Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

அரசியல் சதிகளுக்கு சொந்த முகம் இருக்காது

  • PDF

அது எங்கும் எதிலும் ஊடுருவி நஞ்சிடுவதன் மூலம், சமூகத்தை சொந்த செயலுக்குரிய அனைத்தையும் அழிக்கின்றது. இப்படிப்பட்ட அரசியல் சதிகளுக்கு, எந்த சொந்த முகமும் கிடையாது. தன்னைத் தான் மூடிமறைக்கப்பட்ட ஒரு நிலையில், எந்த கோட்பாட்டு உருவத்தையும் தான் கொண்டிருப்பதில்லை. கலவைக் கோட்பாட்டில்,

தனக்கு முகமூடியிட்டுக் கொண்டு, தன்னை மிதக்கவைக்கின்து. இதைத்தான் தமிழ் மக்கள் அன்றாடம் தரிசிக்கின்றனர். தமிழ் மக்கள் தமது சொந்த செயலுக்குரிய ஒரு அரசியலை, தரிசிப்பது கிடையாது. ஏன் இதை யாரும் வழிகாட்டுவதும் கூட கிடையாது.

 

மாறாக அரசியல் கிரிமினல் மயமாகிவிட்டது. கிரிமினல்களே அரசியல் செய்கின்றனர். சூழ்ச்சிகள், சதிகள், கவிழ்ப்புகள், அவதூறுகள் மூலம், தமது கிரிமினல் அரசியலை எங்கும் எதிலும் நிறுவ முனைகின்றனர். இந்த கிரிமினல் அரசியலையே, முற்போக்காக காட்டவும் முனைகின்றனர். புலியெதிர்ப்பு பெயரிலும், பேரினவாத அரசவெதிர்ப்பு பெயரிலும், தமது கிரிமினல் அரசியலை மூடிவைக்கின்றனர். இதற்குள்ளாக தம்மை ஒழித்து வைத்துக் கொண்டு தான், தமிழ் மக்களை சதா இழிவாடுகின்றனர். இதைக் கேள்விக்கு உள்ளாக்கினால், அம்பலப்படுத்தினால், அதை அவர்கள் மனநோய்க்குரிய ஒன்று என்கின்றனர். கிரிமினலுக்கே உரிய வக்கிரமான வக்கிர புத்தியுடன் இதைக் கூறியபடி, பெரும்பான்மையின் பின் எம்மையும் நக்கிப் பிழைக்க வரும்படி அழைக்கின்றனர்.

 

இதற்குள் மிதந்து பிழைத்துக் கொள்ளும், பிழைப்புவாத ஊடகவியல். இது பல முகம் கொண்டு, பலவிதமாக சலசலக்கின்றது. அது தன்னையும், தனது ஒட்டுண்ணித்தனத்தையும் பாதுகாத்துக் கொள்ள, கிரிமினல்மயமாகிவிட்ட சதி அரசியல் மீது ஆதாரம் கேட்கின்றது. மற்றவன் மேல் அள்ளிப்போட முனைகின்றது. ஆதாரங்களை இல்லாது செய்வதும், அதை அழிப்பதுமே இந்த கிரிமினல்களின் அன்றாட அரசியல் நடத்தைகளாகி விடுகின்றது. அதற்கும் பல முகம். தமிழ் மக்கள் தம்மைத் தாம் வெட்டிக்கொன்றவர்களாக, தம்மைத்தாம் சுட்டுக் கொன்றவர்களாக, தமக்குத் தாம் சித்திரவதை செய்து கொண்டார்கள் என்பது தான், இந்த ஆதாரப் பேர்வழிகள் கூறமுனையும் அரசியல் செய்தி.

 

இதனால் தான் இந்த கொலைகார போக்கிரிகளுடன், அந்த அரசியலைச் இன்றும் செய்பவர்களுடன், இவர்களால் ஒட்டி உறவாட முடிகின்றது. அவர்களுக்காக, அரசியல் ரீதியான முண்டு கொடுத்து உதவ முடிகின்றது. இந்த செயலில் ஈடுபட்ட கடந்தகால தமது செயலுக்காக மனம் வருந்தாத, அதை விமர்சிக்காதவர்களுடன் கூடிக் குலாவி, சதி அரசியல் செய்ய முடிகின்றது. இவர்கள் பரஸ்பரம் நண்பர்களாக நடிக்க முடிகின்றது.

 

அரசியற்கொலைகளையே அரசியலாக கொண்ட அரசியலை, இலங்கை இந்திய கூலிக் குழுக்களை சார்ந்த கூலி அரசியலைத் தான், இன்று மீளமீள தமிழ் மக்கள் மேல் திணிக்க முனைகின்றனர். இதை ஆதரித்தும், இதைச் சார்ந்தும் இயங்குபவர்கள், இதற்குள் தமது முரண்பாட்டு அரசியலைக் கொண்டவர்கள், மனித விரோத செயலை ஆதரிக்கின்ற மனிதவிரோதிகளைச் சார்ந்து தான், தேசம் இயங்குகின்றது. தேசத்தின் கருத்துத் தளம் இதற்குள் தான், தத்தம் மனித விரோத நிலைக்காக, முரண்பட்டு இயங்குகின்றது. இப்படி தேசம், இந்த கொலைகார மக்கள் விரோத அரசியலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. இதற்கு அவர்கள் வைத்த பெயர் வாசகர் விவாதம். வெளியில் வெள்ளைவேட்டியுடன் நடமாடும் இந்தக் கும்பல், தனது கோமணத்தை அவிழ்த்துப் போடும் இடம் தான் தேசத்தின் கருத்துத் தளம். வெளிச்சத்தில் வேஷம் போடும் போக்கிரிகள், இருட்டில் வேஷம் கலைத்து நிற்பதற்கு பெயர் கலந்துரையாடல். இவர்கள் தமிழ் மக்களுக்கு வழிகாட்ட போகின்றார்கள் என்று தேசம் சொல்லுகின்றது.

 

தேசத்துக்கு ஏன் இந்த வேஷதாரிகளுடன் கூடிய ஆட்டம் தேவைப்படுகின்றது?


தேசத்தின் அரசியல் நோக்கம் தான் என்ன?

 

இவர்கள் மக்களின் சொந்த செயலுக்குரிய, ஒரு அரசியலை முன்வைப்பதில்லை. ஏன் அதை பாதுகாப்பது கூட கிடையாது. அதை கருவறுப்பது தான், தேசத்தின் மையமான அரசியல் குறிக்கோள்.

 

இது தேசத்தின் அரசியல் குறிக்கோள் என்றால், இது தேசத்தின் தனித்துவமான சொந்த கண்டு பிடிப்பல்ல. தேசத்தின் முந்தைய நிலையில் இருந்து இது மாறுபட்டது. இதனால் தான் அதில் எழுதிய பலர், இன்று அதில் இல்லை. இது இன்று யாரின் குறிக்கோள்?

 

சர்வதேச உளவு அமைப்புகளின் அரசியல் குறிக்கோள் தான் தேசத்தில் அரங்கேறுகின்றது. இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில், ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகி வருகின்றது. அரசியல் தலைமைகள் அனைத்தும் அம்பலமாகிவிட்டது. யாரையும் யாரும் நம்பத்தயாராகவில்லை. மக்கள் எந்த தலைமையுடனுமில்லை. மக்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில், நடைப்பிணமாகிவிட்ட அவலநிலை.

 

இப்படிப்பட்ட ஒரு நிலையில், மனித விரோத அரசியல் குழுக்களின் அரசியல் முடிவுக்கு வருகின்றது. இந்த வெற்றிடத்தில் எது வரப்போகின்றது என்ற கவலை, உளவு அமைப்புகளிள் மையப்பிரச்சனையாகியுள்ளது. அது இந்த வெற்றிடத்தில் எது வரமுடியும் என்பதை அனுமானிக்கின்றது.

 

இந்த அரசியல் வெற்றிடத்தை, மக்கள் நலன் சார் அரசியல் கூறுகள் நிரப்பும் சந்தர்ப்பம் உள்ளதை அது காண்கின்றது. இதை கருவறுப்பதே உளவு அமைப்புகளின் வழிகாட்டலுக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. நேரடி மற்றும் மறைமுக வழிகளின் உளவு அமைப்புகள் இதை செய்யத் தொடங்கியுள்ளது.

 

வெற்றிடத்தில் உருவாகும் எந்த மக்களினும் அரசியலை முடக்குவதற்காக, அதை இழிவுபடுத்த முனைகின்றது. இதன் விளைவு தான், தேசத்தில் பிரதிபலிக்கின்றது. முற்போக்கான அரசியல் சார்ந்த சமூக கூறுகளை அழிக்க வேண்டும் என்பதும், அரசியல் நிகழ்ச்சி நிரலாக மாறியுள்ளது.

 

இதைக் கோட்பாட்டில் வைக்க முடியாவிட்டால், அதை முன்வைப்பவர்களின் நடத்தைகளை இழிவாடு என்கின்றது. அந்தக் கருத்துகளை வைப்பவர்களை, மனநோய்க்குரியவர்கள் செயலாக சித்தரிக்க முனைகின்றது. இதையே வக்கிரமாக்கி கொட்டுகின்றது. இது சாத்தியமில்லை என்றால், அதை முன்வைப்பவர்களைக் கொல் என்கின்றது.

 

இது உளவு அமைப்புகளின் பொதுவான அரசியல் வழிகாட்டு நெறி. இதை தான் தேசம் செய்ய முனைகின்றது. அதன் வாசகர்களின் பெயரிலும், அதன் ஆசிரியரும் செய்யும் அரசியல், இது தான்.

 

இவர்கள் எமக்கு சொல்லும் செய்தி என்ன? எதை செய்யக் கோருகின்றனர்? புலிகளை எதிர்க்க வேண்டாம் என்கின்றனர் புலிகள். புலியெதிர்ப்பு தம்மை எதிர்க்க வேண்டாம் என்கின்றது. பரஸ்பரம் தம்மை ஆதரிக்கக் கோருகின்றது. தம்மை அம்பலப்படுத்த வேண்டாம் என்கின்றது. இதை மீறிச் செய்தால், இதைச் செய்வோரை மனநோய் என்று பட்டம் கட்டுவோம் என்கின்றது. இதை மீறிய எந்த அரசியலும், எந்த வழிகாட்டலும் இவர்களிடம் கிடையாது.

 

பி.இரயாகரன்
20.01.2007