Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தோழர் மருதையன் அவர்கள் நிகழ்த்திய திருமண வாழ்த்துரை!

  • PDF

சமீபத்தில், ம.க.இ.க தோழர் ஒருவரின் மகன் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடந்தது. அதில், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். செல்பேசியில் பதிவு செய்ததை, நேற்றிரவு கேட்டுக்கொண்டிருந்தேன். பகிர்வதற்கான அருமையான உரை. 20 நிமிட உரை என்பதால், மூன்று தொடர் பதிவுகளாக இடுகிறேன். (தட்டச்சு செய்ய நேரம் கொடுங்க!).


டிஸ்கி : அவருடைய உரையை, உரைநடைக்கு தகுந்தவாறு சில இடங்களில் முன்பின் மாற்றியிருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால், நானே முழு பொறுப்பு!

****

.....

(மாப்பிள்ளை) பார்த்திபனை புதிய கலாச்சாரம் தொடங்கிய காலத்திலிருந்தே தெரியும். புதிய கலாச்சாரத்தின் வயதும், பார்த்திபன் வயதும் ஏறத்தாழ சமம். சிறு பையனாக இருந்த பொழுதே தெரியும். ரெம்ப அமைதியான பையன். ஆனால், காதலிக்கும் அளவுக்கு தைரியமுள்ள பையனாக இருந்திருக்கிறார்.

இதிலே ஒரு வேடிக்கை இருக்கிறது. இந்த காதலில் மட்டும் மாவீரர்கள், அடி, உதைக்கு அஞ்சாதவர்கள் எல்லாம் பயப்படுவார்கள். பயந்தாங்கொள்ளி என்று நினைப்பவர்கள் எல்லாம் இந்த விசயத்தில் நிறைய தைரியமாக இருப்பார்கள். இது ஒரு விசித்திரம். வேடிக்கையல்ல!

இதை வைத்து தான் தமிழ் சினிமா இன்றைக்கு வரைக்கும் உயிர்வாழ்கிறது. சொன்ன காதல், சொல்லாத காதல், மிரட்டி காதலிக்க வைப்பது, காதலிக்கிற பையனை கடத்துவது, பெண்ணை கடத்துவது என ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காட்டிலும், அதிக லட்சங்கள் கோடிகள் நம்மை கொள்ளையடித்திருக்கிற ஊழல் காதல் சினிமாக்கள் பற்றிய ஊழல்கள் தான்.

இதை வைத்து, இவ்வளவு பிஸினஸ் நடந்திருக்கிறது என்றால், அதற்கு அடிப்படை இருக்கிறது. அது என்ன? ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இயல்பாக நண்பர்களாக பழக கூடிய வாய்ப்பு இந்த சமூகத்திலே இல்லை. அந்த சமூகத்தில் அப்படி இல்லாத காரணத்தினால் தான், இது நாள் வரையிலே, காதல் திருமணங்களை அதிகமாக நாம் காணமுடிவதில்லை.

படிப்பது, வேலைக்கு செல்வது, ஆணும், பெண்ணும் பழகுவது என்று தொடங்கிய பிறகு, பெற்றோர்கள் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என்ற நிலைமாறி, ஒருவரையொருவர் தெரிவு செய்கின்ற வாய்ப்பு வழங்கியிருக்கிறது. தெரிவு செய்கிறார்கள். அவ்வாறு தெரிவு செய்யும் பொழுது, உடனே அதற்கு தடை வருகிறது. முக்கியமாக, சாதி, மதம் போன்ற தடைகள் இயல்பாக வருகின்றதன. ஏற்கனவே, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களில், தேவாலாயங்களிலே நீங்கள் பார்த்திருக்கலாம். பாதிரியார் மணவிழாவை நடத்தி வைக்கும் பொழுது, "இறைவன் சேர்த்து வைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்று சொல்லி திருமணத்தை நடத்தி வைப்பார்.

நடக்கும் காதல் திருமணங்கள் எப்படி இருக்கிறது என்றால், "இறைவன் பிரித்து வைத்ததை, மனிதன் சேர்க்காதிருக்கட்டும்". மதம் வாரியாக இறைவன் பிரித்து வைத்திருக்கிறார். சாதிவாரியாக இறைவன் பிரித்து வைத்திருக்கிறார்.

மனிதன் தன் முயற்சியனாலே சேர்த்துவிடக்கூடாது என்பது தான் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களுக்காக, சாதி அடிப்படையிலான திருமணங்களுக்காக, மதத்தின் அடிப்படையிலான திருமணங்களுக்காக, வாதாடுபவர்கள் சொல்வது. அப்படியானால், பிரிவினையின் சின்னமாக இறைவன் இருக்கிறார்.

மனிதன், மனித நாகரிகம் ஒற்றுமையின் சின்னமாக முன்னே செல்கிறது. இதிலே இப்படி காதலெல்லாம் வரும் பொழுது, ஒரு பழைய சுமை போல, சாதி, மதம் என்பது, காதலில் ஈடுபடுகின்ற இளைஞர்களாகட்டும், அல்லது, குடும்பத்தினரே ஆகட்டும் அது அழுத்துகிறது.

பள்ளிப்பாட புத்தகங்களிலே படித்திருக்கலாம். "சிந்துபாத்தும் கடற்கரை கிழவனும்" ஒரு கதை. கொஞ்சம் தூக்கிக் கொண்டு போய்விடு என கடற்கரை கிழவன் கேட்க, சிந்துபாத் அந்த கிழவனை தோளில் தூக்கி கொண்டு போவான். தூக்கி, தூக்கி பிறகு இவனால் முடியாது. "இறங்குப்பா" என்றால், இறங்க மாட்டேன் என்பான் கிழவன். அப்ப கிழவனை கீழே தள்ளுவதற்கும் சிந்துபாத்திற்கு மனதில்லை. தள்ளிக் கொன்றுவிடலாம் என்றால், "அய்யோ பாவம் கிழவன்" இப்படித்தான் இருக்கிறது சாதி. சாதியை முன்நிறுத்துகின்ற பெற்றோரும்.

சாதி அநீதியானது என்று தெரிந்தாலும், அந்த சாதியை நியாயப்படுத்தி பெற்றவர்களும், உற்றார்களும் பேசுகிறார்கள். சொந்தமாக இருப்பதினால் அவர்களின் கண்ணீரை பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. மதத்தை பேசுபவர்கள் பெற்றோராக இருப்பதினால், அவர்களுடைய கண்ணீரைப் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. அதனாலே சமரசம் செய்து கொள்கிறார்கள். அல்லது நியாயப்படுத்துகிறார்கள்.

யாரையும் உயர்வு, தாழ்வு என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் பழகிவிட்டோம் இப்படி! இது எங்களுடைய அடையாளம். இது எங்களுடைய பழக்கம்.

ஒரு சாதி குடுமி வைத்துக் கொள்கிறது. ஒருசாதி மீசையை பெருமை என்கிறது. இராஜஸ்தானை சேர்ந்தவர்களைப் பார்த்தால், ஒரு முண்டாசு கட்டியிருக்கிறார்கள். அந்த துணியின் மவுண்ட் ரோடு அளவுக்கு இருக்கும். அவ்வளவு பெரிசை தலையில் வைத்திருக்கிறார்கள். இது எங்களுடைய மரபு, பழக்கம் என அதை நியாயப்படுத்தி கொள்கிறார்கள். இதை என்ன வார்த்தைகளால் சொன்னாலும், இது ஒரு அநாகரீகம். மற்ற எல்லா செளகரியங்களுக்கும் மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர்கள் இப்ப (உதாரணமாக) "கடல் கடந்து செல்வது குற்றம் என ஒரு சாதியினருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது" ஆனால் அவர்கள் தான் கடல் கடந்து போவதிலே முன்னிலையில் இருக்கிறார்கள். கடல் கடந்து சென்றால், சாதியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று இருந்தது.

ஊரைவிட்டு வெளி மாநிலம் போகக்கூடாது. அங்கே சென்றால் என்ன சாப்பாடு கிடைக்கும்? இங்கே போனால் என்ன கிடைக்கும் என்ற தயக்கம் இருந்தது. அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கு அமர்ந்திருக்க கூடிய மதுரை மாவட்ட விவசாயிகள் ஆந்திராவிற்கும், டெல்லிக்கும், திருப்பூருக்கும் ஓடுகிறார்கள். புது ஊர் தெரியாது என்பதற்காக போகாமல் இருப்பது இல்லை. படித்தவர்கள் அமெரிக்காவிற்கு ஓடுகிறார்கள். அது பழக்கமில்லாத ஊர். சாப்பாடு கிடைக்குமா? நாகரிகம் என்ன? என்றெல்லாம் யோசிப்பதில்லை. வேண்டியது பணம். அதற்காகவெல்லாம் மாறிக்கொள்ள தயாராக இருப்பவர்கள், சாதி என்ற ஒரு விசயத்தை பழக்கம் என்ற பெயரிலே நியாயப்படுத்துவது; அதை நியாயப்படுத்த முடியாத பொழுது இது ஒரு மரபு என்று சொல்லி, நாசூக்காக அதற்கு ஒரு விளக்கம் சொல்வது. என்ன மரபு?

தொடரும்..

 

Last Updated on Monday, 07 February 2011 07:03