Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இன்றும் மறைக்கப்படும் கழகத் தோழி மீதான அவலம்

இன்றும் மறைக்கப்படும் கழகத் தோழி மீதான அவலம்

  • PDF

அன்று சதிகாரர்கள், கொலைகாரர்கள் பற்றிய உண்மைகளை எல்லாம் உலகறிய வெளிக்கொணர்ந்த தீப்பொறியினர் மீது அடங்கா கொலைவெறியுடன், அவர்களை அழித்தொழிப்பதற்கு என புளட் அலைந்தனர். புலி எவ்வாறு ரெலொவினை அழித்தொழித்ததோ அதே குரூர பாணியில், தீப்பொறியினரைக் கொன்றதன் பின்னால் மக்களிடம் என்ன காரணங்கள் எடுபடுமோ அவற்றையெல்லாம் துண்டுப்பிரசுரம் மூலம் அள்ளிவீச சதிப்பாணியில் திட்டமிட்டவாறே தேடியலைந்தனர். தெருவில் பல்கலைக்கழகத்தில் கண்ட இடங்களிலெல்லாம் அவர்களை கூட்டாகச் சுட்டுப் பொசுக்குவதற்கு தேடியலைந்தனர். எந்தக் கொடூரமான செயல்களையும் தீப்பொறியின் பெயரில் செய்துவிட்டால், அந்தக் கொடூரமான காரியங்களை தீப்பொறியின் தலையில் தூக்கி போட்டுவிடலாம். தீப்பொறி தான் இவற்றைச் செய்தது என மக்கள் நம்பும் வகையில் சூழ்ச்சிகள் சதிகள் மூலம் ஆதாரப்படுத்தி விட்டால், அவர்களுக்கு அன்றிருந்த சூழலில் ஒரு கல்லில் இரு மாங்காய் கிடைத்த மாதிரி. ஒன்று புளட்டின் மேல் தீப்பொறியினர் வைத்த உட்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் மீதான மக்களது நம்பிக்கையை தகர்ப்பது. "அட இத்தனை கொடூர காரியத்தைச் செய்த தீப்பொறி, எப்படி புளட் பற்றிச் சொன்னவைகள் உண்மையாகும்" என்ற சந்தேக நிலைமை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டால் தாங்கள் இழந்த (ஜென்னியில் வார்த்தைகளிலேயே சொல்வதானால் "கழகத்தின் சரிவுநிலை பாதாளத்தை நோக்கி" செல்லும் நிலை, கொலைகாரத் தலைமை சரிந்து விழும் நிலை) முகத்தை மீண்டும் தூக்கி நிமிர்த்தி மெல்லத் மெல்லத் தலையெடுக்கலாம் என்பது. இன்னொன்று, தீப்பொறியை அழித்தொழித்ததற்கான காரணமானது மக்களின் மனதில் எடுபடவேண்டும். மக்கள் தீப்பொறியினரை சமூக விரோதிகளாக கருதவேண்டும். மக்களிடம் கொந்தளிக்கக்கூடிய எதிர்ப்புணர்வுகளைத் தூண்டக்கூடியவாறு இருத்தல் வேண்டும். ஏற்றுக்கொள்ளமுடியாத பாதகச் செயல்களை அவர்கள் புரிந்தார்கள், எனவே புளட்டினர் தீப்பொறியினரை வேட்டையாடியதில் தவறென்ன என்ற அங்கீகாரம் புளட்டுக்கு தானாகவே சேரும். இப்படிச் சதித்தனத்துக்கு பெயர்போன சதிகாரர்கள் அவர்கள் முகங்களை மக்கள் மத்தியில் காப்பாற்ற எண்ணியவர்கள், தீப்பொறியினர் மீது பழிபோடுவதற்காக எந்தக் குற்றச்செயலையும் படுபாதகங்களையும் செய்யத் துணிய மாட்டார்கள் என்று நம்பவே முடியாது.

 

ஜென்னி இங்கு பின்வருமாறு கூறுவதைக் கேளுங்கள். ”நேசனின் வெளியேற்றமும் அதற்கு முன்னுக்கு பின்னான கழகத்தை நோக்கிய செயற்பாடுகளும் கழகத்தின் சரிவுநிலை பாதாளத்தை நோக்கி போவதை துலக்கியது. நான் முதலிலேயே குறிப்பிட்டபடி வெளியேறுபவர்கள் வெளியேற, எங்களைப் போன்றோர் புலிவாலைப் பிடித்த கதையாகத்தான் செயற்பட்டோம். கழகத்தின் பல கோணத்தின் தவறுகளால் வெளியேறுபவர்களை நாம் என்ன செய்ய முடியும். அதிலும் தளத்தில் எம்முடன் இருந்து, எமக்கு வழிகாட்டியாக இருந்து செயற்பட்டு, எம்மைப் போலவே,.. எல்லாப் பிழைகளும் தெரிந்தவர்கள் கழகத்தையும் எம்மையும் விட்டு ஒதுங்கும் போது நாம் என்ன செய்ய முடியும். இவற்றை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் சாத்தியமானது."

”கழகத்தின் பல கோணத்தின் தவறுகளால் வெளியேறுபவர்களை நாம் என்ன செய்ய முடியும்? இவைகள் எவைகளையும் பார்த்துக்கொண்டு இருப்பது தான் சாத்தியமானது” என்று கூறும் ஜென்னி ஆயுததாரியாக யாரைத் தேடியலைந்தார்? யாருக்காக யாரை தூக்கி நிமிர்த்துவதற்காக அன்று அலைந்து திரிந்தார்? அத்தனை கொலைகளுக்கும் தலைமை தந்த தனது பெரியவர் என்ற ஒரு தலைவரையும் அவரைச் சுற்றியிருந்து அவரைப் போற்றிப்பாடிய கொலைகாரர்களையும், அதற்கு இடையூறு இல்லாத வகையில் தங்களது பதவிகளில் தங்கி நின்றவர்களையுமே.

இவ்வாறானவர்களைப் பாதுகாப்பதற்கு கொடுத்த விலை ஒரு தோழியை பாழ்படுத்தல்.

இதற்கு அவர்களுக்கு கிடைத்தது தான் இந்த கழகத் தோழி மீதான பாலியல் வல்லுறவு வழக்கு. பாதிக்கப்பட்டது பெண் எனில் மக்கள் மத்தியில் அது அபாரமாக எடுபடக்கூடிய மன்னிக்க முடியாத குற்றச்செயல். சாட்சிகளும் சூழல்களும் சம்பவங்களும் தீப்பொறியை நோக்கி இருக்குமாறு கவனித்துக் கொண்டார்கள். ஆதாரங்களை பெண்களே பெற்றுத்தந்தால் இன்னும் கொந்தளிப்பான முறையில் அவை வலுச்சேர்க்கும் என்பது அவர்களுக்கு என்ன சொல்லியா தெரியவேண்டும்? எனவே ஒரு பெண் தோழி பலியிடப்பட்டார். பலியெடுத்தவர்கள் கழகக்காரர்கள் அன்றி வேறு யாராக இருக்க முடியும்?

கல(ழ)கக்காரர்களை குழப்பக்காரர்களை கண்காணிக்கும் உளவு வேலைகளுக்கிடையில் மகளிர் அமைப்புக்கும் பொறுப்பாக இருந்த ஜென்னி தான் குறிப்பிடும் அத்தோழி தனியே சென்றதை கடைசியாக அவதானித்தவராக இருக்கின்றார்.

"கழகத்தை விட்டு வெளியேறுபவர்கள் பற்றி எனக்கு நல்லபிப்பிராயம் இருக்கவில்லை." என்கிறார் ஜென்னி. அப்படியெனில் கழகத்தில் உட்படுகொலைகளை செய்து முடித்தவர்கள் மேல், தலைமைக்காக கொலை செய்தவர்கள் மேல், அவற்றையிட்டு எதுவும் அலட்டிக் கொள்ளாதவர்கள் மேல், சித்திரவதைகள் செய்தவர்கள் மேல் தொடர்ந்தும் நல்லபிப்பிராயம் கொண்டு கழகத்தை தொடர்ந்தும் பாதுகாக்க நினைத்தாராம். கொலையுண்டவர்கள் மேல், கொலைகளில் தங்கள் பிள்ளைகளை இழந்தவர்கள் மேல், இக் கொலைகளை தட்டிக் கேட்டவர்கள் மேல், அதனை அம்பலப்படுத்தி போராடியவர்கள் மேல், அதனால் கழகத்திலிருந்து வெளியேறுபவர்கள் மேல் தான் இவர்களுக்கு கோபம். அவர்களையெல்லாம் உதாசீனப்படுத்திக் கொண்டு, கழகத்தின்; கொலைகாரத் தலைமைகளை பாதுகாப்பது என்று முடிவெடுத்த இவர் கொலைகாரர் வழியிலேயே தானே அதனைப் பாதுகாக்க முடியும். கொள்கை வழியிலேயா பாதுகாத்திருப்பார்? சதிகாரர் வழியில் கழகத்தின் கொலைபாதகர்களுக்கு திரையிட வேண்டுமெனில் சதிவேலைகள் தான் கைகொடுக்கும். நேர்மைகளா கைகொடுத்திருக்கும்? அன்றைக்கு பழியொன்று செய்து, பழிபோட்டு, இரத்தப்பலி எடுத்து அப்புறப்படுத்த வேண்டிய எதிரிகளாக இவர்கள் முன் தெரிந்தவர்கள் தீப்பொறி அன்றி யாரவர்? "பெரியவரையும"; ,"பெரியவரைச்" சார்ந்த கூட்டத்தின் மேலல்லவா உங்களுக்கு கோபம் கொப்பளித்திருக்க வேண்டும்? ஏன் வெளியேறியவர்கள் மேல் கொப்பளித்தது? கழகத்தினை அம்பலப்படுத்தியவர்கள், கொலைகளை விமர்சித்தவர்களோடு உங்களது உறவு பட்டுப்போயிற்று. அவர்களை அலட்சியப்படுத்தும் ஆயுதச் செருக்கோடும், ஆயததாரிகளோடு கைகோர்த்துக் கொண்டும், இவற்றுக்கு எதிராக கிளர்ந்தவர்கள் மீது உளவும், மறுபுறத்தில் அதிகார வளங்களைக் கையகப்படுத்திக் கொண்டும் உலா வந்தீர்கள். புலிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் அகிலன் செல்வன் கொலையைச் செய்தவர்கள், சுழிபுரம் படுகொலையைச் செய்தவர்கள் மீது, சமூகவிரோதிகளைப் படுகொலை செய்யச் சொன்ன அரசியல் மீது, ஏன் அந்தக் கோபம் வராதிருந்தது?

"ஆனால் அவர்களை தேடி அழிக்க நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் கழகத்தை அழிக்கவோ சிதைக்கவோ அனுமதிக்க முடியவில்லை." என்கிறீர்கள் நீங்கள் "கழகத்தை அழிக்கவோ சிதைக்கவோ அனுமதிக்க முடியவில்லை" என்று இங்கு குறிப்பிடுவது கழகத் தலைமையும் அதனது விசுவாசிகளையும், தொங்கு தசைகளையுமே. அவர்களைப் பாதுகாப்பதுவே உங்கள் குறிக்கோள்.

”அதேசமயம் ரீட்டா மீதான பாலியல்வல்லுறவில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடினேன். அக்கொடுமையை சகதோழிக்கு செய்தவர்களை அழிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு” இருந்தது என்கிறீர்கள். அக் கொடுமையைச் செய்தவர்களை உள்ளிருந்தே அதனை நடாத்தியவர்களை எப்படி உங்களுக்கு தெரியாமல் போக முடியும்? பயமுறுத்தல் கடிதங்கள் போன்ற எல்லாவற்றையும் ஆராய்ந்து தீப்பொறியின் பக்கம் கையைக் காட்டிய நீங்கள் ஏன் இன்றுவரை வந்து இப்போது அது கறுப்பாடுகள் என்று சொல்கிறீர்கள்? இது என்ன புதுக்கண்டுபிடிப்பு? அதனை அன்று ஏன் கண்டுபிடிக்க முடியாது போனது?

”ஆனால் நேசனின் வெளியேற்ற காலத்தில் இந்தப் பாண்டி நாடு திரும்பியதை அறிந்தேன். ஆனால் இவரின் தற்போதைய செயற்பாட்டை நான் அறியவில்லை. பொதுவாகவே இந்த வெளியேற்றங்களில் பல்கலைக்கழகத்தை சுற்றிய வட்டத்தில்தான் பல்வேறுபட்ட விமர்சனங்களுடன் எல்லோரும் இருந்தனர். இந்நிலையில் சத்யாவும் எங்கோ திருநெல்வேலிப் பகுதியில் நேசன், பாண்டி, விபுல் போன்றோரிடம் (சரியாக யார் யார் என ஞாபகம் வரவில்லை.) போனவாக்கில் தீவிரமாக விவாதித்து உள்ளார். இதில் பாண்டி பின்தளத்தில் இருந்து வந்ததால் நிறையவே விவாதித்து உள்ளார். இதனை சத்யா தன்னிச்சையாகவே தன்னிடம் வைத்திருந்த ரெக்கோடிங் கருவியில் பதிவு செய்துள்ளார். (முகந்தனால் எனக்கு தரப்பட்ட ரக்கோடிங் கருவி பற்றி முன்னரே குறிப்பிட்டு இருந்தேன். இது எனக்கு தேவையற்றது என்பதால் இலங்கை ராணுவ ரகசிய சேகரிப்புக்கென எப்போதோ மெண்டிஸ் உடன் தொடர்புபடுத்தப்பட்ட சத்யாவிடம் கொடுத்து இருந்தேன்.)

ரெக்கோடிங் கருவியை நீங்கள் சத்யாவிடம் கொடுத்த நோக்கமே உளவு பார்ப்பதற்குத்தான். ஒரு ஒலிப்பதிவுக் கருவியால் எவ்வாறு இராணுவ ரகசியங்களை சேகரிப்பதற்கு பாவிக்கமுடியும். சம்பாசணைகளைத் தான் பதிவு செய்ய முடியும். அப்படி என்ன இராணுவ நடவடிக்கைகளில் புளட் அன்று ஈடுபட்டிருந்தது?. அது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும.; புளட்டில் தொடர்ந்தும் இருந்து கொண்டு அதனை விமர்சனம் செய்தவர்களை இனம் கண்டு, போட்டுத்தள்ள வேண்டியவர்கள் பட்டியலைத் தயாரிப்பதற்குத் தவிர வேறென்ன நடவடிக்கையாக அது இருக்க முடியும்?

”ஏற்கனவே நானும், செல்வியும் கதைத்து முடிவெடுத்தபடி இந்த ரெக்கோடிங் இன் விபரிதம் எமக்கு புரியும். மேலும் பின்தளத்திலும் தளத்திலும் கழகத்தின் தவறுகளால் கழகம் மூச்சுத்திணறிய நிலையில் உள்ளது. இதில் வெளியேறிய தோழர்களுக்கு தெரியும் அத்தனை விளக்கமும் எமக்கும் தெரிகின்றது. இந்த நிலையில் வெளியேறியவர்களை வேவு பார்த்து நாம் இன்னும் சீரழிய முடியாது என்பதுவும் எனக்குத் தெரியும். மற்றவர்களை விட பின்தளத்தின் கைமீறிப்போன நிலை, அதன் முரண்பாடுகள் கோஸ்டி மோதல்கள், அரசியல், ஆயுத நகர்த்தலுக்கான பலவீனங்கள் உட்பட்ட எல்லாமே எனக்கும் தெரியும். ஆயினும் பின்தளத்தில் பயிற்சியில் உள்ள எமது மகளீரை அங்கு வைத்துக்கொண்டு நான் பொறுப்புணர்வற்ற நிலையில் வெளியேறியவர்களை நியாயப்படுத்த முடியாது. மேலும் கழகத்தை விட்டு வெளியேறுவதில் எனக்கும் உடன்பாடு இருக்கவில்லை. அதற்குள் இருந்தே அதனை சீர்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நானும் எம்மைப் போன்றோரும் காலத்தின் கைதியாகினோம்.”

நீங்கள் ஏதோ அணிசேராக் கொள்கையில் இருந்ததாக இன்று கதை விடுகின்றீர்கள். நீங்கள் வெளியேறியவர்களை நியாயப்படுத்தி இருக்கத் தேவையில்லை. ஆனால் வெளியேற்றத்துக்கான காரணங்களை உங்களால் ஏன் வெளிப்படுத்த முடியாமல் போனது? தலைமையை தொடர்ந்தும் பாதுகாத்தது என்பது எஞ்சியிருக்கும் தோழிகளின் பொறுப்பு உங்களிடம் இருந்ததால் என்கிறீர்கள். அந்தத் தலைமையானது அந்தத் தோழிகளையும் வெட்டிப் புதைக்காது என்ற நம்பிக்கை எப்படி உங்களுக்கு இருந்தது? அப்படி ஒரு மிரட்டலில் நீங்கள் பணிய வைக்கப்பட்டீர்களா? இல்லை நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தீர்கள். அவர்களுடைய தலைமைதான் உங்களுக்கு தேவைப்பட்டதொன்று. அந்த தலைமையின் கீழ் அத்தோழிகளை அடிமைப்படுத்தி வைத்திருந்தீர்கள். தலைமை மீது மட்டுமே உங்களது கரிசனை இருந்தது. தோழிகள் மேலல்ல.

”இதன் பிறகும் அடுத்தடுத்த சிலநாட்களில் சைக்கிளில் வந்து பெல் அடித்து விட்டு, கடிதத்தை போட்டு போன இரு சம்பவங்கள் இடம்பெற்றது. அவ்விரு கடிதங்களிலும். மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளில் மெண்டிஸ், காண்டீபனையும் சேர்த்து சொச்சையாக எழுதி இருந்தனர். "இயக்கத்தை விட்டு வெளியேறிய எங்களையா தேடுகின்றீர்கள், உங்கள் எல்லோரையும் நாங்களும் தேடுகின்றோம். எங்கள் கையில் கிடைத்தால் பெண்களை சின்னாபின்னமாக்கி ஒருவரையும் உயிரோடு விடமாட்டோம்" என்றதான தொனியில் அக்கடிதங்கள் இருந்தன. இந்த கடித விடயங்கள் உட்பட்ட எல்லா விடயமும் உரும்பிராய் குமார் போன்ற இளைஞர்களுக்கும் தெரியும். எனவே மகளிரான நாம் மெண்டிஸ், காண்டீபனிடமே பாதுகாப்பு கேட்டு இருந்தோம். மெண்டிஸ் இன் அறிவுறுத்தலின்படியும், எமது கலந்துரையாடலின்படியும் இவற்றை வெளியே பறைசாற்றாமல் கண்டமாதிரி ஓடித்திரிந்து அரசியல் வேலைகளில் ஈடுபடாமலும் பின்னேரம் பொழுது சாயும் நேரம் அந்த கடிதத்தில் குறிப்பிட்ட 6 பேரும் சந்திப்பது எனவும் முடிவாகியது. இதில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் ஒருவரைக் காணவில்லை என்றாலும் தேட வேண்டும் எனவும் ஒழுங்கு இருந்தது.

திட்டத்தின் ஆரம்பமே இங்கே தான் தொடங்குகின்றது. யாராவது ஒருவர் காணாமல் போகப் போகச் செய்வது என்ற சதித்திட்டத்தின் ஆரம்பப்படியாக (அதுவும் உங்களில் ஒருவர்) ஒரு வதந்தியைப் பரவவிடுகிற முன்னேற்பாடாக "ஒருவரைக் காணவில்லை என்றாலும் தேட வேண்டும்" என்றவாறு அது உலாவர விடப்படுகிறது.

”இதன்படி சில பயத்துடன் எமது பணிகளைத் தொடர்ந்தோம். அப்போது ரீட்டாவும் நாங்களும் ஒரு வீட்டில் தங்கி இருந்தோம். அப்பொழுது ஒருநாள் காலை ரீட்டாவிற்கு ஏதோ ஒரு வெளிவேலை இருந்ததால் தனது சைக்கிளில் எம்மிடம் சொல்லிவிட்டு பயணமானார். அன்று மாலை வழக்கம் போல் நாம் சந்திக்கும் இடத்திற்கு இருட்டி நேரமாகியும் ரீட்டா மட்டும் வரவில்லை. குமார் உட்பட காண்டீபன், மெண்டிஸ் இற்கும் தேடச்சொல்லி அறிவித்து விட்டு, நாம் அந்த ஐயா வீட்டில் மகளீர் ஐந்து பேரும் காத்திருந்தோம்.

இங்கே பாருங்கள். இந்தத் தோழி ஏன் இந்த எச்சரிக்கைக்குப் பின்னும் தனியாக வெளியே செல்ல பயணமாகிறார். பயணமாகிவிட்டார். திட்டத்தின் இரண்டாவது அங்கம். ஆனால் அவர் தான் அவரே தான் இருட்டிய பிறகும் திரும்பி வரவில்லை. முன்கூட்டிய திட்டத்தின்படி குறிவைக்கப்படுகிறார்.

”கிட்டத்தட்ட இரவு பத்து மணியளவில் என நினைக்கின்றேன் எமது இருப்பிடத்திற்கு காண்டீபன் வந்து என்னை தனியே அழைத்துச் சென்றார். என்ன விடயம் என்று கேட்டதற்கு, ‘இந்த வீட்டிற்கு பக்கத்தில் எனது வாகனம் நிற்கின்றது. அதில் ரீட்டாவை அழைத்து வந்துள்ளேன்.

இதையும் கேளுங்கள். அந்தத் தோழியைக் தேடிய காண்டீபனே அவரை கொண்டு வந்து சேர்க்கிறார். எவ்வாறு துல்லியமாக சொல்லிவைத்தாற் போல் சந்தித்தித்துக் கொண்ட மாதிரி காண்டீபனின் கண்களுக்கு எட்டிய தூரத்தில் இவர் கைவிடப்பட்டார்? அதுவும் கடத்தியவர்கள், தேடியலைந்த காண்டீபன் எந்த நேரத்தில் எந்த இடத்தில் அத்தோழியைத் தேடியலைந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து அதனை அத்தோழியிடமே கூறியும் அனுப்பினார்களாம் போய்ச் சேர்ந்து கொள் என்று. கடத்திப் பாலியல் வல்லுறவு செய்தவர்கள் எப்படி தங்களுக்கு கிட்டிய தூரத்தில் காண்டீபன் இருப்பதை அறிந்தனர்? புளட்டினுடைய இராணுவப் பொறுப்பாளர் காண்டீபனின் கையில் ஒப்படைப்பதற்கு அவர்கள் காத்திருந்தார்களா? காண்டீபன் தற்செயலாக கண்டுபிடிப்பதற்கு பதிலாக திட்டமிட்டே அத்தோழி காண்டீபனிடம் ஒப்படைக்கப்படுகிறார். காண்டீபன் இதை அறியாமல் அவரை உங்களிடம் சேர்ப்பிக்கிறார். நீங்கள் மிகுதி வேலைகளை திறம்பட நடாத்தி முடிக்கிறீர்கள். முத்திரைச் சந்திக்கு காண்டீபனை அழைத்துப் போனது அவரோடு இருந்த கறுப்பு ஆடுகளில் ஒன்றா?

"நான் முத்திரைச் சந்தியடியில் தோழர்களுடன் வாகனத்தில் நிற்கும் போது, இருட்டில் ஒருவர் தள்ளாடி நடந்து வந்ததாகவும் அவர் தன்னை அடையாளம் கண்டு வந்ததாகவும் வந்த பெண் நாமெல்லாம் தேடும் ரீட்டா" என்றவுடன் எதுவும் பேசாமல் வாகனத்தில் அழைத்து வந்ததாகவும் கூறினார்.

இவ்வாறு நாள் முழுதும் தொடர்ந்த சித்திரவதையை முடித்துக்கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏற்றி நீண்ட நேரம் ஓடிய பின், ஓர் இடத்தில் வேகத்தைக் குறைத்து, "இங்கே உனது ஆட்கள் காண்டிபன் நிற்கின்றான்கள் அவர்களிடம் போய் சொல்லு" என கையை மட்டும் அவிழ்த்து விட்டு, கண்ணைக் கட்டிய நிலையில் வேனிலிருந்து தள்ளிவிட்டனர். வேன் வேகமாக ஒடி மறைந்தது. நான் அவசர அவசரமாக கண்ணை அவிழ்த்த போது ஒரு இருட்டுப் பகுதியில் நின்றேன். வேனைக் கண்ணால் காண முடியவில்லை. ஆனால் நான் நிற்கும் இடம் முத்திரைச் சந்திக்கு அருகாமையில் என உணர்ந்து கொண்டேன். எனவே அவர்கள் சொன்னபடி அவ்விடத்தில் காண்டீபனைத் தேடினேன். அவர்களும் என்னை அடையாளம் கண்டு எதுவுமே பேசாமல் இங்கு கொணர்ந்து விட்டனர்”

அந்த பதிவு நாடாவையும் போட்டு பார்த்து உன்னிப்பாக கவனிக்கச் சொன்னோம். அதில் பாண்டி ஒருவரின் குரலைத்தான் தனக்கு அடையாளம் காணக்கூடியதாக சொன்னார். மற்றும்படி இதில் வேறு யாரையும் அடையாளப்படுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை நானும் பாண்டியுடன் சில மாதங்கள் பழகியுள்ளேன். எனக்கும் இது நம்ப முடியாதிருந்தது. ஆயினும் இது திட்டமிட்டு நடைபெற்ற சம்பவங்களாதலால் பல விடயத்தை ஆராய வேண்டியுள்ளது. அன்றும் இன்றும் குறிப்பிட்ட நபர்கள் சிலபேர் சொல்வது போல் கழகத்திலிருந்து ஓடியவர்களை பிடிப்பதற்கு இப்படி கதையளக்கவும் இல்லை.”

செல்வியுடனும் கலாவுடனும் இருள்கவிய முன்னரான ஒரு சாயந்தரப் பொழுதில் செல்வி வசித்த இணுவில் மருதனாமடம் வீட்டைச் சுற்றிய பசுமை சூழ்ந்த தெருக்களில் புளட்டினுடைய நடவடிக்கைகள் பற்றி உரையாடியவேளை மிகுந்த மன உளைச்சலோடு மேற்படி சம்பவம் திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே கருதுவதாக என்னிடம் வெளிப்படையாக அவர்கள் தெரிவித்தனர். தீப்பொறியினரின் மேல் ஒரு குற்றச்சாட்டு புளட்டால் உருவாக்கப்பட்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது என்ற பெயரில் அவர்களை வேட்டையாடுவதற்காக திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்ற கருத்து அவர்களிடம் இருந்தது. எனவே புலிகளால் கொலைசெய்யப்பட்ட செல்வியை இன்று ஜென்னி தன்னுடைய கருத்துக்களுடன் இணைத்துச் சேர்த்து செல்வி மீதும் சேறு பூச விழைகிறார்.

 

புளட்டின் மகளிர் அணி என்பது செல்வியின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. அதை நியமனக்கடிதம் மூலம் தட்டிப் பறித்த ஜென்னி தனது அதிகாரப் போக்குகளோடு செல்வியையும் இன்று சேர்ப்பது அந்த தோழிக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். செல்வியின் தோழமையும் அநியாயங்களை மூடிமறைக்காது புதைக்காது அதற்கெதிராக முரண்பட்டு நின்ற செல்வியை நாங்கள் அறிவோம். ஜென்னி செல்வியை தன்னுடைய சகதிக்குள் இழுத்து விழுத்துவது படுமோசமான காழ்ப்புணர்வாகும்.

அன்றைய எமது மனோநிலையில் ஓடியவர்களை நாம் பிடித்து தட்டித்தான் கழகத்தை நிலைநிறுத்த முடியுமா? இது என்ன பின்தளமா? நாங்களே பின்தளக் கொலைகளிலிருந்து தளத்தில் நடந்த சுழிபுரம் கொலை, செல்வன் - அகிலன் கொலை உட்பட்ட பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்காமல் திரிகின்றோம். இதில் கேசவன், ஜான் மாஸ்ரர், நேசன் போன்ற சக்திமிக்க தோழமைகளின் உள் உடைவுகளால் கதிகலங்கி நிற்கின்றோம். இதில் "இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்" என்ற மாதிரி எல்லோரின் நிலைமையும் உள்ளது. இதில் நான் இத்தனை ஆயிரம் மகளீருக்கு பொறுப்பாக இருந்து கொண்டு, கழகத்தின் உட்கட்சி விமர்சனங்களோடு மோதிக்கொண்டு இருந்தேன்

நீங்கள் கழகத்தின் உட்கட்சி விமர்சனங்களோடு மோதிக்கொண்டிருந்தீர்கள் என்கிறீர்கள். எந்த விமர்சனங்களோடு?. விமர்சனங்களுக்குரியவர்களோடு ஒட்டிக் கொண்டிருந்தீர்கள் என்பதுவே பொருத்தம். அகிலன் செல்வன் கொலைகள் மற்றும் சித்திரவதை கைங்கரியங்களை ஒப்பேற்றியவர்கள், போராளிகளைப் புதைகுழிக்கு அனுப்பியவர்களோடு ஒட்டிக் கொண்டிருந்தீர்கள்.

”யாழ் வரவும் தொலைத்தொடர்பு செய்திகள் மூலம் எமது பின்தள மகளிர் ராணுவப் பயிற்சி பற்றிய சில முடிவுகள் எடுக்க பின்தளம் போக வேண்டி இருந்தது. எனவே போகும் போது இதுவரையில் ரீட்டாவின் விடயம் சம்பந்தமாக எமக்கு வந்த கடிதங்கள், எல்லாவற்றுடனும், இது சம்பந்தமான எமது அறிக்கையுடனும் சென்றேன். அங்கு செயலதிபரிடம் அத்தாட்சிகளுடன் விபரங்களை கூறினேன். இதுவரை எமக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் கிடைக்கவில்லை என்பதுவும் தெரிவிக்கப்பட்டது. இது எமது மகளீரின் வாழ்க்கை பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்த கழகத்தின் கௌரவப் பிரச்சனை என்பதால் நிதானமாக யோசித்து கடைப்பிடிக்க வேண்டுமென்று முடிவாகியது. இக்கொடிய செயலைச் செய்தவர்கள் பிடிபட்டு குற்றம் நிருபிக்கப்பட்டால், பகிரங்கமாக விசாரித்து, பல்கலைக்கழக வளாகத்தினிலே வைத்து, பொதுசனங்கள் மத்தியிலேயே தண்டனைக்கு விடப்படும் என நாம் தளத்தில் முடிவெடுத்ததை செயலதிபருக்கு குறிப்பிட்டேன். செயலதிபரும் இதற்கு ஒத்துக்கொண்டார்.”

இந்த செயலதிபரைச் சந்திக்கச் சென்ற விடயம் என்பது பெரியவர் திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படுகிறதா எனச் சரிபார்க்கவும் மேலும் கட்டளைகளைப் பெறவும் அதிகாரம் தன்பக்கத்தில் உண்டு என்பதை தன்னைச் சூழவுள்ளவர்களுக்கு பறைசாற்றவும் அதன் மூலம் அவர்கள் வாயை அடைக்கப் பண்ணவும் ஒழுங்கமைக்கப்பட்ட பயணம் என கூறலாம்.

”மொத்தத்தில் எல்லா மட்டத்திலும் பின்தள, தள அரசியல்கள் குழப்பங்கள் சூடுபிடித்த நிலையில் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் நிர்வாகப் புனரமைப்பு என்பன பேசப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக டெசோ மட்டத்திலான பின்தள விஜயமும் திட்டமிடப்பட்டு ஒரு தள மகாநாட்டிற்கு ஆயத்தம் செய்யப்பட்டது. இதற்குப் பின்தளத்தில் இருந்து முக்கியஸ்தர்கள் அழைக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது.”

ரெசோ என்ற மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் கொடுத்த நெருக்குவாரமும் தலையிடியுமே பின்தள விசயத்தை சாத்தியப்படுத்தியது என்பதை மறைத்து, இது இந்த அதிகாரங்களுடனும் கொலைகாரர்களுடனும் ஒட்டிக் கொண்டிருந்தவர்களால் தன்னிச்சையாக ஆயத்தப்படுத்தப்படவேயில்லை என்பதை நான் இங்கு பதிவு செய்கின்றேன்.

”ரீட்டா மீதான கொடூரம் கழகத்தின் தோழர்களாலேயே நடந்தது. இந்த மேல்மட்ட நந்தா, வனிதா, சத்யா, செல்வி ஆகிய மகளீரால் இதனை ஜீரணிக்க முடியாது இருந்தது. இவர்களின் பெயர்கள் குறிப்பிட்டு வந்ததாலும் நிறையவே பயம் இருந்ததும் நியாயமானதே. இதில் செல்வி மிகவும் மனம் உடைந்து போயிருந்தார். ஏனெனில் மற்றவர்களைவிட செல்வி மிக மென்மையானவர். அதிலும் எம்மிடையே ஆழமான நட்பும் இருந்தது. தான் கழகத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் எமது நட்பை விட்டு விடவேண்டாம் என்றும் நா தழுதழுக்க கதைத்தார். எனினும் இவ்வளவும் தெரிந்த இந்த முக்கியமானவர்கள் பிரச்சனைகள் வந்ததும் எம்மை நம்பி பத்து மாவட்டத்திலும் இருக்கும் ஆயிரக்கணக்கான மகளீரையும், நாம் எல்லோரும் பார்த்து பார்த்து தெரிவுசெய்து அனுப்பிய ராணுவப் பயிற்சியில் இருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட மகளீரையும் நினைக்கவில்லையே.”

இந்தப் பாலியல் வல்லுறவு என்பது கழகத்தினாலேயே திட்டமிடப்பட்டது என இப்பொழது கதை சொல்லுகிறார் ஜென்னி. சாதாரண கழக உறுப்பினர்களிடையேயே அன்றே பேசப்பட்ட இநத விடயங்கள், மேல்மட்ட தொடர்புகளையும், இராணுவ பிரிவினருடன் நாளாந்த தொடர்பில் இருந்தவரும், உளவு நடவடிக்கைகளை கைக்கொண்டவருமான ஜென்னிக்கு அன்று தெரியாமல் போனது எப்படி?

இத்தனை கொலைகள் நடந்தேறிய பின்னாலும் சித்திரவதைகளும், ஜனநாயகமறுப்பும், அராஜகங்களும் சதிகளும் புளட்டினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பின்னாலும் தொடர்ந்தும் தான் புளட்டில் அவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் வகையில் ஒட்டிக்கொண்டிருந்தவர் ஜென்னி. செல்வி, நந்தா, வனிதா இராணுவப்பயிற்சியிலுள்ள மகளிரை நினைக்கவில்லையே என்று அவர்கள் புளட்டினை மறுத்து நின்றதனை கொச்சைப்படுத்துகின்றார். இராணுவப் பயிற்சியிலுள்ள மகளிருக்கு பொறுப்பு எடுத்திருக்க புளட்டினை மறுத்து நின்ற அவர்களுக்கு நீங்களோ அல்லது உங்கள் பெரியவரோ அனுமதித்திருப்பீர்களாக்கும். புளட்டின் இராணுவப் பயிற்சிலுள்ள மகளிரை புளட்டினை எதிர்த்து நின்ற அணியிடம் யாராவது கையளிப்பார்களா? பொறுப்பு எடுக்கக்கூடிய வளங்களை தங்கள் கட்டுப்பாட்டில் தக்கவைத்துக் கொண்ட நீங்கள் உதிரிகளா உடைந்து வெளியேறிய தோழிகள் மேல் எப்படி இந்தப் பழியைச் சுமத்த முடியும்? உங்களையும் நீங்கள் காத்து நின்ற புளட்டினையும் அம்பலப்படுத்துவதைத் தவிர அவர்களிடம் வேறு என்ன தெரிவு இருந்திருக்க முடியும்? உங்களோடு அவர்களும் சேர்ந்து நிற்கவில்லை என்ற ஆதங்கமா? அவர்களையும் காணாமல் போகப் பண்ணியிருப்பார்கள்.

 

”கழகம் உடைந்து சிதறினாலும் கண்டிப்பாக பின்தளத்தில் இருக்கும் மகளீரின் வரவுக்கு பின்னாலேயே நாம் எல்லோரும் ஒரு முடிவுக்கு வரமுடியுமென எனது பக்க நியாயத்தை எடுத்துக் கூறினேன்.”

”இந்த நிலையில் செல்வியின் தனிப்பட்ட நட்பு கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை. பல வருடங்களாக செல்வி - அசோக் காதலும் இருந்தாலும் அசோக் அந்த நேரத்தில் தளத்தில் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் இருந்தார். (கழகத்திற்கு வரும் முன்பே பேனா நண்பர் தொடர்பின் மூலம் இக்காதல் மலர்ந்து இருந்தது.) அசோக் இனால் அடுத்த நகர்வை எடுக்கவும் முடியவில்லை, அதே சமயம் கழகத்தை விட்டு வெளியேறவும் முடியவில்லை. இதுகூட செல்வி உட்பட ஏனைய மகளீருக்கு நானோ அசோக்கோ ஏதோ கழகத்தின் பிழைகளை மூடிமறைத்து வக்காலத்து வாங்குவதான அபிப்பிராயத்தையே கடைசிக் காலத்தில் கொண்டுவந்திருக்கும் என நினைக்கின்றேன். எனவே படிப்பை ஒரு பக்கத்தில் வைத்திருந்த இவர்கள் மீண்டும் தமது படிப்பில் நாட்டம் காட்டத் தொடங்கினார்கள். ஆனால் எனக்கோ கழகத்துக்கு அப்பால் ஒரு உலகம் தெரியவில்லை.”

நீங்கள் என்ன முடிவுக்கு வந்திருப்பீர்கள் என அவர்கள் நன்கறிந்து வைத்திருந்தனர். அதனாலேயே கழகத்துக்கு வால் பிடிப்பதற்கும் அது ஒரு விடுதலை இயக்கம் என்ற மாயையைக் கட்டிவைத்திருப்பதற்கும் அவர்கள் மறுத்தார்கள். எனவே அவர்கள் சுயநலமாக தங்களது படிப்பைத் தொடர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டு அவர்கள் உங்கள் பக்கம் சாயவில்லை என்ற காழ்ப்புணர்வினால் நீங்கள் அள்ளி வீசும் சேறு. அவர்கள் முரண்பாடுகளால் காதலையும் கூட துறந்தார்கள் என்பதுவும் எதற்கும் முண்டு கொடுக்க முன்வராமல் தனியாக உதிரிகளாக வெளியேறினார்கள் என்பதுவும் தான் உண்மை. உங்களுடனும் அசோக்குடனும் அவர்கள் முரண்பட்டு நின்றார்கள். நீங்கள் முண்டு கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். தங்கள் பாதையில் அவர்கள் உங்களைத் தவிர்க்கவே விரும்பினார்கள். புளட்டினது அரசியலையும் அதனது பயங்கரங்களையும் அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.

இந்தத் தோழிகள் மேல் எந்தப் பழியையும் போடுவதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.

Last Updated on Thursday, 10 March 2011 11:16