Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் சிலிவிபத்து: முதலாளித்துவச்சுரண்டலுக்குபலியாகும்தொழிலாளர்கள்!

சிலிவிபத்து: முதலாளித்துவச்சுரண்டலுக்குபலியாகும்தொழிலாளர்கள்!

  • PDF

உலோகம் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? நாம் பயணிக்கும் பேருந்து அல்லது இரயில், தார்ச்சாலை அல்லது தண்டவாளங்கள், அதன் மேல் வாகனங்களை நகர்த்தும் எரிபொருள், கட்டிடங்களையும் பாலங்களையும் உயர்த்திப் பிடிக்கும் இரும்புக் கம்பிகள்…

சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விடுவதாக கற்பனை செய்து பாருங்கள்…. மொத்த உலகின் நாகரீகமும் ஒரு நான்காயிரம் ஆண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும். நாம் கற்களை வைத்துக் கொண்டு மிருகங்களைத் துரத்திக் கொண்டிருப்போம்.

வரலாறு நெடுக மனித உழைப்பு தனது ஒவ்வொரு கட்ட வளர்ச்சியினூடாகவும் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைப் புரிந்து கொண்டு, அதனோடு இயைந்தும் முரண்பட்டும் மூலக்கனிவளங்களை வெட்டியெடுத்து பலவித கருவிகளை உண்டாக்கிச் சிறுகச் சிறுக உருவாகி வளர்ந்ததன் நீட்சியே இன்று நாம் காணும் விண் முட்டும் கட்டிடங்களும் தேசத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் பறக்கும் விமானங்களும் மிதக்கும் பிரம்மாண்டமான கப்பல்களும்.

இயற்கையின் இந்தக் கொடை அதன் இயல்பின் படி அனைவருக்கும் பொதுவானதே, எந்த தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. தனிச்சொத்துடைமையின் உச்சகட்டமான முதலாளித்துவம், இயற்கையினதும் உழைப்பினதும் பலன்களை லாபமாக ஓரே இடத்தில் குவித்துக் கொள்கிறது. செங்குத்தாய் நிற்கும் முக்கோணத்தின் தலைப்பாகமாக வீற்றிருக்கும் முதலாளித்துவம், அதன் கீழ்ப்புறத்தில் தன்னையே தாங்கி நிற்கும் உழைப்பையும் இயற்கைச் செல்வங்களையும் சுரண்டியே கொழுக்கிறது.

உலகின் எங்கோவொரு மூலையிலிருக்கும் சுரங்கத்தின் ஏதோவொரு குறுகிய பொந்துக்குள் பிராணவாயுவைக் கோரி விம்மும் நுரையீரலுக்கு கந்தகத்தின் நெடியை சுவாசமாய் அளித்துக் கொண்டு இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, புற்றுநோயை சம்பளமாகவும் மரணத்தை போனசாகவும் பெற்றுக் கொண்டு ஏதோவொரு முகம் தெரியாத தொழிலாளி வெட்டியெடுத்து அனுப்பும் நிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தருகின்ற வெளிச்சமே நமது இரவுகளை ஒளிரவைக்கிறது.

சீனத்து சுரங்கத் தொழிலாளி

உலகின் மொத்த மின்சாரத் தேவையில் 41% நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் சீனத்தில் இருந்து மட்டுமே 50% உற்பத்தியாகிறது (worldcoal.org). குறிப்பாக சீனம், முதலாளித்துவ நாடாக மாறியபின் ஒவ்வொரு ஆண்டும் நிலக்கரி உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் சுரங்க விபத்துகளின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.

உலகளவில் அரசினால் பதிவு செய்யப்பட்ட கணக்குகளின் படியே சராசரியாக 1,200 தொழிலாளர்கள் சுரங்கங்களில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். சர்வதேச தொழிலாளர் கழகத்தின் செய்தி ஒன்றின் படி, உலகத் தொழிலாளர்களில் சுரங்கத் தொழிலாளர்களின் சதவீதம் ஒன்று  ஆனால் மொத்த தொழிற்சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் சுரங்கங்களில் மட்டும் 8% மரணங்கள் நிகழ்கின்றன.  http://mmc-news.net/2010/10/15/the-dangers-of-mining-around-the-world/ . இது பதியப்பட்ட மரணங்களின் கணக்கு தான். இன்னும் எத்தனையோ மரணங்கள் சுரங்க முதலாளிகளாலும் அரசாங்கத்தாலும் மறைக்கப்படுகின்றன.

சீனத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குச் சற்று முன் நடந்த ஒரு சுரங்க விபத்தில் 34 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8385950.stm

‘விபத்துகள்’ என்று சொல்லப்பட்டாலும் இவை சாராம்சத்தில் திட்டமிட்ட படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். தமது லாபவெறிக்காக அத்தியாவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட வேண்டுமென்றே புறக்கணித்து, அதன் காரணமாக ஏற்படுத்தப்படும் சாவுகளை வேறு எந்தப் பெயரிட்டு அழைப்பது? ஆபத்துகளைத் தவிர்க்கச் செய்யப்படும் பாதுகாப்புச் செலவினங்களால் வெட்டியெடுக்கப்படும் கனிமங்களுக்கான லாபம் குறைவதால் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் மூலப்பொருட்களை சல்லிசாக அள்ளிப்போகும் புழக்கடையாக மூன்றாம் உலக நாடுகளை ஆக்கி வைத்துள்ளன.

இந்நாடுகளைச் சேர்ந்த தரகு முதலாளிகளாலும் பன்னாட்டுக் கம்பெனிகளாலும் நடத்தப்படும் சுரங்கங்கள் விலைமதிப்பற்ற கனிவளங்களை சுரண்டிச் செல்வதோடு இலவச இணைப்பாக தொழிலாளிகளின் உயிர்களையும் காவு வாங்கி விடுகின்றன. சுரங்க விபத்துகளால் மட்டுமே ஆசிய, லத்தீன் அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் வருடந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் உயிரிழக்கின்றனர். சுரங்கங்களில் வேலை செய்து பெற்ற நோயால் இறப்போரின் கணக்கு தனி.

பூமியின் அடியாழத்தில் உள்ள சுரங்கத்தில் செய்யப்படும் வேலையின் தன்மையை சமதளத்தில் செய்யப்படும் வேலையின் தன்மையோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளக் கூடாது. சுரங்கத் தொழிலில் பல்வேறு முறைகள் பின்பற்றப்பட்டாலும், பூமியின் மேற்பரப்பில்  திறந்தவெளியில் பாறைகளைப் பிளந்து பிரம்மாண்டமாக பள்ளம் தோண்டி தாதுக்களை வெட்டியெடுக்கும் முறையும் (surface mining) பூமியைக் குடைந்து வெட்டியெடுக்கும் முறையும் (Sub-surface mining) பிரதானமாக பின்பற்றப்படுகிறது.

இதில் பூமியைக் குடைந்து அமைக்கப்படும் சுரங்கங்களின் பணிச்சூழலின் தன்மை நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட அபாயங்கள் நிறைந்த ஒன்று. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத சுரங்கங்களின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விடக்கூடும். இதுவும் போக நாட்கணக்கில் சுரங்கத்தினுள் பணிபுரியும் தொழிலாளிகளுக்கான உணவு,  தண்ணீர் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான சப்ளை துண்டிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பூமியின் ஆழத்திற்குச் செல்லச் செல்ல பிராணவாயுவின் அளவு வெகுவாகக் குறைந்து விடும். மீத்தேன் போன்ற அபாயகரமான வாயுக்கள் திடீரென்று வெளிப்பட்டுவிடுவதும் அதனால் தீ விபத்துகள் ஏற்படுவதும் சாதாரணம்.

அபரிமிதமான உற்பத்தியை மிகக் குறைவான நேரத்தில் குறைவான கூலியில் சாதிப்பது என்பதில்தான் லாப அளவு நிர்ணயிக்கப்படும் என்பது முதலாளித்துவத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. எனவே பாதுகாப்பான ஆழம் என்று நிர்ணயிக்கப்பட்ட அளவையும் கடந்து பூமியைக் குடைந்து செல்லுமாறு தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்தப் பகாசுர உற்பத்தி வேகத்தின் காரணமாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் செலவு செய்து லாபத்திலிருந்து ஒரு சிறு பகுதியும் வீணாகி விடக்கூடாது என்கிற முதலாளிகளின் பேராசைக் காரணமாகவும் அடிப்படை அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் விட்டுவிடுவதாலேயே ‘விபத்துகள்’ நடக்கின்றன.

அத்தகையதொரு விபத்துதான் சமீபத்தில் சிலி நாட்டில் நடைப்பெற்றது. சுரங்கத்தின் அடியாழத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக சிலி அரசு மேற்கொண்ட முயற்சியையும், அதற்கு அமெரிக்காவின் நாசா துணை நின்றதையும் உலகத் தொலைக்காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பின.

சராசரியாக 1,200 தொழிலாளர்கள் சுரங்கங்களில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள்

ஆனால், இத்தகைய விபத்துகளுக்கெல்லாம் மூலகாரணமாக அமைந்தவொரு ‘பெருவிபத்தை’, 28 ஆண்டுகளுக்கு முன் இதே சிலியில் அமெரிக்க அரசு அரங்கேற்றியது. 1973ஆம் அண்டு பொதுத்தேர்தலில் சிலியின் சோசலிசக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடார் அலண்டே, அமெரிக்க முதலாளிகள் கைப்பற்றி வைத்திருந்த சிலியின் தாமிரச் சுரங்கங்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்குவதாக அறிவித்தார். இன்று தொழிலாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கருணையுடன் முன்வந்ததைப்போலக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க அரசு, அன்று தனது முதலாளிகளுடைய சொத்தைக் காப்பாற்றுவதற்காக சிலியில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது.

செப்டெம்பர் 11, 1973 அன்று சிலியின் அரசு வானொலியில் பிரதமர் அலண்டேயின் குரல் கம்பீரமாக ஒலித்தது. “சிலியின் பாட்டாளிகளே, சிலியின் எதிர்காலம் குறித்து எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. வேறு எவராயிருப்பினும் தேசத் துரோகிகள் வெற்றியுலா வரும் இந்நேரத்தில் அதற்குப் பணிந்து பிழைத்துப் போயிருப்பார்கள். நான் எங்கும் ஓடப்போவதில்லை. நீங்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள். விரைவில் இந்தச் சூழல் மாறும். ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். சிலி வாழ்க. மக்கள் வாழ்க. பாட்டாளி வர்க்கம் வாழ்க!”

சீறி வெடித்த துப்பாக்கி குண்டுகளின் பின்புலத்தில் அச்சமின்றி ஒலித்த அலண்டேயின் குரல் நசுக்கப்பட்டது. அமெரிக்க சி.ஐ.ஏவினால் ஏவி விடப்பட்ட சிலியின் இராணுவ தளபதி அகஸ்டோ பினோசே (பினோச்செட்) யின் இரத்த வெறிபிடித்த இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அலண்டே தற்கொலை செய்து கொண்டதாக இராணுவம் புளுகியது  இறுதி வரை போராடிக் களத்தில் கொல்லப்பட்டார் என்று அலண்டேயின் ஆதரவாளர்கள் அறிவித்தார்கள்.

அன்றிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை சிலி, இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் கொண்டு வரப்பட்டது. ஜெனரல் பினோசே 1980ஆம் ஆண்டு நேரடியாக ஜனாதிபதியாகத் தன்னை நியமித்துக் கொண்டான். ஏழு ஆண்டுகளுக்குள்ளாகவே சுமார் 2000 எதிர்ப்பாளர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள் என்றும் சுமார் 27000 பேர் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள் என்றும் பின்னர் பிஷப் செர்ஜியோ வேலஷ் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி 2005ம் ஆண்டு வெளியிட்ட ‘வேலஷ் அறிக்கை’ சொல்கிறது. அமெரிக்கா இந்த ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியதற்கான காரணம் சில வருடங்களிலேயே உலகிற்கு அம்பலமானது.

உலகில் உற்பத்தியாகும் தாமிரத்தில் மூன்றில் ஒரு பங்கு சிலியில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிறது. சிலியின் தாமிர வளத்தைக் கைப்பற்ற 1825லிருந்தே அமெரிக்காவும் பிரிட்டனும் கடுமையான போட்டியைத் துவக்கியிருந்தன. அலண்டேயின் ஆட்சிக்காலத்தில் ஏகாதிபத்திய முதலாளிகள் வசம் இருந்த தாமிரச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சிய பினோசே, சுரங்கங்களை முற்றிலுமாக தனியார்மயமாக்காமல், அவற்றின் மேலிருந்தக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்தினார். அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த சுரங்க நிறுவனங்களிலும் தனியார் முதலாளிகள் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இப்போதைய ஜனாதிபதி செபாஸ்ட்டியன் பெனேராவின் மூத்த சகோதர் ஜோஸ் பெனேரா 1980இல் பினோசேயின் ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த போதுதான் தொழிலாளர் நலச்சட்டங்கள் உலக வங்கியின் உத்தரவிற்கிணங்க மாற்றியமைக்கப்பட்டன. இதன் காரணமாக சிலியின் மொத்த தொழிலாளர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் பணி நிரந்தரமற்ற அன்றாடக் கூலிகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மேலும், தொழிலாளர்களின் பணிச் சூழல் பாதுகாப்பு, விபத்து தடுப்புப் போன்றவைகளை தொழிற்சாலை முதலாளிகளின் கட்டாயமான பொறுப்பு அல்ல என்றும் இதன் காரணமாக ஏற்படும் விபத்துகளுக்கு தொழிற்சாலைகள் பொறுப்பேற்க வேண்டியதோ இல்லை நட்ட ஈடு தரவேண்டியதோ தேவையில்லை என்றும் தொழிலாளர் சட்டங்கள் மாற்றி எழுதப்பட்டன. தொழிலாளர்களின் எதிர்ப்புகளை துப்பாக்கிச் சப்தங்கள் மௌனமாக்கின. இந்தப் பின்புலத்தில் நிகழ்ந்திருப்பதுதான் சிலியில் இன்று நடந்துள்ள சுரங்க விபத்து.

சிலியின் அட்டாகாமா பகுதியின் கொப்பியாபோ நகரின் அருகே அமைந்துள்ளது சான் ஜோஸே சுரங்கம். சுமார் எழுநூறு அடி ஆழம் கொண்ட இந்தச் சுரங்கத்தில் பிரதானமாக தாமிரமும் தங்கமும் வெட்டியெடுக்கப்படுகிறது. இந்த எழுநூறடி ஆழமும் நேர்வாக்கில் அமையாமல் சுருள் வட்டப்பாதையாக அமைந்துள்ளது. 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சுரங்கம் மிகுந்த லாபகரமாக நடந்து வந்த போதிலும், சுரங்கத்தை நிர்வகித்து வந்த தனியார் நிறுவனம் சுரங்கத்தின் பாதுகாப்பு அம்சத்தைக் கண்டுகொள்ளாமல் கை கழுவியது.

2003ம் ஆண்டு தொடங்கி வரிசையாக விபத்துக்கள் நடந்து மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 2004ம் ஆண்டில் ஒருமுறையும் 2007ம் ஆண்டில் ஒருமுறையும் சுரங்கத் தொழிலாளர் சங்கம் இந்தச் சுரங்கத்தின் பாதுகாப்பு சரியில்லாததை சுட்டிக் காட்டி இதை மூடிவிட உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறையும் முதலாளிகளுக்குச் சாதகமாக வழக்கை சிலி நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.

இறுதியாக 2007ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் நிலவியல் ஆய்வாளர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இச்சுரங்கம் வேறு வழியில்லாமல் மூடப்பட்டது. சர்வதேச முன்பேர வர்த்தக சூதாடிகளின் சூதாட்டத்தால் தாமிரத்தின் விலை கூடியதும், சீனத்திற்கு தாமிர இறக்குமதித் தேவை அதிகரித்ததும் சுரங்க நிறுவன முதலாளிகளின் வாயில் எச்சில் ஊற வைத்தது. மூடப்பட்ட சுரங்கத்தின் பாதுகாப்பு அம்சங்களை இம்மியளவும் மேம்படுத்தாமல்  எம்ப்ரெஸ்ஸா மினரா சான் எஸ்டிபான் என்கிற நிறுவனம், இச்சுரங்கத்தை 2008ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் திறந்தது.

2010,ஆகஸ்ட் 5ஆம் தேதி சுரங்கத்தின் மேற்கூரையிலிருந்து பாறைகள் இடிந்து விழுந்து சுரங்கம் அடைத்துக் கொண்ட போது அதனுள்ளே 33 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சம்பவம் நிகழ்ந்து பல மணிநேரம் கழிந்து மதியம் 2 மணியளவில்தான் சுரங்க நிர்வாகம் இது குறித்து அரசுக்குத் தெரியப்படுத்தியது. அவசரகாலத்தில் தப்பிப்பதற்கான ஏணியைக்கூட நிர்வாகம் அமைக்காததனால் சுரங்கத்தின் வெவ்வேறு பகுதிகளில் மாட்டிக் கொண்ட 33 தொழிலாளர்களும் வேறு வழியில்லாமல் உள்ளேயே இருந்த குகை போன்ற ஒரு தற்காலிக பாதுகாப்பு இடத்தில் ஒளிந்து கொண்டனர். உடனடியாக தப்பித்துச் செல்ல ஏதேனும் வழியிருக்குமா என்று தேடத் துவங்கினர்.

சுரங்கம் ஒன்றினுள் பதினேழு நாட்களாக, வெளியுலகத் தொடர்பு அற்று, மீட்கப்படுவோமா இல்லையா என்கிற நிச்சயமில்லாத ஒரு நிலையிலும், காற்றும் ஒளியும், நீரும் இல்லாத நிலையிலும் வாழ்வதற்கான நம்பிக்கையை மட்டும் உயிருடன் காப்பாற்றி வந்த அந்தப் போராட்டத்தை வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது. சொந்த அனுபவத்தில் மட்டுமே அந்தத் துன்பத்தின் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்து கொள்ள இயலும்.

அந்தத் தொழிலாளர்களிடையே ஓரளவு அனுபவம் கொண்ட, 40 வயதான மரியோ செபுல்வெடாவிற்கு ஆபத்து காலத்தில் தப்பித்துச் செல்வதற்கு காற்று வரும் பாதையில் மிருகத்தோலால் செய்யப்பட்ட ஏணி ஒன்று இருக்கும் என்பது தெரியும். அதில் ஏறிச் சென்று வெளியேற வழி அகப்படுமா என்று பார்க்கிறார். ஆனால், அந்த ஏணி உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததால் சிதைவுற்ற நிலையில் இருந்துள்ளது. அப்படியும் அதில் உயிரைப் பணயம் வைத்து ஏறிப்பார்க்கிறார்  அது 150 அடி தூரம் சென்றவுடன் முற்றிலுமாக சிதைவடைந்து கிடக்கிறது.

தலைக் கவசத்தில் இருக்கும் பாட்டரியினால் இயங்கும் விளக்கைத் தவிர்த்து வேறு வெளிச்சம் இல்லாத நிலை. இரவா பகலா என்று புரிந்துக் கொள்ள முடியாத சூழல். வெளியுலக சப்தம் ஏதும் அற்ற அந்த நிலையில் அவர்கள் தமக்குள் ஒன்றிணைந்து செயல்படுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்பதை உணர்கிறார்கள்.

தப்பிக்க மேற்கொள்ளும் எந்தவொரு செயலுக்கும் அவர்கள் தமக்குள் ஓட்டெடுப்பு நடத்தி பெரும்பான்மையானவர்கள் ஆதரித்த முடிவையே ஒருமனதாக செயல்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கியிருந்த இடத்தின் சுத்தத்தை பராமரிக்க ஒரு குழு, தப்பிக்கும் வழியைத் தேட ஒரு குழு, மீட்புக் குழு வருகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழு என்று அவர்களுக்குள் இயல்பாகவே குழுக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

தனது வர்க்க ஒற்றுமை தோற்றுவித்த தோழமையால் மரணத்தை வென்ற தொழிலாளர்கள்

92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்துக் கொண்டிருந்த நிலையிலும், வெளிக்காற்றின் சுழற்சி தடைப்பட்டிருந்த நிலையிலும் அவர்களின் உடல் வெகுவேகமாக வியர்த்தது. உடலின் நீர்ச் சத்து வெகுவேகமாக குறைந்து வந்த அந்த நிலையில் கையிருப்பில் இருந்த தண்ணீரின் அளவும் அதே வேகத்தில் குறைகிறது. தண்ணீரும் மற்ற உணவுப் பொருட்களும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கே தாக்குப் பிடிக்கும் அளவிலேயே இருந்துள்ளது. எனவே அவர்களுக்குள் இருப்பதை சமமாக பகிர்ந்து கொள்ள ரேஷன் முறை அமுல்படுத்தப்படுகிறது. பேட்டரிகள் தீர்ந்து போய் முழுமையான இருளில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்க எப்போதும் வெளிச்சத்தில் இருப்பதைத் தவிர்க்கிறார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல மீட்கப்படுவோம் என்கிற நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைகிறது. ஒருவேளை தங்கள் உடல்களாவது மீட்கப்பட்டால் குடும்பத்தாருக்குக் கிடைக்கட்டும் என்று அவரவர் தங்கள் இறுதிச் செய்தியை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை மரணம் நிச்சயம் என்பது உறுதியாகியிருந்தால் கூட அவர்களுக்கு ஒரு மனநிம்மதி ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், ஏதும் நிச்சயமற்ற நிலையில் நாட்களைக் கடத்துவதன் பின்னுள்ள உளவியல் அழுத்தம் நமது கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவொன்று. எங்காவது எப்போதாவது கேட்கும் ட்ரில் இயந்திரத்தின் ஓசை அவர்களுக்கு வாழும் நம்பிக்கையை லேசாகக் காட்டிவிட்டு நின்று விடும். சாவுக்கும் வாழ்வுக்கும் இடையிலான அந்த மெல்லிய எல்லைக் கோட்டில் அவர்கள் பதினேழு நாட்கள் அமர்ந்திருந்தனர்.

பாட்டாளி வர்க்கத்திற்கே உரிய கூட்டுணர்வு ஒன்றுதான் அவர்கள் அந்த நிலையைக் கடந்து வர கைகொடுத்த உந்து சக்தியாய் இருந்தது. எல்லா பிரார்த்தனைகளும் நம்பிக்கைகளும் தகர்ந்துப் போன அந்தச் சூழலில்  தோழமை உணர்வுதான் அவர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது. இறுதியில் அவர்கள் அடைபட்டிருந்த இடத்தை ஆகஸ்டு 22ஆம் தேதி மீட்புப் படை அனுப்பிய ட்ரில் இயந்திரம் எட்டுகிறது. மீட்புப் படையிடம் சுரங்க நிர்வாகம் கொடுத்த வரைபடத்திற்கும் சுரங்கப் பாதைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் இருந்ததே இந்த தாமதத்திற்குக் காரணம்.

ஊடகங்கள் மூலம் சர்வதேச அளவில் பெருவாரியான மக்களின் கவனத்தையும் இந்த சம்பவம் ஈர்த்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் நாசா போன்ற நிறுவனங்களை இறக்கிய சிலி அரசு, புதிதாக சுரங்கப் பாதைகளை அறிந்து, வரைபடம் தயாரித்தே மீட்பு நடவடிக்கைக்கான திட்டத்தை உருவாக்குகிறது. அந்தச் சுரங்கத்தின் தாமிரத்தை ஏற்றுமதி செய்து எத்தனையோ லாபத்தை அள்ளிக் குவித்த அதன் முதலாளிகள், மிக அடிப்படையான வரைபடத்தைக் கூட முறையாக வைத்திருக்கவில்லை.

ஊடக வெளிச்சத்தினால் உண்டான நெருக்கடியும், நெருங்கி வரும் தேர்தலில் தோற்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு காரணமாகிவிடக்கூடாது என்கிற அச்சமும் விரட்ட, மீட்பு நடவடிக்கையை முடுக்கி விட்டார் ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா. பல்வேறு மீட்பு முறைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் சிலி கப்பற்படையும் அமெரிக்க நாசாவும் வடிவமைத்த ஃபீனிக்ஸ் என்கிற கூம்பு வடிவ கேப்சூலை சுரங்கப் பாதைக்கு இணையாக பூமியைக் குடைந்து உள்ளே அனுப்பி, ஒவ்வொரு தொழிலாளியாக மீட்பது என்று முடிவு செய்கிறார்கள்.

சுரங்கத்தினுள்ளே 33 தொழிலாளர்களும் மீட்பு கேப்சூல் வருகையை தவிப்புடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். அது வெற்றியடையுமோ இல்லையோ; வெளியே சென்று குடும்பத்தாருடன் சேர்வோமோ இல்லையோ என்று ஒரு கலவையான உணர்ச்சியலையில் இருக்கிறார்கள். அவர்கள் வெளியுலகத்தோடு தொடர்பு கொண்டு 52 நாட்களாகிறது. அவர்கள் குடும்பத்தாரும் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அக்டோபர் 12ம் தேதி நள்ளிரவு தொடங்கிய மீட்பு நடவடிக்கை, அடுத்த நாள் இரவு பத்து மணிக்கு 33வது தொழிலாளியையும் மீட்டவுடன் வெற்றிகரமாக முடிகிறது.

···

தொழிலாளர் அவலத்தில் காசு பார்க்கும் ஊடகம்

‘வாவ்… இங்கே பாருங்கள் அதிசயத்தை. ஒரு சுரங்கத்தினுள் மீட்பு கேப்ஸ்யூல் இறங்குவதைத் திரையில் காண்கிறீர்கள். இது உங்களை ஆச்சர்யப்படுத்தா விட்டால் வேறு எதுவுமே ஆச்சர்யப்படுத்தி விடமுடியாது‘ என்று சி.என்.என் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஆண்டர்சன் கூப்பர் அலறுகிறார்.

ஒரு திரில்லர் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப் போல விவரித்து செய்தி ஊடகங்களில் காட்டப்பட்ட மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை நூறு கோடி பேர் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துள்ளனர். இணையத்தில் நெரிசல் இருபது சதவீதம் அதிகரித்துள்ளது. உலகெங்குமிருந்து சுமார் மூவாயிரம் செய்தியாளர்கள் சுரங்கத்தின் அருகில் கூடியிருந்தனர்  பந்தியில் கை நனைக்கும் வாய்ப்பை எவரும் தவற விடத் தயாரில்லை போல. இவர்களுக்காக ஒரு திடீர் நகரமே உருவாக்கப்பட்டிருந்தது.

மிருகக்காட்சி சாலைகளில் கூண்டுகளில் அடைபட்டிருக்கும் மிருகத்தைக் காட்சிப் பொருளாக்குவது போல் சுரங்கத்தினுள் மாட்டிக் கொண்ட தொழிலாளர்களின் ஒவ்வொரு அசைவையும் காட்சியாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டன முதலாளித்துவ ஊடகங்கள். உள்ளே மாட்டிக் கொண்ட தொழிலாளர்களுக்கு வெளியுலக தொடர்பு கிடைத்தவுடன் அவர்களின் நடவடிக்கையையும் விரிவாக திரையில் காட்டி காசு பார்த்த ஊடகங்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் பற்றி மூச்சுக்காட்டாமல் அப்படியே மூடி மறைத்தன. தொழிலாளர்கள் மீட்கப்படும் வரையில் சுரங்கத்தின் பாதுகாப்பைப் புறக்கணித்த நிர்வாகத்தையும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்ட அரசையும் ஓரளவுக்கு விமர்சித்து வந்த ஊடகங்கள், தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன் ‘விவா சிலி’ (சிலி வாழ்க) என்று மங்களம் பாடி ஒட்டுமொத்தமாக சுபம் போட்டுவிட்டனர்.

சிலியின் மீட்பு நடவடிக்கையில் பல நாடுகளது அரசாங்கங்கள், அரசு நிறுவனங்கள் இணைந்துள்ளன. தங்களது தொழில்களில் எல்லாவிதமான அரசுத் தலையீட்டையும் எதிர்க்கும் தாராளமயதாசர்கள் எவரும் இந்த ‘அரசுத்தலையீடு’ பற்றி மூச்சுவிடவில்லை. தொழிலாளிகளின் உயிரைக் காக்கும் பொறுப்பை மட்டும் அரசுகள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கருதுகின்றனர்.

நாளை இந்தச் சம்பவங்களை வைத்து ஏதாவது ஹாலிவுட் திரைப்படம் வெளியாகலாம். அதில் மீட்புப் படைத் தலைவராக  நாசா என்ஜினியராக  டாம் குரூஸ் வந்து சிலியின் தொழிலாளர்களை மீட்டுத் தரக்கூடும்.

சிலியின் சுரங்கத் தொழிலாளர்களின் நிலை உலகளவில் காட்சிப் பொருளாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சீனத்தில் நடந்த சுரங்க விபத்து ஒன்றில் 34 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். எதார்த்தத்தில் இன்றும் சிலியின் பெரும்பாலான சுரங்கங்கள் எவ்விதமான அடிப்படை பாதுகாப்பும் இல்லாமல்தான் இயங்கி வருகின்றன. . அவர்கள் உள்ளே மாட்டிக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுரங்கத்தின் உள்ளே கேமரா இறங்கப் போவதில்லை. ‘சிலியின் கதை’ ஏற்கெனவே உலகம் முழுவதும் ஓட்டப்பட்டு விட்டதால், இதை விடக் கொடிய, திகில் நிறைந்த, இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான, புதிய ‘விபத்துகளை’ ஊடக முதலாளிகள் தேடிக்கொண்டிருப்பார்கள்.

தொழிலாளர்களோ, அதே பழைய தாமிரத்துக்காகவும், நிலக்கரிக்காகவும், முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காகவும், பாதுகாப்பற்ற சுரங்கங்களில் தமது உயிரைப் பணயம் வைத்து பூமியைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்

____________________________________________________

தமிழரசன், புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010