Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் எமது மக்களை ஏமாளிகளாக்கி மொட்டை அடிக்கும் அரசியல்!!

எமது மக்களை ஏமாளிகளாக்கி மொட்டை அடிக்கும் அரசியல்!!

  • PDF

கடந்த 15-12-2010 புதன் மாலை 6.30 மணியளவில் புதிய திசைகள் கலந்துரையாடல் ஒன்றை நடாந்தியது. இதில் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் சார்பில் இலங்கையில் இருந்து வருகை தந்த தம்பையாவும்,  புலிப் பினாமி அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் ஸ்கந்தாவும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். கலந்துரையாடலின் இடைநடுவில் நான் இணைத்து கொண்டேன். இந்த கலந்துரையாடல்  முக்கியமானதாகவே கருதுகின்றேன். என்ன நடக்கின்றது என்பதை,  இதன் மூலமும் தெரிந்து கொள்ள முடிந்தது. புலிப் பினாமி அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையின் கருத்தானது,  புலி சார்ந்து மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் முன் வைக்கப்பட்டது. இது பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்,  அங்கே என்னை சுற்றிச் சுற்றி வந்து புதிய திசைகளின் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விகள் மூலம்,  அவர்கள் சொல்ல முனைவது என்ன? என்பதை பார்ப்போம்.


கூட்டம் நடந்து முடிந்தவுடன், என்னை நோக்கி

வந்த புதிய திசைகள் உறுப்பினர் (இவர் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்) “என்ன சீலன் கூட்டத்தில் என்ன நடக்குது என்று பார்த்து எழுதுவதற்காகவா வந்தீர்கள்” என வினாவினார். சற்று நேரத்தின் பின் அதே நண்பர் “என்ன தலயங்கத்தில் எழுதவுள்ளீர்கள்” என மீண்டும் வினாவிய போது,  நான் இக் கலந்துரையாடல் பற்றி எழுதுவேன் என்று கூறி நகர்ந்தேன். நான் வீடு திரும்ப முற்படும் போதும் மீண்டும் அதே நண்பர் “என்ன எழுதவுள்ளீர்கள்” என மீண்டும் வினவினார். அதற்கான பதிலை தெளிவாக அவருக்கு தெரிவித்தேன். அதாவது எனக்கும் உங்களுக்குமான உறவு என்பதுஇ இரத்த உறவு சார்ந்தது இல்லை.  உங்களிடம் நான் பணம் ஏதாவது கடன் வாங்கியவனுமல்ல,  நீங்களும் என்னிடம் பணம் கடன் பெற்றவரும் இல்லை.  எம் உறவு என்பது அரசியல் ஊடாகத் தான் உருவானது. இங்கு நடந்த அரசியல் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை பற்றி மக்களுக்கு தெரிவிப்பதில் எந்த பிழையும் இல்லை தானே எனக் கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். உண்மையில் நடந்ததை விமர்சனம் செய்வதை விரும்பாத தன்மையின் வெளிப்பாடுகள் தான் இந்தக் கேள்விகள்.


இங்கு இந்த விடையத்தினை நான் குறிப்பிடக் காரணம்,  அந்த நண்பர் மீது கோபமோ அல்லது எரிச்சலே கிடையாது. அவர் என்னை நட்பு ரீதியாகவே இதை விசாரித்தார். இந்த நட்பின் ஊடாக வெளிப்படுவது, விமர்சனங்களை விரும்பாத தன்மையே பொதுவில் காணப்படுகின்றது. இவ்வாறான போக்குத்தான் எங்கும் காணப்படுகின்றது.


கலந்துரையாடல்கள், ஒன்று கூடல்கள் இவை அனைத்தும் அரசியல் சார்ந்ததாக இருப்பின் அங்கு என்ன கலந்துரையாடப்பட்டது என அனைத்தையும் மக்கள் முன் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். இதை விடுத்து மக்களுக்கான அரசியல் என்றும்,  மக்களின் துயரங்களை தீர்ப்பதற்கான கூட்டங்கள் என்றும் கூறி; அவற்றை மூடிய அறைக்குள் ஒரு சிலர் சேர்ந்து கலந்துரையாடி விட்டு செல்வதும்,  அதை மக்களுக்கு தெரிவிக்காது தமது செயற்பாட்டை செய்யப் புறப்படுவது தான் நடக்கின்றது. இது தொடர்ந்தும் கடந்த காலம் போன்று மக்களை பார்வையாளர்களாகவும், மந்தைகளாகவும் நடத்த முனையும் செயலாகும். இதை அன்றைய மூன்றம் தர அரசியல் வாதிகளில் இருந்து தம்மை இடதுகள் என்று கூறிக் கொள்பவர்கள் ஈறாக செய்து வந்தனர், வருகின்றனர்.


அத்தோடு கலந்துரையாடல்களை அறிக்கைகளாக முன்பு வெளிக் கொண்டு வந்தபோதும்,  அவை தற்போது சந்தர்ப்பவாதம் கருதி வெளிக்கொண்டு வரப்படுவதில்லை. இரு நண்பர்கள் அரசியல் ரீதியாக உரையாடினாலும்,  அவைகள் அவசியமாயின் மக்கள் முன் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று புறப்படும் ஒவ்வொருவரும், தாம் என்ன செய்கின்றோம் என்பதை தெளிவாக மக்கள் முன் வைப்பது அவசியமானது.
இதே போன்று தான் சுயவிமர்சனங்களும்,  மக்கள் முன் வைக்கப்பட வேண்டியவையே. மக்களுக்கான அரசியலை செய்யப் புறப்பட்டவர்கள் மற்றும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராட புறப்பட்டவர்களின் அரசியல் மற்றும் நடைமுறை செயற்பாட்
டால் பாதிக்கப்பட்டது பொது மக்களே. ஆனால் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் மக்கள் விரோதங்களை செய்தவர்கள் எவரும் தங்களது கடந்தகால தவறுகளை சுயவிமர்சனமாக மக்கள் முன் வைக்காது தம்மை பாதுகாப்பதுடன்,  மீண்டும் மக்களை ஏமாற்றப் புறப்பட்டுள்ளனர்.


“மக்கள்”,  “மக்கள்” என்பவர்கள்,  மக்களை பார்வையாளர்களாகவே தொடர்ந்தும் வைத்திருப்பதுடன்,  அவர்களை எவ்வாறு ஏமாற்றலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர். இவர்களை அம்பலப்படுத்துவது தான் இன்றைய முதல் அரசியல் பணியாக அமைகின்றது.


 

ஸ்கந்தா

 

புலிப் பினாமி அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவை இன் சார்பில் கருத்துகளை தெரிவித்த ஸ்கந்தா,  தமது அமைப்பின் புலி சார்பு கருத்தை மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார். புலிகளின் கடந்தகால மக்கள் விரோத அரசியல் போல், அனைத்துக்கும் ஒரு காரணத்தை முன்வைத்தார்.  அவர் கூறுகையில் புலிகள் அமைப்பின் மீது விமர்சனம் என்பது சாத்தியமற்ற ஒன்று. காரணம் இன்று பிரித்தானியாவில் புலிகளின் பின்னால் 90 வீதத்திற்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆகவே நீங்கள் புலிகளின் மீது விமர்சனம் வைப்பீர்களானால்,  இவர்களிடமிருந்து  இருந்து அன்னியப்பட்டு விடுவீர்கள் என்றார். ஆக மீண்டும், மக்களை மாற்றித் தான் தொடர்ந்து புலி அரசியல் செய்ய முடியும் என்றார். “மக்கள் ஆபாசத்தை ரசிக்கின்றனர், அதனால் நாங்கள் ஆபாசத்தை படம் எடுக்கின்றோம்” என்று கூறுவது போன்றது தான் இதுவும். மக்கள் புலிகளை விமாசிப்பதை விரும்பவில்லை, அதானல் அதை விமர்சிக்க முடியாது. மக்கள் தான் காரணம், நாங்கள் அல்ல. இப்படி புலிப் பினாமி அமைப்பு,  மக்களை குற்றம் சாட்டியபடி தங்கள் நடத்தைகளை திணிக்கின்றனர்.


புலிகள் குறித்து விமர்சனங்கள் இருப்பின் அவற்றை ஒரு அறையினுள் சினேகித முறையில் கதைக்கலாம் என்றார். புலிகள் கடந்த காலத்தில் கூறியதும் இதைத் தான். மக்களுக்கு உண்மை தெரியக் கூடாதது,  தனியக் கதைக்காலம் என்கின்றனர். மேலும் அவற்றை விமர்சனமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறிப்பிட்டார். புலிகளின் மீது விமர்சனம் செயய் முடியாது என்று ஆணித்தரமாக கூறியவர்,  மேலும் விமர்சனத்துக்கு அப்பால் பலரையும் இணைந்து தம்முடன் வேலை செய்யுமாறும் அழைப்பு விட்டார். புலிகள் மட்டும் தான், வேறு எந்த பேச்சுக்கு இடமில்லை என்றனர். இவர்கள் தான் இனியொரு காட்டும் “தூய தமிழ் தேசியவாதிகள்”. இவர்கள் தங்கள் பினாமி அமைப்பில் இணையுங்கள் என்கின்றனர். அவர்கள் உயர்ந்தபட்ச ஜனநாயகம் இதுதான். முன்பு புலிகளுடன் சேர்ந்து போராடும் படி கூறிய அதே பல்லவி.


தம்முடன் பல அமைப்புகள் இணைந்து செயற்படும் பொழுது,  எல்லா அமைப்புகளுடன்  இணைந்து ஒரு புதிய பெயரில் செயற்பட முடியாது என்றனர். ஆக புலிப் பினாமி அமைப்பின் ஒன்றினைப்பான தங்களை அங்கீரித்து தம்முடன் இணைவதைத் தவிர வேறு மாற்றுக்கு எந்த இடமில்லை என்றார். பிரித்தானிய தமிழர் பேரவை தமிழர்கள் மத்தியில் பலம் பொருந்திய அமைப்பாக உள்ளதால்,  இனி புதிதாக ஒன்றை உருவாக்க முடியாது என்றார். தமது பெயரின் கீழ் மற்றைய அமைப்புகளை இணைந்து செயற்பட வேண்டும் என்றார். இப்படி இணைபவர்கள் வேலைகளை பொறுப்பெடுத்து செயற்பட முடியும் என்றார். சரி எந்த வேலையை, புலி பினாமி வேலையைத் தான். இது தான் கடந்த காலம் முதல் நடக்கின்றது.
புலிகள் மீதான விமர்சனங்களை முன் வைப்பதனை மறுப்பதுடன்,  ஏனைய  அமைப்புக்களுடன் கூட்டாக வேலைகள் செய்வதனை மறுத்தனர். தம்முடன் இணையக் கோருகினறனர். பழைய அதே கதை தான். புலிகளை விமர்சனத்திற்கு உள்ளாக்க மறுப்பதுடன்,  தமது புலிப் பினாமி அமைப்பினுள் சேருமாறு கோருகின்றனர். பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதியான தம்மை மையப்படுத்தியே அனைத்து அமைப்புகளையும் இயங்குவதாக கூறி, மற்றையவற்றை நிராகரிக்கின்றனர். பிரித்தானிய தமிழர் பேரவை என்பது, புலியின் பினாமி அமைப்புகளில் ஒன்று. இந்த புலி அமைப்புத் தான் இறுதி யுத்தத்தின் போது புலி ஊர்வலங்களை நடத்தியது. பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் இறுதி யுத்தத்தின் போது மறியலை நடத்தி,  பொது மக்களே தினமும் ஆயிரக்கணக்கில் வந்து உங்கள் ஆதரவினை இந்த பாராளுமன்றத்திற்கு காட்டுங்கள் என்றவர்கள். அதேநேரம் பின் கதவால் எம்.பிமாருடன் பேச்சுக்கள் நடக்கின்றது என்றனர். எல்லாம் சுமுகமாக முடியும். தலைவர் காப்பாற்றப்படுவார் என கதைகள் விட்டனர். ஆயிரக்கணக்கான மக்களை கொல்லக் கொடுத்தும்,  அதைக் காட்டியும் போராட்டம் நடத்தினர். இப்படி மக்களின் இறப்பிற்கு ஏதோ வகையில் காரணமானவர்கள் இவர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

அதேநேரம் சபையில் இருந்து எழுப்பட்ட கேள்வி ஒன்றில், மகிந்த வந்திருந்த போது அவர் தங்கிய விடுதியைச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவர் கூட தமிழ் மக்களின் அவல நிலையினையோ அன்றி போர்க் குற்ற சான்றுதலுக்கான புகைப் படங்களையோ பதாதைகளாக வைத்திருந்திருக்கவில்லை. மாறாக தனியே புலிக் கொடியை மாத்திரம் பதாதைகளாக வைத்திருந்தனரே, ஏன்னென்று  வினா எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த பிரித்தானிய தமிழர் பேரவை பிரதிநிதி,  இது முழுக்க முழுக்க தானும் இன்னும் இருவரும் மாத்திரமே இணைந்து இதற்கான கோசங்களை வரைந்ததாகவும் மேலும் தமக்கு ஆள் பற்றக்குறை,  நிதிப் பற்றாக்குறை,  நேரம் இன்மையே காரணம் என்றனர். இப்படி தங்களை நியாயப்படுத்த பொய்யான காரணங்களை கூறியபடி,  நீங்கள் எல்லோரும் எம்முடன் இணைந்து செயற்பட்டால் இவற்றை இலகுவாக நடத்த முடியும் என்றார்.  நீங்கள் இணையாதால் தான் தமிழீழம் கிடைக்கவில்லை என்று கூறிய அதே புலி மாமா கதை தான்.  தங்கள் புலி அரசியலை நேர்த்தியாக முன் தள்ளியவர்கள்,  அதற்கு ஆள் திரட்ட கதை சொல்லுகின்றனர். இதன் மூலம் தனித்துவமான,  புலி அல்லாத அரசியல் செயற்பாட்டை முடக்க முனைகின்றனர். எல்லாவற்றையும் தமக்கு கீழ் கொண்டு வரும் பழைய உத்திகளை, புதுப்பாணியில் கையாளுகின்றனர்.

மேலும் அதில் புலிக் கொடி தூக்கியவர்கள் இளைய சமூகத்தினரே என்று கூறி, தங்கள் நடுநிலையாளார்கள் என்று வேடம் போட்டனர். இளைஞர்களிடம் புலிக் கொடியை தூக்க வேண்டாம் என்று கூற முடியாது என்றனர். அவர்கள் அவ்வாறு வளர்க்கப்பட்டு விட்டார்கள் என்று கூறி, நியாயப்படுத்தினர். சரி அப்படித் தான் என்றால்,  யார் அப்படி வளர்த்தது நீங்கள் தானே. இன்று அதை தொடர்ந்து செய்வதும் நீங்கள் தானே.

மகிந்தா தங்கியிருந்த இடத்தில் நடத்திய போராட்டம் மகிந்தவை போர்க் குற்றவாளி என்று கூறியே நடத்தப்பட்டது. ஆனால் அதற்கான பதாகைகளை முன்னிறுத்தி புலிக் கொடியை துக்கினார்கள். மகிந்தவுக்கு எதிரான போராட்டம் போர்க் குற்றம் சார்ந்தது என்பதை காட்டிலும், புலிக் கொடி தான் முதன்மைப்படுத்தப்பட்டது. இப்படி பிரித்தானிய தமிழர் பேரவை முதன்மை புரட்டு பேர்வழிகளை முன்னிறுத்தித்  தான், அப்பளுக்கற்ற  “தூய தமிழ்தேசிய வாதிகள்” என்று இனியொரு புலிக்காக குரல் கொடுத்து இருந்தது.

இந்த புலிக்கொடி,  புலிப் பினாமி அமைப்புகள் மூலமான அரசியல் தமிழ் மக்களை சார்ந்தல்ல.  இதை காட்டி புலிப் பயங்கரவாதம் மீள வாய்ப்பு உண்டு என்று தெரிவிப்பதன் மூலம்,  இலங்கையில் எழுந்து வரும் அரசிற்கும் மகிந்த குடும்பத்திற்குமான எதிர்ப்புக்கள் முறியடிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் அல்லாத புலியைக் காட்டி மகிந்தா,  சிங்கள தேசத்தினை மீட்டெடுத்த என்னை பொய்க் குற்றங்களை கூறி கைது செய்ய முனைந்தனர் என்று எமாற்ற முடிகின்றது. தன்னை சிங்கள தேசத்தின் வீரப் புதல்வனாக காட்டி,  தனது குடும்ப ஆட்சி அதிகாரத்தினை மிகவும் பலமானதாகவும் ஆக்கிக் கொள்ள முடிகின்றது.

புதிய திசைகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் தனது இனியொரு இணையத் தளத்தில் அண்மையில் பிரித்தானிய தமிழ் பேரவையினரை ஜந்து பிரிவுகளாக பிரித்து,  ஒரு கட்டுரையினை பிரசுரித்திருந்தார். அதில் அவர் இந்த தமிழ் பேரவையில் கே.பியின் ஆட்கள் முதல் தூய தமிழ் தேசியவாதிகளையும் கொண்ட ஒரு கலவை என்றார். இப்படி தங்கள் புலியாகும் கூத்துக்கு எற்ப புலிப்பினாமிகளுக்கு விளக்கம் கொடுத்தனர். இனியொரு பல கட்டுரைகளில் கே.பி ஒரு தமிழின துரோகி என்றும் பல தடவைகள் எழுதி இருக்கின்றார்கள். இப்படி துரோகியாக காட்டிய அவர்களும்,  தூய தமிழ் தேசிய வாதிகளும் ஒன்றாக இருப்பதாக கூறுவது தான், தமக்கேற்ற அரசியல். புலியின் பெயரில் தான், இவை அனைத்தையும் புலி ஒன்றினைகின்றது. கடந்த காலம் பிரபாகரன் பெயரில் தான் துரோகிகள்,  பிழைப்புவாதிகள் முதல் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தனர்.

இப்படி நேர் எதிரான ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட குழுக்கள் ஏன் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். இது ஒருதருக்கும் புரியாத பெரும் சூட்சுமம் கிடையாது. இவர்கள் எல்லோரையும் சுற்றியுள்ள புலிகளின்  பினாமி சொத்துக்களே, இவர்கள் இந்தளவுக்கு உள்ளுக்குள் முரண்பட்ட போதும் ஒன்றாக இணைத்து வைத்துள்ளது. புலிகளின் அழிவிற்கு மேற்குலகத்தின் மீதும்,  இந்தியா, சீனா மீதும் சுலபமாக பழியை போட்டு விட்டு,  புலிகளினதும் போராட்டத்தினதும் தோல்விக்கான உண்மைக் காரணிகளை ஆராய மறுக்கின்றனர். மேலும் நல்ல சக்திகள் பிரித்தானிய தமிழர் பேரவைக்குள் இருப்பின்,  அவர்கள் ஒரு போராட்டத்தினை நடத்தி அங்குள்ள தீய சக்திகளை வெளியேற்றி இருக்க வேண்டும். அல்லது தாம் வெளியே வந்து அந்த தீய சக்திகளை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். இதில் எதுவுமே நிகழ்ந்ததாக இல்லை. மாறாக பிழைப்பிற்கு மார்க்சியம் (இவர் பேசுவது மார்க்சியமா? தேசியமா? என பிரிதொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம்) பேசும் புதிய திசைகள் பிரமுகரை,  இந்த மக்கள் விரோத கும்பல் தமது பிரச்சாரத்திற்தும்,  புதிய தொடர்புகளை மேற்கொள்ளவும், மக்கள் மத்தியில் இழந்து போயுள்ள ஆதரவினை (புதிய பிரமுகர்களை கொண்டு) மீட்டெடுக்கவும் பயன்படுத்துகின்றனார்.

அதேவேளை புதிய திசைகளோ தாம் இவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் “தூய தேசிய சக்திகளை” (நல்ல சக்திகளை) இனங்கண்டு அவர்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்று கூறிக்கொண்டு புலிக்கு பிரச்சாரம் செய்கின்றனர். அதேவேளை புலிகள் பற்றிய விமர்சனத்தை பகிரங்கமாக, அவர்களின் தளங்களில் விமர்சிக்க மறுக்கின்றனர்.

ஆனால் இவர்கள் பேசும் தேசியவாதம் இவ்விரு சக்திகளையும் இணைத்ததா என்றால் இல்லை. மாறாக சந்தர்ப்பவாதமே இணைத்துள்ளது. புலிகள் தம்மை விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவர்கள் என்று கூறிவரும் தருணத்தில்,  புலிப் பினாமிச் சொத்துக்களை பங்குபோடும் போட்டியும் நடைபெறுகின்றது. பல கோடிக்கணக்கான சொத்துக்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இவற்றை பற்றி எவரும் அக்கறை கொள்வது கிடையாது. ஏன் இந்த புதிய திசைகள் அமைப்பினரே,  இதை பகிரங்கமாக அவர்களிடம் கேட்டதும் கிடையாது.  “தூய தமிழ்தேசிய வாதிகளின்” வர்க்கத் தன்மை வலது தேசியமா?  இடது தேசியமா?.  இவர்கள் தங்கள் “தூய தமிழ் தேசியத்தை” எப்படி எங்கே வெளிப்படுத்தினர்?


இந்த புலிப் பினாமி அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவை, அன்று புலிகள் எவ்வாறு மற்றைய அமைப்புகளை தம்முடன் இணைந்து வேலை செய்யுங்கள் விமர்சனங்களை உள்ளுக்குள் வையுங்கள் என்றார்களோ; அதே போன்றே இவர்களும் தம்முடன் இணைந்து செற்படும் படியும், ஆனால் புலிகளை விமர்சிப்பதை தவிர்க்கும் படியும் கோருகின்றனர். இதன் மூலம் புலிகளின் பழைய அரசிலை புதிய வடிவில் முன்னேடுப்பதற்கான முயற்சியிலேயோ அன்றி கே.பியுடன் கள்ள உறவினை பேணி ஊரை அடித்து உலையில் போடும் முயற்சியிலேயோ  இறக்கி இருப்பது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது.  தமக்குள் இணைந்து, தமது பெயரினுள் செயற்பட கோருவதன் மூலம் மற்றைய அமைப்புகளை தாம் விழுங்கி, தமது பரந்து பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முனைகின்றனர். இந்த கலந்துரையாடலை ஒழுங்கு செய்த புதிய திசைகள் அமைப்பினர்,  இது பற்றி கருத்து எதுவும் கூறாது பிரித்தானிய தமிழர் பேரவையுடன் ஒன்று சேர்ந்து இயங்குகின்றனர்.

தம்பையா

 

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி பிரதிநிதி தம்பையா, கடந்த 40 வருடமாக எதைக் கூறினரோ அதையே கூறினார். பல மேடைகளில் இடதுசாரிய பிரமுகராக இருந்து எதை கூறினரோ, அதை மீளச் சொல்வதால் மாற்றங்கள் இன்றி தொடருகின்றது. வர்க்க கட்சிக்குரிய செயலை முன்னெடுக்காத ஒரு கட்சியாக அவர்கள் இருக்கும் வரை, எந்த சரியான கருத்தும், நடைமுறையில் மக்களை வழி நடத்துவதில்லை. மேற்கு சுற்றுப் பயணங்கள் செய்வதற்கு அப்பால், சின்னதாக இருந்தாலும் ஒரு வர்க்க கட்சியைக் கட்டுங்கள். இது தான் இன்று இலங்கை மக்களுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. அதை இலங்கையில்  செய்யாது,  மேற்கில் நீங்கள் செய்யும் சொற்பொழிவுகளால் எந்த விதமான நன்மையும் கிடையாது.

Last Updated on Friday, 24 December 2010 08:50