Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஓட்டுரிமை என்னும் மனநோய்! - துரை. சண்முகம்

ஓட்டுரிமை என்னும் மனநோய்! - துரை. சண்முகம்

  • PDF

“தேர்தல் பாதை திருடர் பாதை” -

என்றவுடன்,
அப்படியானால் ஓட்டுப்போடும் நானுமா?
என உள்ளர்த்தம் புரிந்து கொண்டு
கோபப்படும் நண்பா,

 

 

உள்ளபடியே சொல்!

“இனி எவன் வந்தாலும்
ஏறுன விலைவாசி இறங்கப் போவதில்லை,
எல்லா பயலும் திருடனுங்க” என
எல்லாமும் நீயே சொல்லிவிட்டு,
சரி… எவனுக்காவது ஓட்டுப்போடுவோம்
என நீ கிளம்பிப்போவது யோக்கியமா?

கட்டை விரலில் வேப்பெண்ணை தடவினால்
கை சூப்பும் பழக்கம்
அத்தோடு நின்றுவிடும்,
இது என்ன கெட்ட பழக்கமோ?
எத்தனை முறை உன் முகத்தில்
கரி பூசினாலும்
மத்தவனுக்கும் ஒரு வாய்ப்பளிப்போம்
என மாறி, மாறி ஓட்டுப் போடுவது
மனநோயன்றி வேறென்ன?

கண்டதையும் மிதிக்கக் கூடாது,
கால்தேயக் கூடாதென
செருப்பு போடுவதற்கும்
ஒரு காரணமிருக்கிறது,

கண்டவனும் உன்னை மிதித்தும் கூட
கால் கடுக்கப் போய்
இன்னும் நீ ஓட்டுப் போடுவதில்
என்ன நியாயமிருக்கிறது!

ஓட்டுப் போடுவது
மிகப்பெரிய ஜனநாயகக் கடமையெனும்
அப்துல்கலாமின் பிரச்சாரம் கேட்டு
அவர் குடியிருக்கும் தெரு நாயே தலைசுற்றி ஓடும்போது..
அதில் ஒன்றிப் போக
நீ என்ன மூளையில்லாத முண்டமா?

ஓட்டுரிமைதான்
மிகப்பெரிய உரிமையென
உனக்கு கிர்ரு… ஏற்றும் சூர்யாவுக்கு
அடுத்த படத்துக்கு … முதலாளியிடமிருந்து
பல கோடியில் ‘அட்வான்ஸ் ரெடி’.

ஓட்டுப் போட்டு ஓட்டுப் போட்டு
உழைப்புக் கேற்ற கூலி கேட்டு
உன் உரிமைக்காக போராடும் பொழுது
ஆறடி அதிவிரைவுப் படையோடு
உனக்கு பல ரவுண்டு தடியடி!

கல்வி உனக்கு உரிமையில்லை…
வேலை உனக்கு உரிமையில்லை…
விவசாயிக்கு விலைநிர்ணய உரிமையில்லை…
நெசவாளிக்கு கைத்தறி நூல் உரிமையில்லை…
தொழிலாளர்க்கோ சம்பளவிகிதம், பணிப்பாதுகாப்பு,
தொழிற்சங்க உரிமையில்லை…

வாழ்வுரிமை இல்லாத வாக்குரிமை எதற்கு?

உனது ‘ஓட்டுரிமையை’ கரைசேர்க்க
அரசாங்கம் இரண்டு வாகனம் வைத்திருக்கிறது.
சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டு செத்துப்போனால்
உனக்கு நூற்றி எட்டு ஆம்புலன்சு
சினங்கொண்டு உரிமைக்காக போராடினால்
உனக்கு நூறு வண்டி போலீசு…
சரியாகச் சொன்னால் உனது சின்னம் ஆம்புலன்சு!

நூறா?  நூற்றி எட்டா?
வாழ்வுரிமையா… ஓட்டுரிமையா?
மானத்தோடு பொங்கியெழுவதா…
இல்லை ஒரு ரூபாய் அரிசியிலேயே தங்கி விடுவதா?
இந்தத் தேர்தலில்
உன்னைத் தெரிவு செய்ய வேண்டிய ஓட்டு இது!

“எங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டும்…
எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும்…
எங்கள் ஊருக்கு மருத்துவமனை வேண்டும்…’’
இப்படி உரிமையாய் நீ கேட்டதனைத்தையும் கொடுக்காமல்
ஓசியிலே மிக்சி,கிரைண்டர் என்றால் உள்ளர்த்தம் என்ன?

பிச்சையாய் எதையாவது வாங்கிக் கொண்டு
ஓட்டுப் போடு!
உரிமையெனக் கேட்பவனை உள்ளே போடு!
இந்தத் தேர்தல் ஜனநாயகத்தால் உனக்கு ஆவதென்ன?

நம் தேவைகளைப் புறக்கணிக்கும்
இந்தத் தேர்தலையே புறக்கணி…
இதைத் தெரிந்து கொள்ளாமல்
கிரைண்டர்.. பிரிட்ஜ் என இண்டு இடுக்கில் புகுந்து கொண்டு வாழும்
என்ன ஜந்து நீ?…

தட்டைக் காட்டி
போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும்
ஓட்டைக் காட்டி
தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும்
வாழ்வு ஒன்றுதான்!

நீயாக எதையும் கேட்க முடியாது…
“அம்மா அந்த பிரிட்ஜில் இருக்கும்
கெட்டித்தயிரை எடுத்துப் போடுங்கள்!’’ என்று
பிச்சைக்காரன் உரிமையுடன் கேட்கவா முடியும்?

தருவதை அனுபவித்து
நிறைவுறும் திருவோட்டை
பிச்சைக்காரன் கூட ரசிப்பதில்லை…
நீயோ, அதை சிந்தனையாய் ருசிக்கிறாய்…
உண்மையில் பெறுவதாக நினைத்துக் கொண்டு
அனைத்தையும் இழப்பவன் நீ…

விவசாய நிலங்களை எடுத்து
முதலாளிகளுக்கு போட்டுவிட்டு
ஒரு ரூபாய் அரிசியை வாங்கிக் கொள்ளும் முட்டாள்
உன்னைப் போல் உலகில் உண்டா?

பன்னாட்டு கம்பெனிகளிடம்
உன் சிறு தொழில் உரிமைகளை இழந்துவிட்டு
அவன் வண்ணத் தொலைக்காட்சியை வாங்குவதற்கு
வரிசையில் நிற்கும் உயிரினம் உண்டா?

குடிநீரும், இயற்கை வளங்களும்
குடிமக்களின் உழைப்பும்
தனியார்மயத்துக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு
ஐய்! மடி கணிணி கிடைக்கப்போகிறதென்று
ஓட்டுப்போட்டு ஏமாறும்
உன்னைப் போல் ஒரு நாயுண்டா? புழு உண்டா?

ஏழைகளுக்கு நல்லது செய்வதாகச் சொல்லி
அம்பானிக்கும், டாடாவுக்கும் நாட்டை
அள்ளிக் கொடுக்கும் ஏற்பாடுதான் இந்த தேர்தல்…
இதற்கு ஆள்பிடிக்கும் களவாணிகள்தான் ஓட்டுக்கட்சிகள்…
நரிகளின் ஊளையை நம்பாதே…
பின்பு கிட்னியும் போய்விட்டதே என்று வெம்பாதே!

ஈழத் தமிழரை போட்டுத் தள்ளிய காங்கிரசும்
இங்கிருக்கும் தமிழரை டாஸ்மாக்கில் ஊற்றித் தள்ளும் கலைஞரும் கூட்டணி…
“குடிகாரன்’ என விஜயகாந்தை “கொஞ்சிய’ அம்மாவும்
நீதான் ஊற்றி கொடுத்தாயா என ஆசைப்பட்ட விஜயகாந்தும் கூட்டணி…

திருடர்களுக்குள் கூச்சமில்லாமல் கூட்டணி
தேர்தலுக்கு முதல்போட்டு திரைமறைவில் காத்திருக்கிறான்
டாடா… பிர்லா… அம்பானி…

ஓட்டுப்போடும் உழைக்கும் வர்க்கமே! நீ மட்டும்
நெசவாளி, விவசாயி, மாணவன், மீனவன் எனத் தனித்.. தனி…
எதிரிகளின் கூட்டணியை அலசி ஆராய்ந்து
எவன் ஜெயிப்பான் என்பதா… நம் பணி
எதிரிகளுக்கெதிராக உழைக்கும் வர்க்கத்தை ஒரே கூட்டணியாய்
எழுந்து போராட வைப்பதுதான் அறிவு இனி…

என்ன இருந்தாலும்
ஓட்டுப்போடாவிட்டால் என்ன ஆகும்?
நம்மை யார்தான் ஆள்வது? என்ற
அடிமைத்தனத்தின் அதிர்ச்சி வினா தேவையில்லை,

நீ ஓட்டுப்போடாவிட்டால்… ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை,
தேர்தல் ஜனநாயகம் தீர்ந்து போனதனால்,
கருணாநிதி சொத்தை நாட்டுக்கு எழுதிவைத்து விட்டு
திருவாரூர் திண்ணையில் போய் படுத்துக் கொள்ளப் போவதில்லை…
ஜெயலலிதா முடியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு
தெருவில் அலையப் போவதில்லை…
கேப்டன் சுய நினைவுக்கு வரப் போவதுமில்லை…

மாறாக, நாட்டை ஆள்வது
ஐ.ஏ.எஸ்., போலீசு, இராணுவம் போன்ற அதிகாரவர்க்கமும்
ஆளும் வர்க்கமும் என்ற உண்மை தெரிய வரும்.
நீ ஓட்டே போடாவிட்டாலும்
எப்பொழுதும் போல் முதலாளிகள் நாட்டைச் சுரண்டும்
உண்மை தெரிந்துவிடும்.

மன்மோகன்சிங் பழையபடி
உலகவங்கி வேலைக்குப் போய்விடுவார்,
சோனியா இத்தாலிக்குப் போய்
பத்துப்பாத்திரமா தேய்க்கப் போகிறார்?
சுவிஸ் வங்கியில் கிடக்கும் சிறுவாட்டுக் காசில்
சிக்கனமாய் குடும்பம் நடத்துவார்.
ராகுல்காந்தி இந்தியாகேட்டில் பானிபூரியா விக்கப் போகிறார்,
பழையபடி டாடா, வேதாந்தாவோடு சேர்ந்து தேசத்தையே விற்கப் போகிறார்…

மோடி என்ன இராமன் கோயில் வாசலிலே
குரங்கை வைத்து பிச்சை எடுக்கப் போகிறாரா?
அத்வானிதான் அனுமார் வேசம்போட்டு
தெருத்தெருவாய் கையை நீட்டப் போகிறாரா?
வழக்கம்போல முதலாளிகளின் பங்குச் சந்தையில்
இராமஜெயம் கல்லா கட்டும்…

ஆதலால், நீ ஓட்டுப் போடாததால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை..
இந்த நாட்டில்,
எய்ட்ஸ் வந்து செத்தவரை விட
எலக்ஷன் வந்து செத்தவரே அதிகம்…

தொடர்ந்து ஓட்டுப்போடுவது உடல்நலத்திற்குக் கேடு…
சந்தேகம் இருந்தால்
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு உள்ள சத்தும்போய்
தேசமே மருத்துவமனையில் நிரம்பி வழிவதைப் பாரு…

என்ன இருந்தாலும்,
போட்டுப் போட்டு பழகிடுச்சு
என்னால் போடாமல் இருக்க முடியாது…
கையில் இருக்கிற ஓட்டை எங்காவது போட்டே ஆகவேண்டும்…
என்று தவிக்கிறாயா?
நல்லது நண்பா,
உன் பொன்னான வாக்கை
யாருக்கும் போட்டு வீணாக்காதே…
நாட்பட்டு போன அந்த நஞ்சை
பாம்பு, பல்லி, பன்றிகள் வாய்வைக்க முடியாத
கண்காணாமல் ஊருக்கு வெளியே உள்ள
ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில் கொண்டு போடு…

இழிவாய் இருப்பது
போராடுவதை விட எளிதாய் இருக்கலாம்…
ஆனால், மனித உணர்வுக்கு சரியாய் இருக்குமா?

உன் கண்ணுக்கு முன்னே
இந்த போலி ஜனநாயக அரசமைப்புக்கெதிராக
போராடும் மக்களிடம் போய்..
என்னையும் உழைக்கும் வர்க்கமாய் இணைத்துக் கொள்கிறேன்…
என்று நீ வாக்களிப்பதே அழகினும் அழகானது.

___________________

-துரை. சண்முகம்
______

http://thozhare.wordpress.com/2011/04/06/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/


Last Updated on Wednesday, 06 April 2011 19:33