Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் போர்க்குற்ற சாட்சியங்களை நோர்வே மூலம் இலங்கையிலிருந்து கடத்திவந்து, மிரட்டும் மேற்கு ஏகாதிபத்தியங்கள்.

போர்க்குற்ற சாட்சியங்களை நோர்வே மூலம் இலங்கையிலிருந்து கடத்திவந்து, மிரட்டும் மேற்கு ஏகாதிபத்தியங்கள்.

  • PDF

நோர்வேயின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான Aftenposten புலிகளுடன் இணைந்து வேலை செய்த பன்னிரண்டு நபர்களை, நோர்வேஜிய அரசு இலங்கையில் இருந்து இலங்கை அரசுக்கு தெரியாத வண்ணம் அவர்கள் வெளியேற உதவியதாக பரபரப்பான தகவல்களை எதிர்பாராத வகையில் திடீரென வெளியிட்டுள்ளது. இந்த நபர்களை இலங்கை அரசு தீவிரமாக தேடி வருகின்றது. இவர்கள் புலிகளுடன் கடைசிவரை இருந்தவர்களாவர். நோர்வே தனது நாட்டில் உடனடி அகதி அந்தஸ்து வழங்கியதுடன், நோர்வே வருவதற்கான பொருளாதார வசதிகளையும், பிரயாணச் செலவுகளையும், இவர்கள் இலங்கையை விட்டு தப்புவதற்கும் அனைத்து உதவிகளையும், இந்த நபர்களுக்கு நோர்வே அரசு செய்துள்ளது. இதில் ஆச்சரியப்பட வைக்கும் விடயம், அகதி அந்தஸ்து கொடுத்ததோ, அல்லது பிரயாண செலவுகளை நோர்வே வழங்கியதோ அல்ல.

 

 

மாறாக சர்வதேச இராஜதந்திர வழக்கத்துக்கும், ஐக்கியநாடுகள் சபையின் நாடுகளுக்கு இடையிலான உறவு பற்றிய சாசனத்துக்கும் முரணாக, இலங்கை அரசினால் தேடப்படும் நபர்களை, இராஜதந்திரி அந்தஸ்துள்ள நோர்வே தூதுவர் தனது வாகனத்தில் தனது இராஜதந்திரி உரிமையைப் பயன்படுத்தி, இந்த நபர்களை இலங்கை எல்லையைக் கடக்க உதவியுள்ளார். இதில் சிலரை தனது வாகனத்திலே கொழும்பு விமான நிலையத்துக்கு அழைத்து வந்ததுடன், அவர்களுக்கு நோர்வே அரசின் பச்சை நிற கடவுச்சீட்டும் வழங்கி, (அதாவது இராஜதந்திரிகள் பாவிக்கும் கடவுச்சீட்டு) இலங்கை அரச படைகளால் எந்தவித சோதனைக்கும் அவர்கள் ஆளாகாமல் பாதுகாத்து, தாய்லாந்து நாட்டுக்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார். பின் நோர்வேயின் தாய்லாந்துக்கான தூதுவர் புலிகளின் செயற்பாட்டாளர்களான இந்த நபர்களை, தாய்லாந்திலிருந்து நோர்வேக்கு அனுப்பியுள்ளார்.

இப்படியான செயற்பாட்டில் நோர்வே போன்ற நாடுகள் ஒருபோதும் ஈடுபடுவதில்லை. அமெரிக்கா, ரூசிய, சீன போன்ற நாடுகளுக்குள் தமக்கு தேவையான தகவல்களைத் திரட்டும் உள்ளுர் உளவாளிகளுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் போது, அவர்கள் உயிருடன் இருப்பது மிக முக்கியமானால், அவர்களை இராஜதந்திர உரிமையைப் பயன்படுத்தி தமது உளவாளிகளை வெளியேற்றுவார்கள். இன்று உலகத்தில் அடிக்கடி இது வழமையாக நடைபெரும் ஒரு நாடு கியூபா ஆகும். இதன் அடிப்படையில் இன்று இலங்கை அரசின் தேசிய ஆளுமைக்கு எதிராக செயற்பட்டு நோர்வே, புலிகளை இலங்கையை விட்டு கடத்தியமை ஆச்சரியமானதொன்று.

Aftenposten பத்திரிகையின் தகவலின்படி இன்னும் பல புலிகளின் செயற்பாட்டாளர்களும் அவர்களின் குடும்பங்களும், இலங்கையை விட்டு வெளியேற நோர்வே இராஜதந்திரிகளை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனராம்.

இந்தப் பத்திரிகையின் செய்திக்கு அப்பால், நோர்வே அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, நோர்வே புலிகளைக் கடத்திய விடயத்தை வெளியிட்டதே நோர்வே அரசின் வெளிநாட்டு அமைச்சின் இராஜதந்திரிகள் எனக் கூறப்படுகின்றது. இந்தச் செய்தியை வெளியிடுவதன் நோக்கம் இலங்கை அரசின் மீது அழுத்தத்தை பிரயோகிப்பதேயாகும். நோர்வே அரசியல் வட்டாரங்களின் தகவல்களின்படி, நோர்வேயால் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டவர்கள் அனைவரும் இறுதிவரை முள்ளிவாய்க்காலில் புலிகளுடன் பணியாற்றியவர்களாவர். இதனால் இவர்களுக்கு இறுதி யுத்தத்தில் நடந்த பல மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் தெரிந்துள்ளது. இதன் அடிப்படையில் இவர்கள் பலர் சர்வதேச விசாரணையில் சாட்சியம் வழங்க தகுதியானவர்கள். இதனாலேயே புலிகளுடன் பணியாற்றி, இன்று நோர்வேயின் உதவியால் இன்று நோர்வேயில் அகதி அந்தஸ்து பெற்றுள்ள வைத்தியர் ஒருவரை Aftenposten தனது செய்தியில் பேட்டி கண்டுள்ளது. Aftenposten பேட்டியில் தான் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான காயமடைந்தவர்களின் உறுப்புகளை அகற்றியதாக மேற்படி வைத்தியர் கூறுகிறார். நோர்வே ஒரு சிறிய நாடு. இது இந்திய, சீன, ருசிய நண்பனான இலங்கை அரசையே வெருட்டிப் பார்க்க முனைகின்றதென்றால், அது நோர்வே சுயமாக செய்யும் செயல் அல்ல. இதன் பின் வழமை போல அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளதென்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல.

இங்கு அமெரிக்க ஐரோப்பிய நலன்களுக்கு அமைவாக நோர்வே செயற்படுகின்றது. இது சாட்சிகளைக் காட்டி, இலங்கையை மிரட்டும் நடவடிக்கையாகும். இங்கு போர்க்குற்றச் சாட்சியங்களை பாதுகாக்கும் நோக்கம் எதுவும் நோர்வேக்கு கிடையாது. போர்க்குற்ற விசாரணையை நடத்தும் உண்மையான எந்த நோக்கமும் கிடையாது. மாறாக இதைக் கொண்டு, இலங்கையை மிரட்டும் ஒரு பகிரங்கமான செயல்பாடாகும் இதுவெனக் கணிக்கலாம். இதன் முதல் அங்கமாக இந்தச் செய்தியை நோர்வே அரசு திட்டமிட்டு கசியவிட்டுள்ளது.

இது இதில் முதற்படி. இலங்கை மேற்கு நலனுக்கு இணங்க மறுத்தால், உலக ஒழுங்கில் மேற்குடன் நிற்க மறுத்தால், போர்க்குற்ற விசராணைகள் இந்த சாட்சியங்கள் மூலம் அரங்கேறும். அது தமிழ் மக்களின் நலனில் இருந்தல்ல. ஆம், அவர்களின் நலன்தான், இங்கு அனைத்தையும் அரங்கேற்றுகின்றது.

இங்கு கடத்தி வரப்பட்ட நபர்கள் நோர்வேயின் கருணைக்குள் விழுந்தது எப்படி என்பதன் மறுபக்கம் இவர்கள் நோர்வேயினால் வளர்க்கப்பட்டவர்கள் அல்லது புலிகளிலிருந்து உள்வாங்கப்பட்டவர்கள் அல்லது புலிகளுக்குள் உள்தள்ளப்பட்டவர்கள் என்பதே. நோர்வேயின் நிகழ்ச்சிநிரலுக்காக புலிகளுக்குள் இயங்கியவர்கள். எரிக் சோல்கைமின் கூற்றுப்படி தங்களுக்காக இருக்கின்ற கடப்பாடுகளின் நிமித்தமே அவர்கள் இங்கு வருவதற்கு நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறார். அந்தக் கடப்பாடு இந்த தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டும் உரித்தானது எப்படி எனில் அவர்கள் இவர்களின் கையாட்கள் என்பதே. இவர்களை வைத்து நோர்வே மேற்குலக திட்டங்களுக்காக இலங்கையை மிரட்ட வழி சமைத்துள்ளது.

Last Updated on Saturday, 14 May 2011 07:08