Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

முற்போக்கு ஜோதிடர் புனிதப்பாண்டியனின் புரட்சி ஆரூடம் - சரவணன்

  • PDF

தமிழகத்தில் தலித் முரசு என்று ஒரு பத்திரிகை, அதற்கு புனிதப்பாண்டியன் என்று ஒரு ஆசிரியர், அவர்களுக்கென்று ஒரு அரசியல், வேலைத்திட்டம் அனைத்தும் தேவனால் வழங்கப்பட்டிருக்கின்றன ! குறிப்பாக மார்க்சியத்தை சாதி என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று கொண்டு தாக்கி தலித் மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச்செய்வதும், மார்க்சியத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளச்செய்வதும் தான் இவர்களுக்கு இடப்பட்ட திருப்பணி. தலித் முரசின் கட்டுரைகளையும், புனிதப்பாண்டியனின் கருத்துக்களையும் இந்த நோக்கிலிருந்து தான் பார்க்க வேண்டும். தலித் முரசின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கவனித்தால் அவர்கள் கம்யூனிச எதிர்ப்பையும் வெறுப்பையும் விதைத்துக்கொண்டிருப்பதை அறியலாம்.

 

சமீபத்தில் சென்னை அரசியல் பள்ளி என்கிற அமைப்பு 'தேர்தல்களும் மக்களாட்சியும்: சில கண்ணோட்டங்கள்' என்கிற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் 'மக்களாட்சி எனும் மாயை' என்கிற தலைப்பில் பேச வேண்டிய புனிதப்பாண்டியன் “மக்களாட்சியில் ஏதும் மாயை இல்லை. இப்போதிருப்பது மக்களாட்சியா இல்லையா என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர‌ நாம் அடைய வேண்டிய இறுதி லட்சியம் ஜனநாயகம் தான்” என்று பேசினார். தொடர்ந்து மக்களாட்சியை பற்றி சிற்சில தத்துவ முத்துக்களையும் உதிர்த்துவிட்டு அந்த தலைப்பை அத்துடன் முடித்துக்கொண்டு ”இந்தியாவில் புரட்சி நடக்குமா நடக்காதா” என்கிற தனக்கு கொடுக்கப்படாத தலைப்பில் பேசத்துவங்கி விட்டார்.

ஜனநாயகம் என்கிற ’மக்களாட்சி’ அது தோன்றிய நாடுகளிலேயே ’மக்களால்’ கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் சர்வாதிகாரத்தன்மையை உணர்ந்து கொண்ட அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் அதை தூக்கியெறிந்துவிட்டு அடுத்த சமூக அமைப்பை நிறுவப்போராடி வருகிறார்கள். ஆனால், நமது பு.பா வோ இப்போது தான் தனது லட்சிய சமூகமான மக்களாட்சிக்கான பிரச்சாரப் பயணத்தையே துவங்கியிருக்கிறார்!

 

லெனின் கூறுவார், ”ஒருவன் ஜனநாயகம் வேண்டும் என்று கேட்டால் யாருக்கு என்று அடுத்த கேள்வியை கேட்பவன் தான் மார்க்சியவாதி.” ஏனெனில் ஜனநாயகம் என்பது வர்க்கச்சார்பானது. ஒரு சமூக அமைப்பிலிருக்கும் இரண்டு வர்க்கங்களுக்கும் சமமான (ஆளும் வர்க்கம்-ஆளப்படும் வர்க்கம்) ஜனநாயகம் என்பது இருக்கவே முடியாது. சிறுபாண்மை முதலாளிகளுக்கு ஜனநாயகம் என்றால் பெரும்பாண்மை உழைக்கும் மக்களுக்கு அது சர்வாதிகாரமாகத் தான் இருக்க முடியும். மற்றொரு புறம் பெரும்பாண்மை மக்களுக்கு ஜனநாயகம் வழங்கப்படும் சமூக அமைப்பில் சிறுபாண்மை ஆளும் வர்க்கத்துக்கு சர்வாதிகாரமே வழங்கப்படும்.

இதில் புனிதப்பாண்டியன் அடையப்போகும் லட்சிய ஜனநாயகம் எந்த வகையைச் சேர்ந்தது ? அது எப்படி இருக்கும் ? அதில் முழுக்க ஜனநாயகம் மட்டுமே இருக்குமா அல்லது சர்வாதிகாரமும் இருக்குமா ? எனில் யாருக்கு ஜனநாயகம் யாருக்கு சர்வாதிகாரம் ?

உரையில் ஆங்காங்கே சில நரித்தனங்களையும் செய்திருக்கிறார் திருவாளர் பு.பா.

முதல் விசயம், தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் நின்று பேசாமல் பேச்சினூடாகவே வேறு தலைப்பிற்கு மாறிக்கொண்டது. பேசு பொருளை விட்டுவிட்டு கம்யூனிஸ்டுகளை பற்றியும், புரட்சியை பற்றியும் பேச வேண்டிய அவசியம் என்ன ? புரட்சி வருமா வாராதா என்பதை பற்றி அண்ணன் கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்று அரங்கத்தில் யாராவது ஒற்றைக்காலில் நின்றார்களா ? இல்லையே, எனில் அது குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன, அதுவும் எதிர்மறையில் ? அங்கே தான் இருக்கிறது தலித் முரசிற்கு தேவனால் பணிக்கப்பட்ட வேலைத்திட்டம் !

இரண்டாவதாக விசயம், கம்யூனிஸ்டுகளை ஆன்மீகவாதிகளுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

தோழர் ஜூலிஸ் பூசிக் சொன்னதைப்போல தனி வார்ப்புகளான கம்யூனிஸ்டு புரட்சியாளர்களை மூடத்தனத்தை பரப்பும் ஆன்மீகவாதிகளோடு ஒருவனுக்கு ஒப்பிடத்தோன்றுகிறதென்றால் அந்த விசுவாசிக்கு கம்யூனிஸ்டுகள் மீது எவ்வளவு வன்மம் இருக்க வேண்டும்? தீவிர கம்யூனிச விரோதியைத் தவிர வேறு யாரால் இப்படியெல்லாம் ஒப்பிட முடியும் ? மேலும் கம்யூனிஸ்டுகள் சாமி கும்பிடுகிறார்கள் என்றும் பொய் பேசியிருக்கிறார்.

கீழ்கண்டவை கம்யூனிஸ்டுகள் குறித்து பு.பா பேசியவை.

ஆன்மீகவாதிகள் எப்படி அவனின்றி அணுவும் அசையாது என்கிறார்களோ அதே போலத்தான் இவர்களும் அரசியலின்றி எதுவுமே நடக்காது என்கிறார்கள். இதுவும் ஒரு வகை கடவுள் நம்பிக்கை போலத்தான், மேலும் கடவுளை ஏற்றுக்கொள்கிற கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.

விசுவாசத்திற்கு என்ன ஒரு மூர்க்கத்தனம் ? கடவுளை வழிபடுபவன் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும் என்று சொல்லுபவன் எப்படிப்பட்ட ஒரு முட்டாளாக இருக்க முடியும்!!. அப்படி கடவுளை வழிபடுபவனை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக வைத்துக் கொண்டிருக்குமா ? இந்த சாதாரண உண்மை கம்யூனிசம் பற்றிய அடிப்படை அறிவுள்ளவர்களுக்கு கூடத் தெரியும், ஆனால் இந்த நாட்டில் புரட்சி வருமா வராதா என்கிற அளவுக்கு ஆரூடம் கூறப் புறப்பட்டிருக்கிற திருவாளர் பு.பா வுக்கு தெரியவில்லை என்பது அவரது முட்டாள்தனத்தைக் காட்டுகிறதா அல்லது அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறதா?. இல்லை, இல்லை நான் சி.பி.எம் காரர்களைத் தான் சொன்னேன் என்றால் அதைத் தெளிவாகச் சொல்லவேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் இப்படி, இப்படி இருக்கிறார்கள் என்று குறிப்பாகச் சொல். அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. அவர்கள் கம்யூனிஸ்டுகள் இல்லை, இல்லை என்று நாங்களும் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறோமே அது இந்த பு.பா காதில் மட்டும் விழவில்லையா ? போலிக் கம்யூனிஸ்டுகளிடம் போய் உண்மையான கம்யூனிச பண்புகளை எதிர் பார்ப்பதும், அதையே சாதகமாக்கிக்கொண்டு கம்யூனிஸ்டுகளே கூட சாமி கும்பிடுகிறார்கள் என்று பொதுமைப்படுத்தி பேசுவது புத்திசாலித்தனமா - அயோக்கியத்தனமா ?. இவ்வாறு பேசுவதெல்லாம் வாய் தவறித் தெரியாமல் பேசுவதல்ல, அல்லது கடவுள் மறுப்புக்கொள்கையில் தனக்கிருக்கும் பற்றினால் பேசுவதல்ல மாறாக திட்டமிட்டு செய்வதாகும். இவ்வாறு போலிக் கம்யூனிஸ்டுகளின் தவறுகளை சாதகமாக்கிக்கொண்டு உண்மையான கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்த என்ன காரணம் ? காரணம் மேற்சொன்னது தான். இந்த லட்சணத்தில் இடதுசாரிகள் விவாதத்திற்கு முன் வர வேண்டுமாம். கடவுளை நம்புகிறவன் கம்யூனிஸ்ட் என்று கூறும் ஒரு முட்டாளுடன் விவாதம் நடத்த யாராவது முன் வருவார்களா ?

தலித் முரசின் பொய்யையும், புளுகையும், அதன் கம்யூனிச விரோதப் போக்கையும் புதிய ஜனநாயகம் பத்திரிகை அவ்வப்பொழுது அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. சாம்பிளுக்கு தலித் முரசின் வர்க்காஸ்ரமம் என்கிற கட்டுரைக்கான சுட்டி இதோ. கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்துவது, அதனூடாக மார்க்சிய தத்துவத்தையும் இழிவுபடுத்தி, புறந்தள்ளுவது, மக்களிடம் புரட்சி பற்றிய அவநம்பிக்கையை விதைப்பது இது தான் இவர்களின் நோக்கம். இவர்களுக்கு விதிக்கப்பட்ட பணி.

அதை உறுதி செய்யும் விதமாகத் தான் உரையின் அடுத்தடுத்தப் பகுதிகள் உள்ளன. கம்யூனிஸ்ட் அறிக்கையில் சாதி பற்றி எதுவுமே சொல்லப்படவில்லையாம் ! இந்தியாவில் வர்க்கம் ஒரு பிரச்சினையே இல்லையாம் சாதி தான் முதன்மையான பிரச்சினையாம், எனவே இங்கே புரட்சியே நடக்கப்போவதில்லையாம் ! புரட்சி நடக்கப்போவதில்லை என்பதை விட நடக்கக்கூடாது என்பது தான் இவர்களின் விருப்பம், அதற்காகத் தான் தலித் முரசும் புனிதப்பாண்டியனும் வேலை செய்கிறார்கள் என்பது தான் உண்மை.

கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்து இவர் கூறுவதையும் அது உண்மையா என்பதையும் மேற்கொண்டு பார்ப்போம்.

அறிக்கையின் இரண்டாவது பக்கத்திலுள்ள முதல் தலைப்பின் இரண்டாவது பத்தி இவ்வாறு துவங்குகிறது. வரலாற்றின் முந்தைய சகாப்தங்களில் அனேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புகளாலாகிய சிக்கலான சமுகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மடிப் படிநிலை அமைவு இருக்கக்காண்கிறோம். இந்த வகுப்புகளில் அனேகமாய் ஒவ்வொன்றிலும் படிநிலை உட்பிரிவுகளும் இருக்கக்காண்கிறோம்”

இந்தியாவின் சிறப்புத்தன்மையாக சாதி இருப்பதைப் போன்று உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு சிறப்புத்தன்மைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் அறிக்கை பட்டியலிடவில்லை, அது சாத்தியமும் அல்ல தேவையும் அல்ல. மாறாக உலகம் முழுவதுமுள்ள வர்க்கம் தவிர்த்த பிற சிறப்புத்தன்மைகள் அனைத்தையும் அறிக்கை சாரமாக குறிப்பிடுகிறது. அதன் ’படிநிலை உட்பிரிவுகள்’ வரை குறிப்பிடுகிறது. சமுகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மடிப் படிநிலை அமைவு, படிநிலை உட்பிரிவுகள் என்று குறிப்பிடப்படுபவை எல்லாம் நமது நாட்டின் சிறப்பு நிலைமையான சாதிக்கு பொருந்தும்.

கம்யூனிஸ்ட் அறிக்கையில் சாதியை பற்றி குறிப்பிடவில்லை என்று சொல்லி அது இந்திய நிலைமைக்கு பொருந்தாது என்று கூறுவோமானால் அமெரிக்காவில் கருப்பர்களை பற்றி குறிப்பிடவில்லை எனவே அது அமெரிக்க நிலைமைக்கு பொருந்தாது என்றும், பெண்களை பற்றி குறிப்பிடப்படவில்லை எனவே அது உலகத்துக்கே பொருந்தாது என்றும் கூறலாம். அப்படி கூறப்பட வேண்டும் என்பது தான் புனிதப்பாண்டியனின் விருப்பம். ஆனால் உலகத்தில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் மூலதனமும் தான் அதிகமாக விற்பனையாகிறதாம், என்ன செய்ய பு,பா விரும்பும் மக்களாட்சியை மண்ணுக்குள் தள்ளி மூடப்போகும் மண்வெட்டிகளாக இவையே இருப்பது துரதிர்ஷ்ட்டம் தான் !

அம்பேத்கரை ‘புரட்சியாளர்’ என்று கூறும் பு.பா புரட்சியெல்லாம் இங்கே நடக்காது என்றும் பேசியிருக்கிறார். புரட்சியே நடக்காது என்று சொல்கிற அளவிற்கு பேசுகிறார் என்றால் இவருக்கு எவ்வளவு கம்யூனிச வெறுப்பு இருக்க வேண்டும் ? மேலும் நடக்கும் நடக்காது என்று சொல்ல இது என்ன ஜோதிடமா, இவர் என்ன ஜோதிடரா ? அம்பேத்கர் புரட்சியாளரா இல்லை சீர்திருத்தவாதியா என்றால் அவர் சீர்திருத்தவாதி தான். சொகுசு அறையில் உட்கார்ந்துகொண்டு பிராஜெக்ட்டுக்காக பத்திரிகை நடத்தும் பு.பா புரட்சியாளர்களை ஆன்மீகவாதிகளோடு ஒப்பிடுவார் ஆனால் அம்பேத்கரை புரட்சியாளர் என்பார். புனிதப்பாண்டியனுக்கு புரட்சிகர அரசு தேவை இல்லை என்றால் அது அமையும் முன்பே மக்களாட்சி நடக்கும் அமெரிக்காவுக்கு ஓடிப் போகட்டும்.

இறுதியாக, தலித் மக்களுக்காக பேசுவதாக சொல்லிக்கொண்டு திரியும் புனிதப்பாண்டியனும், தலித் முரசும் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் ? சந்தேகமின்றி மேட்டுக்குடி வர்க்கத்தின் பிரதிநிதிகள் தான் இவர்கள். அதனால் தான் இவர்களுக்கு வர்க்கம் என்று பேசினாலே பிடிப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு பதிலாக முதலாளி வர்க்கத்தின், (அதுவும் இருபதாம் நூற்றாண்டு முதலாளி வர்க்கத்தின்) கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.

தலித் மக்களின் அடிமை விலங்கை கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களால் மட்டும் தான் உடைத்தெறிய முடியும். இந்த நாட்டில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் மட்டும் தான் அதை சாதிக்க முடியும். சாதியை மட்டுமல்ல தேசிய இன ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியால் மட்டும் தான் ஒழித்துக்கட்ட முடியும்.

புரட்சி பத்தாண்டுகளில், அல்லது இருபது ஆண்டுகளில் கூட நடந்து விடலாம், ஆனால் சாதியை எப்போது ஒழித்துக்கட்டுவது ? அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் ? கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியை ஒழிக்க யாருமே முயற்சிக்கவே இல்லையா ? பல தலைவர்களும் சாதியை ஒழிக்க பாடுபட்டிருக்கிறார்கள். பல கருத்துக்களும் சாதி ஒழிப்பிற்காக போராடியிருக்கின்றன. சாதி தான் ஒழியவில்லை. ஆனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்த புவிப்பரப்பில் எத்தனையோ புரட்சிகள் நடந்துவிட்டன ? பல சமூக அமைப்புகளும் மாறிவிட்டன. இந்த எதார்த்தத்தை ஏற்கும் பட்சத்தில் எது முதலில் சாத்தியம் ? புரட்சியா சாதி ஒழிப்பா என்றால் புரட்சி தான் சாத்தியம்.

எனவே, புரட்சிக்கெதிராக சாதியை நிறுத்தும் மேற்கண்ட இந்த வாதத்தை அனைத்திற்கும் பொருத்தலாம். ஆணாதிக்கத்தை ஒழித்தால் தான் புரட்சி சாத்தியம் என்று பெண்கள் பேசலாம். இன ஒடுக்குமுறையை ஒழித்தால் தான் புரட்சி சாத்தியம் என்று தேசிய இனச்சிறுபாண்மையினர் பேசலாம். எனவே, சாதியை ஒழித்தால் தான் புரட்சியை நடத்த முடியும் என்று பேசுவது முட்டாள்தனம். புனிதப்பாண்டியன் வகையறாக்கள் முதலில் சாதியை ஒழிக்காமல் புரட்சியை நடத்த முடியாது என்று பேசுவதும், பிறகு புரட்சியே நடத்த முடியாது என்று பல்டியடிப்பதும் சாதி ஒழிப்பிற்கான அவர்களின் ஒரு வழிமுறையோ கொள்கையோ அல்ல, மாறாக, புரட்சிக்கு மக்களை அணி திரள விடாமல் தடுக்கும் உத்தியாகும். அது தான் அவர்களின் உண்மையான கொள்கையுமாகும்.

உலகத்திலுள்ள அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் மார்க்சியத்தால் மட்டும் தான் ஒழித்துக்கட்ட முடியும். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைச்சங்கிலிகளையும் மார்க்சியத்தால் மட்டும் தான் அறுத்தெறிய முடியும். ஏனெனில் மார்க்சியம் மட்டும் தான் சரியான தத்துவம், ஏனெனில் உலகத்திலேயே மார்க்சியம், மட்டும் தான் அறிவியல் பூர்வமான தத்துவம். புனிதப்பாண்டியன் இதை ஏற்கிறாரா இல்லை மறுக்கிறாரா ? மார்க்சியம் அறிவியல் இல்லை என்று மறுக்கத்துணிவிருந்தால் இதே தளத்தில் மறுக்கட்டும். இல்லை மார்க்சியம் அறிவியல் பூர்வமான தத்துவம் தான் என்பதை ஏற்றுக்கொண்டால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் பொருந்தும் அந்த அறிவியல் இந்தியாவுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்பதை விளக்க வேண்டும். அது அறிவியல் என்றால் அதனால் சாதியை மட்டுமல்ல அதை விட சிக்கலான உறவுகளையும் நிர்மூலமாக முடியும்.

புரட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மட்டுமல்ல அவர்களுடைய விடுதலைக்கு எதிராக செயல்படும் தலித் முரசு கும்பல் போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகளையும் ஒழித்துக்கட்டும். அத்தகையதொரு புதிய ஜனநாயகப்புரட்சிக்காக களத்தில் இறங்கி மக்களைத் திரட்டுவோம். அனைத்துவகை ஒடுக்குமுறைகளுக்கும் முடிவு கட்டுவோம்.

புரட்சி ஓங்குக !!

 

ஊழலை ஒழிக்க விரும்புவோர் அவசியம் படிக்கவும்:

ஊழல் ஊழல் என்று ஏதோ சொல்கிறாரே என்ன தான் சொல்கிறார் என்று பார்த்தால் புனித பாண்டியன் புதியதொரு கண்டுபிடிப்பையே நிகழ்த்தியிருக்கிறார். பரலோகத்திலிருக்கும் எங்கள் பரமபிதாவே இது உண்மை தானா ? உண்மைதான். விசயம் என்னவென்று கேட்கிறீர்களா ? காதை இப்படி கொஞ்சம் பக்கத்தில் கொண்டு வாங்க இது சாதாரண விசயம் இல்லை மாபெரும் கண்டுபிடிப்பு. ஊழல் இருக்குல்ல ஊழல் அந்த ஊழலின் ஊற்றுக்கண்ணே சாதி தானாம். அதனால சாதியை ஒழிக்காமல் ஊழலை எப்படி ஒழிக்க முடியும் ? ஒழிக்க முடியாது என்று அர்த்தபுஷ்ட்டியுடன் உதட்டை பிதுக்குகிறார் பு.பா. என்னே ஒரு அறிவு, என்னே ஒரு அறிவு! சார் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார் ! அப்படின்னா, அடிக்கடி ஏறிக்கிட்டு இருக்கே இந்த பெட்ரோல் விலை அதுக்குங் கூட இந்த சாதி தான் காரணமுங்களா ? அடுத்த மாசம் பத்திரிகையில் எழுதுங்க படிச்சி தெரிஞ்சிக்கிறோம்.

Last Updated on Sunday, 27 March 2011 06:30