய தாக்கம் எல்லா மில்களிலும் உள்ள தொழிலாளர்களை பு.ஜ.தொ.மு.வை நோக்கி ஈர்ப்பதில் பெரும் பங்காற்றியது.

 

எனினும், கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு, நம்பிக்கையையும் போராட்ட உணர்வையும் ஊட்டும் பொருட்டு இடையறாத பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 7 விதமான துண்டறிக்கைகள், ஆலைவாயிற் கூட்டங்கள், சிந்திக்கத் தூண்டும் சுவரொட் டிகள், 7 மில்களிலும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவினர் நடத்திய கலைநிகழ்ச்சிகள் ... ஆகிய இவை அனைத்தும், துரோகத்தாலும் அடக்குமுறையாலும் துவண்டு கிடந்த தொழிலாளர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை முளைவிடச் செய்தன.

 

மற்ற தொழிற்சங்கங்கள் தமக்குள் பிளவுபட்டிருந்தாலும் பு.ஜ.தொ.மு.வை எதிர்ப்பது என்ற கொள்கையில் ஒன்றுபட்டு நின்றனர். ""அவர்கள் நக்சலைட்டுகள்; அவர்களைத் தேர்ந்தெடுத்தால் மில்லை மூடுவது உறுதி; அவர்கள் வேலை செய்யும் மில்லில் போராட்டம் நடத்தித் தொழிலாளிகளைச் சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்'' என்று பலவாறாக அச்சுறுத்தினர். ஆனால், தமது எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தைக் காட்டிலும் பெரிய அச்சத்தை இந்தத் தீவிரவாதப் பூச்சாண்டி தொழிலாளர்களிடம் ஏற்படுத்திவிடவில்லை. ""அவர்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி. இல்லாததால் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்திக் கோரிக்கைகளைப் பெற இயலாது'' என்று பிரச்சாரம் செய்து பார்த்தார்கள்; அப்படி எத்தனை கோரிக்கைகளை இவர்கள் நிறைவேற்றித் தந்துவிட்டார்கள் என்று எள்ளி நகையாடினார்கள் தொழிலாளர்கள். ""எம்.எல்.ஏ. இல்லை'' என்பதையும், தொழிலாளிகள்தான் பு.ஜ.தொ.மு.வின் தலைவர்கள் என்பதையுமே நம்பிக்கைக்குரிய தகுதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் தொழிலாளிகள்.

 

இத்தேர்தலில் தனது கொள்கையான ""பிரியாணியையும் பாட்டிலையும்'' வைத்து சுமார் 10 இலட்ச ரூபாய் செலவு செய்து தொ.மு.ச. கைப்பற்றியிருக்கும் இடங்கள் 2. பிரியாணியையும், பாட்டிலையும் வைத்து அந்த ஒரு நாளில் மயக்கத்திலாழ்த்தி தொழிலாளிகளின் வாக்கை அவர்கள் அபகரித்திருக்கலாம். ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கையை அவ்வாறு அபகரிக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் யாரோ, போராடக் கற்றுக் கொடுப்பவர்கள் யாரோ, இழப்புகளை முன்வந்து ஏற்பவர்கள் யாரோ அவர்கள் மட்டும்தான் தொழிலாளியின் நம்பிக்கையைப் பெற முடியும்.

 

பு.ஜ.தொ.மு. பெற்றிருக்கும் இந்த வெற்றி, கோவையில் உள்ள தனியார் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தோற்றுவித்திருப்பதாகவும், கமுதி காளையார்கோவில் மில்களில் உள்ள ஏ.ஐ.டியு.சி. சங்கத் தொழிலாளர்களும், மற்ற சில சங்கங்களின் தொழிலாளர்களும் பு.ஜ.தொ.மு.வில் இணைய முன்வந்திருப்பதாகவும் கூறுகிறார், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் செயலர், தோழர் விளவை இராமசாமி.

 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோவையில் நடைபெற்ற ரங்கவிலாஸ், ஸ்டேன்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டமும், சின்னியம்பாளையம் தியாகிகளின் போர்க்குணமும் பழங்கதைகள் அல்ல. காலனியாதிக்கம், இன்று புதிய வடிவில் மறுகாலனியாக்கமாகத் திரும்பியிருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாறு மட்டும் திரும்பாதா என்ன? திரும்ப வைப்போம்! தகவல்: பு.ஜ.தொ.மு; கோவை.