Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…

தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…

  • PDF

கேரளத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வர்கீசை ‘மோதல்’ என்ற பெயரில் கொலை செய்த உயர் போலீசு அதிகாரி ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்திருக்கிறது. அரிதினும் அரிதாக, இப்படுகொலை நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கொலைகார போலீசு அதிகாரிக்கு நீதிமன்றம் தண்டனை அளித்திருப்பது, இந்தியாவிலேயே முதன்முறையாகும்.

அன்று இளைஞராக இருந்த தோழர் வர்கீஸ், நக்சல்பாரி பேரெழுச்சியைத் தொடர்ந்து சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். கேரளத்தின் வயநாடு பகுதியில் தேயிலைத் தோட்ட முதலாளிகளின் – நிலப்பிரபுக்களின் கொடூரச் சுரண்டலையும் கொத்தடிமைத்தனத்தையும் விளக்கி மக்களை எழுச்சியுறச் செய்தார். ஆண்டுதோறும் வயநாட்டின் வள்ளியூர் கோயில் திருவிழாவில் பழங்குடியின மக்களைப் பிடித்து ஆடு-மாடுகளைப் போல விற்கும் நிலப்பிரபுக்களின் கொடூரத்தை எதிர்த்து நின்று போராடினார்.

போலீசால் படுகொலை செய்யப்பட்ட தோழர் வர்கீஸ்

இதைத் தொடர்ந்து, நக்சல்பாரிகளை ஒழிக்க கொலைகார போலீசு வெறியன் லட்சுமணா மற்றும் விஜயன் தலைமையில் ஒரு சிறப்பு அதிரடிப்படை நிறுவப்பட்டு வயநாட்டில் தேடுதல் வேட்டை தீவிரமானது. தலைமறைவாகி போராட்டங்களை நடத்தி வந்த தோழர் வர்கீஸ், திருநெல்லியில் ஒரு மூதாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, 1970 பிப்ரவரி 18-ஆம் தேதியன்று போலீசு அதிரடிப்படையால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். திருநெல்லி அருகே காட்டுப் பகுதியில் மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், அவரது கண்கள் பிடுங்கி எறியப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். போலீசாருடன் வர்கீஸ் நடத்திய ஆயுத மோதலில் அவர் குண்டடிபட்டு மாண்டதாக அன்றைய காங்கிரசு அரசும் போலீசும் கதை கட்டின. வயநாட்டில் தோழர் வர்கீசுடன் இணைந்து செயல்பட்ட இதர நக்சல்பாரி தோழர்களும் வயநாட்டுப் பழங்குடியின மக்களும் கொடூரமாக வதைக்கப்பட்டனர்.

பயங்கரவாதப் போலீசின் கொட்டங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியவில்லை. புதைக்கப்பட்ட உண்மைகள் பூதமாகக் கிளம்பத் தொடங்கின. 1970-களில் நக்சல்பாரி ஒழிப்பு அதிரடிப் படையிலும் பின்னர் ரிசர்வ் போலீசுப் படையிலும் கீழ்நிலை போலீசுக்காரராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி. ராமச்சந்திரன் நாயர், “எனது மேலதிகாரி லட்சுமணாவின் உத்தரவின் பேரில்தான் நான் வர்கீசைச் சுட்டுக் கொன்றேன். அப்போது வயநாடு எஸ்.பி.யாக இருந்த விஜயனும் திருநெல்லி டி.எஸ்.பி.யாக இருந்த லட்சுமணாவும்தான் வர்கீசைக் கொல்லும்படி எனக்கு ஆணையிட்டனர்” என்று கடந்த 1998-ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாகப் பேட்டியளித்தார். நீதிமன்றத்திலும் இதைத் தெரிவித்து உரிய தண்டனை பெற்றுக் கொள்ள தான் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை இயக்கத்தினர் மூலம் பத்திரிகைகளில் வெளிவந்த இந்த உண்மை, கொலைகார போலீசின் கோரமுகத்தையும் அப்போதைய காங்கிரசு – வலது கம்யூனிஸ்டு கூட்டணி அரசாங்கத்தின் பயங்கரவாத வெறியாட்டத்தையும் நாடெங்கும் திரைகிழித்துக் காட்டியது.

கொலைகார போலீசுப்படைத் தலைவனாகிய லட்சுமணா, ஜெயராம் படிக்கல் என்ற போலீசு வெறியனோடு சேர்ந்து அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் கள்ளிக்கோட்டை பொறியியல் கல்லூரி மாணவரும் நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தின் செயல்வீரருமான தோழர் ராஜனை 1976 -இல் காகயம் முகாமில் அடைத்து சித்திரவதை செய்து கொன்று, பின்னர் அவரது உடலை பீச்சி அணையில் வீசி எறிந்தவன். இதே லட்சுமணாவின் அதிரடிப்படை 1976-இல் நக்சல்பாரி புரட்சியாளரான விஜயனைச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று யாருக்கும் தெரியாமல் வர்க்கலா எனும் ஊரில் எரித்ததாக ஓய்வு பெற்ற போலீசு வாகன ஓட்டுநர் ஒருவர் கடந்த 1999-இல் வாக்குமூலம் அளித்தார்.

அடுத்தடுத்து வெளிவந்த இந்த வாக்குமூலங்களால் அதிர்ச்சியடைந்த கேரள மக்கள், போலீசு படுகொலைகளுக்கு எதிரான மனித உரிமை இயக்கங்களுக்குப் பெருத்த ஆதரவு அளித்தனர். நாடெங்கும் மனித உரிமை இயக்கங்களின் கண்டனமும் நிர்ப்பந்தமும் வலுக்கத் தொடங்கியதால், வேறு வழியின்றி அப்போதைய சி.பி.எம். கூட்டணி அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தோழர் வர்கீசின் சகோதரர்களான தாமஸ், ஜோசப் ஆகியோர் 1999-இல் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ராமச்சந்திரன் நாயரும், இரண்டாவது குற்றவாளியாக லட்சுமணாவும், மூன்றாவது குற்றவாளியாக விஜயனும் சேர்க்கப்பட்டனர். ராமச்சந்திரன் நாயருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் போலீசுக்காரரான முகம்மது ஹனீப், வர்கீசின் பள்ளித் தோழரான பிரபாகர வாரியார், ஜோகி என்ற விவசாயத் தொழிலாளி உள்ளிட்டு மொத்தம் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். போலி மோதல் படுகொலைக்கு எதிரான பொதுக்கருத்து வலுவாக இருந்ததால், “நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சாமானிய இளைஞனை வயநாட்டின் திருநெல்லி காட்டில் சுட்டுக் கொன்ற கொடுஞ்செயலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்க வேண்டும்” என்று அரசு தரப்பு வழக்குரைஞர் இந்த வழக்கில் வாதிட்டார். குற்றம் சாட்டப்பட்ட இரு போலீசு அதிகாரிகளும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் இந்த விசாரணைக்குத் தடை கோரியதால் இந்த வழக்கு விசாரணை நீட்டித்துக் கொண்டே போனது.

இதற்கிடையில் கடந்த 2006-ஆம் ஆண்டில் முன்னாள் போலீசுக்காரரான ராமச்சந்திரன் நாயர் மரணமடைந்தார். மற்ற இருவர் மீதான வழக்கில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதியன்று கொச்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. டி.ஜி.பி.யாகி ஓய்வு பெற்ற 83 வயதான முன்னாள் போலீசு அதிகாரி விஜயனும், ஐ.ஜி.யாகி ஓய்வு பெற்ற 75 வயதான லட்சுமணாவும் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். விஜயன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார். கொலைகார லட்சுமணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு மன்றத்திலிருந்து லட்சுமணா வெளியே வரும்போது “கொலைகார லட்சுமணா ஒழிக!” என்ற முழக்கங்கள் எங்கும் எதிரொலித்தன.

“திருநெல்லியில் இன்று இரவு இரண்டு நட்சத்திரங்கள் உயர்ந்தோங்கி மின்னும். அவை தோழர் வர்கீசின் ஒளிரும் கண்களாகும்!” என்று ஆண்டுதோறும் தோழர் வர்கீசின் நினைவு நாளான பிப்ரவரி 18-ஆம் தேதியன்று கேரளத்தில் சுவரெழுத்துக்களும் சுவரொட்டிகளும் பளிச்சிடும். தோழர் வர்கீசின் நினைவு நாற்பதாண்டுகளாகியும் இன்னமும் மக்களின் மனங்களிலிருந்து நீங்கிவிடவில்லை. தோழர் வர்கீஸ் மட்டுமின்றி, தோழர் ராஜன் படுகொலைக்கு எதிராகவும் கேரளத்தில் மக்கள் கொதித்தெழுந்ததால்தான் அங்கே இந்த அளவுக்கு விசாரணை நடந்துள்ளது.

நக்சல்பாரி புரட்சியாளர்களான தோழர்கள் வர்கீஸ், ராஜன் முதலானோர் கொல்லப்பட்டதைப் போலவே, 1980-களின் தொடக்கத்தில் தமிழகத்தின் தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் போலீசு ‘சூரப்புலி’ தேவாரம் நடத்திய நரவேட்டையில் தோழர் பச்சையப்பன் உள்ளிட்டு பத்துக்கும் மேற்பட்ட நக்சல்பாரி புரட்சியாளர்கள் ‘மோதல்’ என்ற பெயரில் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மனித உரிமை – ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து, இரகசிய கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து மோதல் என்ற பெயரில் நக்சல்பாரி புரட்சியாளர்களைக் கொன்றொழிப்பதை வழமையாகக் கொண்டுள்ள இத்தகைய அரசு பயங்கரவாதப் படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். கேரளத்தின் லட்சுமணா, தமிழகத்தின் தேவாரம் போன்ற கொலைகார போலீசு அதிகாரிகள், போலீசு கொலைக் குழுக்கள், இந்நரவேட்டைக் கொள்கையை வகுத்து செயல்படுத்திய அரசு அதிகாரிகள், இதற்குப் பக்கமேளம் வாசித்த ஊடகங்கள், ஓட்டுப் பொறுக்கிகள் உள்ளிட்டு அனைத்துப் பயங்கரவாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பயங்கரவாதப் போலீசு, இப்போது ரவுடிகளைக் கேள்விமுறையின்றிக் கொன்றொழிப்பதோடு, தனிப்பட்ட விரோதங்களுக்காக சாதாரண நபர்களையும் சுட்டுக் கொல்லும் பயங்கரவாத மிருகமாக மாறிவிட்டது. மனித உரிமைக்கான போராட்டத்தில் கேரள மக்களைப் போலவே போலி மோதல் கொலைகளுக்கு எதிராகத் தமிழக மக்களும் விழித்தெழும்போது, இங்கேயும் கொலைகார போலீசு கும்பல் தண்டிக்கப்படும். 
_____________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010